Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 30

வருச நாட்டு ஜமீன் கதை - 30
வருச நாட்டு ஜமீன் கதை - 30

பட்டுப்போன அந்தக் கொன்ற மரத்துல நாலு இலை தளிர்விட்டு மஞ்சப் பூ பூத்திருந்தத, யாரோ கவனிச்சு ஊர் பூரா சொல்லியிருந்தாங்க.

குமுளி மலையே ஒரு அத்துவானக் காடுதான். மிருக ஜீவாத்தியங்கள் தவிர, அங்கன ஆசாமிக நடமாட்டம் கம்மிதான். அந்தக் காட்டுக்கு நடுவுல வில்வண்டி போறப்ப நம்ம ஜமீன்தார் சாமியப்ப நாயக்கர் திடீர்னு நெஞ்சப் பிடிச்சுக்கிட்டு, “உடம்பெல்லாம் காயுதே!”னு அனத்த ஆரம்பிச்சுட்டாரு. அதுமட்டுமில்ல... “பளியஞ்சித்தன் என்னைப் பாத்துச் சிரிக்கிறானே!”னு வண்டிக்கு மேல பாத்துக்கிட்டுப் புலம்ப ஆரம்பிச்சாரு.

வேலுத்தாயம்மா தொட்டுப் பார்த்தாங்க. கழுத்துலயும் நெத்தியிலயும் ஆவி பறக்கற மாதிரி சூடு இருந்துச்சு.

வில்வண்டியில இருந்தவங்க அத்தன பேரும் என்ன செய்றதுனே புரியாம தவிச்சுப் போனாங்க.

வில்வண்டியத் திருப்பி, உத்தம பாளையத்துக்கு வந்தாங்க. மக்கா ராவுத்தரோட மாமனார் கருப்பட்டி உசேல் மீரா ராவுத்தர் வீட்டுக்கு வந்து ஜமீன்தார படுக்க வெச்சாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 30
வருச நாட்டு ஜமீன் கதை - 30

“திருவாங்கூர் மகாராஜாவுக்கு வைத்தியம் பாக்கற ஒலசை வைத்தியரோட வீடு குமுளியிலதான் இருக்குது”னு மக்கா ராவுத்தர் ஞாபகப்படுத்திச் சொன்னாரு. அந்த வைத்தியரைக் கூப்பிட்டு வரச்சொல்லி ஆளு அனுப்பியாச்சு.

ஒலசை வைத்தியருக்கு எம்பது... எம்பத்தஞ்சு வயசு இருக்கும். நல்லா செக்கச்செவேர்னு பழுத்திருப்பாரு. யானக் கண்ணு, கண்ணாடி போட்டதே கெடையாது. பாம்பு மாதிரி மூச்சு. ஒரு ஆள நேரா பாத்தாருன்னா பித்தம், வாதம், கபம் எல்லாமே எந்தளவுக்கு இருக்குனு நெத்தியில அடிச்ச மாதிரி ‘பட்’டுனு சொல்லிருவாரு. மூலிகை அம்புட்டும் இவர் கட்டுப்பாட்டுல இருக்கும்.

வைத்தியர் அவசர அவசரமா வந்து சேர்ந்தாரு. வந்ததும் நாடி பிடிச்சுக்கூட பாக்கல.

ஜமீன்தாரோட சட்டையக் கழட்டிப் பாத்தாரு. உடம்பெல்லாம் செவப்புச் செவப்பா வட்டப் புள்ளி இருந்துச்சு.

வைத்தியருக்குப் புரிஞ்சு போச்சு... அது வெப்பு நோய்! ‘பொம்பள சீக்கு’னு பச்சையாச் சொல்வாங்க. அந்தச் சீக்குதான் முத்திப்போச்சு. பேருக்கு ஒரு சூரணத்தைக் குடுத்து ஜமீன்தார தூங்க வெச்சாரு வைத்தியரு.

வேலுச்சாமி நாயக்கரத் தனியாக் கூப்பிட்டு, “இனிமே தாங்காது. கண்டமனூருக்கு வண்டிய விடுங்க”னு மூடுமந்திரமா சொல்லிட்டுப் போயிட்டாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 30
வருச நாட்டு ஜமீன் கதை - 30

மக்கா ராவுத்தர் தன்னோட மடியில ஜமீன்தாரோட தலையைத் தூக்கி வெச்சுக்கிட்டாரு. அவரோட கையப் பிடிச்சுக்கிட்ட ஜமீன்தாரு, திக்கித் தெணறிப் பேச ஆரம்பிச்சாரு.

“அண்ணே! பளியஞ்சித்தன் என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். என் சம்சாரம் வேலுத் தாயம்மாவோட வயித்துல என்னோட ஆம்பள வாரிசு உருவாயிட்டான். அதான் எனக்கு கடைசிக்காலம் வந்துருச்சுனு நெனைக்கிறேன். இவ வயித்துல இருக்கற என் மகனை நீங்கதான் காப்பாத்தணும்”னு சொல்லி கண் கலங்கினாரு.

வேலுச்சாமி நாயக்கர கூப்பிட்டுப் பக்கத்துல உக்காரச் சொன்னாரு.

“தம்பி! வேலுத்தாயம்மா பாவம். எனக்காக எவ்வளவோ கஷ்டங்களத் தாங்கிக்கிட்டா. இவளையும் என் குழந்தை ராஜமாணிக்கத்தையும் நீதான் கஷ்டப்படவிடாம பாத்துக்கணும்”னு சொல்லி அப்பிடியே அடங்கிட்டாரு.

எங்க பொறந்து, எங்க வளந்து, கடைசியா ஒரு ராவுத்தர் வீட்டுல அவர் மடியில நம்ம ஜமீன்தாரோட உசுரு போகுதுனா அந்த சங்காத்தத்தை என்னன்னு சொல்றது?!

இனிமே என்ன செய்ய..?

தீர்க்காயுசு வேணும்னு கைலாய மலையில தவம் இருந்தவன், எமன் வாயில விழுந்த மாதிரி திருவாங்கூர் மகாராஜாகிட்ட ஒத்தாசை கேட்டு ராஜ்யத்தை மீட்டுக்கலாம்னு பொறப்பட்ட ஜமீன்தாரு, பாதி வழியில உசுரு இல்லாம வெறும் கூடா திரும்பு வார்னு யாருக்குத்தான் தெரியும்? அந்தப் பளியஞ்சித்தனுக்குத்தான் தெரியும்.

வருச நாட்டு ஜமீன் கதை - 30
வருச நாட்டு ஜமீன் கதை - 30

கண்டமனூர் அரண்மனை வாசல்ல சனங்க எக்கச்சக்கமா கூடியிருந்தாங்க.

பட்டுப்போன அந்தக் கொன்ற மரத்துல நாலு இலை தளிர்விட்டு மஞ்சப் பூ பூத்திருந்தத, யாரோ கவனிச்சு ஊர் பூரா சொல்லியிருந்தாங்க.

இந்தப் பூ பூத்துச்சுனா ஜமீன்தாருக்குக் கண்டம்னு சொன்னாங்களேனு ஊர் சனங்க அம்புட்டு பேரும் பேசிக்கிட்டிருந்தாங்க.

அந்தச் சமயத்துலதான் அந்த வில்வண்டி நம்ம ஜமீன்தாரு உடலத் தாலாட்டிக்கிட்டு அரண்மனைக்கு வந்து சேந்துச்சு.

‘பளியஞ்சித்தன் சாபம் பலிச்சுருச்சே’னு சனங்க வேதனைப் பட்டாங்க.

நம்ம ஜமீன்தாரு மேல என்னதான் கெட்ட அபிப்பிராயம் இருந்தாலும் அவரு முகத்தப் பாத்ததுமே ஆத்தாமை தாங்காம நெஞ்சுல அடிச்சுக்கிட்டாங்க.

பாலகோம்பையிலிருந்து வந்த ஜமீன்தாரோட பங்காளிக மட்டும் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தாங்க.

தேவாரம், கோம்பை, போடி நாயக்கனூர், பெரியகுளம், சந்தையூர், சாப்டூர், பேரையூர், நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர், கடவூர் - இப்பிடி எல்லா ஜமீன்லயிருந்தும் ஜமீன்தாருக வந்து குமிஞ்சுட்டாங்க.

யானை கட்டி வாழ்ந்த மாளிகையிலே

ஆந்தை கூடு கட்டி வாழுதே மவராசா.

குதிரை கட்டி வாழ்ந்த மாளிகையிலே

கூகை கூடு கட்டி வாழுதே மவராசா.

மாடப்புறா கானலிலே

மவராசாவைத் தேடிவந்தேன்.

மவராசா பிரியவே

மருகுகிறேனே கானலிலே.

முத்து முத்தா அள்ளித் தந்து

முகம் பாக்காம போறவரே,

குத்துக்கல்லு மேலிருந்து

கூப்பிட்டது கேட்கலையோ?

வைகையால பஞ்சம் வந்தா

வாயக்கட்டி நின்னு போவோம்.

வாரிசுக்கே பஞ்சம் வந்தா,

யார நம்பி தஞ்சம் போவோம்?

- இப்பிடி ஒப்பாரி வெச்சு அழு தாங்க மணியக்கார பொம்பளைங்க."

வருச நாட்டு ஜமீன் கதை - 30
வருச நாட்டு ஜமீன் கதை - 30

ஜனகத்துக்காக நம்ம ஜமீன்தாரு கட்டிவெச்ச வாணி விலாசம் அநாதையா கெடந்தது. ஜனகம் இல்லாத வாணி விலாசம், களையில்லாத மண் சுவரா தெரிஞ்சது. அங்கன கூடியிருந்த அறுவத்திநாலு ஊரு சனங்களும் ஜனகத்தையும் ஜமீன்தாரையும் கொக்கிப்போட்டு அவங்க அவங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி கதைகதையா அள்ளி விட்டாங்க.

செங்கமலம் தீயில விழுந்து செத்த பெறகு நம்ம ஜமீன்தாரு ஜம்புலிபுத்தூர் பக்கமே தலைவெச்சுப் படுக்காம இருந்தாரே... அதையும் மாஞ்சு மாஞ்சு பேசினாங்க.

வேலுத்தாயம்மா, ஜமீன்தாருகிட்ட எப்பிடிக்கெப்படி நடந்துகிட்டாங்கனு ஒருத்தருக்கொருத்தர் கூட்டிக்கழிச்சு பொறணி பேசிக்கிட்டாங்க.

‘நம்ம ஜமீன்தார் சாமியப்ப நாயக்கர எங்கன பொதைக்கிறது..? எப்படி சமாதி கட்டுறது?’னு பேச ஆரம்பிச்சாங்க பெரியவங்க. கிறுக்குத் துரைனு சொன்னமே... அந்தப் பெரிய ஜமீன்தாருக்கு ஏற்கெனவே வைகை ஆத்துக்கரையிலதான் சின்னதா சமாதி கட்டியிருந்தாங்க. அவரு ஜாதகத்துல லக்கினத்துக்கு பன்னண்டாம் எடத்துல கேது இருந்துச்சாம். அதாவது சாமியார் ஜாதகமாம். அதனால, அவருக்கு மறுபிறவி இல்லைனு சொல்லி கிறுக்குத் துரையை இப்பவும் சாமியா கும்பிட்டு வர்றாங்க.

இப்போ, ‘அந்தச் சமாதிக்குப் பக்கத்துல நம்ம ஜமீன்தார் சாமியப்ப நாயக்கரயும் அடக்கம் செய்யலாமா? வேணாமா?’னு கூட்டத்துல ரெண்டு வரிசை பிரிஞ்சுபோச்சு.

கண்டமனூர் அரண்மனை எட்டய புரம் ஜமீன்தாருக்குச் சொந்தமா இருந்ததால, அரண்மனை நிர்வாகஸ்தர் அப்பாவு பிள்ளை ‘கூடவே கூடாது’னு ஒத்தக்கால்ல நின்னாரு. கண்டமனூர் ஜமீன் ஏலம் போனதுக்கு அப்பாவு பிள்ளைதான் காரணம்னு ஏற்கெனவே சனங்க கோவமா இருந்தாங்க.

கண்டமனூர் சாதி சனங்க, மணியக்காரங்க, மாப்ள நாயக்கருக, எரசக்க நாயக்கனூர் ஜமீன்தாரு, தொட்டப்ப நாயக்கனூர் ஜமீன்தாரு அம்புட்டு பேரும் ‘கண்டமனூர்லதான் சமாதி கட்டணும்’னு விடாப்பிடியா நின்னாங்க.

வேற வழியில்லாம அப்பாவு பிள்ளை ஒப்புக்க வேண்டியதாப் போச்சு.

வருச நாட்டு ஜமீன் கதை - 30
வருச நாட்டு ஜமீன் கதை - 30

பெரிய ஜமீன்தார அடக்கம் செஞ்ச அதே எடத்துல நம்ம ஜமீன்தார் சாமியப்ப நாயக்கரையும் அடக்கம் செஞ்சாங்க.

இப்போ பங்காளி பட்ட வாரிசு கண்டமனூர் ஜமீன்தார் சுந்தரவடிவேல் இருக்காரே... அவரோட தாத்தா ராமகிருஷ்ணசாமி நாயக்கர்தான் மண் தள்ளினாரு. அவருக்குத்தான் அந்த உரிமை இருந்துச்சு.

ரெண்டு ஜமீன்தாருகளுக்கும் சேத்து ஒரே சமாதியா கட்டினாங்க. அதுல ரெண்டு வாசல் இருக்கும்.

இப்பவும் அந்தச் சமாதி கண்டமனூர்லயிருந்து கோவிந்த நகரம், அம்பாசமுத்திரம் போற வழியில வைகை ஆத்துக்கரையில செங்கல் கட்டடமா நின்னுக்கிட்டு இருக்கு. சமாதிக்கு யாரும் தீபம் போடுறதே கெடையாது. ஏன்னா... வாரிசு சாபம் தங்களுக்கும் தொத்திக்குமோனு பயப்படறாங்க!

ஆனா, வைகை ஆறு அந்தக் குறையைத் தீர்த்துருச்சு. வருசத்துக்கு ஒரு தடவ வெள்ளம் பெருகி ஓடி, அந்தச் சமாதிய குளிப்பாட்டிக்கிட்டிருக்கு!

ஏற்கெனவே பெரிய ஜமீன்தார் கிறுக்குத் துரை இறந்தப்பவே, ‘வாரிசு உரிமை எனக்குத்தான் வேணும்’னு பங்காளி ராமசாமி நாயக்கரு கலெக்டர்கிட்ட பிராது கொடுத்திருந்தாரே... ஞாபகம் இருக்கா? அந்த ராமசாமி நாயக்கர் வாரிசு இல்லாமலே இறந்துபோயிட்டாரு.

இப்பவும் அதே வில்லங்கம் வந்துச்சு!

ஜமீன்தாரோட பழைய பங்காளி ராமகிருஷ்ணசாமி குடும்பத்துக்காரங்க மதுரை கலெக்டர் துரைக்கு ஒரு பிராது அனுப்பினாங்க. ‘ஜமீன்தாருக்குப் பெண் கொழந்தை பொறந்திருக்கறதால அந்தக் கொழந்தையை ஜமீனோட பட்ட வாரிசாக ஒப்புக்கமாட்டோம். இதுவரைக்கும் ஜமீன்தாருக்கு ஆண் வாரிசு இல்லாததால இனி கண்டமனூர் ஜமீன்தார் பட்டம் எங்களுக்குத்தான் தரணும்’னு எழுதியிருந்தாங்க.

மதுரையில இருந்து வெள்ளக்கார கலெக்டர் துரை, தெப்பம்பட்டி அரண்மனைக்கு வந்தாரு.

அடுத்த ஜமீன் பட்டம் யாருக்குக் குடுக்கறதுனு விசாரணைக்கு வந்திருந்தாங்க.

அப்பத்தான் வேலுத்தாயம்மா கெட்டிக்காரத்தனமா அந்த பதிலச் சொன்னாங்க!

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு