Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 26

வருச நாட்டு ஜமீன் கதை - 26
வருச நாட்டு ஜமீன் கதை - 26

நம்ம ஜமீன்தாரோட நாக்குல சனி உட்கார்ந்திருக்கானே! சும்மா இருக்க மாட்டாம, “துரை அவர்களே! இன்னிக்கு ஒரு நாட்டிய நாடகத்தை மனசு குளிரப் பார்க்கப் போகிறோம்”னு சொன்னாரு.

எட்டாந் திருநாளும் அதுவுமா அங்க வந்து சேந்தது ஒரு வெள்ளக் கழுகு.

நம்ம ஜமீன்தார் சாமியப்ப நாயக்கருக்கும் செங்கமலத்துக்கும் ‘கெட்ட சகுனம்’னு சொல்லத்தான் வேணும்.

அந்த வெள்ளக் கழுகு வேற யாருமில்ல... ஈஸ்டிந்தியா கம்பெனியோட தென் மண்டல நிர்வாகஸ்தர் பார்க்கர் துரை! தன்னோட ஏஜென்டுகளோட தெப்பம்பட்டி அரண்மனைக்கு வந்து சேர்ந்தாரு.

பார்க்கர் துரைய பாத்ததுமே நம்ம ஜமீன்தார் தெகச்சுப் போனதுக்குக் காரணமிருந்துச்சு. சமயங்கெடச்சப்பல்லாம் ரெண்டு பேருமே சென்னப் பட்டினத்துல செய்த காமக்களியாட்டம் கொஞ்சநஞ்சமில்ல!

அதுவுமில்லாம, அந்தச் சகாயத்துனால நம்ம ஜமீன்தாரு ஈஸ்ட்டிந்தியா கம்பெனியில நெறைய கடன் வாங்கியிருந்தாரு.

‘கடன் உடன் வாங்கி உடம்பத் தேத்து, கடன்காரன் வந்தால் நெஞ்சைக்காட்டு”னு வெள்ளக்காரன்கிட்ட ஐவேஜை காட்ட முடியுமா?

பார்க்கர் துரை காரியத்துல கண்ணாயிருந்து, “கம்பெனி இதுக்கு மேல உங்களுக்கு கடன் கொடுக்க முடியாது. கம்பெனிக்குக் கட்ட வேண்டிய காசு பணத்தைக் கணக்குப் பார்த்து வட்டியோட கட்ட வேண்டும்”னுசொன்னாரு.

ஜமீன்தாரு பழக்கதோஷத்துல கோவமா எதுவும் பேசிப்போடுவாரோனு வேலுச்சாமி நாயக்கர்தான் பயந்துக்கிட்டே இருந்தாரு.

வேலுச்சாமி நாயக்கர், துரைய சமாளிச்சு, “இப்போதைக்கு ஜமீனோட நெலங்க மழை தண்ணியில்லாம தரிசாயிருக்கு. குடிமக்களும் வரி கட்டாம பணத்துக்கு தவிச்சுக்கிட்டிருக்காங்க. அதனால அடுத்த வருஷம் கண்டிப்பா வட்டியும் மொதலுமா சேர்த்துக் கட்டிப் போடுவோம்”னு சொன்னாரு. துரையோட மனசு கோணாம நைச்சியமா பேசிக்கிட்டிருந்தாரு. அதுமட்டுமில்லாம, துரைக்கு எது பிடிக்கும்... எது பிடிக்காதுனு அவருக்கு நல்லா தெரிஞ்சதால, மத்தியான விருந்துல வெள்ளக்காரன அசத்திப் போட்டாரு வேலுச்சாமி நாயக்கரு.

எல்லாம் முடிஞ்ச பெறகு பார்க்கர் துரை, “இரவுக் களியாட்டங்கள் ஏதும் இருக்கின்றதா?”னு கண்ணடிச்சுக்கிட்டே கேட்டாரு.

நம்ம ஜமீன்தாரோட நாக்குல சனி உட்கார்ந்திருக்கானே! சும்மா இருக்க மாட்டாம, “துரை அவர்களே! இன்னிக்கு ஒரு நாட்டிய நாடகத்தை மனசு குளிரப் பார்க்கப் போகிறோம்”னு சொன்னாரு.

உடனே பார்க்கர், “ஏது.. சுயராஜ்ஜியம் வேண்டும் என்று கிளர்ச்சி செய்கிறார்களே... அந்த நாடகமா?”னு அதிர்ச்சியா கேட்டாரு.

“இல்லை துரை அவர்களே... இது மொத்தமும் பெண்களே நடத்துகின்ற நாட்டிய நாடகம்”னு அபிநயத்தோட சொன்னாரு ஜமீன்தாரு.

“அதானே பார்த்தேன். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? திருநெல்வேலி சீமையில் சில சுதேசிகள் கட்டபொம்மு நாடகத்தை மேடையில் போட்டு எங்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய மக்களைத் தூண்டியிருக்கிறார்கள். எங்கள் கலெக்டர் சும்மா பார்த்துக் கொண்டிருப்பாரா? நாடகத்தில் நடித்தவர்களையும், வேடிக்கை பார்த்தவர்களையும்கூட தூக்கிக்கொண்டு போய் சிறையிலே போட்டுவிட்டார்!”னு கெக்கெக்கேனு வில்லத்தனமா சிரிச்சாரு பார்க்கர் துரை.

ஜமீன்தாருக்குக் கோவம் வரத்தான் செஞ்சுது. கட்டபொம்மன் பாட்டன் முறையாச்சே. வேலுச்சாமி நாயக்கர்தான் கண்ணாலேயே ஜமீன்தார சமாதானப்படுத்தி, பார்க்கர் துரையப் பாத்து இப்பிடிச் சொன்னாரு, “எங்க ஊருலயும் சில சனங்க ‘ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய், காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டான் வெள்ளக்காரன்’னு உங்க வியாபார தந்திரத்தைக் கேலி செஞ்சு பாடுவாங்க. ஆனா, நாங்க எங்க அதிகாரத்தக் காட்டி அவங்கள அடக்கி வெச்சுருவோம். உங்க வியாபாரம் அமோகமா நடக்கும் துரைஅவர்களே!”

வருச நாட்டு ஜமீன் கதை - 26
வருச நாட்டு ஜமீன் கதை - 26

“சபாஷ், சபாஷ்! கட்டபொம்மு நாடகத்தில் நடித்த அந்தக் கட்ட பொம்முவை உண்மையாகவே அதே மேடையில் தூக்குப் போடவேண்டும் என்று எங்கள் கலெக்டருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்”னு திரும்பவும் மூக்க வெடச்சு சிரிச்சது அந்த வெள்ளக் கழுகு.

‘துரை ரொம்பவும் குரூரமான ஆளு’னு கணக்குப் போட்டாரு வேலுச்சாமி நாயக்கரு. கடன் சுமையைத் தாங்கிக்கிட்டிருந்த ஜமீன்தாரு எதிர்த்துப் பேசத் திராணியில்லாம உக்காந்துக்கிட்டிருந்தாரு. அதே நேரத்துல துரைய திருப்திப்படுத்தி அனுப்பி வச்சுறணும்னு கண்ணாயிருந்தாரு.

ராத்திரி ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயிலுக்கு வந்து சேர்ந்தாங்க.

குத்துவிளக்கு, சரவௌக்கு, தூண்டாமணி வௌக்கு... இப்படி அங்கங்க பளிச்னு ஒரு ஒளியோட்டமா இருந்துச்சு.

ஒண்ணரையடி கல் மேடையிலே திரைய இழுத்துப் பிடிச்சுக் கட்டியிருந்தாங்க. திரைத் துணியில ஆதிசேஷன் மேல சயனப்பெருமாள் தூங்கிட்டிருந்தாரு.

கோமளவல்லி திரைக்குப் பின்னாலயிருந்து உருண்டு ஓடிவந்து ஜமீன்தாரையும் பார்க்கர் துரையையும் குனிஞ்சும் குனிய முடியாமையும் கும்பிட்டு வாய அகலமாத் தெறந்து சிரிச்சா.

ஜமீன்தாரோட காதுல துரை என்னவோ சொன்னதுமே ரெண்டு பேரும் வெடிச் சிரிப்பு சிரிச்சாங்க. பந்தல் பூராவும் உக்கார எடமில்லாம தவிச்சுக்கிட்டிருந்த சனங்க வெள்ளத் துரையவே பாத்துக்கிட்டிருந்தாங்க.

நாட்டிய நாடகம் ஆரம்பமாச்சு. சாகித்தியம், சங்கீதம், நடிப்பு, நாட்டியம்... இப்படி நாலும் ஒண்ணு சேந்து கெடைக்கிற கலையும் சுகமும் இருக்கே... அடடடா..! வெள்ளக்காரங்களுக்கு இப்பவும் அதிசயமாத்தான் இருக்கு.

நாட்டிய நாடகங்கள்ல பாகவத மேள நாடகமும், குறவஞ்சி நாடகமுந்தான் முக்கியமானது. பாகவத மேள நாட்டிய நாடகத்துல எப்பவுமே பக்தியப் பெருகச் செய்யற புராண சம்பந்தமான கதைகளத்தான் நாடகமா ஆடுவாங்க.

ஆண்டாள், மனுசப் பயலுகளத் திரும்பிக்கூடப் பார்க்காம சின்ன வயசுலயே எப்படி ஸ்ரீரெங்கநாதரை கல்யாணம் செய்துக்கிட்டானு நாடகம்.

தோத்திரப் பாட்டு முடிஞ்சதும் கோணங்கி வேஷம் கட்டின ஒரு பொண்ணு மேடைக்கு வந்து காம்போஜி ராகத்துல நகைச்சுவையாப் பாடி ஆடி அத்தன பேரு கவனத்தையும் மேடைப் பக்கமாகத் திருப்பினா.

திடீர்னு சனங்க கைதட்டின சத்தத்தக் கேட்டு ஜமீன்தாரும் பார்க்கர் துரையும் மேடையப் பார்த்தாங்க.

ஆண்டாள் வேஷத்துல அந்தத் தங்கச் சிலை... செங்கமலம்!

அந்தத் தீப வெளிச்சத்துல உடம்பெல்லாம் தங்கமா மின்னுச்சு. பிரகாசமான கண்ணு, பெரிய கொண்டை. கழுத்துல பெரிய மாலை. ஒரு கையில கிளி. பொண்ணுகளே பிரயாசைப்படுற அழகு! அவளச் சுத்தித் தோழிகள்.

‘திருமாலைப் பார்க்கணும், அவருக்கு ஏத்த அடிமையா இருக்கணும்’னு உருகிப் பாடுனா ஆண்டாள்.

ஜமீன்தாரும் பார்க்கர் துரையும் செங்கமலத்தோட சாரீரத்தக் கவனிக்காம சரீரத்தையே பார்த்துக் கிட்டிருந்தாங்க. அபிநயம் பிடிச்சு, அடவு கட்டி ஆடுறப்போ அவளோட மார்பு அசைவுல இவங்களுக்கு சபலம் உருக ஆரம்பிச்சது.

செங்கமலம் மாலைய எடுத்து திருமாலுக்குப் போடும்போது ஜமீன் தாரும் பார்க்கர் துரையும் மானசீகமா தங்கள திருமால் அவதாரமா நெனச்சுக்கிட்டாங்க.

“நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி, மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்”னு பாட ஆரம்பிச்சா செங்கமலம்.

பார்க்கர் தனக்கு அர்த்தம் புரியலைனாலும் சொர்க்கத்துல மெதக்க ஆரம்பிச்சாரு.

‘பொன்னாசைக்காரனுக்கு குருவும் உறவும் இல்ல, பெண்ணாசைக்காரனுக்கு பயமும் வெக்கமும் இல்ல’னு சொல்றது சரியாப் போச்சு.

பார்க்கர் துரை நம்ம ஜமீன்தாரு கிட்ட, “எனக்கு செங்கமலம் வேணும். இன்னிக்கே வேணும். அந்தப் பழத்தின் சுவை இன்னிக்கே எனக்குத் தெரியணும்”னு இங்கிலீஷ்ல கேட்டாரு.

நாடகம் முடிஞ்சது.

‘தெனமும் நாவற்பழத்தச் சாப்பிடுற குரங்கோட இதயம் எவ்வளவு சுவையா இருக்கும்? அந்தக் குரங்கோட இதயம் இன்னிக்கே வேணும்’னு பெண் முதலை ஆண் முதலைகிட்டே கேட்டுச்சாம்.

அந்த ஆண் முதலை மாதிரி நம்ம ஜமீன்தாரு பெரிய இக்கட்டான நெலைமைல இருந்தாரு.

செங்கமலத்தோட பிரேமைக்காக உருகித் தவமிருக்குற ஜமீன்தாருக்கே அந்தக் கொடுப்பினை இல்லை. தனக்குக் கெடைக்காத அந்த இதயம் யாருக்கும் கெடைக்கக் கூடாதுனு நெனச்சு ஜமீன்தாரு கோமளவல்லியக் கூப்பிட்டு, “செங்கமலத்தைத் தெப்பம்பட்டி மாந்தோப்பு பங்களாவுக்கு உடனே கூப்பிட்டுக்கிட்டுப் போயிரு. வெள்ளத்துரையினால ஆபத்து இருக்கு”னு எச்சரிக்க செய்துட்டு சேவகக்காரங்களைக்கூட அனுப்பி வெச்சாரு.

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு