Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 27

வருச நாட்டு ஜமீன் கதை - 27
வருச நாட்டு ஜமீன் கதை - 27

நிலா வெளிச்சத்துல மாமரங்களத் தாண்டி மேற்குப் பக்கமா ஓடினா செங்கமலம். கொஞ்சந் தூரத்துல மணலா இருந்ததும் தவிச்சு நின்னுட்டா. கால்ல நெறைய முள்ளு குத்தியிருந்துச்சு.

செங்கமலத்தை அனுபவிச்சே ஆகணும்னு பசியோட இருந்தாரு பார்க்கர் துரை.

‘பார்க்கர் துரையயும் திருப்திப் படுத்தியாகணும்... செங்கமலத்தையும் காப்பாத்தியாகணும்’னு நெனச்ச நம்ம ஜமீன்தாரு ஒரு சூத்திரஞ் செய்தாரு.

பார்க்கர் துரைய, மயிலாடும்பாறை மாளிகைக்கு அனுப்பி வெச்சிட்டாரு.

கோமளவல்லியக் கூப்பிட்டு, “செங்கமலம் ஆண்டாள் வேஷத்துல எப்பிடி இருந்தாளோ, அதே மாதிரி இன்னொரு பொண்ணுக்கு வேஷங்கட்டி மயிலாடும்பாறை மாளிகைக்கு அனுப்பிவெச்சுரு. ராத்திரி போதையில வெள்ளக் காரனுக்கு கண்ணுமண்ணு தெரியாது. விடிஞ்ச பெறகு பாத்துக்கலாம்”னு சொன்னாரு ஜமீன்தார்.

“சரிங்க தொர... அப்போ செங்கமலத்தை சீவில்லிபுத்தூருக்கே அனுப்பி வெச்சுரலாமே..?”

“வேணாம், வேணாம்... தெப்பம்பட்டிக்கு என்னோட பங்களாவுக்கே கூப்பிட்டுப் போயிடு. என் பாதுகாப்புல இருந்தாத்தான் செங்கமலத்துக்கு நல்லது. சடார்னு கௌம்புங்க!”னு சொல்லி, கையத் தட்டி எல்லாத்தையும் துரிதப்படுத்தினாரு.

தீப்பந்தங்களோட சேவகமாருக துணைபோக, வில்லுவண்டியில செங்கமலமும் கோமளவல்லியும் தெப்பம்பட்டி மாந்தோப்பு பங்களாவுக்குப் போனாங்க.

பங்களாவுக்கு வந்து சேந்த செங்கமலம், தன்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியாம குழம்பிப் போயிருந்தா. திரும்பவும் தன்ன இம்சப்படுத்தறதுக்கு ஜமீன்தாரு முடிவு செய்துட்டாருனு நெனச்சா. ஆனா, நெசமாலுமே செங்கமலத்தோட விருப்பம் இல்லாம அவளத் தொடக்கூடாதுனுதான் ஜமீன்தாரு நெனச்சாரு. இப்போதைக்கு அந்த வெள்ளக் கழுகையும் சமாளிக்கணுமே...

வேர்த்துப்போயி உள்ள வந்தாரு ஜமீன்தார். “கவலப்படாதே செங்கமலம். என்னால உனக்கு எந்தக் கெடுதலும் வராது...”

“பின்ன எதுக்காக திரும்பவும் இங்க கூப்பிட்டு வந்தீங்க? எனக்குக் குடுத்த வாக்குறுதி என்னாச்சு?”னு சொல்லிக்கிட்டே, தன்னோட தலையில இருந்த பூ அலங்காரத்தை எல்லாம் பிச்சு உதறினா. ஆத்திரப்பட்டு ஜமீன்தாரு முகத்துலயும் வீசி எறிஞ்சா.

“எடுத்துக்கங்க... என்னோட சரீரத்த எடுத்துக்கங்க!”னு கத்துனா.

“கோபப்படாதே செங்கமலம்... எல்லாமே உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன். என் வாயால அத எப்படிச் சொல்றதுனு தெரியல... அந்த வெள்ளக்கார துரையால உனக்கு ஆபத்து காத்துக்கிட்டிருக்கு...”

“உங்களோட நரித் தந்திரம் நல்லா புரிஞ்சுபோச்சு... திருமாலே! என்ன எதுக்காக இப்பிடிச் சோதிக்கிற..? உன்னோட தெய்வ சகாயத்தை சந்தோஷம், வீரம், புத்தி பராக்கிரமம் உள்ளவங்க அனுபவிக்கணும்னுதானே நான் நோம்பு இருக்கேன். என்னோட நோம்புல என்ன குத்தம் கண்டுபிடிச்சே..?”

“உன்மேல ஒரு குத்தமும் இல்ல செங்கமலம்... உனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியமாட்டேங்குது. இனிமே நீ எங்கயும் போக வேணாம். வெளிய போனா உனக்கு ஆபத்து. சொன்னா கேளு செங்கமலம்!”னு ஜமீன்தாரு கொஞ்சம் கோபமாத்தான் சொன்னாரு.

“என்ன வெளியில விட்டுடுங்க... என்னய யாரும் காப்பாத்த வேணாம். யானைய தாமரத் தண்டால கட்டிரலாம். வைரத்த பூ நுனியால வெட்டிரலாம். கடல் தண்ணியக்கூட ஒரு சொட்டுத் தேனால இனிப்பாக்கிறலாம். ஆனா, உங்கள மாதிரி காமாந்தகாரனத் திருத்தவே முடியாது!”னு செங்கமலம் சொல்லிக் கிட்டே இருக்கும்போது, ஜமீன்தார் ‘படார்’னு கதவை மூடி வெளிய தாள் போட்டாரு.

தலைவிரிகோலமா இருந்த செங்கமலம், அழுது புலம்பி, கையெடுத்துக் கும்பிட்டு,

நாயகனாய் நின்ற

நந்தகோபனுடைய

கோயில் காப்பானே! கொடித்

தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம்

தாள் திறவாய்;

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே

வாய்நேர்ந்தான்;

தூயோமாய் வந்தோம், துயிலெழப்

பாடுவான்;

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே,

அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோ...

-னு பாடி முடிச்சதும், பின் பக்கம் ஜன்னல் கதவைத் தொறந்துக்கிட்டு ஒரு உருவம் தொப்புனு உள்ள குதிச்சது.

திடுக்குனு திரும்பிப் பார்த்தா செங்கமலம்.

வேலுச்சாமி நாயக்கர்!

தலையில முண்டாசுக் கட்டி சேவகக்காரன் மாதிரி கையில வேல்கம்பு வெச்சிருந்தாரு.

“பயப்படாதே செங்கமலம்... உன்னக் காப்பாத்தச் சொல்லி எங்க ஜமீந்தாரிணி வேலுத்தாயம்மாதான் என்ன இங்க அனுப்பி வெச்சுருக்காங்க. சடுதியா வெளியேறு...”

வருச நாட்டு ஜமீன் கதை - 27
வருச நாட்டு ஜமீன் கதை - 27

“உங்கள எப்பிடி நம்புறது..?”

“நம்பவே வேணாம்... நீ மேடையில ஆடிக்கிட்டிருக்கும்போது ஜமீன்தாரும் பார்க்கர் துரையும் பேசிக்கிட்டத என் காதால கேட்டேன். ரெண்டு பேரும் சேந்து உன்னக் கொதறி எடுத்துருவாங்க. பேச நேரமில்ல... சடுதியா வெளியேறு!”னு சொல்லி வேலுச்சாமி நாயக்கர் செங்கமலத்த ஜன்னல் பக்கமா இறக்கிவிட்டாரு.

நிலா வெளிச்சத்துல மாமரங்களத் தாண்டி மேற்குப் பக்கமா ஓடினா செங்கமலம். கொஞ்சந் தூரத்துல மணலா இருந்ததும் தவிச்சு நின்னுட்டா. கால்ல நெறைய முள்ளு குத்தியிருந்துச்சு. பகல்ல அடிச்ச வெயில்ல மணல் இப்பவும் தகதகன்னு இருந்துச்சு. திரும்பவும் நடந்து மறுகரைக்குப் போனா.

மாட்டுத் தீவனத்துக்காக வைக்கோல் படப்பு அடஞ்சு வெச்சிருந்தாங்க. ஆமணக்குச் செடிகள வெலக்கி மெதுவா நடந்தா. மேகம், நிலா வெளிச்சத்த மூடுனதும் எதிர அகோபாலராயப் பெருமாள் கோயில் அசங்கல் மசங்கலா தெரிஞ்சுது.

இப்போதைக்கு யார் கண்ணுலயும் படாம ஒளிஞ்சுக்கத் தோதான எடம்னு மெதுவா உள்ள போயி எட்டிப் பார்த்தா. கர்ப்பக்கிரகத்துல ஒரே ஒரு தீபம் மட்டும் எரிஞ்சுக் கிட்டிருந்துச்சு. பெருமாள் மேல ஏகப்பட்ட நகைங்க அந்த வெளிச்சத்துல மின்னிக் கிட்டிருந்துச்சு.

தூணுகளப் பிடிச்சு மெதுவா தட்டுத் தடுமாறி நடந்து கர்ப்பக்கிரகத்துல நொழஞ்சதும் திக்குன்னுச்சு! ஐயோ... உள்ள ரெண்டு உருவம்!

வெங்கடேஸ்வரலு, வாணி!

நடுநடுங்கி மூலையோட ஒண்டிப் போயிருந்தாங்க - அந்தச் சின்ன தீப வெளிச்சத்துல நல்லா தெரிஞ்சது.

நட்டநடு ராத்திரியில இந்தக் கோயிலுக்குள்ள இந்தப் பெரியவரும் பொண்ணும் எதுக்காக வந்தாங்க..?

வெங்கடேஸ்வரலு அன்னிக்கு ராத்திரிதான் ஒரு முடிவுக்கு வந்திருந்தாரு. ஜமீன்தாரு ஏற்கெனவே நிறைய கடன்பட்டுப் போயிட்டாரு. நமக்கு வீடும் நெலமும் எப்போ தரப்போறாரு..? பேசாம ஜனகம் இருந்த வாணி விலாசத்துக்குப் போயி, மண்ணுக்குள்ள இருக்கற நகைகள் அம்புட்டையும் எடுத்துக்கிட்டு அரவமில்லாம நடுராத்திரியில பொறப்பட்டுப் போயிட வேண்டியது தான்னு முடிவெடுத்தாரு.

அதுக்குத் தோதா, சனங்க அம்புட்டு பேரும் ஜம்புலிபுத்தூர் திருவிழாவுக்குப் போயிட்டதால வெங்கடேஸ்வரலு, நகை மூட்டைய தூக்கிக்கிட்டு வாணியவும் கூப்பிட்டுக்கிட்டு ஊரவிட்டுப் போறப்பதான், எதிர்ல தீப்பந்தங்களோட வில்லு வண்டியும் வந்துச்சு. நகை மூட்டையோட அவுங்க கண்ணுல தட்டுப்பட்டா என்ன ஆகும்..? அப்பிடியே திரும்பி ஓடி வந்தவருதான் வாணியோட சேந்து இந்தக் கோயிலுக்குள்ள வந்து ஒளிஞ்சுக்கிட்டாரு.

கொஞ்ச நேரங்கழிச்சு, கோயிலுக்கு வெளிய யாரோ வர்ற சத்தம் கேட்டதும் துணி மூட்டையப் பிரிச்சு எல்லா நகைகளையும் எடுத்து பெருமாளுக்குச் சாத்தினாரு. ஒரு கையால வாணியோட வாய மூடி நடுநடுங்கி மூலையில போயி ஒண்டிக்கிட்டாரு.

அப்பதான் கோயிலுக்குள்ள வந்தா செங்கமலம்!

செங்கமலம் கேள்வி கேக்காமலே, வெங்கடேஸ்வரலு பேசஆரம்பிச்சாரு.

“நாந்தாம்மா... ஜனகத்தோட புருஷன் வெங்கடேஸ்வரலு. ஊரவிட்டுப் போயிறலாம்னு போனேன். சேவக மாருக்குப் பயந்து திரும்பி வந்துட்டேன். நீ எதுக்கும்மா இந்த நேரத்துல இங்க...”

“மெதுவாப் பேசுங்க... யாரும் வந்துறப் போறாங்க. உங்கள மாதிரி நானும் ஜமீன்தாரு கிட்ட இருந்து தப்பிச்சுப் போகணும்னுதான் ஓடிவந்தேன். அதுசரி, ஜனகத்தோட புருஷனா நீங்க..?”னு கேட்டுக்கிட்டே, வாணியோட தலையத் தடவினா செங்கமலம்.

“ஆமாம்மா... பாவிக, எம் பொண்டாட்டிய சுட்டுப் போட்டாங்க. எங்களுக்கு யாருமே இல்லாம தவிச்சுக்கிட்டு இருக்கோம்”னு சொல்லி அழ ஆரம்பிச்சாரு.

செங்கமலம் பெருமாள் சிலையைப் பார்த்தா. நகைகள் மின்னிக்கிட்டு இருந்துச்சு.

“அழாதீங்க பெரியவரே... உங்க துணிய கொஞ்சம் தாங்க. ஆபத்துக்குப் பாவமில்ல!”னு சொல்லிக்கிட்டே, பெருமாள் மேல இருந்த அம்புட்டு நகைகளையும் எடுத்து அந்தத் துணியில போட்டு மூட்ட கட்டி அவருகிட்ட கொடுத்தா செங்கமலம்.

“இப்பமே பொறப்படுங்க... விடியறதுக்குள்ள ஆண்டிப்பட்டி போயிரலாம்”னு செங்கமலம் சொல்லிக்கிட்டிருக்கும்போதே, கோயிலுக்கு வெளியே ஆமணக்குச் செடி ‘மடமட’னு ஒடியற சத்தம் கேட்டுச்சு.

“யார்றா அது.. கோயிலுக்குள்ள..?”

வெங்கடேஸ்வரலு பதறிப் போனாரு. செங்கமலம் அவரோட தோளப் பிடிச்சு உக்காரச் சொன்னா.

“யார்றா அதுனு கேக்கறம்ல... வெளிய வாடா!”

செங்கமலம் பெரியவரையும் வாணியையும் ஒரு தடவ பாத்துட்டு, அந்தக் குத்துவௌக்க எடுத்துக்கிட்டு மெதுவா வெளிய வந்தா.

கோயிலச் சுத்தி தீப்பந்தம் வெச்சுக்கிட்டு நிறைய சேவகக்காரங்க நின்னுக்கிட்டிருந்தாங்க.

செங்கமலம் அமைதியா எறங்கி, ஆமணக்கு செடிய கடந்து நடந்தா. சடார்னு குத்துவௌக்க அங்க இருந்த வைக்கோல் படப்பு மேல போட, அது ‘திகுதிகு’னு எரிய...

அந்த தீ மண்டலத்துல உள்ள புகுந்துட்டா செங்கமலம்.

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு