Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 18

வருச நாட்டு ஜமீன் கதை - 18
வருச நாட்டு ஜமீன் கதை - 18

நிக்கமாட்டேன். ஜனகம் எப்பிடி படுத்துக்கிட்டு படம் எடுத்திருக்காளோ, அதே மாதிரி நானும் ஒய்யாரமா சாஞ்சு படுக்கணும். நீங்க பக்கத்துல உக்காரணும்

கூர வீட்டுல கூலிக்காரப் பொண்ணுக்குப் புருஷன்மேல கோவமிருந்தாலும் சரி, அரண்மனையில பஞ்சு மெத்தையில தூங்குற மகாராணிக்கு மகாராஜாவ நெனச்சு நிம்மதியில்லாம போனாலுஞ் சரி, என்ன முடிவெடுப்பாங்க?

ரெண்டு பேத்துக்கும் ஒரே மனசுதான். கௌரதயப் பாத்து அடங்கி ஒடுங்கிப் போயிருவாங்க. இல்லன்னா, அப்பன் வீட்டுக்குக் கோவிச்சுக்கிட்டுப் போயிருவாங்க. இதில்லாம, மொத்தத்துல அத்துகிட்டு விட்டேத்தியா போறதுகளும் இருக்கு!

நம்ம ஜமீன்தாரு ராமகிருஷ்ண நாயக்கரு ஜனகத்துக்குக் கட்டிக் கொடுத்திருக்கற வாணி விலாசம், அவளுக்காகச் செய்துபோட்டிருக்கற நகை நட்டு அம்புட்டையும் பாத்த பெறகு வேலுத்தாயம்மா சும்மா இருப்பாளா?

‘அப்பன் வீட்டுக்குப் போறேன்’னு துணிமணிகள அடுக்கி வச்சுக்கிட்டு ஆக்ரோசமா அழுது ஆர்ப்பாட்டம் செய்தா.

“இந்தா பாருங்க... எங்க அப்பன் வீட்டுக்கு நான் போறேன். என்னிக்கு அந்தப் பிசாசு இங்கயிருந்து கிளம்புதோ அன்னிக்குத்தான் இங்க வருவேன். அதுவரைக்கும் நீங்க என்ன நெனச்சுக்கூட பாக்கக்கூடாது.”

வருச நாட்டு ஜமீன் கதை - 18
வருச நாட்டு ஜமீன் கதை - 18

“எங்க மதிப்பு மரியாதைய காப்பாத்தணுமில்லையா? ஜமீன்தாரிணியா இருக்கிறவங்க அநாவசியமா வெளிய சுத்தக் கூடாது, தெரியுமா?”

“ஆனா, நீங்க மட்டும் அவளக் கூட்டிக்கிட்டு ஆட்டம் போடலாம், சுத்தலாமாக்கும்? எல்லாத்தையும் அவ பேர்லயே எழுதி வச்சுட்டுப் போங்க. எனக்கென்ன வந்துச்சு? கடன்காரங்க வந்தா பதில் சொல்ல நானில்ல ஆளு...”னு சொன்ன வேலுத்தாயம்மா, அவசர அவசரமா சேலைய அள்ளிப் பெட்டிக்குள்ள போட்டா.

ஜமீன்தாரு கெஞ்ச ஆரம்பிச்சுட்டாரு.

“உனக்கு என்னதான் செய்யணும்னு சொல்லு... தெரிஞ்சுக்கிறேன்?”

“அந்த போட்டாவப் பாத்தேன்... என்ன ஒரு ஒய்யாரமா படுக்க வச்சு படம் எடுத்து மாட்டத் தெரியுது. எனக்கு என்ன செய்யணும்னு மட்டும் நாஞ்சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமாக்கும்?”

“சரி, விடு. நாளைக்கே மதுரைக்குப் போறோம். மீனாட்சியம்மன் கோயிலு, நாயக்கர் மகாலு, வண்டியூர் தெப்பக்குளம் எல்லாத்தையும் பாத்துட்டு வரலாம். அப்பிடியே போட்டா படமும் எடுத்துக்கலாம்”னு சொல்லிக்கிட்டே ஜமீன்தாரு வேலுத்தாயம்மாவ இழுத்து அணைச்சாரு.

“நீ கர்ப்பமானதுக்குப் பெறகு ரொம்பத்தான் அழகா இருக்க ஜனகா...”

“என்னது ஜனகாவா..?”

ஜமீன்தாரு கொஞ்சம் தடுமாறி, “நீ இவ்வளவு நேரமும் அவளப் பத்தியே பேசிக்கிட்டிருந்தியா... அதான், சொல்லும்போது வாய் உளறி அந்தச் சிறுக்கி பேரு வந்துருச்சு...”

“தெரியாமத்தான் கேக்குறேன்... புருஷன் கண்ணுக்குத் தன்னோட பொண்டாட்டிக அழகாவே தெரிய மாட்டாங்களா?”

“பழையபடி முருங்க மரத்துல ஏறுற பாரு... இனி ஒண்ணும் பேசாத”னு சொல்லிக்கிட்டே, வேலுத்தாயம்மா வோட உதட்டுல இறுக்கமா முத்தம் வெச்சு, அவ கழுத்துக்குப் பின்னாடி கையால வளச்சாரு.

படபடனு கதவு தட்டுற சத்தம் கேட்டுச்சு.

இப்பிடிக் கதவு தட்டுறதுக்கு அந்த அரண்மனையில யாருக்கு உரிமை இருக்கு தெரியுமா? ஒரே ஒரு பொம்பளைக்குத்தான். அதான் பெரிய ஜமீன் தாரிணியம்மா வீர சின்னம்மா.

ஜமீன்தாரு கதவத் தெறந்தாரு.

“மதுரையில இருந்து யாரோ வந்திருக்காங்க. நெலத்து மேல கடன் வாங்கியிருந்தியாமே... அதுக்குத் தாக்கல் கொண்டு வந்திருக்காங்க. போயி என்னன்னு பாருப்பா...” - அம்மா

கொஞ்சம் கோவமா சொன்னதும், சொன்ன விஷயமும் ஜமீன்தாருக்கு வேப்பங்காய கடிச்சது மாதிரி இருந்துச்சு.

“சரிம்மா... நான் நாளைக்கு மதுரைக்குப் போறேன். நேர்ல வந்து பாக்குறதா சொல்லி அனுப்பும்மா...”

மதுரையம்பதிய அந்தக் காலத்துல பெரிய கிராமம்னுதான் சொல்லுவாங்க. வெள்ளைக்காரங்க வந்த பெறகு, வீதிக்கு நடுவுல வௌக்குத் தூண் வச்சிருக்காங்க. அத வேடிக்கை பாக்குறதுக்குப் பக்கத்துல இருந்ததெல்லாம் வண்டி மாடு கட்டிக்கிட்டு வந்தவங்கதான் அதிகம்.

ஜமீன்தாரும் வேலுத்தாயம்மாவும் மதுரையில முக்கியமான எடங்கள சுத்திப் பாத்துட்டு, கடைசியா சாப்டூர் பங்களா, போடிநாயக்கனூர் பங்களா இங்கல்லாம் போயி ஜமீன் சொந்தக்காரங்களயும் பாத்துட்டு போட்டா படம் எடுத்துக்க, டவுன் ஹால் ரஸ்தாவுக்கு வந்தாங்க. அந்த ரஸ்தாவுல ஆள் நடமாட்டம் இருந்தா, மதுரையே முழிச்சுகிட்டிருக்குனு அர்த்தம்.

பர்மாவுல இருந்து வந்த ஒரு செட்டியாருதான் போட்டா கடை வச்சிருந்தாரு. பெரிய பெரிய ஜமீன்தாருங்க, மிட்டா மிராசுங்கதான் அங்கன போட்டா பிடிச்சுக்குவாங்க.

ஜமீன்தாரு நாற்காலியில உக்காந்தாரு. வேலுத்தாயம்மாவ பக்கத்துல நிக்கச் சொன்னதும், “நிக்கமாட்டேன். ஜனகம் எப்பிடி படுத்துக்கிட்டு படம் எடுத்திருக்காளோ, அதே மாதிரி நானும் ஒய்யாரமா சாஞ்சு படுக்கணும். நீங்க பக்கத்துல உக்காரணும்”னு சிணுங்குனா.

செட்டியாரு வேடிக்கை பாக்க, ஜமீன்தாரு ‘இதென்னடா கெரகம்?’னு கொஞ்சம் முகம் வாடிப்போயிதான் இருந்தாரு. இருந்தாலும் வந்த எடத்துல வம்பு வழக்கு வேணாம்னு சம்மதிச்சாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 18
வருச நாட்டு ஜமீன் கதை - 18

ஒரு மெத்தைமேல ஒருக்களிச்சுப் படுத்துத் தலைக்குக் கையணை குடுத்து நகையெல்லாம் சரி செய்தாங்க. கர்ப்பமா இருந்த வேலுத்தாயம்மாவோட வயிறு பாகத்த சேலையால மூடி சரிப்படுத்தினாரு ஜமீன்தாரு.

கண்ணு கூசுற மாதிரி வெளிச்சம் போட்டாரு செட்டியாரு.

கண்டமனூர் அரண்மனையில அன்னிக்குப் பூராவும் ஒரே பேச்சு.

வாணி விலாசத்துல ஜனகம் வச்சிருந்த நகை - நட்டுகள யாரோ திருடிக்கிட்டுப் போயிட்டாங்களாம்.

மதுரையிலிருந்து ஜமீன்தாரு கண்டமனூர் வந்ததும் வாணி விலாசம் போயி ஜனகத்தப் பாத்தாரு. அந்தக் கட்டடத்துக்குப் பின்னாடி சன்னல் கண்ணாடியெல்லாம் ஒடஞ்சிருந்தது. தோட்டத்துப் பக்கம் நோட்டம் விட்டுக் கிட்டிருந்த ஜமீன்தாரு ஒரு சின்ன கல்லுப் பலகைய கவனிச்சாரு. அதையே உத்துப் பாத்துக்கிட்டிருந்த ஜமீன்தாருகிட்ட ஜனகம் முன்னாடி போயி நின்னு, “எனக்கென்னவோ ஒருத்தர் மேல சந்தேகம் இருக்கு”னு சொன்னா.

“யாருனு சொல்லு, அவங்க தலைய வெட்டிப்போடுறேன்”னு உறுமுனாரு ஜமீன்.

“சொன்னா என் மேல கோபப்படக் கூடாது. உங்க மாப்ள நாயக்கரு ஒருத்தரு ஆத்துக்கரையில நின்னு வாணி விலாசத்தையே நோட்டம் பாத்துக்கிட்டு இருந்தாரு. நேத்து நீங்க மதுரைக்குப் போனதும் நான் ஆத்துல குளிக்கும்போது அவரே தென்ன மரத்து மேல ஏறி என்னையவே வச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டிருந்தாரு...”

“யாரு?”

“பெரிய மீசை வச்சிருந்தாரு. குண்டுக் கட்டயா இருந்தாரு. கண்ணலு காமய சாமினு சொன்னாங்க...”

“ஓ... அவனா! நான் கூப்புட்டு விசாரிக்கிறேன். நகை போயிருச்சேன்னு கவலைப்படாத. இதபாரு, என் பொண்டாட்டிக்குத் தெரியாம உனக்கு எவ்வளவு நகை வாங்கி வந்திருக்கேன் பாரு”னு ரெண்டு சுருக்குப் பைகளை எடுத்து ஜனகத்துகிட்ட குடுத்தாரு.

வாங்கிப் பிரிச்சுப் பார்த்த ஜனகம் முகமெல்லாம் ஜோதியாகிப் போயி, சேலை நழுவறதுகூட தெரியாம அப்பிடியே ஜமீன்தார இறுக்கலா புடிச்சுக்கிட்டா.

ஜமீன்தாரு சுவாரஸ்யமில்லாம, “எக்கச்சக்கமா கடன் ஏறிப்போச்சு ஜனகா. என்ன செய்றதுனே தெரியல. வாங்கின கடனையெல்லாம் திரும்பக் கட்டச் சொல்லி நோட்டீசு வந்திருக்கு. ஒரே கவலையா இருக்கு..!”னு தலையில கைய வெச்சுக்கிட்டு மெத்தையில உக்காந்தாரு.

“இந்த நேரத்துல எதுக்கு கவலைப் படறீங்க?”னு சொல்லி அலமாரியத் தொறந்து மது புட்டிய உடச்சு கோப்பைல ஊத்திக் கொடுத்தா ஜனகம்.

ஜமீன்தாருக்கு எந்த நேரத்துல என்ன தரணும்னு அவளுக்கா தெரியாது?

கால்ல சலங்கை கட்டி ஜல்ஜல்னு மெதுவா நாட்டியம் ஆட ஆரம்பிச்சா. சாவேரி ராகத்துல ஒரு பாட்டும்பாடினா.

சிவபெருமான் மதுரை வீதியில வெறகு விக்கப் போகும்போது சாவேரி ராகத்துல ஒரு பாட்டுப் பாடிக்கிட்டே ஒரு ஆட்டமும் ஆடினாராம்.

வருச நாட்டு ஜமீன் கதை - 18
வருச நாட்டு ஜமீன் கதை - 18

பைத்தலை விடவாய் நாகம் பல்பொழி மஞ்ஞை நால்வாய் தத்தமாறறியா வாகி...

பாம்பு, மயில், யானையெல்லாம் தன்னயறியாமல் ஆனந்தக் கூத்தாடுச்சாம்.

ஜனகம், இதமா, பதமா ஆடி ஜமீன்தாரோட மூச்சுக் காத்த சூடேத்துனா. ஜமீன்தாருக்குத் தான் அனுபவிக்கற ஆனந்தம் தனக்குச் சொந்தமானதா, இல்லையானே தெரியாம ஜனகத்தோட மார்ல சாஞ்சு ஐக்கியமானாரு.

மறுநாள் காலையில அரண்மனையில இருந்த ஜமீன்தாரு மாப்ள நாயக்கர் கண்ணலு காமயசாமிய கூப்புட்டு அனுப்பினாரு. அவரும் வந்தாரு. ஜனகம் சொன்ன மாதிரியே பெரிய மீசை, குண்டுக்கட்டை.

“வாணி விலாசம் பக்கம் போனது வாஸ்தவந்தான். ஆனா, நகை திருடு போனது பத்தி எனக்கு எதுவுமே தெரியாது மாமா”னு சொன்னாரு.

“இனிமே அந்தப் பக்கம் போகக்கூடாது”னு எச்சரிக்கை செய்துட்டு ஜமீன்தாரு கடமலைக் குண்டுக்கு கிளம்பிப் போயிட்டாரு.

ஜமீன்தாரு வெளியபோனதும் வேலுத்தாயம்மா, காமயசாமிய கூப்பிட்டு, “அண்ணா, கவலப்படாதீங்க. ஜனகம் எப்பிடி சூது பண்றா பாத்தீங்களா?”னு சொன்னா.

“என்னம்மா.. நீங்க சொல்லித்தான் அங்க வேவு பாக்கவே போனேன். எனக்கு வம்பு தும்பு வந்துசேரும் போல தெரியுதே”னு பயந்துபோயி சொன்னாரு.

“அதப்பத்திக் கவலப்படாதீங் கண்ணா. போகலுமுண்ட! நகைய அவளா எங்கயாவது ஒளிச்சு வச்சுக்கிட்டு காணாம் போச்சுனு பெதட்டுவா. உங்கள யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. நானிருக்கேன். உங்களுக்கு வேண்டியத நான் செய்து தரேன்”னு கொஞ்சம் நிறுத்தின வேலுத்தாயம்மா, “உங்களுக்கு துப்பாக்கியால சுடத்தெரியுமா?”னு கேட்டா.

“வேட்டைக்கு மாமாகூட போய் இருக்கேன். ஆனா, சுடத் தெரியாது”னு தலைய ஆட்டுனாரு காமயசாமி.

வேலுத்தாயம்மா உள்ள போயி ஒரு நாட்டுத் துப்பாக்கிய எடுத்துவந்து அவரு கிட்ட குடுத்தா. “இந்தாங்க... இப்பம் புடிச்சே சுட்டுப் பழகுங்க. உங்களால ஆகக்கூடிய ஒரு காரியம் இருக்கு..”

துப்பாக்கிய மெரண்டு பாத்துகிட்டே கேட்டாரு கண்ணலு காமயசாமி-

“என்ன காரியம்?”னு.

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு