Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 32

வருச நாட்டு ஜமீன் கதை - 32
வருச நாட்டு ஜமீன் கதை - 32

சீர்திருத்தம் கொண்டுவந்த பெறகு நெறைய சமஸ்தானங்கள் தெணற ஆரம்பிச்சது. ஆடிக்காத்துல அம்மியே பறக்கும் போது இலவம்பஞ்சு எம்மாத்திரம்?

‘பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்’னு சொன்ன மாதிரி நம்ம ஜமீன்தாரு குடும்பத்துக்குத் திரும்பத் திரும்ப சச்சரவுகளும் சங்கடங்களும் வந்துக்கிட்டே இருந்துச்சு.

‘வேலுத்தாயம்மாவுக்குப் பொறந்தது ஆண் கொழந்த இல்ல, பெண் கொழந்ததான்’னு மதுரைல இருந்த கலெக்டர் துரைக்கு யாரோ பிராது அனுப்பிட்டாங்க. ‘ஒருவேள அப்பிடியும் இருக்குமோ’னு ஊர் சனங்களுக்கும் சந்தேகம் வந்துருச்சு.

அந்தச் சோதனைக்காகத்தான் தெப்பம்பட்டி அரண்மனைக்கு வந்து சேர்ந்தாரு கலெக்டர் துரை.

வேலுத்தாயம்மா கைல வெச்சிருந்த ஆண் கொழந்த, அச்சு அசலா, செவேர்னு ராஜ அம்சமா இருந்துச்சு. மாத்தி எடுத்துப்போனதா சொன்ன இன்னொரு கொழந்தயையும் தூக்கிட்டு வரச் சொன்னாரு கலெக்டர்.

பாலு நாயக்கர் வீட்டுலயிருந்து அந்தக் கொழந்தயையும் தூக்கிட்டு வந்தாங்க. அட... அதுவும் ஆண் கொழந்ததான்!

யாரோ வீண் குழப்பம் செய்றாங்கனு புரிஞ்சுக்கிட்ட கலெக்டர் துரை, ‘வேலுத்தாயம்மாவோட ஆண் கொழந்ததான் ஜமீனோட வாரிசு’னு அறிவிப்பு செஞ்சாரு. அந்தக் கொழந்தைக்கு (அப்பா இறந்த பெறகு பொறந்த கொழந்தை)னு அத்தாட்சிப் பத்திரம் எழுதிக் குடுத்துட்டுப் போனாரு.

இந்த வெவகாரம் எப்பிடி வந்துச்சுனா...

வேலுத்தாயம்மாவுக்கு ஆண் கொழந்த பொறந்த அதே நாள்லதான் பாலு நாயக்கருக்கும் ஒரு ஆண் கொழந்த பொறந்துச்சு. அந்தக் கொழந்தைக்குப் பேர் வெக்கிறதுக்கு, பாலு நாயக்கர் வீட்டுல இருந்து அந்த ஆண் கொழந்தய அரண்மனைக்குத் தூக்கிட்டுப் போனாங்க. அப்பத்தான் பங்காளிகள்ல யாரோ ஒருத்தர் பாத்துட்டாரு. பெண் கொழந்தய மாத்துறதுக்குத்தான் கொண்டு போறாங்கனு நெனச்சுக்கிட்டு கலெக்டருக்கு பிராது அனுப்பிட்டாங்க.

ஜமீன்தாரிணியம்மாவுக்குப் பொறந்த அந்த ஆண் கொழந்தைக்குத்தான் ‘கதிர்வேல்சாமி பாண்டியன்’னு பேர் வெச்சாங்க. சுருக்கமா ‘மைனர் பாண்டியன்’னு எல்லாருமே கூப்பிட ஆரம்பிச்சாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 32
வருச நாட்டு ஜமீன் கதை - 32

ஆக, ஜமீன்தாரிணி வேலுத்தாயம்மாவுக்குப் பொறந்த பொண்ணு ராஜமாணிக்கம், மைனர் பாண்டியன் ரெண்டு பேருமே கண்டமனூர் அரண்மனையில பொறந்து, தவழ வேண்டியவங்க. ஆனா, சாப வசத்தால ஜமீனுக்கு வருமானம் இல்லாத காலத்துல, தெப்பம்பட்டி வீட்டுல பொறந்தது அவங்களோட துரதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்.

இந்தச் சமயத்துலதான் பிரிட்டிஷ் சர்க்கார்ல நெறைய மாத்தங்கள் ஆகிப்போச்சு. அதையும் நாம தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு.

பிரிட்டிஷ் சர்க்காருக்கு சுதேச மன்னர்கள் மட்டும் எதிர்ப்பு செஞ்ச காலம் மாறி, இப்போ சனங்களே கொஞ்சங் கொஞ்சமா தெளிவாகிக் கிளர்ச்சி செய்ய ஆரம்பிச்சாங்க.

‘சீர்திருத்தம் வேணும், சுதேச சாம்ராஜ்யம் வேணும்’னு சொல்லி, புதுசு புதுசா பெரிய தலைகள் உருவாகிக்கிட்டிருந்த காலம். புதுப்புது சஞ்சிகைகள் சனங்ககிட்ட வந்து சேந்துச்சு.

‘பால்ய விவாகம் கூடாது, உடன் கட்டை ஏறும் பழக்கம் கூடாது, விதவைகள் மறுமணம் செய்துக்கணும், தீண்டாமை ஒழிக்கணும், விபசாரத்தை ஒழிக்கணும்’னு பிரசாரம் செய்துக் கிட்டிருந்த காலகட்டம். அதுக்குக் காரணமிருந்துச்சு.

பெண்கள்ல... ஆயிரம் பேர்ல பத்து பேர்தான் படிச்சவங்களா இருந்தாங்க.

பால்ய விவாகத்தாலதான் நெறைய கைம்பெண் கொடுமையும் நடந்திருக்கு. பெண் கொழந்த பொறக்கும்போதே, ‘இவள் இந்தப் பையனுக்குத்தான்’னு முடிவு செஞ்சுர்றாங்க.

சென்னை ராஜதானியில அப்போ இருந்த விதவைகள் மட்டும் 23,068 பேர். அதுல, ஒரு வயசுல விதவை - 31 பேர். ரெண்டு வயசுல விதவை - 34 பேர். மூணு வயசுல விதவை - 140 பேர். நாலு வயசுல விதவை - 383 பேர். - இப்படி அந்தக் காலத்து சர்க்கார் மகஜர் சொல்லுது.

விதவைகள் இன்னொரு கல்யாணம் செய்துக்கவும் முடியாது.

ஜமீன்தார்களாலயும் மிட்டா மிராசுதார்களாலயும் விபசாரம், மேக ரோகம் எல்லா கிராமத்துக்கும் பரவியிருந்துச்சு.

பிரிட்டிஷ்காரங்களே இந்தியாவுக்கு வந்து இதையெல்லாம் எடுத்துச் சொல்லி, சீர்திருத்தம் வேணும்னு சொன்னாங்க.

‘இந்தியர்களுக்கு அதிகமா பதவி, பட்டம் கொடுக்கணும், வரிகள குறைக்கணும், ஜமீன்தார்கள ஒழிக்கணும்’னு பிரிட்டிஷ் சர்க்காருக்கு யோசனையும் சொன்னாங்க.

‘ஜமீன்’னு சொன்னா நிலம். ‘தார்’னு சொன்னா சொந்தக்காரங்கனு அர்த்தம்.

நிலங்கள் இல்லாம ஜமீன்தாருக இல்ல.

பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி மொத மொத வந்தப்ப 1802-வது வருஷம் ‘சாசுவத நிலவரி திட்டம்’னு கொண்டு வந்தாங்க. இது ஜமீன்தார்களுக்குத்தான் ரொம்ப சகாயமா இருந்துச்சு.

ஜமீன்தாருக அவங்ககிட்ட இருக்கற நிலப்பகுதிய நெரந்தரமா வெச்சுக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகைய மட்டும் ஒவ்வொரு வருஷமும் கிஸ்தியா கட்டினா போதும். அந்த நெலங்க அம்புட்டும் ஜமீன்தார் சொத்து. அந்தச் சொத்தை அவர் பாத்து யாருக்கு வேணும்னாலும் தரலாம். குத்தகைக்கும் குடுக்கலாம். வரியக் கூட்டலாம். காரணமே இல்லாம திரும்ப நிலத்தை எடுத்துக்கிட்டு குடியானவங்கள துரத்தலாம். இப்பிடி ஜமீன்தாருகளுக்குத்தான் ஏகபோக சகாயமா இருந்துச்சு. ஜமீன்தாருங்க துர் விநியோகம் செஞ்சதுதான் அதிகம்.

வருச நாட்டு ஜமீன் கதை - 32
வருச நாட்டு ஜமீன் கதை - 32

சர்க்காருக்கும் ஜமீன்தாருகளுக்கும் எதிர்ப்பா ரொம்ப பேர் கிளர்ச்சி செய்ய ஆரம்பிச்சாங்க.

ஜமீன்தார்களோட உரிமைகளையும் குத்தகைதாரர்களோட உரிமைகளையும் நிர்ணயம் செய்றதுக்கும், ஜமீன்தார்களால குடியானவங்க உரிமைகள் பாதிக்காம இருக்கிறதுக்கும், 1908-வது வருசம் ‘சென்னை ராஜதானி எஸ்டேட் சட்டம்’னு ஒரு சட்டம் கொண்டுவந்தாங்க.

இப்பிடி நூறு வருசத்துக்குப் பெறகு ஒரு சீர்திருத்தம் வந்துச்சு. அதனால, ஒரு குடியானவனுக்கு அவன்கிட்ட இருக்கிற பூமிய பயன்படுத்துக்கிற உரிமை வந்துச்சு. தகுந்த முகாந்திரம் இல்லாம அவங்கள வெளியேத்தக் கூடாது. குத்தகைத் தீர்வைப் பணத்தைக் கூட்டணும்னா நியாய ஸ்தலத்துக்குப் போய் விசாரணைக்குப் பெறகுதான் கூட்டணும். குளம் வெட்றது, வாய்க்கால் வெட்றது இப்பிடி நீர்ப்பாசனத்துக்கான காரியங்கள் ஜமீன்தாருக தங்களோட சொந்தச் செலவுலதான் செஞ்சதரக் கடமைப்பட்டவங்க. இப்பிடிச் சட்டம் சொல்லுது.

என்னதான் இப்பிடிச் சட்டங்கள் போட்டு குடியானவங்களுக்குப் பாதுகாப்பா இருந்தாலும், ஜமீன்தார்க மேல அதிருப்திதான் இருந்துச்சு.

சீர்திருத்தம் கொண்டுவந்த பெறகு நெறைய சமஸ்தானங்கள் தெணற ஆரம்பிச்சது.

ஆடிக்காத்துல அம்மியே பறக்கும் போது இலவம்பஞ்சு எம்மாத்திரம்?

எல்லா சமஸ்தானங்களும் ஜமீன்தார்களும் கணக்கு வழக்குகள ஒழுங்கா வெச்சிருக்காங்களா..? சனங்க எந்த அளவுக்குத் திருப்தியா இருக்காங்கனு கலெக்டருக அங்கங்க சோதனை செய்ய ஆரம்பிச்சாங்க.

கண்டமனூர் கணக்கு வழக்குகள எல்லாம் வேலுச்சாமி நாயக்கரும் காரியதரிசி சீனிச்சாமி நாயக்கரும்தான் கவனிச்சுக்கிட்டிருந்தாங்க.

ஆடம்பரச் செலவுகள் எல்லாம் கொறஞ்சு போச்சு.

ஜமீன்தாரிணியம்மாவோட செலவுக் கணக்குச் சிட்டாப் புஸ்தகத்துல, குதிரைக்குப் புல்லுக்கட்டு வாங்கிப் போட்டது, கோழி வாங்கினது, எலுமிச்சம்பழம் வாங்கினது, பாவாடைச் சீட்டித் துணி, மைப்பொட்டணம், வெள்ளிப் பொத்தான்... இப்பிடி எல்லாத்துக்கும் கணக்கெழுதி சீனிச்சாமி நாயக்கர் கையெழுத்துப் போடுவாரு. அதுக்குக் கீழ வேலுத்தாயம்மா தெலுங்குல கையெழுத்துப் போடுவாங்க.

ஜமீனச் சேர்ந்த ஏழு ஊர்களயும் சுத்திச் சுத்தி வந்து களச்சுப் போயி படுத்தாரு வேலுச்சாமி நாயக்கரு. நல்ல திடகாத்திரமா இருக்கிறவருதான். பகல் நேரத்துல எப்பவுமே கெறங்காதவரு இப்பிடிச் சோர்வாப் படுத்திருக்கிறதப் பாத்தாங்க வேலுத்தாயம்மா.

வருச நாட்டு ஜமீன் கதை - 32
வருச நாட்டு ஜமீன் கதை - 32

புருஷன் சாமியப்ப நாயக்கர், ‘வேலுத்தாயம்மாவ கஷ்டப்படவிடாம பாத்துக்க தம்பி...’னு ஒரு வார்த்தை சொன்னதுக்கு, மாமா இவ்வளவு பாடு படுறாரேனு நெனச்சாங்க.

வேலுத்தாயம்மாவுக்கு மனசு எளகிப் போச்சு. தனக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்படுறாருனு நெனச்சாங்க.

வேலுச்சாமி நாயக்கருக்குப் பக்கத்துல வந்து, “மாமா, இந்தக் கசாயத்தைக் குடிங்க”னு சொல்லி அவரோட நெத்தியில கை வெச்சுப் பாத்தாங்க.

ஏனோ தெரியல, வேலுத்தாயம்மா மனசுல ஒரு பக்கம் பதற்றம் இருந்தாலும் அதே சமயம் இன்னொரு பக்கம் ஒரு உரிமை வேலுச்சாமி நாயக்கர் மேல.

வேலுச்சாமி நாயக்கர் நெஞ்சுல ரெண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்ததும், அவரும் வேலுத்தாயம்மாவோட கைகள ஆதரவாப் பிடிச்சுக்கிட்டு அவங்க கண்ல வழிஞ்ச கண்ணீரத் தொடச்சாரு.

பொசுக்குனு வெடிச்ச வேலுத்தாயம்மா, தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சாங்க.

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு