Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 2

வருச நாட்டு ஜமீன் கதை
வருச நாட்டு ஜமீன் கதை

நூறு வருடங்களுக்கு முன்பு தேனி வட்டாரத்தில் சீரோடும் பேரோடும் வாழ்ந்த வருசநாட்டு ஜமீன் குடும்பம், ஒரு சித்தரின் சாபத்தால் சீரழிந்து போன கதை. பகுதி - 2...

உண்ணாம கெட்டுப் போச்சு உறவு,

பார்க்காம கெட்டுப் போச்சு பயிரு,

ஏறாம கெட்டுப் போச்சு குதிரை,

அடிக்காம கெட்டுப் போச்சு பிள்ளை,

முறுக்காம கெட்டுப் போச்சு மீசை!

- இது நாட்டு வாக்கியம். நம்ம ஜமீன்தாரு மீசையை நல்லா முறுக்கினாரு. நாடகக்காரி ஜனகத்தை சாரட் வண்டியில தூக்கிப் போட்டுக்கிட்டு, ராத்திரியோட ராத்திரியா தெக்க பொறப்பட்டு நாலு குதிரை பாய்ச்சல்ல மதுரைக்கு வந்து சேர்ந்துட்டாரு.

அன்னிக்குப் பார்த்து வெள்ளிக் கெழம. மீனாட்சி கோபுரத்துல இருந்து புறாக்கூட்டம் ‘படபட’னு அடிச்சுக் கௌம்பி ஒரு வட்டமடிச்சு திருப்பியும் கோபுரத்துக்கு வந்து சேருதுக.

மதுரை மொத்தமே அஞ்சாயிரம் ஏக்கர்தான். சின்னச் சின்ன வீதியில கொழாப் புட்டு, ஆப்பக் கடைகதான் ஜாஸ்தி. கீழ மாசி வீதியில எப்பவுமே யாத்ரீகர்கள் கூட்டம். சாரட் வண்டிக்கு வழிவிட்டு ஒதுங்கற சனத்தை ஆச்சரியத்தோட பாத்துக்கிட்டே வந்தா ஜனகம்.

ஜனகம் உடுத்திக்க ‘பட்டு பீதாம்பரம் ஜம்பர்’னு ஜவுளி எடுக்கணுமில்ல. பட்டு நூல் யாவாரி சிலோன் சின்னச்சாமி செட்டியார் ஜவுளிக் கடையில ஜனகத்தை மெதக்க விட்டாரு. சேலை சேலையா வேணுங்கற மட்டும் அள்ளித் தெளிச்சாச்சு. அவ திக்குமுக்காடி மார்பு விம்முறதை ஓரக்கண்ணால பார்த்து ஒரே ரசனைதான்.

வருச நாட்டு ஜமீன் கதை - 2
வருச நாட்டு ஜமீன் கதை - 2

மூட்டை கட்டினது அம்புட்டும் கடன்தான். ஜமீன்தாரு வருசத்துக்கு ஒரு தடவ கடனை நேர் செய்துக்குவாரு. கடன் சிட்டாப்பு புஸ்தகத்துல கையொப்பம் போட்டுட்டு வீதிக்கு வராங்க.

எண்ணெச் சட்டித் தெருவுல சனீஸ்வரன் காத்திருக்கறது ஜமீன்தாருக்கு அப்போ தெரியல. ரொம்பச் சின்ன தெரு. கொங்கையும் கொப்பரையுமா பொம்பளைங்க தெருவடக்கி எண்ணெச் சட்டி வச்சு யாவாரம் பண்றாங்க.

இப்போ, மேலமாசி வீதி முடியற எடத்துல செல்லாத்தம்மா கோயில் இருக்கே... அந்த எடந்தான்! திருமலை நாயக்கர் மதுரைய ஆண்ட காலத்துலயே இந்தத் தெருவுல அரண்மனை வண்டிக போக வார எடஞ்சலா இருக்குனு சங்கடப்பட்டுக்கிட்டு எண்ணெ செக்கையும் மாடுகளையும் உள்ளடக்கி போடச் சொன்னாங்க. யாவாரம் பண்றவங்க முடியாதுனு எதுத்து நின்னாங்க!

அப்பவே அப்படின்னா... இப்பவும் அதே கதைதான். யாவாரம் செய்ற பொம்பளைங்க பெரிய பெரிய எண்ணெ கொப்பரையை நகட்டி, அத்தாம் பெரிய சாரட் வண்டிக்கு எடங்கொடுக்கிறது கஷ்டமான காரியம்.

ஒரு காரியத்துக்குப் பொறப்படும் போது எதிர எண்ணெச் சட்டிக்காரி வந்தாவே கெட்ட சகுனம்னு சொல்லுவாங்க. ஜமீன்தாரு எதிர எண்ணெச் சட்டி தெருவே இருக்கு!

ஜமீன் கேட்டுக்கிட்டும் வழிவிட முடியாதுனு சொல்லிட்டாங்க. அவருக்கு மண்டையில சூடேறிப் போச்சு. பொம்பளைங்கன்னாத்தான் அவருக்குக் கிள்ளுக்கீர மாதிரியாச்சே! கூடவே ஜனகம் இருக்கிற கித்தாப்புல கள்ள மனம் துள்ளுது. குதிரைய ஒரு சுண்டு சுண்டினாரு. காத்து வேகத்துல சாரட் போனதுல சட்டியெல்லாம் எகிறி விழுந்து நொறுங்கி எண்ணெ ஆறா ஓடுது.

சனங்க ‘லபோ திபோ’னு கத்திக் குமிச்சு சாரட் வண்டிய நிறுத்த, அந்தச் சமயம் பாத்து அங்கன வந்த வெள்ளக்கார கலெக்டரு சாம்ஸன் துரைகிட்ட பிராது கொடுத்துட்டாங்க.

ஜமீன்தாருக்குப் ‘பழஞ்சோறு சுட்ட கதை’ மாதிரி ஆகிப்போச்சு!

கலெக்டர் துரை அங்கன வந்ததே ஜமீன்தாரை மடக்கி விசாரிக்கத்தான்! சென்னப் பட்டினத்துல, வெள்ளக்காரத் துரை கண்ணுல மண்ண அள்ளிப் போட்டுட்டு ஜனகத்தைக் கடத்திக்கிட்டு ஓடிவந்துட்டாரு இல்லையா? அவமானந் தாங்காத துரை, ஜமீன்தாரோட பல்லப் புடுங்கிப் போடணும்னு முடிவு செஞ்சுதான் கலெக்டர் துரைக்குத் தந்தி அனுப்பிச்சுருக்காரு!

“கண்டமனூர் ஜமீன் அவர்களே..! நாளை மாலை உங்கள் ஜமீனுக்கு நாங்கள் சோதனைச் சுற்று வருவோம். அவ்வமயம் உங்கள் ஐவேஜ் என்னவென்று நீங்கள் ருசுப்படுத்திக் காட்ட வேண்டும்”

அதாவது, ‘சென்னப் பட்டினத்துல வெள்ளப் பிரபுக்களுக்குச் சமானமா நாலு குதிரை பூட்டின சாரட் வண்டியில போறதுக்கு ஜமீன்தாருக்கு என்ன ஐவேஜ் இருக்கு? என்ன ஜபர்தஸ்து இருக்கு? ஜமீனுக்கு சேனை பலம் இருக்கா? எத்தன யானை, குதிரை, கழுதை இருக்கு? எவ்வளவு கப்பங் கட்டறாரு’னு கேள்வி!

இந்த விவகாரத்துல எண்ணெச் சட்டியும் ஜோடி சேர்ந்து போச்சு. கலெக்டர் துரை இனிமேல்ட்டு மப்போடதான் பேசுவாரு.

“கண்டமனூர் ஜமீன் அவர்களே..! நாளை மாலை உங்கள் ஜமீனுக்கு நாங்கள் சோதனைச் சுற்று வருவோம். அவ்வமயம் உங்கள் ஐவேஜ் என்னவென்று நீங்கள் ருசுப்படுத்திக் காட்ட வேண்டும்” அப்படிங்கிறதை கண்டிஷனா இங்கிலீசுல சொன்னாரு.

ஜமீன்தாருக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருது. ஜனகம் வேற பக்கத்துல இருக்காளா, கலெக்டர் மேல கோபத்த வெளிக்காட்ட முடியல.

முறுக்காம இருந்தா மீசை கெட்டுப் போகுமே. ‘கண்டமனூரானுக்குக் காரியம் சித்தி’னு மனசுல வச்சுக்கிட்டு, “மாப்ள... நாளைக்கு எங்க ஜமீனுக்குள்ள வந்து பாரு”னு சொடக்குப் போட்டு சவால் விட்டாரு.

பரம்பரை தெகிரியம். வருச நாட்டு மண்ணுக்கேத்த நெஞ்சுரம்.

காட்டு மழைக்கும் சாரல் மழைக்கும் ஈடுகொடுத்து, வருச நாட்டு மலையில பொறந்து, வளர்ந்து, தவழ்றது வைகை நதி. அந்த நதிக்கு நயமான பேரு ‘வள்ளல் நதி.’

அதுல கால் நனச்சு நிக்கிறதுதான் கண்டமனூர் கிராமம். ரெட்டைத் தூண் வச்சு மரஞ்செடி கொடியோட விஸ்தாரமா பொங்கி, ஜமீனுக்குத் திலகமா இருக்கிறது நாயக்கர் அரண்மனை.

எழுவத்திரெண்டு பாளையப்பட்டு ஜமீன்ல சிம்மாசனம் போட்டு மந்திரிப் பிரதானிகள், ராஜகுரு, ஜமீன்தாரிணி, சேவகக்காரர்களோட ஆட்சி செஞ்ச பெரிய ஜமீன்.

வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரைல வந்த கம்பளத்து நாயக்கர்கள். ‘பாளையப் பட்டக்காரர்கள்’னு பேர் வாங்கின ஜமீன்.

வருச நாடு மலை பச்சகுமாச்சி மலையோட சேர்த்து ரெண்டாயிரத்து ஐந்நூறு சதுர மைல் பரப்புக்கு, அறுபத்து நாலு கிராமங்களுக்கும் பரந்து விரிஞ்ச அதிகாரம்! பண்டிகை, பஞ்சாங்கம்னு வருஷம் பூராவும் களை கட்டின கிராமங்கள்.

வருமானத்துக்குக் கணக்கு வழக்கில்ல. சர்க்காருக்கு அதிகப்படி கப்பங்கட்டி, வெள்ளக்காரனோட வில்லங்கம் விஸ்தி இல்லாமதான் இதுவரைக்கும் இருந்துச்சு. ஆனா, இன்னிக்கு வந்த கலெக்டரு துரை, ‘உனக்கு என்ன ஐவேஜ் இருக்கு?’னு கேட்டுப்புட்டானே.

நம்ம ஜமீன்தாருக்கு சோதனையான காலகட்டந்தான்.

ஜனகத்தை இந்தச் சமயத்துல அரண்மனைக்குக் கூப்பிட்டுப் போறது ‘வேலியில போன ஓணான மடியில கட்டிக்கிட்ட கதை’னு நெனச்சாரு.

மதுரையில இருந்து கண்டமனூர் போற வழியில ஜம்புலிபுத்தூர் கிராமத்துல ஜமீனுக்கு வேண்டப்பட்டவங்க வீட்ல ஜனகத்தை தங்க வச்சாரு.

ஜனகம் கண் கலங்கவும் ஜமீன்தாரு தன் தோள் மேல சாச்சு, “ஜனகா... ஒரு வாரம், பத்து நாள் பொறுத்துக்க.. உன்னைக் கைவிடமாட்டேன்”னு தட்டிக் கொடுத்தாரு.

“என்னாலதான உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்? நான் திரும்பிப் போயிறவா?” - ஜனகம் அப்பிடிப் போட்டு வாங்குறா!

வருச நாட்டு ஜமீன் கதை - 2
வருச நாட்டு ஜமீன் கதை - 2

“சேச்சே... என் வீரம், என் யுக்தி என்னன்னு தெரிஞ்சுக்காம பேசுற. நான் ஒரு சூத்திரம் வச்சிருக்கேன். அந்தப் பரங்கிப் பய என்கிட்ட மண்டிக்காலு போடற மாதிரி செய்றனா இல்லையா பாரு!”

“சுவாமி... உங்களுக்கு ஆபத்து எதுவும் வரக்கூடாது”னு சொல்லி ஜமீன்தார கட்டிப் பிடிச்சு நெத்தியில அழுத்தமா முத்தம் வச்சா ஜனகம்.

இப்படியாக்க... ஜமீன்தாரு கண்டமனூர் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தாரு. அரண்மனை வாசல்ல இருந்த கொன்ற மரம் ஜமீன்தார வேடிக்கை பாத்துச்சு.

அப்பதான் சேவகக்காரன், “மகாராஜா, ரெண்டு யானை, ஊர் நாட்டுக்குள்ள புகுந்து, குடியானவங்களத் துரத்திப் பயிர் பச்சையெல்லாம் நாசப்படுத்திக் கிட்டிருக்கு. வேட்டை உத்தரவு வேண்டி நேத்து பூராவும் உங்கள தேடிக்கிட்டு இருந்தோம்”னு பதறிக்கிட்டே சொன்னான். ஜமீன்தாரு, ‘ஏதுடா இது வரிசையால வருது சோதனை... செய் வினை, ஏவல், சூனியம், காத்து கருப்பு ஏதாவது இருக்குமோ’னு முதல்ல சந்தேகப் பட்டாலும், அப்புறமா சுதாரிச்சுக் கிட்டாரு. பரம்பரைல யாரும் சந்திக்காத சவாலையா நாம சந்திக்கப்போறோம்? குலதெய்வம் ஜக்கம்மா துணைக்கு இருக்கும்போது, கம்பளத்தான் சொல்லு மீறி செல்வாக்கு சரியாதுனு தெகிரியம் வந்துச்சு.

ராத்திரி பூராவும் நல்லா ரோசனை செஞ்சு மனசுல ஒரு திட்டத்தோட கார்வார் ரங்கசாமியையும், மணியக் காரர்களையும் கூப்பிட்டு மடமடனு உத்தரவு போட்டுட்டு தூங்கப் போனாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 1

‘மலை ஜாதி பளியர்கள் நூறு பேர சேக்கணும்! அம்பாரிக்கு நாலு அரண்மனை யானையும், ஓட்டத்துக்கு இருவத்தேழு குதிரையும், வேட்டை நாய் முப்பத்தாறும், கடமலைக்குண்டு காட்டுப் பகுதிக்குள்ள தயாரா நிக்கணும்! மயிலாடும்பாறை பள்ளத்தாக்குல காட்டு யானை எல்லாத்தையும் ஒண்ணு சேக்கணும்! எறநூறு தலைக்கு ஆகாரம் கட்டணும்!’

கடைசியா ஜமீன்தாரு போட்ட உத்தரவுல ‘யானையப் புடிச்சு சுண்ணாம்பு அடிக்கணும்’னு சொன்னதுதான் ரொம்ப பேருக்கு பகீர்னு இருந்துச்சு!

தொடரும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு