Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 19

வருச நாட்டு ஜமீன் கதை - 19
வருச நாட்டு ஜமீன் கதை - 19

தனக்கு எது சௌகரியம்னு நெனச்சு சனங்கள விட்டுட்டு உசரத்துக்குப் போனாரோ அந்த உசரத்துல இருந்து ஒரேயடியா கீழ விழுந்தா காணாமப் போயிடுவோம்னு ஜமீன்தாருக்கு அப்ப தெரியாமப் போச்சு.

வேலுத்தாயம்மா இவ்வளவு வெவரமான பொம்பளையா வளந்ததுக்குக் காரணம் போடிநாயக்கனூர் ஜமீன்தாரிணி காமுலம்மாதான். கண்டமனூர்ல பொறந்து, நிலக்கோட்டையில வளர்ந்து, பெரிய படிப்பெல்லாம் படிக்க ஆரம்பிச்சாங்க காமுலம்மா. வெள்ளக்காரங்ககிட்ட பட்டயமெல்லாம் வாங்கியிருக்காங்கனா பாத்துக்கங்க. அப்புறமாத்தான் ஜமீன்தாரு திருமலை போடைய நாயக்கரை கல்யாணம் செய்துக்கிட்டு போடிநாயக்கனூர் வந்தாங்க.

ஜமீன்தாரு இறந்த பின்னாடி பட்டத்துக்கு முறையான வாரிசா காமுலம்மாவே ஜமீன்தாரிணியா இருந்து ஆம்பளைகளுக்குச் சமமா துரைத்தனம் செய்து வந்தாங்க. ‘ராஜகம்பளத்துப் பொண்ணுக தவறாம படிக்கணும்’னு போற பக்கமெல்லாம் சொல்லி வந்தாங்க.

காமுலம்மா குடுத்த ஊக்கத்துனாலதான் வேலுத்தாயம்மா கொஞ்சம் நல்லது கெட்டது தெரிஞ்சு, உலக விஷயம் அறிஞ்ச பொம்பளையா மாறினாங்க. காமுலம்மா மாதிரியே வேலுத்தாயம்மாவுக்கும் துரைத்தனம் செய்யணும்னு உள்ளூர ஆசையிருக்கு.

ஜனகத்த ஒழிச்சுக்கட்டணும்னு முடிவு செஞ்சு, கண்ணலு காமய சாமிகிட்ட துப்பாக்கி கொடுக்கிற அளவுக்கு இந்த துரைத்தன ஆசை வளந்து வெனயமா வந்துருச்சு.

காமயசாமியும் லேசுப்பட்ட ஆளு இல்ல. பலசாலி. ரெண்டு உப்பு மூட்டைய ரெண்டு பக்கம் கக்கத்துல இடுக்கி, ரெண்டு கல்லு தொலவுகூட ஓடுவாரு. ஆனா, வேலுத்தாயம்மா செய்யச் சொன்ன காரியத்தை நெனச்சு முதல்ல தயங்குனாரு.

வேலுத்தாயம்மா பாசாங்கோட அழுதுக்கிட்டு, “இத்தனை அண்ணன் தம்பிக இருந்து என்ன பிரயோசனம்? ஜனகத்தை ஒழிச்சுக்கட்ட யாராலயும் முடியலையே. நாளைக்கு அவளுக்கே ராணியா இவரு பட்டம் கட்டினாலும் நீங்கல்லாம் பாத்துகிட்டு சும்மாதான இருப்பீங்க?”னு கேட்டா.

தங்கச்சி அழுததால மனசு உருகிப் போன காமயசாமி, “அதெப்பிடிம்மா? அதுவரைக்கும் எங்க கையி புளியங்காயா பறிக்கப்போகும்? உங்களுக்காக என்ன வேணும்னாலும் செய்றதுக்குத் தயாரா இருக்கேன். அந்தச் சிறுக்கி நேத்தும் மாமாகூட குடிச்சுப் போட்டு தையா தையானு ஆடிக்கிட்டுதான் இருந்தா. என்னப்போயி நகை களவாணிப்பயனு மாமாகிட்ட பொய் சொல்லி மாட்டி வச்சுட்டாளே... அவள சும்மா விட்டா எனக்கும் ஆபத்துதானம்மா?”னாரு.

வேலுத்தாயம்மா குரலைக் கம்மியாக்கி, “மெதுவாப் பேசுங்கண்ணா. இன்னிக்கே நான் தெப்பம்பட்டி அரண்மனைக்குப் போயிடுவேன். நீங்க ஜனகத்த சுட்டுப் பொசுக்கிப் போடுங்க. உங்க மாமா அவளுக்குக் கூடுதலா சேனைப் பாதுகாப்பு போட்டிருக்காரு. கவனமா இருங்க”னு சொன்னா.

“சொல்லிட்டல்லமா... கவலைப்படாத! ஆத்துல குளிச்சுக்கிட்டு இருக்கும்போதே சுட்டுப் போடுவேன். ஆத்தோட ஜல சமாதிதான். அப்புறமா அவ முக விலாசத்த யாரும் கண்டுபிடிக்க முடியாது.”

“நல்லது. அதுவரைக்கும் நீங்க சுட்டுப் பழகுறது யாருக்கும் தெரியக்கூடாது. புரியுதாண்ணா?”

நல்லாப் புரிஞ்சு தலையாட்டிட்டு அரண்மனைக்குப் பின்பக்கமா துப்பாக்கியோட மறஞ்சாரு காமயசாமி.

வேலுத்தாயம்மா இப்போ நெற மாச வயித்துக்காரி. இதுவரைக்கும் தனக்கு எந்த ஆபத்தும் வரலையேனு ஜமீன்தாருக்கு மனசு ஓரத்துல கொஞ்சம் சந்தோஷம். இருந்தாலும் வேலுத்தாயம்மா அடிக்கடி அவர மடக்கி கேள்வி மேல கேள்விகேட்டு லஜ்ஜை பண்றது தாங்கலதான்.

ஜமீன்தாருகிட்ட சொல்லிக்காமலேயே வில்லு வண்டிய வரச் சொல்லி அதுல ஏறி உக்காந்துகிட்டா வேலுத்தாயம்மா. ஜமீன்தாருக்குத் தகவல் தெரிஞ்சு ஓடிப்போயி வில்லு வண்டிக்குப் பின்னாடி திரைச்சீலய வெலக்கி, “என் மேல கோபம் இருந்தாலும் நீ அரண்மனையவிட்டு இப்பிடி சொல்லிக்காம போறது தப்புனு தெரியலையா?”னு அமைதியாத்தான் கேட்டாரு.

“குழந்தை பொறக்கிறவரைக்கும் நான் தெப்பம்பட்டி அரண்மனையில தங்கி இருக்கேன். எனக்கு இங்க நிம்மதியில்ல. அங்கன சின்ன அத்தை வேலாண்டியம்மாகூட இருந்துக்கறேன்”னு சொன்னா.

வருச நாட்டு ஜமீன் கதை - 19
வருச நாட்டு ஜமீன் கதை - 19

அதுக்கு ஜமீன்தாரு, “குழந்தை பொறக்கும்போது நான் உசுரோட இருந்தா பார்க்க வருவேன்”னு சொல்லி கண்கலங்கிட்டாரு. வேலுத்தாயம்மா எதும் பேசாம முகத்தைத் திருப்பிக்கிட்டா. தெப்பம்பட்டி அரண்மனைக்கு வில் வண்டி கிளம்பிப் போயிருச்சு.

‘பொன்ன வித்துத் தின்னு... நெலத்த வச்சுத் தின்னு!’

- இதுக்கு என்ன அர்த்தம்னு உங்களுக்கே தெரியும். அவசர ஆத்திரத்துக்கு நகை நட்டை வித்துத் திங்கலாம். ஆனா, நெலத்த ஒரேயடியா வித்து போடக்கூடாது. நெலம்தான் கடைசி வரைக்கும் சோறுபோட்டு காப்பாத்தும்னு சொல்றதுதான் அந்த நாட்டு வாக்கியம்.

நெலத்த வச்சுத் தின்னுனு சொன்னத நம்ம ஜமீன்தாரு எப்பிடிப் புரிஞ்சுக் கிட்டாரோ தெரியலை. மதுரைல நெலத்த அடமானம் வச்சு, பணங் காசு நெறைய வாங்கி, ஆடம்பரமா செலவு செய்துட்டாரு. அதான் இப்போ கடன் மேல கடனாகி நோட்டீசு வந்து கிட்டிருக்கு.

மொதலாவதா ஜனகத்துக்காக டாம்பீகமா அரண்மன கட்டினது மட்டுமில்ல... அரண்மனை ஊழியஞ் செய்தவங்களுக்கு சம்பளம், கோயில்களுக்கும், பூசாரிகளுக்கும் மானிய உதவி, கணக்குப்புள்ளை, நாட்டாமை வகையறாவுல சிலவு... இப்படி நெரந்தரச் சிலவுகளும் கடன் ஏறிப்போனதுக்குக் காரணமாப் போச்சு.

ரெண்டாவதா, ஜமீன் நிர்வாகத்த நேரடியா கவனிக்காததால சனங்களுக்கு ஜமீன்தாரு மேல ஒரு பயமில்லாம போச்சு. வரி கட்டுற விஷயத்துல சனங்க தெனாவெட்டா நடந்துக்கிட்டாங்க. கஜானாவுக்கு வர வேண்டிய வருமானம் எல்லாம் கொறஞ்சு போச்சு.

வெவகாரங்கள கட்டப் பஞ்சாயத்துல பைசல் செஞ்சு முடிக்கிறதுக்கு கடமலைக் குண்டு முதலாளி நாயக்கர், தொட்டப்ப நாயக்கனூர் துரைராஜ் பாண்டியரு, கண்டமனூர் மாப்ள நாயக்கர், மொட்டனூத்து வேலுச்சாமி நாயக்கர், தெப்பம்பட்டி பாலு நாயக்கர், இப்பிடித் தனக்கு வேண்டப்பட்ட அஞ்சு பேருக்கு அந்த உரிமைய வாய் வாக்கா கொடுத்துட்டாரு. அதனால சனங்களுக்கு நம்ம ஜமீன்தாரு ஏணி வெச்சாலும் எட்டாத உசரத்துக்குப் போயிட்டாரு.

அடிக்கொரு தரம் சென்னப் பட்டினத்துக்குப் போயி, வெள்ளக்காரத் துரைமார்களோட கொண்டாட்டம் போட்டுக்கிட்டிருந்தாரு.

தனக்கு எது சௌகரியம்னு நெனச்சு சனங்கள விட்டுட்டு உசரத்துக்குப் போனாரோ அந்த உசரத்துல இருந்து ஒரேயடியா கீழ விழுந்தா காணாமப் போயிடுவோம்னு ஜமீன்தாருக்கு அப்ப தெரியாமப் போச்சு.

அரண்மனைய நிர்வாகம் செய்துக் கிட்டு இருந்த வேலுச்சாமி நாயக்கரையும், காரியதரிசி சீனிச்சாமி நாயக்கரையும் கூப்பிட்டாரு. ரெண்டு பேருமே அண்ணந் தம்பிக. மொட்டனூத்து கிராமத்துக்காரங்க. அரண்மனையே இவங்க கட்டுப்பாட்லதான் இருந்துச்சு.

மதுரை கலெக்டருக்கு கிஸ்தி கட்டாம கடன் ஏறிப்போன விவகாரத்தையும், கடன் ஏறிப்போனதுக்கான காரணத்தையும் அவங்க ரெண்டு பேர்கிட்டயும் விசாரிக்க ஆரம்பிச்சாரு.

“வில்லு வண்டி போயி பல்லக்கு, சாரட்டு வந்துருச்சு. வில்லம்பு போயி துப்பாக்கி வந்துருச்சு. குதிரைக் கொட்டம், யானைக் கொட்டம் இப்பிடி அரண்மனை மராமத்துச் சிலவுகளும் வந்துருச்சு. சிலவு கூடிப்போனதால கடன் சுமையும் கூடத்தான செய்யும்”னு சொன்னாரு வேலுச்சாமி நாயக்கரு.

“அதுமட்டுமில்ல துரை, சனங்ககிட்ட நாம நெலத் தீர்வைப் பணத்துக்குப் பதிலா ஆடு - மாடுகள ஓட்டிக்கிட்டு வந்திருக்கோம். அதுகளயும் பராமரிக்கணும். நம்ம அரண்மனைக் குதிர்ல சேர்த்து வச்சிருந்த நெல்லு, சோளம், வரகு அம்புட்டையும் அள்ளித் தொண்டூழியம் செய்தவங்களுக்கு மானியமா கொடுத்துட்டோம். கணக்கு இருக்கு பாருங்க...”னு சிட்டாப் புஸ்தகத்த எடுத்துக் காட்டினாரு சீனிச்சாமி நாயக்கரு.

‘திருப்பதி மலை மேல எத்தனை மொட்டை? எலந்தை மரத்துக்குக் கீழ எத்தனைக் கொட்டை?’னு கணக்கெடுத்துப் பார்க்கத்தான் ஆகுமா? பார்த்தாலுந்தான் இனிமே என்ன பிரயோசனம்?

மதுரைக்கு வரச்சொல்லி கலெக்டரு தாக்கல் அனுப்பிட்டாரு. இதுல வேற தேவகோட்டை செட்டியாரும் கடன் நேர்த்தி செய்யச் சொல்லி, இப்ப கலெக்டர் துரைகிட்ட பிராது கொடுத் திருக்காரு.

மறுநாள்... மதுரையில கலெக்டரு ஆபீஸ்ல ஏலக் கச்சேரி. துரை அதிகார மிடுக்கா நடுநாயகமா உக்காந்திருக்காரு. டவாலி கைல வெங்கலமணி வச்சுகிட்டு இருக்கான்.

பெரிய பெரிய சமஸ்தான ராஜாக்களும் ஜமீன்தார்களும் ஒரே எடத்துல ஒண்ணா உக்காந்திருந்தாங்க.

கிஸ்திப் பணம் கட்டாதவங்களோட நெலம், ஊருகள எல்லாம் வருஷத்துக்கு ஒரு தடவ இந்த ஏலக் கச்சேரியில ஏலம் விட்டு, கடனை நேர்த்தி செய்துக்குவாரு கலெக்டர்.

இந்த வருஷம் கிஸ்தி கட்டாம அளவுக்கு மீறி வாய்தா வாங்கினது நம்ம ஜமீன்தாருதான்.

ஏலம் ஆரம்பிச்ச உடனே கண்டமனூர் ஜமீனுக்குச் சொந்தமான அறுவத்திநாலு கிராமமும் கொஞ்ச நெலமும் ஏலத்துக்குப் போயிருச்சு. கண்ணெதிர்ல அவரோட சாம்ராஜ்யம் கையவிட்டுப் போகுது! இடி கண்ட நாகத்தப்போல நெல கொலஞ்சு பார்க்கறாரு ஜமீன்.

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு