Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 23

வருச நாட்டு ஜமீன் கதை - 23
வருச நாட்டு ஜமீன் கதை - 23

இந்தத் திருவிழாதான் அவரோட வாழ்க்கையவே பெரட்டிப் போட்டு அவரு செய்த நல்லது - கெட்டது எல்லாத்துக்கும் ஒரு பாடஞ் சொல்லித் தரப்போகுதுனு ஜமீன்தாருக்கு அப்போ தெரிஞ்சிருக்க நாயமில்ல.

வைகை ஆறு வளைஞ்சு நெளிஞ்சு போறது மாதிரிதான் நம்ம ஜமீன்தாரோட வாழ்க்கையும் நெறைய திருப்பங்களோட இருந்துச்சு.

‘சட்டி சுட்டது.. கைவிட்டது’னு குடும்பத்த விட்டு வெலக முடியல. குடும்பத்துல வெச்ச காலையும் எடுக்க முடியாம, ஜமீன் பரிபாலனத்துல வெச்ச காலையும் எடுக்க முடியாம... ரெட்டக் குதிரை சவாரி மாதிரி ஆபத்தான வாழ்க்கையிலதான் நம்ம ஜமீன்தாரு பிரயாணம் போய்க்கிட்டிருந்தாரு.

வில்லு வளைஞ்சாலும் அம்பு நேரா போற மாதிரி மனசு அலபாஞ்சாலும், செய்ற செயல் ஒரு நல்ல காரியத்த நோக்கிப் போகணும். இல்லையா?

அந்த நாகரிகத்த கத்துக் கொடுக்கறதுக்குத்தான் அந்தக் காலத்துலேயே கோயிலு, குளம், தேரு, திருவிழானு மனுசன் கண்டுபிடிச்சு வெச்சிருக்கான்.

வழக்கம்போல ஜம்புலிபுத்தூர்ல சித்திரத் தேர்த் திருவிழா ஆரம்பமாயிருச்சு. கோயில் பரிபாலனக் குழுவும் ஜமீன்தாரப் பார்க்கத்தான் சென்னப் பட்டினத்துக்கே வந்திருக்காங்க.

ஜமீன்தாருகிட்ட வேலுச்சாமி நாயக்கரு, “அண்ணா, இந்த வருசமும் நம்ம கதலிநரசிங்கப் பெருமாள் கோயில் சித்திரத் தேர்த் திருவிழாக்குப் பந்தக்கால் போடுறாங்க. நீங்க வந்துதான் ஆரம்பிச்சு வெச்சு முதல் மரியாதையை ஏத்துக்கணும்”னு கேட்டுக்கிட்டாரு.

“புதுசா என்ன மரியாதை வரப்போகுது? ஜமீனே ஏலம் போயிருச்சு. சனங்க நம்மளையா நெனச்சுக்கிட்டு இருக்கப் போறாங்க? எட்டயபுரம் ஜமீன்தாருகள வெச்சு ஆரம்பிக்கச் சொல்லுங்க... எனக்கு விருப்பம் இல்லை...”னு கொஞ்சம் விரக்தியா சொன்னாரு.

“நாம விரும்பி விரும்பாம நடக்குறதில்லண்ணா. பெரிய ஜமீன்தாரய்யா ஆரம்பிச்சு வெச்சது. காத தூரத்துல நிப்பாட்டக் கூடாது. பரம்பரையா நம்ம குலகவுரதைய காப்பாத்தி வர வேண்டியது நம்ம கடமையாச்சே. அதோட எட்டாந் திருநாள் மண்டகப் படியில ஊர் சுத்தி வரவேண்டியது நம்ம குதிரை வாகனந்தான். அத நாம விட்டுக் குடுக்க முடியாதண்ணா. அவசியம் போய்த்தான் ஆகணும்”னு விடாப்பிடியாச் சொன்னாரு வேலுச்சாமி நாயக்கரு. கோயிலச் சேர்ந்தவங்களும் கெஞ்சிக் கேட்டுக் கிட்டாங்க.

நெறைய கொடை கொடுக்கறது ஜமீன்தாருதான!

“எல்லாஞ் சரிதான். நமக்கு நடந்த நல்லது - கெட்டது எல்லாத்தையும் பெருமாள் தலையில தூக்கிப் போடலாமே”னு ஜமீன்தாரும் அரகொற மனசோடதான் திருவிழாக்குச் சம்மதிச்சாரு.

இந்தத் திருவிழாதான் அவரோட வாழ்க்கையவே பெரட்டிப் போட்டு அவரு செய்த நல்லது - கெட்டது எல்லாத்துக்கும் ஒரு பாடஞ் சொல்லித் தரப்போகுதுனு ஜமீன்தாருக்கு அப்போ தெரிஞ்சிருக்க நாயமில்ல.

சித்ரா பௌர்ணமி.

ஜம்புலிபுத்தூரே ஏக ஜொலிப்பா இருந்துச்சு. எந்த வருஷமும் இல்லாத கூட்டம். குடும்பம் குடும்பமா மாட்டு வண்டியில வந்து சேர்ந்தாங்க. (இதே தினத்துலதான் மதுரைல கள்ளழகர் வைகை ஆத்துல இறங்குவாரு.)

ஜம்புலிபுத்தூர் பெருமாள் கோயிலுக்குப் பூவெடுத்து, அழகு சேர்த்து, பூசை செய்துக்கிட்டிருந்த தேவதாசிப் பொண்ணுக, ஒரு சீரா - வளைய வந்துக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கு ஜமீன்தாரு தாம்பாளத் தட்டுல பட்டுச்சேல, பட்டுச்சட்ட, பூ, பழம்னு வெச்சு தந்துக் கிட்டிருந்தாரு.

அத வாங்குன பொண்ணுகளோட முகத்துல மருவாதையும் வெக்கமும் கலந்துகட்டி ரேகையா ஓடுச்சு.

மின்னலடிச்ச மாதிரி அந்த அழகு தேவதையும் வந்து நின்னா. ஜமீன்தாரு கண்ணுகூச அந்தப் பவளத்தையே பார்த்தாரு. ஆனா, அந்த மின்னலழகி - தங்க தேகத்துக்காரி ஜமீன்தார ஏறெடுத்துப் பார்க்காமவே, தன்னோட சேல மாராப்ப மட்டும் எடுத்து ஏந்திக் கிட்டிருந்தா.

அத்திப்பழ உதட்டுக்காரிய கொஞ்ச நேரம் ரசனையோட பார்த்துக் கொஞ்சம் தாமசமாத்தான் அந்தப் பட்டுச் சேலயையும் பூவும் பழமும் கொடுத்தாரு. அது ஏந்தின அவளோட மாராப்புல விழுந்துச்சு. மாராப்புல விழுந்தது அது மட்டுமில்லே... ஜமீன்தாரோட மனசுந்தான்.

“பேரு என்ன..?!” - ஜமீன்தாரோட கண்ணு நடந்துபோன அந்த அன்னப் பறவையின் பக்கமிருந்தாலும், பக்கத்துல நின்னுக்கிட்டிருந்த கோமளவல்லிதான் கேள்விக்குப் பதில் சொன்னா.

“செங்கமலம்...”

“செழும்பான கமலம்தான்!” - ஜமீன்தாரு நெத்திப் புருவத்தைத் தூக்கினாரு.

“ஆண்டாளு திருப்பாவ நல்லா பாடுவா தொர” - வெத்தல போட்டுப் போட்டு உதடெல்லாம் செவந்துபோன கோமளவல்லிக்கு ஒரு நாப்பத்தஞ்சு வயசிருக்கும்.

“கோமளவல்லி..!”

“என்ன தொர..?”

“என்ன வயசு..?”

கொண்டய சீர் செய்துக்கிட்டு நெத்தி

முடிய சுருட்டி, “முப்பத்துரெண்டுதான் ஆகுது தொர..”

“உன்னக் கேக்கல... அவளுக்கு..?”

“வர்ற ஆவணி வந்தா பதினேழு முடியுது.”

“திருப்பாவையைப் பாடிப்பாடி சீக்கிரமா வயசாயிறப் போகுது. நாளைக்கே என்னோட மயிலாடும்பாறை கண்ணாடி மாளிகைக்குக் கூட்டிக்கிட்டு வந்துரு!”

வருச நாட்டு ஜமீன் கதை - 23
வருச நாட்டு ஜமீன் கதை - 23

நம்ம ஜமீன்தாரோட கண்ணாடி மாளிகை ஏற்கெனவே நாஞ் சொன்னதுதான். ஜமீன்தாரு வர்றதுக்கு முந்தியே கோமளவல்லி தலை நெறைய மல்லிகைப் பூ வெச்சு செவசெவனு வாசல்ல வந்து காத்துக்கிட்டிருந்தா.

ஜமீன்தாரு வந்ததுமே அவளுக்கு ஒரு சுருக்குப் பையைத் தூக்கிப் போட்டாரு. காவிப் பல்லு தெரியச் சிரிச்சா கோமள வல்லி.

மாளிகைக்கு உள்ள நடுநாயகமா இருந்த சயன அறை என்னிக்கும் இல்லாத பிரகாசமா இருந்துச்சு.

ஆமா, மெத்தைமேல அந்த முல்லைக் கொடி... செங்கமலம்!

ஜமீன்தாரு பெரிய பையைப் பிரிச்சாரு... உள்ள இருந்த சின்னச் சின்ன சுருக்குப் பையப் பிரிச்சு ஒவ்வொரு நகையா எடுத்தாரு. எல்லாமே புதுசா இருந்துச்சு. சென்னப்பட்டினத்துல கடனுக்கு வாங்கினது.

எல்லாப் பொண்ணுகளுமே நகை நட்டுக்கு ஆசப்படறவங்கனு ஜமீன்தாரு ஆதியிலயிருந்து போட்டு வெச்ச கணக்கு இன்னும் மாறல.

உடம்பெல்லாம் சூடேறிப்போன ஜமீன்தாரு, வைரம் பதிச்ச நெக்லஸ எடுத்துக்கிட்டு ஆவலா செங்கமலத்து கிட்ட நெருங்கினாரு.

“நிறுத்துங்க..!” - செங்கமலந்தான் கத்தினா. முகமெல்லாம் கோவத்துல செவந்து போயிருந்துச்சு. அவ மனசுக் கோவத்த, அவ பேரைப்போலவே கண்ணு செவேர்னு அடையாளங் காட்டிச்சு.

“என்ன செங்கமலம்? இங்க வந்து...” - ஜமீன்தாரு சிரிச்சுக்கிட்டே பக்கத்துல போனாரு.

“பக்கத்துல வராதீங்க தொர. எனக்கு உடம்பெல்லாம் கூசுது...”னு ஒதுங்கி உக்கார்ந்தா.

ஒரு கணம் தயங்கின ஜமீன்தாரு, “உனக்கு என்ன ஆச்சு? இங்க வந்தவங்க யாரும் உன்ன மாதிரி பயந்ததில்ல”னு சொல்லிக்கிட்டே மெத்தை மேல உக்காந்தாரு.

சடார்னு எந்திரிச்ச செங்கமலம், “நான் கடவுளுக்காகப் படைக்கப்பட்டவ. எந்த மனுசனும் என்னத் தொட அனுமதிக்க மாட்டேன்!”

“நான் யாருனு தெரியுமில்லயா..?”னு கொஞ்சம் கோவமாத்தான் கேட்டாரு.

“தெரியுமே.. ஜனகத்த ஆளு வெச்சி சுட்டவருதானே. நான் இந்த மாளிகைக்கு வரலைன்னா ‘ஜனகத்தச் சுட்டது மாதிரி சுட்டுப்போடுவேன்’னு சொன்னீங்களாமே. எங்க சுடுங்க பார்க்கலாம்..”னு சொல்லி மார்மேல இருந்த மெல்லிசான துணிய அகட்டிக் காட்டனா.

ஜமீன்தாருக்கு இன்ன கணக்குனு இல்லாம கோவம் வந்துருச்சு. முகம் சிவந்துபோயி, “பைத்தியக்காரி! இங்க வந்தவங்க யாரும் உன்ன மாதிரி கொழுப்பெடுத்துப் பேசல. ஜனகத்தச் சுட்டது எவனோ ஒருத்தன். நானில்ல... யாரோ உன்கிட்ட பொய் சொல்லி, ஏமாத்தியிருக்கான். யார் சொல்லியிருப்பாங்கனு எனக்குத் தெரியும்!”னு சொன்ன ஜமீன்தாரு, கொஞ்சம் சூடு தணிஞ்சு அமைதியா, “இந்தா பாரு செங்கமலம்... நல்லா தெரிஞ்சுதான் என் மனச உன் மேல வெச்சுட்டேன். உன் அழகுலதான் மயங்கிப் போயிட்டேன். இனி உன் மனசுதான் எனக்கு முக்கியம். நான் நெனச்சா உன்ன வலுக்கட்டாயமா அனுபவிக்கலாம். இல்லன்னா யாருக்கும் தெரியாம தூரத் தூக்கி எறியலாம்...”

“சுட்டுப் போடலாம். ம்... சொல்லுங்க. முடியாதுனு சொன்னா அதைத்தானே செய்வீங்க. அதென்னவோ என்னத் தொடவிடமாட்டேன். நான் கடவுளுக்குத்தான் பொண்டாட்டி... உங்களுக்கில்ல. புரிஞ்சுக்கோங்க.”

“கடவுள் சார்பா நாங்கதான் குடிமக்களுக்கு எல்லாஞ் செய்றோம். நாங்க சந்தோஷமாயிருந்தாத்தான் நீங்களும் உங்களச் சுத்தி இருக்கிற சனங்களும் சுகமா ஜீவனம் நடத்த முடியும். அத முதல்ல புரிஞ்சுக்கோ. கோமளவல்லி உன்கிட்ட எதுவுமே சொல்லலியா? அட சனியனே..!” - தலையில அடிச்சுக்கிட்டாரு ஜமீன்தாரு.

“சம்மதிக்கலன்னா நீங்க சுட்டுப் பொசுக்கிப் போடுவீங்கனுதான் சொன்னாங்க. கடவுள் சாட்சியா இங்க வந்திருக்கேன். என்னோட சதை உடம்ப எடுத்துக்கங்க. நீங்க நெனச்சத செய்து போடுங்க”னு மழையில நனஞ்ச புறா மாதிரி மூலையில உக்கார்ந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சா. அதோட விடறவரா ஜமீன்தாரு?

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு