Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 24

வருச நாட்டு ஜமீன் கதை - 24
வருச நாட்டு ஜமீன் கதை - 24

மார்கழி நோம்பு, புரட்டாசி விரதம்னு பாடிக்கிட்டிருந்த அந்தக் குயில் ஜமீன்தாரோட கூண்டுக்குள்ள இப்பிடி வந்து அகப்பட்டுக்குவோம்னு நெனச்சுக் கூடப் பார்க்கல.

புள்ளிமானுக்குப் பசியெடுத்தா

புல்லுக்குத்தான் அலையும்.

புலிக்குப் பசியெடுத்தா

புள்ளிமானுக்குத்தான் அலையும்.

பாவம் செங்கமலம்..!

புலியோட பசிக்கு புள்ளிமான் சிக்கிருச்சு. தப்பிக்கத்தான் போராடிக் கிட்டிருக்கா.

மார்கழி நோம்பு, புரட்டாசி விரதம்னு பாடிக்கிட்டிருந்த அந்தக் குயில் ஜமீன்தாரோட கூண்டுக்குள்ள இப்பிடி வந்து அகப்பட்டுக்குவோம்னு நெனச்சுக் கூடப் பார்க்கல.

“ஜமீன்தாரு கோவக்காரரு... சுட்டுப் போடுவாரு”னு கோமளவல்லி பயமுறுத்தித்தான் செங்கமலத்தைக் கண்ணாடி மாளிகைக்குக் கூப்பிட்டு வந்திருக்கா.

செங்கமலம் கொஞ்சம் தெகிரியமான பொண்ணுதான். ரெங்கநாதப் பெருமாள் கொடுத்த ஞான தெகிரியம்.

‘ஜமீன்தாரு கண்ணுல பட்டுட்டோம், எப்பிடியும் இரையாகப் போறோம். ஜமீன்தார எதுத்து நாலு கேள்வியாவது கேக்கணும்’னு ரோசப்பட்டுத்தான் செங்கமலமும் தயாரா வந்திருக்கா.

ஜமீன்தாரும் செங்கமலத்த சும்மா விடுற மாதிரி தெரியல.

அதிகாரத்தோட ஆணவமும் ஜமீன்தாருக்குச் சேர்ந்து இருக்கறதால நெனச்சத செய்து முடிக்கணும்னு ஒரு வெறியோட இருந்தாரு. அஞ்சு ஏக்கர் நெலத்துக்கும் தங்கச் சங்கிலிக்கும் எந்தப் பொண்ணும் மயங்குவானு நெனச்சாரு.

“நல்லா கேளு செங்கமலம்... தோப்புத் துரவு, வாய்க்கா வரப்புனு உனக்கு எழுதித் தரத் தயாரா இருக்கேன். நான் கேக்குறது உன் மனசத்தான்..”னு கொஞ்சம் இறங்கி வந்தாரு ஜமீன்தாரு.

“உங்களோட தோப்புத் துரவு, வாய்க்கா வரப்பு எல்லாம் எனக்குக் கவுரதை கொடுக்காது தொர...”

“ஜமீன்தாரோட ஆஸ்தானத்துல இருக்கேன்னு உனக்கு ஒரு கவுரதை கிடைக்கும் செங்கமலம். நீ பெருமையாவும் சொல்லிக்கலாம்.”

வருச நாட்டு ஜமீன் கதை - 24
வருச நாட்டு ஜமீன் கதை - 24

“ரெங்கநாதரோட பேரச் சொல்ற பெருமை தவிர, எனக்கு வேற எந்தப் பெருமையும் வேணாம்.”

“உன்ன வச்சு ஆயுசு முழுக்கக் காப்பாத்தறேன். நீ எனக்குத்தான்னு முடிவு செய்துட்டேன். பிடிவாதத்த விட்டுரு செங்கமலம்...”

“நீங்க புலி... புல்லைத் திங்கணும்னு ஏன் ஆசைப்படுறீங்க?”

“இத பார்த்தியா.. புலி, கரடினு என்னை எதுக்காக மிருகங்களோட ஒப்பிக்கிற..? என்னையும் ஒரு மனுசனாப் பாரு..!”

“நான் மனுசங்களுக்காகப் படைக்கப்பட்டவ இல்லனு திரும்பத் திரும்பச் சொல்றேனே. நான் கடவுளுக்காகப் படைக்கப்பட்டவ. என்ன விட்டுறுங்க, விட்டுறுங்க”னு திரும்பவும் அழுதா.

“அழாத செங்கமலம்... உன் விருப்பம் இல்லாம தொடமாட்டேன். உன் அழகுலதான் மனசப் பறி கொடுத்துட்டேன். எனக்காக வாழணும்னு நீ முடிவெடுத்தா உன்னச் சென்னப்பட்டினத்துக்குக் கூப்பிட்டுப் போய் எல்லா சகாயமுஞ் செய்து தாரேன். நீ மறுக்கக் கூடாது”னு சொல்லிக்கிட்டே அவளுக்கு முன்னால போயி மண்டி போட்டு உட்கார்ந்தாரு.

“என்னோட மனச கெடுத்துறாதீங்க... உங்க மனசையும் அலபாயவிடாதீங்க. அந்த நரசிங்கப் பெருமாள் உங்களுக்கு நல்ல வழியத்தான் காட்டுவாரு”னு சொல்லி கையெடுத்துக் கும்பிட்டு,

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய்” -னு கண்ண மூடிப் பாடினா.

“ஜமீன்தாரய்யா... நான் தெனமும் பெருமாளுக்குப் புஷ்பந் தூவி நோம்பு இருக்கேன். என்னோட நோம்ப கெடுத்துறாதீங்க. உங்க ஆஸ்தி, அந்தஸ்து எதுவும் எனக்கு வேணாம். இதுவரைக்கும் நாம செய்த குத்தங்களும் இனி அறியாம செய்யப்போற குத்தங்களும் தீயில பொசுங்கட்டும். என் வழியில என்னை விட்டுருங்க”னு கெஞ்சினா செங்கமலம்.

“நோம்பு இருந்து உன் வாழ்க்கைய சீரழிச்சுக்கப் போற. நல்லா ரோசனை செய்து பாரு...”

“இதுவரைக்கும் உங்ககிட்ட வந்த பொண்ணுக எல்லாரும் மனசு ஒப்பித்தான் உடன்பட்டிருப்பாங்கனு நீங்க நெனச்சுக்கிட்டிருக்கீங்க. அப்பிடி நீங்க நெனக்கிறதுதான் குத்தம். அது பெரிய கொடுமைனு உங்களுக்கு எங்க புரியப்போகுது? உயிருக்குப் பயந்து ஓடிச் செத்தவங்க எத்தனை பேரு தெரியுமா? உங்க கொடுமை தாங்காம கெணத்துல குதிச்சுச் செத்தவங்களையும் எனக்குத் தெரியும்... தீயில விழுந்து செத்தவங் களையும் எனக்குத் தெரியும்.”

“அது அவங்களோட தலைவிதி...”

“அது மாதிரி விதி இனி யாருக்கும் வரக்கூடாதுன்னுதான் நான் நோம்பு இருக்கேன். ஆண்டாள் மாதிரி..” - கண்ண மூடி, எச்சில முழுங்கினா செங்கமலம். பவளமணிக் கழுத்து ஏறி எறங்குச்சு.

“கடவுளுக்கு நோம்பு இருந்து என்ன சாதிக்கப்போற..? அதனால உனக்கு என்ன சந்தோஷம்? உன்னால யாருக்குமே சந்தோஷத்தக் கொடுக்க முடியாது செங்கமலம்.”

“ஒரு நூல்ல ஆயிரம் மணிகளயும் கோத்து வெச்சிருந்தாலும் ஒவ்வொரு மணியா பிடிச்சு அசைக்கிறது அறிவுடமையில்ல. அந்த ஆயிரம் மணிகளுக்குள்ள ஊடுருவி நிக்கற உயிரான அந்த ஒரு நூலப் பிடிச்சு இழுத்தா போதும்... ஆயிரம் மணியும் அதுவா அசையும். இதுதான் கடவுள வணங்குற தத்துவம். அதத்தான் நானும் செய்றேன். உங்க ஒருத்தரோட சந்தோஷம் மட்டும் எனக்குப் பெருசில்ல”னு சொல்லி மெதுவா எந்திரிச்ச செங்கமலம் ஜன்னலுக்கு வெளிய இருண்டுபோன வானத்தப் பார்த்தா.

“பேசுறது நல்லாத்தான் பேசுற. ஆனா, நீ ஜீவனத்துக்குக் கஷ்டப்படாம இருக்க நான் சொல்ற உபாயந்தான் சரி. எட்டு நாள் கழிச்சு திரும்பவும் உன்னச் சந்திக்கிறேன். நல்ல முடிவு எடுத்து வா செங்கமலம். எனக்கு நீ மட்டுந்தான் வேணும்”னு ஜமீன்தாரு சொல்லிட்டு வாசல் வரைக்கும் போனவரு திரும்ப வந்தாரு.

“இதோ பாரு செங்கமலம்... இங்க ஜொலிக்கற நகை நட்டுக அம்புட்டுமே உனக்குத்தான். நல்ல முடிவோட வா”னு சொல்லிட்டுப் பொறப்பட்டுப் போயிட்டாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 24
வருச நாட்டு ஜமீன் கதை - 24

தெப்பம்பட்டி அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தாரு ஜமீன்தாரு. ராத்திரி பூராவும் தூக்கமில்ல. பொரண்டு பொரண்டு படுத்தாரு. அவளோட அழகு மட்டும் மனச பாடாப்படுத்தினது. அவ பேசின பேச்சும், அவரோட ஆண்மைக்கே கேள்வி மாதிரி வளைஞ்சு நின்னுச்சு.

மறுநாள் காலையில எந்திரிச்சதும் ஜனகத்தோட புருஷன் வெங்கடேஸ்வரலுவும் அந்தச் சின்னப்பொண்ணு வாணியும் ஞாபகத்துக்கு வந்தாங்க.

பெருமாள் கோயில் பூசாரி கிருஷ்ண ஐயங்காரக் கூப்பிட்டு விசாரிச்சாரு.

“வெங்கடேஸ்வரலு இங்கயே இருக்கச் சம்மதிச்சாரா?”னு ஜமீன்தாரு கேட்டாரு.

கொஞ்சம் தயங்கின ஐயங்காரு, “இந்த ஒரு வாரமும் ராத்திரி படுத்திருக்கும்போது, ‘ஜனகா, ஜனகா’னு அனத்திக்கிட்டேயிருந்தாரு. நாந்தான் எழுப்பி தண்ணி குடுத்து என்ன சமாசாரம்னு கேட்டேன்..”

“எல்லா விசயத்தையும் சொன்னாரா?”

“ஆமா சாமீ... சொன்னாரு! எனக்கு மட்டுந்தான் தெரியும். யாருக்கும் சொல்லல. அப்புறமா... ‘ஜனகா இருந்த வீடு எங்கே இருக்கு’ன்னு கேட்டாரு. நான் வாணி விலாசம் இருக்கற எடத்தச் சொன்னேன். காலையில எந்திருச்சுப் பார்த்தா, அவரையும் அவரோட பொண்ணையும் காணல. அங்கதான் போயிருப்பாங்கன்னு நெனைக்கிறேன் சாமீ...”னு தலையச் சொறிஞ்சாரு ஐயங்காரு.

ஜமீன்தாரு கண்ண மூடி மவுன மாயிட்டாரு. ஜனகா மனசுக்குள்ள வந்து நின்னா.

‘இனி நீதான் என்னோட ஆஸ்தான நாட்டியக்காரி! இந்த அரண்மனை உனக்குப் பிடிச்சிருக்கா..? நான் சொன்னத, உனக்காகச் செய்திருக்கேன் பாத்தியா?’

‘இவ்வளவு செலவழிச்சு எனக்காக மாளிகை கட்டுவீங்கன்னு நெனச்சுக் கூடப் பார்க்கல சுவாமி. இந்த மாளிகைக்கு ‘வாணி விலாசம்’னு பேர் வெச்சிருக்கேன். உங்களுக்குப் பிடிச்சிருக்கா?’

ஜமீன்தாரு நெனச்சுக்கிட்டு இருக்கற அதே நேரத்துல ஜனகத்தோட புருஷனும் மகள் வாணியும் வைகை ஆத்துக்கரையில நின்னுக்கிட்டிருந்த அந்த ‘சின்ன அரண்மனை’ய நெருங்கிக்கிட்டிருந்தாங்க. அரண்மனை மேல சுண்ணாம்புக் காரையால ‘வாணி விலாசம்’னு எழுதியிருந்தத படிச்சுப் பார்த்து கண் கலங்கினாரு வெங்கடேஸ்வரலு.

பூந்தோட்டமெல்லாம் வாடி வதங்கிப் போயிருந்துச்சு.

ஒவ்வொரு ஜன்னலா எட்டிப் பார்த்துக்கிட்டிருந்த வெங்கடேஸ்வரலு, நூலாம்படையா இருந்த வாசலக் கடந்து உள்ள போயிப் பாத்தாரு. குருவிக கூடு கட்டியிருந்துச்சு. வேற எந்த சாமாஞ்செட்டுகளும் இல்ல.

வெளியே இருந்து வாணி, “அப்பா!”னு கூப்பிட்டா.

என்னவோ ஏதோனு பதறிப்போன வெங்கடேஸ்வரலு வெளிய வந்து பார்த்தப்போ... அசையாம நின்னுட்டாரு.

குழந்தை வாணியோட கழுத்துலயும் கையிலயும் ஏகப்பட்ட நகை நட்டுக. அந்த வெள்ளை மணல் அப்பிப்போய் இருந்துச்சு... மணலத் தோண்டி விளையாடி ஆசையா மண் வீடு கட்டியிருந்தா வாணி. வாணியோட கழுத்துலயும் கையிலயும் மண்ணு அப்பிப் போயிருந்த நகை, நட்டுகளப் பார்த்து வெங்கடேஸ்வரலு பேச்சுமூச்சு இல்லாம திக்கித் தெகச்சுப் போயிட்டாரு.

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு