Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 21

வருச நாட்டு ஜமீன் கதை - 21
வருச நாட்டு ஜமீன் கதை - 21

சின்னப் பொண்ணு வாணி, தன்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியாம தலையைத் தூக்கி அப்பாவையும் ஜமீன்தாரையும் மாறி மாறிப் பாத்துக்கிட்டே இருந்தா.

அரண்மனைத் தோட்டத்து வாசல்ல வந்து நின்ன பெரியவரையும் அந்தச் சின்னப் பொண்ணயும் நம்ம ஜமீன்தாரு சாமியப்ப நாயக்கரு தெரிஞ்சிருக்க நாயமில்லை.

அவங்களப் பார்த்தா ஜமீன்தாரு கிட்ட என்னமோ கேக்க வர்றவங்க மாதிரி தெரிஞ்சுது.

அவங்க ரெண்டு பேரையும் வரச் சொல்லி சேவுகன்கிட்ட கையக் காட்டினாரு.

ஜமீன்தாருக்குப் பக்கத்துல அந்த ரெண்டு பேரும் நெருங்கி வந்து, அவரோட கால்ல விழுந்து எந்திரிச்சாங்க.

ஜமீன்தாரு அந்தச் சின்னப் பொண்ணு முகத்த உத்துப் பார்த்தாரு. எங்கயோ பார்த்த மாதிரி அவர் மனசுல அலை அலையா நிழலாடுச்சு.

“யார் நீங்க?”னு கேட்டாரு ஜமீன்தாரு.

“என் பேரு வெங்கடேஸ்வரலு. இவ என்னோட பொண்ணு. ராயல சீமைலயிருந்து வர்றோம்!”

“உன் பேர் என்ன பாப்பா?”

“வாணி... கலைவாணி!”

ஜமீன்தாருக்கு எங்கயோ பொறி தட்டுச்சு.

“கண்டமனூருக்கு எதுக்காக வந்தீங்க?”

“என்னோட பொண்டாட்டி இங்கதான் ஆஸ்தான நாட்டியக்காரியா சேர்ந்திருக்கான்னு சென்னப் பட்டினத்துல சொன்னாங்க!”

“அவ பேரு..?”

“ஜனகாம்பாள்..!”

“ஜ-ன-கா-ம்-பா-ளா..?”

“ஆமாங்க. சீத்தாதேவினு வீட்டுல வச்ச பேரு. நாட்டியத்துக்காக சென்னப் பட்டினத்துக்குப் போறப்ப ஜனகாம்பாள்னு பேர மாத்தி வச்சுக்கிட்டா. நல்லா ஆடுவா, பாடுவா...”

ஜமீன்தாரு நெத்தியச் சுருக்கினாரு.

பக்கத்துல நின்னுகிட்டிருந்த சேவுகன சாடையாப் பாத்தாரு. சாடையப் புரிஞ்ச சேவுகன், சட்டுனு வெலகித் தூரப் போயிட்டான்.

ஜமீன்தாரு பெரியவர சந்தேகமாப் பார்த்து, “ஜனகாம்பாளுக்கும் உங்களுக்கும் எப்போ கல்யாணமாச்சு..?”னு கேட்டாரு. “அது ஒரு பெரிய கதை சாமீ. நள மகாராஜா கதை மாதிரி, துஷ்யந்தன் - சகுந்தலை கதை மாதிரி எங்க கதையும் பெரிய கதைதான். ரெண்டாந்தாரமா அவளக் கட்டிக்கிட்ட பெறகு...”னு ஆரம்பிச்சு பெரியவர், வெங்கடேஸ்வரலு சொல்லி முடிச்சப்போ, நம்ம ஜமீன்தாரோட நெனப்பு எங்கயோ குதிரைல போய்கிட்டு இருந்துச்சு.

ஜனகாவோட ஜம்புலிபுத்தூர்ல ஜமீன்தாரு பேசின பேச்சு ஞாபகத்துக்கு வந்தது.

‘உங்க மேல எனக்குக் கோவம்.’

‘ரொம்ப தாமசமா வந்துட்டேனா ஜனகா..?’

‘அதெல்லாம் இல்ல... உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுனு பொய்தான சொன்னீங்க? அதுவும் மூணு பொண்டாட்டியாம். எதுக்குப் பொய் சொன்னீங்க?’

‘எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு பொய் சொன்னது வாஸ்தவம்தான். அதனால, உனக்குச் சந்தோஷமா... வருத்தமா?”

“ம்... சந்தோஷந்தான்!”

ஜனகாவோட சலங்கைச் சத்தம் காதுல ஜலஜலக்க... ஜனகம் மெள்ள மெள்ள மங்கலா மறஞ்சு போனா. நம்ம ஜமீன்தாரு அந்தச் சின்னப் பொண்ணு வாணியோட முகத்த உத்துப் பாத்தாரு. ஜனகாவோட முகச்சாடை அப்பிடியே இருந்துச்சு.

“என்ன சாமீ ரோசனை செய்றீங்க?”

“இது ஜனகாவோட குழந்தைதான..?”

நம்ப முடியாம பதிலுக்குக் கேள்வியா கேட்டாரு ஜமீன்தாரு.

“ஆமாங்க. இவ பொறந்து மூணு மாசத்துலயே என்கிட்ட விட்டுட்டு சென்னப்பட்டினத்துக்கு நாட்டியமாடப் போயிட்டா...” - கண் கலங்கினாரு வெங்கடேஸ்வரலு.

வருச நாட்டு ஜமீன் கதை - 21
வருச நாட்டு ஜமீன் கதை - 21

கண்ணத் தொடச்சுக்கிட்டுப் பேச ஆரம்பிச்சாரு. “அவளோட அழகுக்கும் பவிசுக்கும் நான் தோது இல்லையாம்... அவளுக்கு வரப்போற புருஷன் ஜமீன்தாரு மாதிரி இருந்தாகணுமாம். அந்தப் பேச்சுல எங்க ரெண்டு பேத்துக்கும் சின்ன சண்டை வந்து...” - தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சாரு வெங்கடேஸ்வரலு.

சின்னப் பொண்ணு வாணி, தன்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியாம தலையைத் தூக்கி அப்பாவையும் ஜமீன்தாரையும் மாறி மாறிப் பாத்துக்கிட்டே இருந்தா.

“என்னோட வாழத்தான் அவளுக்குப் பிடிக்கல... சரி, இந்தச் சின்னப் பொண்ணு என்ன பாவம் செய்தா? இவளை விட்டுப் பிரிஞ்சு இருக்க அவளுக்கு எப்பிடி மனசு ஒப்புச்சு? நீங்கதான் கருணை பார்த்து அவளோட எம்மகளைச் சேத்து வைக்கணும். நான் வந்த வழியே திரும்பிப் போறேன்!”னு சொன்ன வெங்கடேஸ்வரலு, கையில் கோத்து வெச்சிருந்த துணி மூட்டைக்குள்ள இருந்து ஒரு சேலைய எடுத்துக் காட்டி, “இந்தச் சேலைதான் நான் ஜனகத்துக்கு எடுத்த கல்யாண சேலை!”னு சொல்லி திரும்பவும் அழ ஆரம்பிச்சாரு.

நம்ம ஜமீன்தாரு திரிசங்கு சொர்க்கத்துல இருந்த மாதிரி, ஜனகத்தப் பத்தின நெசத்தையும் உடனே சொல்ல முடியாம, பெரியவருக்கு ஆறுதலும் சொல்ல முடியாம பெரிய இக்கட்டுல மாட்டிக் கிட்டிருந்தாரு.

இருந்தாலும் மனசத் திடப்படுத்திக் கிட்ட ஜமீன்தாரு, “கவலைப்படாதீங்க. உங்களுக்கு வேண்டின எல்லா சகாயமும் நான் செய்து தாரேன். எல்லா விவகாரத்தையும் அப்புறமா சொல்றேன். தெப்பம்பட்டி அக்ரஹாரத்துக்குப் போய்ச் சேருங்க. அங்கன கிருஷ்ண ஐயங்கார்னு ஒருத்தர் இருக்காரு. அவருதான் அங்க பெருமாள் கோயிலுக்குப் பூசை புனஸ்காரம்னு செய்துகிட்டிருக்காரு. அவரு எல்லா விவரமும் சொல்லுவாரு. ஆனா, ஒண்ணு...”னு சொல்லி நிறுத்தின ஜமீன்தாரு, “உங்கள யாருனு கேட்டா என்ன சொல்வீங்க..?”

“என்ன சொல்லணும் சாமீ..?” - பரிதாபமா கேட்டாரு வெங்கடேஸ்வரலு.

“நீங்கதான் ஜனகத்தோட புருஷன்னோ, இவ ஜனகத்தோட பொண்ணுனோ யார்கிட்டயும் சொல்லக் கூடாது. உங்க ஜீவனத்துக்கு வேண்டிய அம்புட்டும் அவரே செய்து தருவாரு”னு சொன்னாரு ஜமீன்தாரு. மாட்டு வண்டிய வரச் சொல்லி, அதுல அவங்க ரெண்டு பேத்தையும் தெப்பம்பட்டிக்கு அனுப்பி வெச்சாரு.

தெப்பம்பட்டி அரண்மனைனு சொன்னா, அது நீங்க நெனைக்கிறாப்பல கண்டமனூர் அரண்மனை மாதிரியோ, போடிநாயக்கனூர் அரண்மனை மாதிரியோ இருக்காது.

ஜமீன்தாரு குடும்பம் கண்டமனூருக்கு வர்றதுக்கு முன்னால, மொத மொதலா தெப்பம்பட்டியிலதான் வந்து காடு வெட்டி நெருஞ்சிமுள்ளு தூத்தி வீட்டக் கட்டி தங்கியிருந்தாங்க.

சாதாரண வீடுதான். பரந்து விரிஞ்சு நடுவுல தொறவா ஆகாசம் பாத்து இருக்கும். சின்ன நடைவாசல். சின்னச் சின்ன சன்னல். சிம்னி விளக்கு. எல்லாப் பக்கமும் தானிய மூட்டைகளா அடுக்கி வச்சிருப்பாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 21
வருச நாட்டு ஜமீன் கதை - 21

ஆடு-மாடுகள தெக்குப் பக்கமா அடச்சுத் ‘தொளு’ வச்சிருந்தாங்க. வீட்டைச் சுத்தி வேப்பமரம் நெறைய இருக்கும். மொத மொதலா மூங்கித் தப்பை, பெரம்பு, ஓலை இதுகள வெச்சு வீடு வேஞ்சிருந்தாங்க.

ரொம்ப காலத்துக்கப்புறம் செல்வாக்கு சேந்த பெறகுதான் வைகை ஆத்துக்கரையில கண்டமநாயக்கனூர்னு உருவாக்கினாங்க. தெப்பம்பட்டிக்குப் பக்கத்துல பாலகோம்பையிலதான் ஜமீன்தாரோட பங்காளிகள் கொண்டல் நாகையசாமி நாயக்கரு, ராமகிருஷ்ண சாமி நாயக்கரு, சுப்புராயலுசாமி நாயக்கரு இப்பிடி அத்தன பேத்துக்கும் நெலங்கள ஒதுக்கிக் குடுத்திருந்தாங்க.

நெற மாச வயித்துக்காரியா இருந்த வேலுத்தாயம்மா, நம்ம ஜமீன்தாரு மேல கோவப்பட்டு கண்டமனூர்ல இருந்து வில்லு வண்டியில பொறப்பட்டு வந்தாங்களே - அவங்க வந்தது இந்தத் தெப்பம்பட்டி அரண்மனை வீட்டுக்குத்தான்.

ஜமீன்தாரோட பங்காளிகள் வேலுத்தாயம்மாவ பாலகோம்பை கிராமத்துக்கு வந்து வசதியா இருக்கச் சொன்னாங்க. எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுக்கிட்டும் அதுக்கு உடன்பட மாட்டேனுட்டாங்க.

சின்ன அத்தை வேலாண்டியம்மா கூடவே தெப்பம்பட்டியிலயே இருந்துக்கிட்டாங்க.

அந்தத் தெப்பம்பட்டி அரண்மனையிலதான் அந்த அதிசயம் நடந்துச்சு.

வேலுத்தாயம்மாவுக்குப் பெண் குழந்தை பொறந்திருச்சு.

ஏழு தலைமுறையா ஜமீன்தாரு குடும்பத்துல பெண் குழந்தையே பொறந்ததில்ல. இப்பத்தான் மொத மொதலா ஒரு பெண் குழந்தை பொறந்திருக்கு.

சட்டுப்புட்டுனு ஜோசியக்காரங்கள கூப்பிட்டு அனுப்பினாங்க.

ஜமீன்தாருக்கும் சொல்லி அனுப்பினாங்க. அவரும் வந்து பார்த்தாரு. சுகமா ஒரு பெருமூச்சு விட்டாரு. ஆனா, வேலுத்தாயம்மா ஜமீன்தாரு கூடப் பேசாம குழந்தையவே பார்த்துக் கொஞ்சிக் கிட்டிருந்தாங்க.

அரண்மனைய கவனிச்சுக்கிட்டிருந்த வேலுச்சாமி நாயக்கருக்கும், சீனிச்சாமி நாயக்கருக்கும் ஏகப்பட்ட சந்தோஷம். அந்தக் குழந்தைக்கு ‘ராஜமாணிக்கம்’னு பேர் வெக்கணும்னு மல்லுக் கட்டினாங்க. ஆனா வேலாண்டியம்மா தன் பேத்திக்கு ‘கதிர்வேல் தாயம்மா’னுதான் பேர் வெக்கணும்னு ஒத்தக்கால்ல நின்னாங்க.

ஜோசியக்காரங்க வந்த பெறகு பார்க்கலாம்னு வேலுத்தாயம்மா ரெண்டு பேத்தையும் சமாதானப் படுத்தினா.

ஜோசியக்காரங்க வந்து குழந்தை யோட ஜாதகத்தக் கணிச்சு சொன்னாங்க.

“பரணி நட்சத்திரத்துல பொறந்த பொண்ணு, தரணி ஆளப் பொறந்திருக்கு. அப்பனுக்குச் சாப தோஷத்தை நீக்கி, ஆயுளை விருத்தி செய்யக்கூடிய ஜாதகம்”னு சொன்னாங்க.

“ஆனா ஒண்ணு... இந்தப் பொண்ணு பொறக்கிறதுக்குப் பதிலா ஆண் குழந்தை பொறந்திருந்தா அந்தக் குழந்தை ஜமீன்தாரு முகத்தையே பார்த்திருக்க முடியாது!”னு சொல்லி, அதோட ஒரு வில்லங்கமான பலா பலனையும் சொல்லி முடிச்சாங்க.

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு