Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 22

வருச நாட்டு ஜமீன் கதை - 22
வருச நாட்டு ஜமீன் கதை - 22

வேலுச்சாமி நாயக்கரு ரொம்ப வெவரமான ஆளுதான். ஜமீன் தாரிணி, வேலுத்தாயம்மா கிட்டயும் நல்ல பேரு வாங்கினாரு. அதே சமயத்துல ஜமீன்தாருகிட்டயும் கெட்ட பேரு வராமப் பாத்துக்கிட்டாரு.

அரண்மனை ஜோசியக்காரங்க கணிச்சுச் சொன்னது சரியாத்தான் இருந்துச்சு!

“பளியஞ்சித்தனோட மகள் சின்ன மீனாட்சியப் பொறுப்பெடுத்து வளர்த்து பெரிய ஜமீன்தாரு ராமகிருஷ்ண நாயக்கரு புண்ணியம் சேர்த்ததாலதான் நம்ம ஜமீன்தாரு சாமியப்ப நாயக்கருக்கு பெண் வாரிசு பலமும் கூடியிருக்கு. இப்படி இருந்தாலும், பெண் குழந்தை ஜாதகப்படி ஜமீன்தாரு சாமியப்ப நாயக்கருக்கும், ஜமீன்தாரிணி வேலுத்தாயம்மாவுக்கும் சடவுசச்சரவு இருந்துக்கிட்டுதான் இருக்கும். தீரவே தீராது. பேருக்குத்தான் அவங்க ரெண்டு பேரும் புருஷன் - பொஞ்சாதியா இருப்பாங்க. அவங்களுக்குள்ள இனிமே அந்நியோன்யம் வராது!”னு சொன்னாங்க.

“இருந்தாலும்... இந்தப் பெண் குழந்தை ஜாதகப்படி பார்த்தா, இதே கொடிவழில ரத்த சம்பந்தமான வாரிசு ஆணாகவும் அதாவது, ஒரே வயிற்றுத் தம்பியாகவும் ஒரு ஆணழகன் பொறப்பான்..!”னு சொல்லி வந்தவங்க கொஞ்சம் தயங்கி, “ஆயுள் பலம்னு பார்த்தா.. இனி பொறக்கப்போற ஆண் வாரிசு பூமியில கால் படுறதுக்கு முன்னமே ஜமீன்தாருக்குக் கண்டம் வந்து சேரும்னு ஜாதகம் சொல்லுது. அதாவது, நம்ம ஜமீன்தாரு அந்தச் சிசு முகத்தைப் பார்க்கவே முடியாது..!”னு சொன்னாங்க ஜோசியக்காரங்க.

ஆக, பளியஞ்சித்தன் குடுத்த சாபப்படி எல்லாம் நடக்கப்போகுதுனு ஜோசியக்காரங்க ருசுப்படுத்தினாங்க.

ஆனா, நம்ம ஜமீன்தாரு இந்த ஜோசியத்த நம்பவே இல்ல. தனக்கு ஆயுசு முடியப்போகுதுனு இத்தன வருஷமும் நம்பி, பயந்து பயந்து செத்தத நெனச்சா, அவருக்கே சிரிப்பா வந்துச்சு.

ஒரு கொழந்த பெறந்த பிறகும் தான் உசுரோட இருக்கிற ஜோருல புதுப் பெறவி எடுத்த மாதிரி திரும்பவும் துள்ளித் திரிய ஆரம்பிச்சாரு. அவருக்கு எப்பவுமே சென்னப்பட்டினந்தான் ஜாகையாப் போச்சு. வெள்ளக்காரத் துரைமார்களோட சங்காத்தம் திரும்பவும் கூடிவர ஆரம்பிச்சது.

வந்த வருமானத்தை மனம்போன போக்குல அள்ளி அள்ளி இறைக்க ஆரம்பிச்சாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 22
வருச நாட்டு ஜமீன் கதை - 22

சென்னப்பட்டினத்துல வகை வகையான வங்கனக்காரிகளோட சகவாசத்துல சுகமோ சுகம்னு இருந்துக்கிட்டாரு.

தெப்பம்பட்டி அரண்மனையில ஜமீன்தாரப் பார்க்கணும்னா, குதிரைக்கொம்பப் பார்த்தவன்தான் அவரப் பார்க்க முடியும். ஜமீன்தாரப் பார்க்கறதே அபூர்வமாப் போச்சு.

அதே நேரத்துல ஜமீன்தாரோட சொந்தபந்த பந்துக்கள் வேலுத்தாயம்மாவையும் அவங்களோட குழந்தையையும் பார்த்து விசாரிக்க வந்தாங்க. வந்தவங்க கண்டமனூர் ஜமீன் ஏலத்துக்குப் போனதை ஒரு ஒப்பாரி வெச்சுப் பாடி அழுதுட்டுப் போனாங்க.

அரண்மனையில புள்ளச்சோறு வாங்கின பொம்பளைங்க அழுத அழுகை, வேலுத்தாயம்மா மனச கலங்க வெச்சிருச்சு. எதிர்காலத்தப் பத்தி நெனச்சு மனசு சஞ்சலப்பட்டுப் போனாங்க.

சின்ன அத்தை வேலாண்டியம்மாதான் அவங்களுக்கு தைரியம் குடுத்தாங்க. இனி ஜமீன்தார நம்பிப் பிரயோசனம் இல்லை. ஜமீன் பரிபாலனத்துல அக்கறை எடுத்துக்கச் சொன்னாங்க.

இப்பிடி இருக்கறப்பதான், இவங்க கட்டுப்பாட்ல இருக்கற ஏழு கிராமத்துக்கும் பொறுப்பான, நம்பிக்கையான பெரியதனக்காரங்கள நெயமிக்கச் சொல்லி சிபாரிசும் வந்துச்சு.

“ஏழு ஊரு ஆளுகளயும் உன்னோட கட்டுப்பாட்டுல வெச்சுக்கிட்டா, பின்னாடி உனக்கு நல்லது”னு வேலாண்டியம்மா ரோசனை சொல்லிக் குடுத்தாங்க.

வேலாண்டியம்மா தன் புருஷன் கிறுக்கு துரை ராமகிருஷ்ண நாயக்கரு காலத்துல இப்பிடித்தான் தனக்கு வேண்டப்பட்டவங்களுக்கு ஒரு ஊரையே கட்டித்தரச் சொன்ன கதையும் சொன்னாங்க.

ஒரு தைப்பொங்கல் அன்னிக்கு அறுவத்தி நாலு கிராமத்துல இருந்தும் ஜல்லிக்கட்டு மாடுக கண்டமனூர் கோட்டை கருப்பசாமி கோயிலுக்கு முன்னால வந்து கூடிப்போச்சு.

ஒவ்வொரு ஜல்லிக்கட்டுலயும் கண்டமனூர் ஜமீன் மாடுகதான் எவங் கைக்கும் சிக்காம முன்னால ஓடிவந்து சேரும். எந்த வருஷமும் இல்லாம அந்த வருஷம் சூளப்புரம் தொப்பையசாமி மகனுக பெரிய வெள்ளச்சாமி, சின்ன வெள்ளச்சாமி இவங்க வளர்த்த அந்த மாடுதான் சீறிப் பாஞ்சு எவங்கைக்கும் சிக்காம ஓடிவந்துச்சு.

ஜமீன்தாரு மாடு தோத்துப்போனது அவருக்கு வருத்தந்தான். இருந்தாலும், முகத்தத் தூக்கி வெச்சுக்கிட்டு அந்த அண்ணந் தம்பிகளுக்கு பரிசு பட்டயம் எல்லாம் குடுத்து அனுப்பி வெச்சாரு.

ஜமீன்தாரு அரண்மனைக்கு வந்ததும் வேலாண்டியம்மா, “எங்க அண்ணன் தம்பிகள விருந்து கொடுத்து மருவாதை செய்யாம, இப்பிடி சும்மா அனுப்பி வெச்சுட்டீங்களே”னு கோவிச்சுப் படுத்துக்கிட்டாங்க.

ஜமீன்தாருக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது, அது மாப்ள நாயக்கர் குடும்பம்னு. அண்ணந் தம்பி ரெண்டு பேத்தையும் வேலாயுதபுரத்துலயே வழிமறிச்சு, அரண்மனைக்குக் கூப்பிட்டு வந்தாங்க. தடபுடலா விருந்து வெச்சாரு ஜமீன்தாரு.

பெரிய வெள்ளச்சாமிக்குக் கண்டமனூர்லயே வீடு கொடுத்து, தங்க வெச்சாரு.

சின்ன வெள்ளச்சாமிக்குத் தேனி பக்கத்துல முல்லையாத்துக் கரையில அரண்மனையுங் கட்டித் தந்தாரு. அந்த ஊருதான் அரண்மனைப்புதூர். அதுமட்டுமில்லாம பேரையூர் பொண்ணையும் அவருக்குக் கல்யாணம் செய்து வெச்சாரு.

ஜமீன்தாரு அந்தப் பொண்ணுகிட்ட சீதனமா என்ன வேணும்னு கேக்க, அதுக்கு அந்தப் புதுப் பொண்ணு,

ஏழைக்கும் இரங்கும் நம்மதொர

யாருக்கும் இல்லேனு சொன்னதில்ல

கையேந்தி கேட்டவரத்தன பேத்துக்கும்

கையில உள்ளத கொடுப்பாக

நின்ன எடத்துல நெல்லு வௌயும்

பாத்த எடத்துல பொன்னு வௌயும்

பட்ட மரத்துல பாலூறும்

நம் துரையின் பாளையத்துல

ஏழு உறிப்பானை மட்டும்

எனக்குப் போதும்!

-னு சொன்னா.

அதாவது சீதனமா ஏழு உறிப் பானை மட்டும் போதும்னு சொன்ன பொண்ணுக்கு, ‘பால் பொங்கி வாழட்டும்’னு இருநூறு ஏக்கர் நெலமும் பசுமாடுகளயும் கொடுத்து வாழ வெச்சாரு பெரிய ஜமீன்தாரு ராமகிருஷ்ண நாயக்கரு.

சின்ன மாப்ள நாயக்கர் குடும்ப வாரிசுக இன்னிக்கும் அரண்மனைப் புதூர்ல இருக்காங்க. பெரிய மாப்ள நாயக்கர் குடும்ப வாரிசுக கண்டமனூர்ல இருந்து ஜமீன்தாருக்குப் பக்கபலமா இருந்தாங்க.

இந்தக் குடும்பத்துல ஒருத்தர்தான் கண்ணலு காமயசாமி நாயக்கர். ஜனகத்த துப்பாக்கியால சுட்டவரு.

இப்பிடி வேலாண்டியம்மா பழம் பெருமைகளைச் சொல்லி வேலுத்தாயம்மாவ தைரியப்படுத்தினாங்க.

“மீதி இருக்கற சொத்து-பத்து எல்லாத்தையும் எப்பிடிக் காப்பாத்திக் கொண்டு வர்றதுனு எனக்குத்தான் தெரியும்”னு வேலுச்சாமி நாயக்கரும் கூடவே இருந்து பார்த்துக்கிட்டாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 22
வருச நாட்டு ஜமீன் கதை - 22

அரண்மனைப் பொண்ணுக வெளிய நடமாடக் கூடாதுனு இருந்த காலம் மலையேறிப் போச்சு. வேலுத்தாயம்மா எல்லா ஊருகளுக்கும் வில்லு வண்டியில போயி ஜமீன் பரிபாலனத்த நேரடியா கவனிக்க ஆரம்பிச்சாங்க. வேலுச்சாமி நாயக்கரும் சீனிச்சாமி நாயக்கரும் கூடவே போனாங்க.

வேலுச்சாமி நாயக்கரு ரொம்ப வெவரமான ஆளுதான். ஜமீன் தாரிணி, வேலுத்தாயம்மா கிட்டயும் நல்ல பேரு வாங்கினாரு. அதே சமயத்துல ஜமீன்தாருகிட்டயும் கெட்ட பேரு வராமப் பாத்துக்கிட்டாரு. அதுக்கு அவரே ஒரு உபாயமும் கண்டு பிடிச்சாரு.

ஏழு ஊரு கிராமக் கணக்கு, அரண்மனைக் கணக்கு, பேரேடு புஸ்தகம் அம்புட்டையும் மூட்ட கட்டி சென்னப்பட்டினத்துக்குக் கொண்டு போயிடுவாரு. ஜமீன்தாரு சென்னப்பட்டினத்துல இருந்ததால, வேலுச்சாமி நாயக்கரு மாசந்தவறாம அங்க போயித்தான் எல்லாத்துலயும் கையெழுத்து வாங்கினாரு.

இந்தத் தடவ நம்ம ஜமீன்தாரு பேரேடு புஸ்தகத்துல கையெழுத்துப் போடும்போது, “நம்ம ஜமீன் எப்படி இருக்கு?”னு விசாரிச்சாரு.

“அண்ணா, ‘ஜனகத்தச் சுட்ட காமயசாமி நாயக்கருக்கு அவசியம் தூக்கு தண்டனை போடச் சொல்லி மதுரை கலெக்டர் துரைக்கு நீங்கதான் சிபாரிசு செய்தீங்களாம். இத எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட நம்ம மாப்ள நாயக்கருக உங்களப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, அதாவது உங்க ஆட்டம் பாட்டத்துனாலதான் ஜமீனே கைமாறிப் போச்சுனு ஊர் பூராத் தம்பட்டம் அடிச்சுக்கிட்டிருக்காங்க. அதனால...”

“அதனால..?”

“அதனால, நீங்க கொஞ்ச காலத்துக்கு நம்ம ஊர்ப்பக்கம் வராம சென்னப் பட்டினத்துலயே இருங்க. கணக்கு வழக்கெல்லாம் நானே கச்சிதமா பாத்துக்குவேன். நாஞ் சொல்றதும் உங்களுக்கு நல்ல ரோசனையாப்படும்னு நெனக்கிறேன்”னு தயங்கித் தயங்கிச் சொன்னாரு வேலுச்சாமி நாயக்கரு.

போதையில கேட்டுக்கிட்டிருந்த ஜமீன்தாரு எல்லாத்துலயும் கையெழுத்துப் போட்டாரு. அதே நேரத்துல, ஜமீன்தாரு கடன் வாங்குறதையும் நிறுத்தல.

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு