Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 29

வருச நாட்டு ஜமீன் கதை - 29
வருச நாட்டு ஜமீன் கதை - 29

வேலுச்சாமி நாயக்கரும், சீனிச்சாமி நாயக்கரும்தான் அரண்மனையே கதினு இருந்தாங்க. நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமா உடம்பு சொஸ்தமாகி எந்திரிச்சு உக்காந்தாரு ஜமீன்தார்.

வீரபாண்டி கோயில் திருவிழா நடந்துக்கிட்டிருக்கும்போது இப்பிடி ஒரு அதிர்ச்சியான சமாசாரத்தை வேலுச்சாமி நாயக்கர் கொண்டு வருவார்னு ஜமீன்தார் நெனச்சுக்கூடப் பார்க்கல.

மக்கா ராவுத்தர்கூட பேசிக்கிட்டிருந்த ஜமீன்தாரு குதிரை வந்து நின்ன வேகத்தைப் புரிஞ்சு, பேச்ச நிறுத்தினாரு.

வேலுச்சாமி நாயக்கர் அந்தத் தாக்கலை ஜமீன்தாருகிட்ட கொடுத்தாரு. பிரிச்சுப் படிச்சுப் படிச்சாரு ஜமீன்தார்.

‘மதுரை ஜில்லா பெரியகுளம் தாலுகா கண்டமனூர் தெப்பம் பட்டியில் ஜீவனம் ஜமீன்தார் கண்டம கெண்டம திருமலை ராமகிருஷ்ண ராஜேந்திர சாமியப்ப நாயக்கர் சமூகம் அறிவது - கண்டமனூர் ஜமீனுக்குச் சொந்தமான ஏழு கிராமங்களும் அதற்கு உட்கடையாக இருக்கும் மாவடை, மரவடை, திட்டுத் திடல் குளங்கள், ஓடைகள், கண்மாய்கள் வகையறாவும், வருச நாடு மலைப்பகுதியில் தங்களது சுத்த சர்வமானிய பாத்தியமாக அனுபவித்து வரும் பண்ணை நிலங்கள் தவிரவும் மலை மடு நிலங்கள் தொகையறா அவ்வளவும் நாளது திகதி வரை ரூவாய் மூணு லட்சத்து முப்பத்தாறாயிரம் பேஷ்கஷ் கிஸ்தி கட்டத் தவறியதாலும் வாய்தாக்கள் பல தவறியதாலும் நாளது வருசம் 1906 சனவரி மாசம் 7-ஆந் திகதி மேற்படி ஷரத்தில் கூறப்பட்ட ஜமீன் சொத்துக்கள் ஏலம் விடப்படுகிறது. இங்ஙனம், வாலீசு துரை, மதுரை கலெக்டர்.’

நம்ம ஜமீன்தாருக்கு மயக்கம் வர்ற மாதிரி தல சுத்தி கிறுகிறுத்தாரு. மக்கா ராவுத்தர் ஜமீன்தாரத் தாங்கி அணவா பிடிச்சு வில்வண்டியில உக்கார வெச்சாரு.

ஜமீன்தாருக்குக் கடன் கொடுத்து ஜமீனை மீட்டுற அளவுக்கு மக்கா ராவுத்தர்கிட்ட பணம் இல்லைதான். இருந்தாலும் எட்டயபுரம் ஜமீன்தார் கிட்டப் பேசி கடன் வாங்கித் தர்றதா சொன்னாரு.

நம்ம ஜமீன்தாரு, “வேணாம், வேணாம்... ஏற்கெனவே ஈஸ்ட்டிந்தியா கம்பெனிகிட்ட கடன் வாங்கினதே போதும்... இனி யார்கிட்டயும் கடன் வாங்காம மானஸ்தனா துரைத்தனம் செய்ய பிரயாசைப்படறேன்”னு சொன்னாரு.

இந்தப் பஞ்சம் படுத்தின பாட்டைப் பாருங்க.

‘நெலத்த வெச்சுத் தின்னு, பொன்ன வித்துத் தின்னு’னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. யாருமே உதவி செய்றதுக்கு எறங்கி வரல.

‘வானம் சுருங்க தானம் சுருங்கும்’னு சொன்னது சரியாத்தான் இருந்துச்சு.

நம்ம ஜமீன்தாரு தெப்பம்பட்டி அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தாரு.

வேலுத்தாயம்மா தன்னோட குழந்தை ராஜமாணிக்கத்துக்குச் சாப்பாடு ஊட்டிக்கிட்டிருந்தாங்க. ராஜமாணிக்கத்துக்கு அஞ்சு வயசு ஆகிப்போச்சு. ரொம்ப நாளைக்குப் பிறகு ஜமீன்தாரு உள்ள நொழஞ்சதும் வேலுத்தாயம்மாவோட வரவேற்பு மூஞ்சியில அடிச்ச மாதிரி இருந்துச்சு.

“இப்பவே நல்லாச் சாப்பிடு ராஜமாணிக்கம். அடுத்த வருசம் நாம ரெண்டு பேரும் தெருவுல உக்காந்துதான் சாப்பிடணும். உங்கப்பனுக்கு வேணா வெள்ளக்காரனும், அந்த போகலு முண்டைகளும் சாப்பாடு போடுவாங்க. நமக்கு யாரு இருக்காங்க?”னு கண் கலங்கிக்கிட்டே சாப்பாட்டை பெசஞ்சு உதறினா.

ஜமீன்தாரு அமைதியா, “எவ்வளவோ மனசு வருந்தி திருந்தி வந்திருக்கேன். கோவப்படாத வேலுத்தாயம்மா. எரியற நெருப்புல நெய் ஊத்தாத!”னு ராஜமாணிக்கத்தத் தூக்கினாரு.

“இனிமே உன்னை விட்டுப் போக மாட்டேன்மா”னு சொல்லி மொத மொதலா தன் மக கன்னத்துல முத்தம் வெச்சாரு.

“உங்களுக்கு வாக்கப்பட்டு வரும்போதே சொன்னாங்க... இது கண்டமனூர் பூமி, கண்டத்துக்கு வந்தாலும் வரும், தண்டத்துக்கு வந்தாலும் வரும்னு... எவஞ்சொல்லி வச்சானோ... தலையச் சுத்துன அந்தச் சனீஸ்வரன் இன்னும் எறங்க மாட்டேங்கறான்.”

வருச நாட்டு ஜமீன் கதை - 29
வருச நாட்டு ஜமீன் கதை - 29

“தைரியமா இரு வேலுத்தாயம்மா. என்கூடப் படிச்ச திருவாங்கூர் மகா ராஜாகிட்ட போயி விஷயத்தச் சொல்லி எப்படியாவது நம்ம ஜமீன மீட்டிக்கலாம்”னு சொன்ன ஜமீன்தாரு, திடீர்னு நெஞ்சப் பிடிச்சுக்கிட்டு அப்பிடியே சாஞ்சாரு.

வேலுத்தாயம்மா, “ஐயோ... மாமா!”னு ஓடிப்போயி குழந்தையோட சேத்து ஜமீன்தாரையும் பிடிச்சு நிறுத்தினா. வாசலுக்கு ஓடிவந்து வேலுச்சாமி நாயக்கர்கிட்ட விஷயத்தச் சொன்னதும் வைத்தியரக் கூப்பிட்டு வந்தாரு.

சீப்பாலக்கோட்டை வைத்தியர் வந்ததும், “மனக்கிலேசம்தான். பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல”னு சொல்லி, மூலிகச் சாற ‘சரட்டு சரட்டு’னு அரச்சுக் குடுத்து, “ஓய்வு எடுக்கணும், அலச்சல் இருக்கக்கூடாது”னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

வேலுச்சாமி நாயக்கரும், சீனிச்சாமி நாயக்கரும்தான் அரண்மனையே கதினு இருந்தாங்க.

நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமா உடம்பு சொஸ்தமாகி எந்திரிச்சு உக்காந்தாரு ஜமீன்தார்.

ஜமீன்தாரும் வேலுத்தாயம்மாவும் சேந்து எடுத்துக்கிட்ட போட்டாப் படத்தைத் தலையணைக்கு மேல வெச்சுக்கிட்டாரு. கோழி றெக்கையில செவப்பு மையத்தடவிக்கிட்டிருந்தாரு.

வேலுத்தாயம்மா அவருக்குக் கசாயம் கொண்டுவந்து குடுக்கும் போது அவரு என்ன செய்றார்னு எட்டிப் பாத்தாங்க. ஜமீன்தாரு போட்டாப் படத்துல இருக்கற வேலுத்தாயம்மாவோட சேலைக்கு செவப்பு மையால வர்ணம் பூசிக்கிட்டிருந்தாரு.

வேலுத்தாயம்மா நெக்குருகிப்போயி ஜமீன்தாரோட மார்ல சாய்ஞ்சுட்டாங்க. ஜமீன்தாரு, வேலுத் தாயம்மாவோட தலயத் தடவிக் குடுத்து, “நாஞ் சொல்றது நெசத்துலயும் நெசம் வேலுத்தாயம்மா! இனிமே உன்னவிட்டுப் பிரியமாட்டேன். நாஞ் செய்த தீம்புக்கெல்லாம் நல்லா அனுபவிச்சுட்டேன்”னு சொல்லி வேலுத்தாயம்மாவ மெதுவா அணச்சு மார்போட இறுக்கிக்கிட்டாரு.

ரொம்ப நாளைக்கு அப்புறம் அன்னிக்குத்தான் ரெண்டு பேரும் சேந்து சுகிச்சுத் தூங்கினாங்க.

ஒண்ணரை மாசம் கழிச்சு, திருவாங்கூர் மகாராஜா ஜமீன்தாருக்கு உடம்பு எப்பிடி இருக்குனு விசாரிச்சு அவருக்கு உதவி செய்றதா தாக்கல் அனுப்பியிருந்தாரு.

திருவாங்கூர் போறதுக்கு வில்வண்டி ஏற்பாடு செய்தாங்க.

ஜமீன்தாரு, வேலுத்தாயம்மா, குழந்தை, வேலுச்சாமி நாயக்கரு, சீனிச்சாமி நாயக்கரு, அவங்க தங்கச்சி லட்சுமியம்மா இத்தன பேரும் வில்வண்டியில ஏறிட்டாங்க.

அந்தச் சமயம் பார்த்து ஒரு ஆளு ஓடிவந்து, “ஜமீன்தாரய்யா! எனக்கு ஒரு சகாயஞ் செய்யணுமய்யா. மகளோட கல்யாணத்துக்கு பணம் வேணும்”னு ரெண்டு கையையும் நீட்டி பரிதாபமா கேட்டாரு.

சமயத்தப் பாருங்க, ராமச்சந்திர கவிராயர் ஒரு பாட்டப் பாடி வச்சிருக் காரு.

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோக அடிமை சாகமாவீரம் போகுதென்று விதை கொண்டோட வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச் சாவோலை கொண்டொருவனெதிரே வர தள்ள வொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க குருக்களோ தட்சணைகள் கொடுவென்றாரே!

- இப்பிடிப் போகுது அந்தப் பாட்டு.

அந்தப் பாட்டுக்கு அர்த்தம் என்னன்னா... ஒரு பஞ்சப் பராரிக் குடியானவன் வீட்டுல மாடு கன்னுக்குட்டி போட்டுதாம், அப்பதான் அடை மழையும் பொத்துக்கிட்டு ஊத்துதாம், பொண்டாட்டிக்காரி உடம்பெல்லாம் நோகுதுனு சொல்லி பொரண்டுக் கிட்டிருக்காளாம், அந்த நேரம் பாத்து வீட்டு வேலைக்காரன் செத்துப் போறானாம், மழை பேஞ்ச ஈரம் காயறதுக்கு முன்ன விதைய கொண்டுக்கிட்டு ஓட, குறுக்கால வந்து கடன் கொடுத்தவன் வழிமறிச்சு நிக்கிறானாம். அதுமட்டுமா? எதிர்ல எழவு சொல்லிக்கிட்டு ஒருத்தன் வர்றானாம், நெல வரி வசூலிக்க மணியக்காரன் வர, கடைசியா குருக்கள் வேற வந்து தட்சண குடுங்கன்னு கேட்டாராம்..!

குடியானவனுக்கு எப்பிடியிருக்கும்? அழுகையா வரும்? சிரிப்புதான் வரும்!

அதேமாதிரி சிரிச்சுக்கிட்டே நம்ம ஜமீன்தாரு தலையில இருந்த தலைப்பாகையக் கழட்டி அந்த ஆளுகிட்ட குடுத்து, “இத அத்தாச்சியா கொடுத்து செட்டியார்கிட்ட கடன் வாங்கிக்க”னு சொன்னாரு.

வேலுத்தாயம்மாவுக்கு என்னவோ, ‘மணி முடி எறங்கின’ மாதிரி கெட்ட சகுனம் போலப் பட்டுச்சு. இருந்தாலும் வண்டியவிடச் சொன்னாரு ஜமீன்தாரு.

திருவாங்கூர் போகணும்னா குமுளி வழியா சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் போறாங்களே, அந்தப் பாதை வழியாத்தான் போகணும்.

குமுளி மலையில வில்வண்டி ஏறும்போது ஜமீன்தாருக்கு திடீர்னு நெஞ்சடப்பு வந்துருச்சு.

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு