Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 20

வருச நாட்டு ஜமீன் கதை - 20
வருச நாட்டு ஜமீன் கதை - 20

ஜன்னலுக்கு வெளிய பச்சைப் பசேல்னு இருந்த புதர் மறைவுல கண்ணலு காமயசாமி நாயக்கரு துப்பாக்கியோட காத்துக்கிட்டிருந்தாரு.

கண்டமனூர் ஜமீனச் சேர்ந்த அறுவத்தி நாலு கிராமங்களும், அந்தக் கிராமங்களச் சேர்ந்த மாவடை, மரவடை, திட்டுத் திடல், குளங்கள், ஓடைகள், கண்மாய்கள் வகையறாவும் மலை மடு நெலங்கள் தொகையறா அம்புட்டையும், வள்ளல் நதி கண்டமனூர் சப்-டிவிஷன்னு பிரிச்சு ஏலத்துல எடுத்தாச்சு.

எட்டயபுரம் ஜமீன்தார் மகாராஜ ராஜேந்திர முத்துக்குமார ஸ்ரீவெங்கடேசுர எட்டப்ப பூபதி ஐயன்தான் வருச நாட்டு கண்டமனூர் ஜமீன ஏலத்துல எடுத்துக்கிட்டாரு.

சகல சம்பத்தும் சமுதாயமும் இனிமேல் பட்டு எட்டயபுரம் ஜமீன்தாருக்குத்தான் பாத்தியதை.

எட்டயபுரம் ஜமீன்தாரு அப்போ மைனரா இருந்ததால ஜமீன்தார் சார்பா கலெக்டர் துரைதான் ஏலம் எடுத்தாரு. எட்டயபுரம் ஜமீனுக்கு வெள்ளைக்காரங்க எதுக்காக இப்பிடி ஒத்தாசை செய்தாங்க தெரியுமா?

ஆரம்ப காலத்துல இருந்தே வெள்ளக் காரங்களுக்கும் எட்டயபுரம் ஜமீனுக்கும் உள்ளூர நல்ல சினேகிதம் இருந்து வந்துச்சு. எந்த ஒரு விஷயத்துக்கும் இதுவரை சின்ன சண்டைகூட வச்சுக்கல. கிஸ்தி பணத்தையும் தவறாமத்தான் ஜமீன்ல கட்டி வந்தாங்க.

அதுமட்டுமில்ல... எழுவத்திரெண்டு பாளையப்பட்டு ஜமீன்ல, பெரிய ஜமீன் கண்டமனூர்தான்.

‘காடு மேடு சுத்தினாலும் கடைசியா கண்டம நாயக்கன் கவட்டுக்குள்ளதான் நொழையணும்’னு இப்பவும் சனங்க சொல்லித் திரியறாங்க. அந்தளவுக்குப் பரந்து விரிஞ்ச விஸ்தீரணம், தானியங்கள், பழங்கள்னு வருமானத்துலயுஞ் சரி, கண்டமனூர் ஜமீன்தான் ஏகபோக பூமியா இருந்துச்சு.

இங்க இருக்கிற வருச நாட்டு மலையில பொறந்து தவழ்ற வைகை நதி, மதுரை, ராமநாதபுர சமஸ்தானம் தாண்டி கடல் வரைக்கும்போகுது.

எல்லாத்துக்கும் மேல வேற யார் கைக்காவது இந்த ஜமீன் போயிட்டா வெள்ளக்காரங்களுக்கு ராஜகம்பளத்தார்னால பிரச்னை வரும். அதனால அவங்க கட்டுப்பாட்ல இருக்கிற, சினேகிதர் எட்டயபுரம் ஜமீனுக்கே பாத்தியதை செய்துட்டாங்க.

எட்டயபுரம் ஜமீன்தாரு மைனரா இருக்கிறதால ஜகன்னாதஞ் செட்டியாருதான் திவானா இருந்து கண்டமனூர் - வள்ளல் நதி ஜமீனையும் கவனிச்சுக் கிட்டாரு.

தேவகோட்டை செட்டியாருக்கும் மலையில கொஞ்சம் நெலத்தைப் பிரிச்சுக் குடுத்து கடனை நேர் செய்துக்கிட்டாங்க.

மீதி இருக்கிற தெப்பம்பட்டி, பால கோம்பை, ராஜக்காபட்டி, சித்தார்பட்டி, கதிர் நரசிங்கபுரம், துரைசாமிபுரம், கட மலைக்குண்டு - இப்பிடி ஏழே ஏழு கிராமங்களும் பண்ணை நெலங்களும் வருச நாட்டு மலைக்காடுகளும் மட்டுந்தான் நம்ம ஜமீன்தாரு சாமியப்ப நாயக்கருக்குச் சொந்தம்னு துரை வச்ச தலையெழுத்தாப் போச்சு.

இப்போ நம்ம ஜமீன்தாரு சாமியப்ப நாயக்கர நெனச்சுப் பாருங்க.

பரம்பரையா ராச்சியம் செய்ற நம்பிக்கைல ரெட்டத் தூண் வச்சு தேக்கு, தோதகத்தி மரங்கள்ல பாத்துப் பாத்து எழச்சுக் கட்டின அரண்மனையை விட்டுட்டுப் போயிடணும். பெரிய கனவு மண்மேடாப் போச்சு.

கொடைக்கானல் செண்பகனூர்ல நம்ம ஜமீன்தாரு ஒவ்வொரு கல்லாப் பார்த்துப் பார்த்துக் கட்டின பங்களாவும் அதச் சுத்தி உள்ள நெலமும் வெள்ளக்காரங்களே குத்தகைக்கு எடுத்துக்கிட்டாங்க. (இப்போ அங்கன புனித இருதயக் காலேஜும் மியூசியமும் நடந்துகிட்டு இருக்கிறது. விசாரிச்சா உங்களுக்கே தெரியும்.)

இப்பிடி ஒரு பெரிய சாம்ராஜ்யம் கண்ணு முன்னால சிதஞ்சு போறத யார்தான் தாங்க முடியும்? நம்ம ஜமீன் சாமியப்ப நாயக்கரு மனசு வெந்து, நொந்து, தொவண்டுபோயி கண்டமனூர் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாரு.

ஜமீன்தாரிணி வேலுத்தாயம்மா தெப்பம்பட்டியிலயே தங்கிட்டாங்க. ‘கண்டமனூர் அரண்மனைக்கு இனி திரும்ப மாட்டேன்’னு ஒரு சேவுகன்கிட்டே சொல்லியனுப்பிட்டாங்க.

ஊர்ச் சனங்களும் சாடை மாடையா ஜமீன்தார திட்ட ஆரம்பிச்சாங்க.

இப்போதைக்கு ஜமீன்தாருக்கு ஆறுதலா இருக்கிறது ரெண்டே ரெண்டு... மதுப்புட்டி, ஜனகம்.

வாணி விலாசத்துக்குத் தடுமாறிக்கிட்டுப் போனாரு ஜமீன்தாரு. வாசலுக்கு ஓடி வந்த ஜனகம் அவர கைத்தாங்கலா படுக்கை அறைக்குக் கூப்பிட்டுப் போயி மெத்தைமேல படுக்க வெச்சா.

யாரோ ஜன்னலுக்கு அந்தப் பக்கமா ஓடி மறையற மாதிரி அரச்சாடையா தெரிஞ்சது. ஜனகம் என்ன ஏதுனு சன்னல் வழியார பாக்க, ஜமீன்தாரு தலையத் தூக்கி, “என்ன பாக்குற ஜனகா?”னு கேட்டாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 20
வருச நாட்டு ஜமீன் கதை - 20

“யாரோ ஒரு ஆளு வந்த மாதிரி தெரிஞ்சுது.”

“எல்லாம் பிரமை ஜனகா. ஜமீனே முங்கிப்போச்சு. இனி ஒரு பயலும் இங்கன வரமாட்டான். கொடுக்கிறவனும் வரமாட்டான், வாங்கறவனும் வரமாட்டான். இனிமே எனக்குச் சினேகிதனும் இல்ல, பகையாளியும் இல்ல. இனிமே நீகூட எனக்கு அன்னியந்தான்..!”

“புலம்பாதீங்க... அமைதியா தூங்குங்க. நானிருக்கற வரைக்கும் கவலையே படாதீங்க. உங்கள விட்டுப் போகவேமாட்டேன்”னு சொல்லி ஜனகா ஓடிவந்து ஜமீன்தார அணைச்சுப் பிடிச்சு தலையத் தடவிக் குடுத்தா.

“என்ன விட்டுப் போயிடுனுதான் சொல்ல வந்தேன். போயிடு... சென்னப் பட்டினத்துக்கே போயிடு. இனிமே எங்கிட்ட என்ன இருக்கு? உனக்கு என்ன கொடுக்க முடியும் சொல்லு? எல்லாம் கைவிட்டுப் போயிருச்சே”னு தலையில அடிச்சுக்கிட்டு எந்திரிச்சு உக்காந்தாரு.

ஜன்னலுக்கு வெளிய பச்சைப் பசேல்னு இருந்த புதர் மறைவுல கண்ணலு காமயசாமி நாயக்கரு துப்பாக்கியோட காத்துக்கிட்டிருந்தாரு.

காமயசாமி வாணி விலாசத்துப் பக்கம் வர்றதுக்கு முந்தியே ஜனகம் ஆத்துல குளிச்சுட்டு உள்ள போயிட்டா. அதுக்குப் பெறகு வந்த காமயசாமி, ‘அடடா... தவறவிட்டுட்டோமே’னு வருத்தப்பட்டாரு.

வாணி விலாசத்த சுத்திச் சுத்தி ரெண்டு சேவுகமார்க காவல் காத்துக்கிட்டு இருந்தாங்க. எப்போ சமயம் வரும்னு சன்னல் வழியா பாத்துக்கிட்டு இருக்கும்போது, அப்பத்தான் ஜமீன்தார கைத்தாங்கலா கூப்பிட்டுக்கிட்டு படுக்கற அறைக்குள்ள வந்தா ஜனகம்.

அவங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் பேசிக்கிட்டிருந்தத கவனிச்சாரு. ‘ஜமீனையே ஒழிச்சுப் போட்டியேடி பாவி முண்ட’னு மனசுல கருவிக்கிட்டே இருந்தாரு காமயசாமி.

ஜமீன்தாரோட முதுகுப் பக்கம்தான் கண்ணுக்கு தெரிஞ்சுகிட்டே இருந்துச்சு. இன்னும் சுடுற வசத்துக்கு ஜனகம் வரல. ஒரு வேட்டு போட்டாலும் சரி வேட்டா இருக்கணும்னு காமயசாமி குறி பாத்துக்கிட்டே இருந்தாரு.

ஜனகம் கொஞ்சம் மதுவ எடுத்து ஊத்தி, “எல்லா சொத்தும் திரும்ப நமக்கே வரும் பாருங்க. நானு எதுக்கு இருக்கேன் சொல்லுங்க?”

“இதே வார்த்தைய எம் பொண்டாட்டி வேலுத்தாயம்மா சொல்லலியே. ம்... என்ன செய்ய..? அவளச் சொல்லியும் குத்தமில்ல. எல்லாம் என்னால வந்த வென”னு சொல்லிக்கிட்டே ஆத்தாமை தாங்காம ஜனகம் கன்னத்துல கையணைவா வச்சு கூப்பிட்டாரு -

“ஜனகா..!”

“சொல்லுங்க...”

“என்னைச் சுத்தி இருக்கறவங்க அத்தனை பேரும் நல்லவங்களா, கெட்டவங்களா?”

“யாரச் சொல்றீங்க?”

“என்னோட ஜமீன கவனிச்சுக் கிட்டவங்களத்தான் சொல்றேன். கஜானாவுல இருந்த அவ்வளவு பணங்காசு எங்க போச்சு?”

“இனிமே அந்தச் சந்தேகம் வரப் படாதுங்க. அது யாருக்கும் நல்லதில்ல.”

“ம்... அதான் நான் தட்டுகெட்டு போயிட்டேனே. இனி எனக்கே

தெரிஞ்சாலும் நான் யாரை என்ன பண்ண? சொல்லு ஜனகா..?”

“அத விடுங்க. எல்லாத்துக்கும் நானிருக்கேன்”னு சொன்ன ஜனகம் மெத்தை மேல மண்டி போட்டுக்கிட்டே வந்து ஜமீன்தாரு முகத்தை மார்போட அணைச்சுக்கிட்டா. அவ ஒடம்ப கவ்விப் புடிச்சிருந்த ரவிக்க எப்ப கழண்டுபோச்சுனு அவளுக்குத்தாந் தெரியும்.

‘இப்படிக் காட்டிக் கட்டித்தானே எங்க ஜமீன்தார கைக்குள்ள போட்டுக் கிட்ட பாதகத்தி முண்ட’னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே பொதர் மறைவுல பல்ல நற... நற...ன்னு கடிச்சாரு காமயசாமி.

‘இதுதான் நயமான சந்தர்ப்பம். ஜனகம் செத்தாலுஞ்சரி... ஜமீன்தாரே செத்தாலுஞ்சரி’னு மூச்ச இழுத்துப் பிடிச்சு... துப்பாக்கி குதிரையில கைய வச்சு இழுத்தாரு. ‘டமார்’னு ஒரே வேட்டுதான்.

அவரோட அர கொற அப்பியாசம் கூட குறி தப்பாம வேல பாத்திருச்சு. சரியா ஜனகத்தோட மார்ல சில்லு சில்லா குண்டு பாஞ்சது. ரெத்தம் குமுறிக்கிட்டு கிளம்ப...

“அம்மா ...ஆ ...ஆ ...”னு அலறியடிச்சு படுக்கைல சாஞ்சா ஜனகம். அடுத்த குண்டு ஜமீன்தாரு மேல பட்டுறுமோனு ஒரு கையால ஜமீன்தார இழுத்துப் புடிச்சுப் போர்த்துக்கிட்டா.

வேட்டு அடிச்ச சத்தத்துலயே ஜமீன்தாருக்குச் சட்டுனு மயக்கம் எறங்கிறுச்சு. “ஜனகா ...ஆ ...ஆ”னு கத்துனாரு. வாணி விலாசமே தூர்பேந்து போச்சு.

பாக்கு கடிக்கிற நேரத்துல அத்தனையும் முடிஞ்சே போச்சு.

காமயசாமி நாயக்கரு பின்பக்கமாவே குதிச்சு வருச நாட்டு மலைப் பக்கம் ஓடித் தப்பிச்சுட்டாரு.

கண்டமனூர் மட்டுமில்ல... சுத்தி இருக்கற அத்தனை ஜமீன்லயும் இதேதான் பேச்சு.

கலெக்டரு வந்து பார்த்தாரு. நடந்தது எல்லாம் விசாரிச்சாரு. சுட்டது கண்ணலு காமயசாமி நாயக்கருதான்னு காவக்காரங்க ருசுப்படுத்தினாங்க. ஜமீன்தாரு சாட்சி.

காமயசாமி நாயக்கரு கண்காணாம போயிட்டது தெரிஞ்ச வேலுத்தாயம்மாவுக்கு நிம்மதியா இருந்துச்சு. இருந்தாலும் காமயசாமி குடும்பத்துக்குத் தன்னால ஆன மட்டும் ஏதோ குடுத்துவிட்டாங்க. இது ஜமீன்தாருக்குத் தெரியாது.

ஒரு மாசம் ஓடிப்போச்சு. ‘இனிமே கண்டமனூர் அரண்மனையில இருக்கக் கூடாது. தெப்பம்பட்டி போயிறணும்’னு முடிவு செஞ்சு ஜமீன்தாரு எல்லா சாமான்களையும் அள்ளி மாட்டு வண்டியில போடச் சொன்னாரு. அப்பா ராமகிருஷ்ண நாயக்கர் படத்தை மட்டும் அங்கேயே இருக்கட்டும்னு விட்டுட்டாரு.

அகஸ்மாத்தா அரண்மனை வாசல்ல இருந்த கொன்றை மரத்த கவனிச்சாரு.

அந்த ஒத்தப் பூ... மஞ்சப் பூ இருந்த எடத்துல நீளமா முருங்கைக்காய் மாதிரி ஒரு காய் முத்திப்போய் தொங்கிக்கிட்டு இருந்துச்சு.

விரக்தியா சிரிச்சாரு ஜமீன்தாரு. சென்னப் பட்டினத்துல மொத நாளு ஜனகா மேல புடிச்ச சொகந்த மணம் அவரு மண்டைக்குள்ள வந்து நிக்குது. அதோட கடைசி கடைசியா அவ உசுரில்லாம மார் மேல சாஞ்சப்ப வீசுன ரத்த வாடையும் நெனப்புல வருது. கண்ணத் தொடச்சுக்கிட்டாரு ஜமீன்தாரு.

அந்தச் சமயத்துல ஒரு வயசான ஆளு தள்ளாட்டமா நடந்து அரண்மனைத் தோட்ட வாசல்ல வந்து நின்னாரு. கூடவே ஏழெட்டு வயசுல ஒரு பொண்ணு. இதுவரைக்கும் அந்த ஊர்ல அவங்கள யாருமே பாத்ததில்ல.

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு