Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 25

வருச நாட்டு ஜமீன் கதை - 25
வருச நாட்டு ஜமீன் கதை - 25

கண்ண உருட்டிப் பார்த்த செங்கமலம், “என்னை நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?”னு கேட்டுக்கிட்டே கெணத்துப் பக்கம் விறுவிறுன்னு நடந்தா.

மண்ணுக்குள்ள தோண்டி எடுத்தது அம்புட்டும் தங்க நகைகள்தான்!

இம்புட்டு நகைகளஅவரோட ஆயுசுக்கும் பார்த்ததே இல்ல!

ஒருவேள தான் கண்டது கனவா இருக்குமோன்னு கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்டுத் தன்னோட கைவிரல்ல சொடக்கு விட்டுப் பார்த்தாரு. எல்லாமே நெசந்தான்! சுத்திமுத்தி யாரும் வர்றாங்களான்னு ஒரு நோட்டம் விட்டாரு. ஒரு ஈ காக்கா தெரியல. வறட்சியா இருந்த பூமிதான் தெரிஞ்சது!

வாணி தோண்டியிருந்த எடத்துலயே அவரும் குனிஞ்சு மண்ணத் தோண்ட ஆரம்பிச்சாரு. தோண்டத் தோண்ட தங்கக் கொலுசு, நெத்திச்சூடி, ராக்கடி, ரெட்டவடம், மோப்புச் சங்கிலி, ஒட்டியாணம்... இப்பிடி வந்துக்கிட்டே இருந்துச்சு.

‘இம்புட்டு நகைகளும் இந்த மண்ணுக்குள்ள எப்பிடி வந்துச்சு..? ஜனகம் ஒரு ‘பொன்னுக்கு வீங்கி’ன பொம்பளதான். ஒருவேள இதெல்லாம் அவளோட நகைகளா இருக்குமோ..? வாணி விலாசத்தச் சுத்தி இன்னும் தோண்டினா ஏகப்பட்ட நகைகள் வெளிய வரும் போலிருக்கே’னு நெனச்சாரு வெங்கடேஸ்வரலு.

எடது கையில கோத்து வெச்சிருந்த துணி மூட்டையப் பிரிச்சு கீழே வெச்சாரு. அம்புட்டு நகைகளயும் அள்ளி அள்ளி துணியில போடும்போது யாரோ குதிரைல வர்ற சத்தம் கேட்டுச்சு.

அவசர அவசரமா துணி மூட்டையக் கட்டி அந்தக் குழிக்குள்ளவே போட்டு மண்ணோட மண்ணா மூடினாரு வெங்கடேஸ்வரலு.

குதிரைல வந்தது ஜமீன்தாரோட சேவகக்காரன்தான்.

“என்னவே... அப்பனும் பொண்ணுமா மண்ணத் தோண்டி வெளையாடுறீங்க. எவ்வளவு தோண்டினாலும் தண்ணி வராது. வைகைல தண்ணி வந்து ஒம்போது மாசமாச்சு. பூமியும் வறச்சியா போச்சு. ஒருவேள நீங்க தோண்டுன எடத்துல பொதையல் கிதையல் கெடச்சாலுங் கெடைக்கும் சாமீ..!”னு நக்கலா சிரிச்சான்.

முழுப் பூசணிக்காய முழுங்கினவரு மாதிரி ஒண்ணுமே பேசாம நின்னுக்கிட்டிருந்தாரு வெங்கடேஸ்வரலு.

“என்ன முழிக்கிறீங்க சாமி... ஜமீன்தாரு உங்கள தேடிக்கிட்டிருக் காரு. நல்லவேள, பூசாரி கிட்ணரு சொல்லித்தான் நீங்க இங்க இருக்கறதே தெரிஞ்சது. தெப்பம்பட்டி, மாந்தோப்பு பங்களாவுக்கு உங்கள கையோட கூட்டிக்கிட்டு வரச்சொன்னாரு. சடார்னு கௌம்புங்க!”னு சொல்லிக் கூட்டிக்கிட்டுப் போனான்.

ஜமீன்தாரு கோவமாத்தான் உக்கார்ந்திருந்தாரு.

“ஜனகத்தப் பத்தி யாருகிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்னு உங்ககிட்ட சொல்லியிருந்தேனே... எதுக்காக கிருஷ்ணங்கிட்ட சொன்னீங்க..?”

படார்னு ஒடஞ்சுபோயி குலுங்கி அழுதாரு வெங்கடேஸ்வரலு.

“சாமீ... ஆத்தாம தாங்க முடியல சாமீ! ராத்திரி தூக்கம் பிடிக்கல. ஜனகா வாழ்ந்த எடத்தையாவது ஒரு தடவப் போய்ப் பார்த்து மனச ஆத்திக்கலாம்னு போனேன். எம் மகள நெனச்சா ஒலகமே இருண்டு போன மாதிரி தெரியுது. அம்மாவப் பாக்கணும், பாக்கணும்னு அழுதுக்கிட்டே இருக்கா. இவளுக்கு ஒரு நல்லது செய்யாம, இப்பிடி அநாதையா விட்டுட்டுப் போயிட்டாளே!”னு சொல்லி கால் நடுங்கி அப்பிடியே கீழே உக்காந்தாரு.

“அழாதீங்க... நாந்தான் உங்களுக்கு வேண்டின சகாயஞ் செய்து தாரேன்னு சொன்னேனே. அவசரப்படாதீங்க... ஜனகத்துக்கு எவ்வளவோ நகைகள் அள்ளி அள்ளிக் குடுத்தேன். பொறாமைப்பட்டவன் எவனோ அம்புட்டையும் சுருட்டிக்கிட்டுப் போயிட்டான்”னு சொல்லி நிறுத்தினாரு.

வெங்கடேஸ்வரலு, ‘நகைகளைப் பத்தி ஜமீன்தாரகிட்ட சொல்லலாமா, வேண்டாமா?’னு யோசிச்சாரு. ஜமன்தாருதான் பேச ஆரம்பிச்சாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 25
வருச நாட்டு ஜமீன் கதை - 25

“நகைகளப் பத்திக்கூட எனக்குக் கவலையில்ல... ஆனா, அவளப் போயி குருவி சுடுற மாதிரி... இனிமே என்னத்தச் சொல்ல..? அது அவளோட தலவிதி... எல்லாம் போகட்டும்... நீங்க போயி கோயிலு, பூச-புனஸ்காரங்கள மட்டும் பார்த்துக்கிட்டிருங்க. உங்களுக்கு நெலமும் வீடும்...”னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே கதவு ‘படார்’னு தொறந்து உள்ள புயலு மாதிரி வந்தா கோமளவல்லி. சேவகக்காரங்க தூசி துரும்பு மாதிரி அவளச் சுத்திச் சுத்தி ஓடி வந்தாங்க.

“ஜமீன்தாரய்யா... நானு என்னத்தைச் செய்ய? சொல்லச் சொல்லக் கேக்காம செங்கமலம் இப்பிடிப்போயிட்டாளே..!”னு ஒப்புக்கு ஒரு ஒப்பாரி வெச்சுகிட்டு ஓடிவந்தா கோமளவல்லி.

“எதுக்குப் பதட்டப்படற..? கொஞ்சம் பொறுமையா இருந்து அப்புறம் சொல்லு...”னு கோமளவல்லிக்குக் கண்ணக் காட்டிட்டு பெரியவர் வெங்கடேஸ்வரலுவ வெளிய அனுப்பி வெச்சுட்டாரு ஜமீன்தார். அவரு போனதும்,

“எதுக்கு இப்பிடிக் கத்துற..? மெதுவாச் சொல்லு. செத்துகித்துப் போயிட்டாளா செங்கமலம்?”

“இல்ல தொர... சொல்லாமக் கொள்ளாம சீவில்லிபுத்தூருக்குப் போயிட்டாளே!”னு வெறுமனே சேல மாராப்பை எடுத்துப் போய் கண்ணீரத் தொடச்சா.

“செங்கமலத்துக்குச் சொந்த ஊரு சீவில்லிப்புத்தூரா?” - ஜமீன் ஆர்வமா கேட்டாரு.

“ஆமா தொர... எந்த நேரமும் அந்த ஆண்டாள் கோயில்லயே கெடப்பா. திருமாலு... பெருமாளுனு கிறுக்கி மாதிரி சுத்திக்கிட்டிருப்பா. இப்பமே போனோம்னா புடிச்சு இழுத்துக்கிட்டு வந்துறலாம் தொர!”

“அதெல்லாம் பார்த்துக்கலாம். நான் சுட்டுப் போடுவேன்னு அவளப் பயமுறுத்தினியாமே..?”

“ஆமா தொர... உங்களுக்குத் தோதா இருக்கும்னு பொய் சொல்லிட்டேன். இல்லாட்டி அவ அடங்கமாட்டா. அடங்காப்பிடாரி!”

“பக்குவமா எடுத்துச் சொல்லி சம்மதிக்க வெக்கணும். உனக்கு நாஞ்சொல்லியா தெரியணும்! இனிமேல செங்கமலம் இல்லாம என்னால இருக்க முடியாது. அவகிட்ட என்னவோ ஒரு ஈர்ப்பாகிப்போச்சு. அதனாலதான் அவ எடுத்தெறிஞ்சு பேசறப்பகூட நான் பொறுமையா இருந்தேன்.”

“பாக்குறதுக்குத்தான் பொம்ம மாதிரி இருப்பா. வாயாடி! ஆண்டாள் வேஷத்துக்குப் பொருத்தமா இருக்காளேனு கூட்டியாந்தேன். இப்பிடி ஓடிப்போயிட்டாளே!”

“இப்பிடியே விட்ற முடியுமா? அவள அவசியம் கூட்டிக்கிட்டு வந்தாத்தான் என் மனசு ஆறும். நானும் வாரேன்!”

மறுநாளே, ஜமீன்தாரும் கோமளவல்லியும் பரிவாரத்தோட ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பொறப்பட்டுப் போனங்க.

இப்போ நம்ம சர்க்காரு முத்திரைல ஒரு கோபுரப்படம் போட்டிருக்காங்களே... அந்தக் கோபுரம் இருக்கற ஊருதான் ஸ்ரீவில்லிபுத்தூர். வடபத்திர சாயி கோயில் கோபுரந்தான் அது.

வருச நாட்டு மலைக்குக் கெழக்குச் சரிவுல வெளையிற வாழைக்காய், ஏலக்காய், காபிக் கொட்டை, வாசனைத் திரவியங்க அம்புட்டும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குத்தான் வந்தாகணும்.

வத்றாப்பு வழியா குதிரைப் பாதையில போனா, வெறும் பதினெட்டு கல்லு தொலவுதான்!

‘வில்லி, புத்தூரான்’னு ரெண்டு வேடனுக கட்டின ஊருதான் ‘ஸ்ரீவில்லிபுத்தூர்.’ பெரியாழ்வார் பொறந்த ஊரு.

ஊருக்கு நடுவுலதான் ஆயிரம் வருசத்துக்கு முந்தி கட்டின ஆண்டாள் கோயிலு இருக்கு.

வருச நாட்டு ஜமீன் கதை - 25
வருச நாட்டு ஜமீன் கதை - 25

இங்க இருக்குற பெரிய பெரிய துவஜஸ்தம்பத்துல வடிவான சிற்பங்க உயிரோட்டமா இருக்கு. பிற்பாடு திருமலை நாயக்கரு இந்தக் கோயில ரொம்பப் பொழிவா அமச்சது மட்டுமில்ல... மதுரை மீனாட்சி கோயில்ல பூச நடக்குற அதே சமயத்துல இந்த ஆண்டாள் கோயில்லயும் பூசை நடக்குறதுக்கு வழி நெடுக மணி மண்டபம் கட்டிவெச்சாரு.

கருப்பக்கிருகத்துல ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் சிலைக பளிச்னு இருக்கு. மேல திருப்பாவை பாசுரத்துக்கு ஏத்த மாதிரி பதுமைகளும் இருக்கு.

தங்க மண்டபத்துலதான் செங்கமலம் பூ வெச்சு மாலை பின்னிக்கிட்டிருந்தா.

ஜமீன்தாரையும் கோமளவல்லியையும் பார்த்த செங்கமலம், தெகச்சுப்போயி எந்திரிச்சா.

கோமளவல்லி ஓடிப்போயி அவளக் கட்டிப்புடிச்சு, “இந்தா பாரு செங்கமலம், பூமியில மிஞ்சுனவரு நம்ம கண்டமனூர் தொரையே உன்னத்தேடி வந்திருக்காரு. ‘ஜமீன்தாரோட கண்ணு பட்டா ஜென்மத்துக்கும் கவலையில்ல’னு எவ எவளோ ஏங்கித் தவிச்சுக்கிட்டிருக்காளுக. அந்தக் கொடுப்பின உனக்குத் தானா வந்திருக்கு. தட்டிக் கழிச்சுறாதடியம்மா”னு நாடியப் புடிச்சுக் கொஞ்சினா.

கண்ண உருட்டிப் பார்த்த செங்கமலம், “என்னை நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?”னு கேட்டுக்கிட்டே கெணத்துப் பக்கம் விறுவிறுன்னு நடந்தா.

ஜமீன்தாரும் பின்னாடியே போயி, “செங்கமலம், நீ நெனக்கிற மாதிரி நான் கொடுமைக்காரனில்ல. நான் உன் மேல வெச்சிருக்கறது காமம் இல்ல... பிரேமை! எனக்கே நல்லா தெரியுது செங்கமலம். உன் மேல எனக்கு இப்போ வெறித்தனம் இல்ல. உன்னப் பூ மாதிரி தாங்கி ஆராதிக்கணும்னுதான் தோணுது.

நீ நெனக்கிற மாதிரியில்ல. என் மனசு எவ்வளவோ மாறியிருக்கு. எனக்கு உன் மனசுதான் வேணும்”னு கெஞ்சினாரு.

“மனசு மாறியிருந்தா நீங்க நெனச்சுப் பார்க்க வேண்டியது உங்க மகாராணியையும் குழந்தையையும்தான். உங்களுக்கு வரி கட்டுறாங்களே அந்தக் குடிமக்கள நெனச்சுப் பாருங்க. என்னை நெனச்சுப் பிரயோசனம் இல்ல. நீங்க இங்கயிருந்து போனாவே எனக்கு நீங்க செய்ற பெரிய உபகாரமா இருக்கும்”னு கெணத்துல இருந்த தண்ணிய எட்டிப் பார்த்தா.

“அதுசரி செங்கமலம்... ஜம்புலிபுத்தூர் பெருமாள் கோயில்ல பதினாறு நாளும் நாட்டியம் ஆடுறேன்னு சொல்லிட்டு இப்பிடிச் சொல்லாம கொள்ளாம வந்துட்டியே... அது யாருக்குச் செய்ற உபகாரம்?”னு ஜமீன்தார் கோவத்தோட கேட்டார்.

கொஞ்ச நேரம் மவுனமா இருந்த செங்கமலம் ஒரு முடிவுக்கு வந்து, “சரி... நான் வாரேன். ஆனா அந்தப் பதினாறு நாளும் எனக்கோ, என்னோட நோம்புக்கோ தீம்பு வராம வாக்குறுதி தாங்க”னு கேட்டா.

ஜமீன்தாருக்கு மனசு ஓரத்துல ஒரு வெளிச்சம் பிசிறடிச்சு ஒரு நம்பிக்கை வந்துச்சு. பதினாறு நாள்ல அவ மனச மாத்திப் போடலாம்னு நெனச்சு சம்மதிச்சாரு.

ஜம்புலிபுத்தூர்ல, ஜமீன்தாரவிடப் பெரிய கழுகு ஒண்ணு அவளுக்காகக் காத்துக்கிட்டிருந்தது. பாவம்... செங்கமலத்துக்குத் தெரியாது.

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு