Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 34

வருச நாட்டு ஜமீன் கதை - 34
வருச நாட்டு ஜமீன் கதை - 34

அரண்மனையச் சுத்தி எப்பவும் நூறு... எறநூறு சேவகமார்கள் கூடினாங்க. அவங்களே அதிகாரத்தைக் கையில எடுத்துக்கிட்டாங்க. அரண்மனையப் பத்தியோ, ஜமீன்தாரப் பத்தியோ யாராவது குறை சொன்னா அவங்களுக்கு அடியும் உதையும் இனாமா கெடைக்கும்.

எரசக்க நாயக்கனூர்ல பன்னண்டு வயசுல ஜமீன்தாரிணியா பட்டம் கட்டின வீரகாமுலம்மாவ சீனிமாக்கியசாமி நாயக்கருக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாங்கனு சொன்னேனே... அவங்களோட வாரிசு கதிர்வேலுச்சாமி நாயக்கர்தான் மாப்பிள்ளை.

இதுவரைக்கும் பெண் வழி வாரிசா வந்துக்கிட்டிருந்த எரசக்க நாயக்கனூர் ஜமீன், இவர் பொறந்த பெறகுதான் ஆண் வாரிசு ஜமீனா மாறுது. கண்டமனூர் ஜமீனையும் எரசக்க நாயக்கனூர் ஜமீனையும் பிரிச்சுப் பாக்க முடியாது. ஒண்ணுக்குள்ள ஒண்ணு சொந்தம்தான்.

மொட்டனூத்து கிராமத்துல வேலுச்சாமி நாயக்கர் வீட்டுலதான் ராஜமாணிக்கத்துக்கு நிச்சயதார்த்தம் நடந்துச்சு.

அந்தக் காலத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்கதான் பொண்ணுக்கு நகை நட்டு எல்லாம் தட்சணையாக் குடுத்து கல்யாணம் செய்துக்குவாங்க. மத்தபடி, பொண்ணு வீட்டுலயிருந்து குடுத்தனுப்புற சீர் செனத்தி எல்லாம் அந்தஸ்த காட்டுறதுக்குத்தான்.

பொண்ணு ராஜமாணிக்கத்துக்கு மேகமலை பச்சகுமாச்சி மலையில எறநூறு ஏக்கர் நெலத்தை, ‘வெத்தல பாக்கு செலவு’னு சொல்லி சீதனமா குடுத்தாங்க. கூடவே வேலக்காரப் பொண்ணுக பத்துப் பதினஞ்சு பேர அனுப்பி வெச்சாங்க.

நிச்சயதார்த்தம் நடந்துக் கிட்டிருக்கும்போதே திடீர்னு வீட்டு முன்னால குதிரைவண்டி வந்து நின்னுச்சு. வண்டியிலிருந்து எறங்கின வரு விருப்பாச்சி ஜமீன்தாருதான்.

“எங்க மொறப் பொண்ணு ராஜமாணிக்கம் எங்களுக்குத்தான் சொந்தம். என் பையனுக்குக் கட்டி வெக்கலன்னா, பொண்ண தூக்கிட்டுப் போயிருவோம்”னு மெரட்டினாரு.

வேலுச்சாமி நாயக்கர் வெளிய வந்து, “தூக்கிட்டுப் போறதுக்கு இவ ஒண்ணும் கோம்பக்காட்டுல வெளையிற உளுந்து, பாசிப்பயிறு இல்ல... கண்டமனூர் ஜமீனோட உசுரு! மொதல்ல பொண்ணு வேணாம்னு சொல்லிட்டு இப்போ வந்து வெளையாட்டு காட்டுறீங்களா?”னு சொல்லி எல்லாரையும் விரட்டியடிச்சாரு.

அதுக்குப் பெறகு எரசக்கநாயக்கனூர்ல ‘ஜாம் ஜாம்’னு கல்யாணம் நடந்துச்சு.

கண்டமனூர் ஜமீன நெனச்சுத்தான் அழுததோ... இல்ல, தண்ணிக்காக அழுததோ...

காலங்காலமா அழுதழுது ஓஞ்சுபோயி வீங்கிச் செவந்துபோன செம்மண் பூமியில மழை பேய ஆரம்பிச்சது. ரொம்ப நாளைக்குப் பெறகு வைகைல வெள்ளம் கரை பொரண்டு ஓடிச்சு.

வாடிவதங்கின மரம், செடி, கொடி எல்லாம் திரும்ப உசுரு பிடிக்க ஆரம்பிச்சது. ஊரெல்லாம் செழும்பாச்சு. பஞ்சம் பொழைக்க வெளியூர் போன சனங்க குடும்பங் குடும்பமா திரும்பி வந்தாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 34
வருச நாட்டு ஜமீன் கதை - 34

கண்டமனூர் ஜமீனோட வாரிசு மைனர் பாண்டியரு, தேஜஸ் கூடி வாட்டசாட்டமா செவப்பா அழகா வளந்துட்டாரு. ஆட்சி அதிகாரம் இல்லைனாலும் அறுவத்திநாலு கிராமங்களுக்கும் மைனர்தான் ராஜகம்பளத்துத் தலைவர்னு சொன்னாங்க.

ஒரு ஜமீன்தாருக்கு என்ன தோரணை இருக்குமோ, அதே தோரணை மிடுக்கு எல்லாம் மைனருக்குக் கூடிவந்துச்சு.

தெப்பம்பட்டி அரண்மனைக்குப் புதுக் களை பொறந்துச்சு. சிங்காரத் தோட்டம், மான், மயிலு, வில்வண்டி குதிரையோட நயமான ஜமீன்தார் தோரணையில இருந்தாரு.

அரண்மனையச் சுத்தி எப்பவும் நூறு... எறநூறு சேவகமார்கள் கூடினாங்க. அவங்களே அதிகாரத்தைக் கையில எடுத்துக் கிட்டாங்க. அரண்மனையப் பத்தியோ, ஜமீன்தாரப் பத்தியோ யாராவது குறை சொன்னா அவங்களுக்கு அடியும் உதையும் இனாமா கெடைக்கும்.

மைனருக்கு, வேலுச்சாமி நாயக்கரும் சீனிச்சாமி நாயக்கரும் ஒத்தாசையோட இருந்தாங்க.

ஜமீன் பரம்பரை வழக்கத்தைக் காப்பாத்தணும்னு ரோசனை சொன்னாங்க. பழைய ஜமீன்தாரு கிட்ட யார் யார் எப்பிடி நிலம் வாங்கினாங்க... யார் யார் எதுத்து நின்னு சண்டை போட்டாங்க... இப்பிடி விலாவரியா எடுத்துச்சொல்லி மைனரோட மனசுல ஒரு வேகத்த பத்தவெச்சாங்க.

வில் வண்டியில மைனர் போனாருன்னா, முன்னாடி இருபது பேரு, பின்னாடி இருபது பேரு கூடவே ஓடிக்கிட்டு இருப்பாங்க. “ஜமீன்தார் வர்றாரு... வர்றாரு..!”னு கூவிக்கிட்டே ஓடுவாங்க. புழுதி பறக்கும்.

எந்த ஊருக்குள்ள நொழைஞ்சாலும் வில்வண்டியிலிருந்து எறங்குறதுக்கு முன்னாடி கடா வெட்டி மைனரோட நெத்தியில ரத்தப் பொட்டு வெச்சுதான் ஊருக்குள்ள கூப்பிட்டுப் போவாங்க. ராஜ திருஷ்டி படும்னு சொல்லி மைனர நேர் குத்தா பாக்க பயந்தாங்க.

அப்பிடியும் மைனர யாராவது நேர பாத்துட்டாங்கன்னா, உப்பும் மிளகாயும் எடுத்து தன் சொந்தத் தலைக்குமேல மூணு சுத்துச் சுத்தி அடுப்புல போட்டுருவாங்க.

தெப்பம்பட்டி அரண்மனையப் பாத்து எந்த வீட்டுக்கும் வாசல் இருக்காது. ராஜ திருஷ்டி பட்டா பொல்லாததாம்!

ஒவ்வொரு ஊர்லயும் தொழுவுக்கு ஒரு ஆடு, ஒரு மாடு மைனருக்குத் தந்தாகணும்னு வாய்ச் சட்டம் போட்டாங்க. யாராவது எதுத்துப் பேசினா அடி, உதைதான்.

பொண்ணுக விசயத்தைப் பத்திச் சொல்லவே வேணாம்... மைனருகிட்ட நல்ல பேர் வாங்கணும்னு சொல்லி கல்யாணம் ஆனதும் புதுப் பெண்ணை அரண்மனையில விட்டுட்டுப் போக ஆரம்பிச்சாங்க.

புதுசா சடங்கான பொண்ணுகளயும் காத்து கருப்பு அடிச்சிராம மொத மொதலா மைனர்கிட்ட அனுப்பி வெச்சாங்க.

வேத்து ஜாதியில அழகான பொண்ணுக இருக்கிற சங்கதிய தெரிஞ்சுக்கிட்டு மைனர்கிட்ட சொல்றதுக்கு ஆளுக இருந்தாங்க. அந்தப் பொண்ண, ‘ஜமீன்தார் கூப்பிட்டு வரச் சொன்னாரு’னு சொல்லி எப்பிடியாவது தூக்கிட்டு வந்து அரண்மனையில கொண்டுவந்து போட்டுருவாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 34
வருச நாட்டு ஜமீன் கதை - 34

மைனரு ருசி கண்ட பூனையா இருந்ததால எந்த ஒரு விசயத்துக்கும் தயக்கமோ தயவு தாட்சணையோ பாக்கிற ஆளா இல்ல.

இப்பிடித்தான் ஒரு தடவ... வில்வண்டியில போய் கிட்டிருந்தப்போ, வயல்காட்டுல எளம் வயசு பொண்ணுக குனிஞ்சு நிமிந்து வேல செஞ்சுக்கிட்டிருந்தாங்க. வண்டிய நிறுத்தச் சொல்லி நேரா ஒரு பொண்ணுகிட்ட போனாரு. அவ அசந்துபோயி மைனரவே பாத்துக்கிட்டு இருந்த நேரத்துல அவள உச்சந் தூக்கா தூக்கி, “என்னாடி பொண்ணே! இவ்வளவு அழகா இருக்கிற பொண்ணு வயக்காட்டுல வேலை செய்யக்கூடாது. என்னோட அரண்மனைக்கு வந்துரு.... என்ன சொல்ற..?”னு கேட்டுக் கண்ணடிச்சாரு.

அந்தப் பொண்ணு திக்கித் தெணறி, “ஐயையோ... என்னை விட்டுருங்க. எங்கப்பன கேட்டுச் சொல்றேன்”னு சொல்லி திமிறி விழுந்து எந்திரிச்சு ஓட ஆரம்பிச்சா.

அவ வரப்புல விழுந்து விழுந்து எந்திரிச்சு ஓடறத ரசிச்சு சிரிச்சாரு.

மறுநாள், அந்தப் பொண்ணோட அப்பன் அவளக் கூப்பிட்டுக்கிட்டு குடும்பத்தோட ஊரவிட்டே ஓடிப் போயிட்டான்.

இப்பிடியும் நடக்கும்.

ஜமீன்தாரு தன்னக் கூப்பிட மாட்டாரானு ஏங்கின பொண்ணுகளும் இருந்ததுக. அவளுகளுக்கு அரண்மனையில எல்லா சகாயமும் கெடைக்கும்.

தெப்பம்பட்டி அரண்மனைக்கு வேலுத்தாயம்மா வர்றத நிறுத்திக்கிட்டாங்க. தன் பையனாவது பழைய ஜமீன்தாருக மாதிரி இல்லாம ஒழுக்கமா படிக்க வெக்கணும்னு எவ்வளவோ முயற்சி செஞ்சாங்க. ஒண்ணும் பலிக்கல.

எந்த நேரத்துலயும் பொண்ணுகளோடதான் ஆட்டம் போட்டுக்கிட்டிருந்தாரு.

புதுசா ஆர்மோனியப் பெட்டி, கஞ்சிராக் கட்டை வாங்கி பாட்டுப் பழக ஆரம்பிச்சாரு.

வேலுச்சாமி நாயக்கர்தான் மைனர கெடுக்கிறாருனு சொல்லி, ஒரு கட்டத்துல அவரு மேலயே கோவப்பட்டு கத்த ஆரம்பிச்சாங்க வேலுத்தாயம்மா. அதனால மொட்டனூத்து வீட்டுக்குள்ளயே இருந்துக்கிட்டு வெளிய வரவே தயங்கினாங்க.

வேலுச்சாமி நாயக்கர், வேலுத்தாயம்மாகிட்ட “பொறுமையா இருங்க. நம்ம ஜமீன் நெலத்தையெல்லாம் திரும்ப வாங்கிறலாம். அதுக்குத்தான் நம்ம மைனர பஞ்சாயத்து கிஞ்சாயத்துனு கூப்பிட்டுப்போயி பழக்கஞ் செஞ்சுக் கிட்டிருக்கேன்”னு சொன்னாரு.

அதுக்குத் தோதா ஒரு நாளு, உத்தம பாளையத்துல இருந்து தெப்பம்பட்டி அரண்மனைக்கு மக்கா ராவுத்தர் வந்தாரு.

“நான் சாமியப்ப நாக்கருக்குக் குடுத்த வாக்கக் காப்பாத்தணும். இனி ரெண்டே வருசத்துல மைனருக்குப் பதினெட்டு வயசு வந்ததும் திரும்பவும் உங்க ஜமீன் நெலங்க எல்லாம் உங்களுக்கே கெடைக்க ஏற்பாடு செய்யப்போறேன். அதுக்கான சமயமும் வந்துருச்சு”னு ராவுத்தர் சொன்னாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 34
வருச நாட்டு ஜமீன் கதை - 34

வேலுச்சாமி நாயக்கருக்கு எதுவும் புரியாம, “கைவிட்டுப்போன ஜமீன் எப்பிடித் திரும்பக் கெடைக்கும்..?”னு கேட்டாரு.

“நானூறு வருசத்துக்கு மேல பரம்பரையா அனுபவிச்சு வந்த நெலங்கள சில பல துர் நடவடிக்கையால ஜமீன் ஏலத்துக்குப் போயிருச்சுனு திரும்பவும் லண்டன் கார்ப்பரேஷன் கம்பெனிகிட்டயிருந்து எங்களுக்கே வேணும்னு சொல்லி கோர்ட்ல கேஸ் போடலாம்னு மதுரைல வக்கீல் சொன்னாரு. அதுக்குத்தான் உங்களோட ஒத்தாசையும் வேணும்”னு பொறுமையா பதில் சொன்னாரு ராவுத்தர்.

‘இதுக்கு முன்னாடி கண்டமனூர் ஜமீன் எப்பிடி எப்பிடி இருந்துச்சு..? யார் யார் காலத்துல என்னென்ன மராமத்து செஞ்சாங்க..?’னு ராபர்ட் கிளைவ் காலத்துலயிருந்து சாமியப்ப நாயக்கர் காலம் வரைக்கும் எல்லா தஸ்தாவேஜுகளையும் தேடி எடுத்தாரு மக்கா ராவுத்தர்.

அம்புட்டையும் எடுத்துக்கிட்டு மதுரைக்குப் போயி நயினார்னு ஒரு தெரிஞ்ச வக்கீலப் பார்த்துப் பேசினாரு.

அப்பத்தான் அந்தச் சமாசாரத்தைப் பத்தி அங்ஙன வந்த இன்னொரு வக்கீல் சொன்னாரு.

அதாவது, கண்டமனூர் ஜமீனை ஈஸ்ட்டிந்தியா கம்பெனிகிட்டயிருந்து பம்பாய் பட்டேல் அஞ்சரை லட்ச ரூவாய்க்கு ஏலத்துல எடுத்துக்கிட்டாங்களாம்.

அப்போ... மைனருக்கு ஜமீன் நெலங்க திரும்ப கெடைக்குமா..? கெடைக்காதா..?

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு