Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 28

வருச நாட்டு ஜமீன் கதை - 28
வருச நாட்டு ஜமீன் கதை - 28

கோயிலான்குளத்துலயே வீட்டக் கட்டி பளியர்கள் ஆயிரம் பேத்த ஒண்ணு சேத்து, காடு வெட்டி, புல்லு புதரு அகட்டிப் போட்டு, மேடுகோடுகள சீர் செஞ்சு பூமிய உழுது பயிர் பருவஞ் செய்ய ஆரம்பிச்சாரு ராவுத்தர்.

தப்பா வாழ்றதுக்குப் பல சந்தர்ப்பம், தப்பி வாழ்றதுக்கு சில சந்தர்ப்பம்னு சொல்வாங்க.

செங்கமலம் தீயில வெந்து சாம்பலான பெறகு நம்ம ஜமீன்தாருக்கு இப்பதான் சித்தம் வேலை செய்ய ஆரம்பிக்குது. சுயபுத்தி சுகத்தை கொடுக்குமில்லையா?

வருசநாட்டு மலைக்கு குதிரையில போனாரு. வைகை ஆத்து கரையில மருத மரத்துக்குக் கீழ அமைதியா உட்கார்ந்தாரு. அந்த இடம்தான் அவருக்கு ரொம்பப் பிடிச்ச எடம்.

மூதாதையர்கள நெனச்சு சமமணங் காலு போட்டு புத்தர் மாதிரி கண்ண மூடி தியானம் செய்ய ஆரம்பிச்சாரு.

தானா திருந்தி மோட்ச கதிக்குப் போக சந்தர்ப்பம் கூடி வந்திருச்சு.

செங்கமலம் சொன்னதெல்லாம் அந்தச் செங்கமலத் தாயாரே சொல்றது மாதிரி அசரீரி கேட்டுச்சு.

அதுவரைக்கும் தான் செய்த தப்பிதங்கள், ஒவ்வொண்ணா நெனவுக்கு வந்துச்சு. ஜமீன்தாரிணி வேலுத்தாயம்மாவையும் மகளையும் உடனே பார்க்கணும்னு மனசு உந்தித் தள்ளுச்சு.

வருச நாட்டு ஜமீன் கதை - 28
வருச நாட்டு ஜமீன் கதை - 28

சனங்ககிட்ட எறங்கிப் பழகணும்னு பிரயாசைப்பட்டாரு.

நம்ம ஜமீன்தாரு எப்பிடிப்பட்டவர்னு ஏற்கெனவே வெட்டவெளிச்சந்தான். இனி சனங்க எப்பிடி நம்புவாங்க?

நம்ம விஷயத்தை மத்தவங்க அறியாம மறைக்கவேண்டியது மொத்தம் ஒம்போதுனு பெரியவங்க சொல்லி வெச்சிருகாங்க. தானம், மானம், அவமானம், மருந்து, மந்திரம், வயசு, பொக்கிஷம், மனைவியோட மருவியிருக்கிறது, குடும்பப் பிணக்கு இப்பிடி ஒம்போது விஷயத்தை மறச்சுத்தான் வாழணும்.

இனி, நம்ம ஜமீன்தாரு எத மறச்சு என்ன புண்ணியம்?

‘கண்ணு கெட்ட பெறகு சூரிய நமஸ்காரம்’னு சொல்ற மாதிரி ஜமீனே கடன்ல முங்கி மூச்சுத் திணறிக்கிட்டு இருக்கறப்ப குடிபடை சனங்களுக்கு ஏதாவது செய்தாகணும்னு இப்பத்தான் ஜமீன்தாருக்கு நெனப்பு வருது.

ஜமீன்தாருக்குச் சொந்தமாயிருந்த மீதி ஏழு கிராமங்களுக்கும் சோதனையான காலகட்டந்தான்.

பாவம், ஜமீன்தாருக்கு இயற்கைகூட ஒத்துப் போகல.

ரெண்டு வருஷம் மழையே இல்லாததால கடுமையான பஞ்சம் தலைவிரிச்சு ஆட ஆரம்பிச்சது. வைகை ஆத்துலயும், முல்லை ஆத்துலயும் தண்ணி வத்திப் போச்சு.

விவசாயம் இல்லைன்னா ஜமீனே இல்லை. நெல்லு வௌஞ்ச பூமியெல்லாம் பாளம் பாளமா வெடிக்க ஆரம்பிச்சது.

பேஞ்சு வெளையுது மலையாளச் சீமை,

பாஞ்சு வெளையுது தஞ்சாவூர்ச் சீமை,

காஞ்சு வௌயுது ராமநாதபுரச் சீமை,

காணாம வௌயுது கண்டமனூர் சீமை!

அதாவது மழையே காணாமப் போனாக்கூட தானா வெளையிற கண்டமனூர் சீமையும் பஞ்சத்தோட கிடுக்கிப்பிடியில சிக்கிப் போச்சு.

கை கால்தான் மூலதனம்னு துணிச்சலா வாழ்ந்துக்கிட்டிருந்த சனங்களோட கதி ஒரு பெரிய போராட்டமா மாறிப்போச்சு.

சுத்திச் சுத்தி அடிக்கிற செம்மண் புழுதியோட போராட்டம், சூறாவளிக் காத்தோட போராட்டம், வியாதிகளோட போராட்டம், காட்டுல அலஞ்சுக்கிட்டிருந்த மிருக ஜீவாத்தியங்களோட போராட்டம், குடிக்கிற தண்ணிக்குப் போராட்டம், வௌஞ்சத சேகரஞ் செய்ய முடியல... உடமை குடிமைகள பாதுகாக்க முடியல. திருட்டும் வழிப்பறிக் கொள்ளையும் ஏகமாப் பெருகிப் போச்சு.

ஆண்டிப்பட்டி வருசநாட்டு மலையில மேக்குச் சரிவுக்குப் ‘பஞ்சந்தாங்கி மலை’னு பேரு. அந்த மலைக்காட்டுச் சனங்களும் தூரோடப் பேந்து ஓடி போயிட்டாங்க.

ஆடு மாடு இல்லாதவன்

அடைமழைக்கு ராசா,

பொண்டு பிள்ளை இல்லாதவன்

பஞ்சத்துக்கு ராசா

-னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?

அம்மை நோயாலயும் சனங்க ஊரை விட்டே ஓட ஆரம்பிச்சாங்க.

பொழப்புக்கு வழி தேடி ஓடின சனங்களுக்கு மதுரை கலெக்டர் ஒரு சகாயஞ் செஞ்சாரு. அதாவது அந்தமான் தீவுக்கு வேல செய்ய ஆளு வேணும்னு சொல்லி கண்டமனூர்ச் சீமைச் சனங்க நெறையப் பேரை கப்பல்ல ஏத்தி அனுப்பி வெச்சாரு. ‘மலைக் காடுகள்ல வேல செஞ்சு அனுபவப்பட்டவங்கதான் அந்தமான் தீவுல குடியிருந்து வேல செய்ய லாயக்கானவங்க’னு சொல்லி கலெக்டர் துரை நம்ம ஜமீன் சனங்களுக்கு இந்த சகாயஞ் செஞ்சாரு.

இலங்கை, பர்மா, மலேசியானு தோட்டங்கள நம்பிப் போனவங்க பொழச்சுக்கிட்டாங்க.

நம் ஜமீன்தாரு சாமியப்ப நாயக்கர் தேனி பக்கத்துல இருக்கற வீரபாண்டி கோயிலுக்கு வந்தாரு.

அம்மை நோய் தீர, வேண்டுதலுக்கு வந்த சனங்க வீரபாண்டி கௌமாரியம்மனுக்கு தீச்சட்டி எடுக்கவும், மாவிளக்கு எடுக்கவும் முல்லை ஆத்தங்கரையில கூட்டம் கூட்டமா கூடியிருந்தாங்க.

ஆத்துல ஊத்துத் தண்ணி மாதிரி கொஞ்சமாத்தான் தண்ணி போய்க் கிட்டிருந்துச்சு. மாட்டு வண்டிகள்ல தொத்தல் மாடுகளப் பார்க்கப் பாவமா இருந்துச்சு.

ஆத்துக்குக் குறுக்கே கல் பாலம் கட்டிக்கிட்டிருந்தாங்க. ‘இவ்வளவு பெரிய பாலம் கட்டுறது யாரு?’னு தெரிஞ்சுக்க ஜமீன்தாருக்கு ஆசை.

கடைசில பார்த்தா, உத்தம பாளையம் மக்கா ராவுத்தர். தும்பப் பூ மாதிரி வெள்ளக் கம்சு சட்டை, வெள்ள வேஷ்டி, ஜமீன்தாரு மாதிரியே தலையில உருமாக்கட்டு கட்டியிருந்தாரு. வெள்ளையா தாடி, மீசை. ஒரு அறுவது அறுவத்தஞ்சு வயசிருக்கும் அவருக்கு.

கோயில் திருவிழா ஒரு பக்கம் நடந்துக்கிட்டிருந்தாலும் பாலம் கட்டுற வேலையும் அதே சமயத்துல அவரு செலவுல அங்க வந்த பக்த கோடிகளுக்கு அன்னதானமும் செய்துக்கிட்டிருந்தாரு மக்கா ராவுத்தர். அத நெனச்சா இப்போ ஆச்சரியமாத்தான் இருக்கு!

மக்கா ராவுத்தர் பத்தி ஏன் சொல் றேன்னா, இந்தப் பஞ்ச காலத்துல அவங்கவங்களுக்குள்ள இறுகின சங்காத்தம், அதுக்குப் பெறகு காலங்காலமா தொடர்ந்தது பெரிய கதை.

வருச நாட்டு ஜமீன் கதை - 28
வருச நாட்டு ஜமீன் கதை - 28

வருசநாட்டு மலையில இருக்கற நெலங்கள சாதாரணமா மிராசு தார்களுக்கு ஜாரி செஞ்சு பிரிச்சுக் கொடுக்கற மாதிரிதான் மக்கா ராவுத்தருக்கும் கோயிலான்குளம், கெங்கன்குளம், கடமாங்குளம், சிறுகுளம் பகுதிகளப் பிரிச்சுக் கொடுத்தாரு.

கோயிலான்குளத்துலயே வீட்டக் கட்டி பளியர்கள் ஆயிரம் பேத்த ஒண்ணு சேத்து, காடு வெட்டி, புல்லு புதரு அகட்டிப் போட்டு, மேடுகோடுகள சீர் செஞ்சு பூமிய உழுது பயிர் பருவஞ் செய்ய ஆரம்பிச்சாரு ராவுத்தர்.

ஜமீனுக்கும் வருசந் தவறாம தீர்வைப் பணத்தைக் கட்டி வந்தாரு. அவர் பேருல நம்ம ஜமீன்தாருக்கு நல்ல மருவாதையும், மதிப்பும் இருந்துச்சு.

திடுதிப்புனு இப்பிடி வீரபாண்டியில முல்லையாத்துல ஒருத்தருக்கொருத்தர் கட்டிப்பிடிச்சி பேசிக்கிட்டிருந்தத சனங்க அம்புட்டு பேரும் கூடி வேடிக்கை பார்த்தாங்க.

ஜமீன்தாரு கண் கலங்கி, “உங்கள மாதிரி ஒருத்தர் எங்க ஜமீனுக்கு நிர்வாகஸ்தரா இருந்திருந்தா இந்த அறுவத்திநாலு கிராமங்களயும் நெலங்களையும் எட்டயபுரம் ஜமீன்தாருக்குப் போகாம காப்பாத்தியிருக்கலாம்”னு மனசார சொன்னாரு.

அதுக்கு மக்கா ராவுத்தர், “இப்போ இருக்கிற ஏழு ஊரையும் மலை நெலங்களையும் காப்பாத்த உங்க வைகை ஆத்துல திப்பரேவு அணைக்கட்ட கட்டிப் போட்டீங்கன்னா இந்தப் பஞ்சத்துக்குத் தாங்குமே”னு சொன்னாரு.

நம்ம ஜமீன்தாரு சென்னப் பட்டினத்துல படிச்சுக்கிட்டு இருக்கறப்பதான் மதுரை கலெக்டர் ஸ்டோகிஸ் துரை திப்பரேவு அணைக் கட்டுக்கு அடிக்கல் நட்டு வெச்சாரு. அப்போ ஜமீன் பரிபாலனம் செய்துக் கிட்டிருந்த ரங்கபாஷியம் நாயக்கர் நூறு களம் சுண்ணாம்பக் கெட்டி அரச்சுப் போட்டிருந்தாரு.

அதோட சரி, அந்த அடிக்கல்லு இப்பவும் ஜி.உசிலம்பட்டியில அனாதையா கெடக்கு.

“இப்பவும் கலெக்டர் துரைகிட்ட நாம பிராது கொடுத்துக் கேட்டோம்னா அவசியம் ஆவன செய்வாங்க. வருமானம் பெருகினா பிரிட்டிஷ்காரன் சந்தோஷப்படத்தான் செய்வான். நோ இந்தியா நோ இங்கிலாந்துனு பிரிட்டிஷ் காரங்களுக்கே தெரியும்”னு சொன்னாரு ராவுத்தர்.

“ஈஸ்ட்டிந்தியா கம்பெனியில நிறையக் கடன் இருக்கு. அதத் திருப்பிக் கட்டாம எந்தச் சகாயமும் செய்யமாட்டோம்னு பார்க்கர் துரை வந்து சொல்லிட்டுப் போயிட்டான்.”

“நீங்க இந்தப் பஞ்சத்தக் காரணங்காட்டி செட்டில்மெண்டு வாங்கிக்கலாமே”னு ராவுத்தர் சொல்ல, அப்போதுதான் வேலுச்சாமி நாயக்கர் குதிரையில வந்து அந்த சமாசாரத்தைச் சொன்னாரு!

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு