Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 33

வருச நாட்டு ஜமீன் கதை - 33
வருச நாட்டு ஜமீன் கதை - 33

ஜமீன் கிஸ்தி கட்டாததனால ஏலம், ஜப்தி, ஜபர்தஸ்துல எறங்கிட்டாங்கனு அப்புறமாத்தான் சனங்களுக்குப் புரிய ஆரம்பிச்சது.

அன்னிக்குச் செவ்வாக்கெழம.

தெப்பம்பட்டி அரண்மனைக்கு முன்னால காக்கிச்சட்டை போட்ட சர்க்கார் சேவகக்காரங்க கையில துப்பாக்கியோட வரிசை கட்டி நின்னுக்கிட்டிருந்தாங்க. சாரட்டும், கூட்டு வண்டிகளும் ஏகப்பட்டது வந்திருந்துச்சு.

மதுரை கலெக்டர் துரை, எட்டயபுரம் மகாராஜா, அவங்ககூட தாசில்தாரு, சிரஸ்தாரு, கர்ணம், நாட்டாமை... இப்பிடி ஏகப்பட்ட பேர் வந்திருந்தாங்க.

இவ்வளவு கூட்டத்தை அதுவரைக்கும் சனங்க பார்த்ததே இல்ல.

திருநெல்வேலியில யாரோ வாஞ்சி ஐயர்னு ஒருத்தர் கலெக்டர் ஆஷ் துரைய துப்பாக்கியால சுட்டுப் போட்டு அதே துப்பாக்கிய தன் வாய்க்குள்ள விட்டு சுட்டுச் செத்துப் போயிட்டாராம். இப்போ தெப்பம்பட்டிக்கு வந்திருக்கிற கலெக்டர் துரைக்கு, இவ்வளவு பந்தோபஸ்து எதுக்குனு அப்பத்தான் சனங்களுக்குப் புரிஞ்சுது.

அது சரி... இப்போ எதுக்கு கலெக்டர் துரை வந்திருக்காரு?

கிட்டத்தட்ட நானூறு வருசத்துக்கு முன்னால வருச நாட்டுக்கு வந்து, காடு வெட்டி... நெருஞ்சி முள்ளு தூத்தி... நெலத்த உழுது... பயிர் பருவஞ் செஞ்சு... பாளையப்பட்டக்காரங்களா இருந்த கண்டமனூர் ஜமீன் பரம்பரையோட முடிவு, கடல் தாண்டி யாவாரத்துக்கு வந்த வெள்ளச்சீமைக்காரன் கையில இருக்குது!

இது சாபக்கேடு இல்லாம வேற என்ன?

பத்து வருசமா இருந்த பஞ்சம் காரணமா கிஸ்தி கட்ட முடியாம, அதுவரைக்கும் மூணு லட்சத்து அம்பதாயிரம் ரூவா நிலுவை ஆகிப்போச்சு.

வருச நாட்டு ஜமீன் கதை - 33
வருச நாட்டு ஜமீன் கதை - 33

வருவாய் பரிபாலன அதிகாரமும், நீதி பரிபாலன அதிகாரமும் கலெக்டர் துரையோட கையில இருந்ததால தெப்பம்பட்டிக்குப் பொசுக்குனு வந்து நின்னுட்டாரு.

ஜமீன் கிஸ்தி கட்டாததனால ஏலம், ஜப்தி, ஜபர்தஸ்துல எறங்கிட்டாங்கனு அப்புறமாத்தான் சனங்களுக்குப் புரிய ஆரம்பிச்சது.

ஏற்கெனவே சாமியப்ப நாயக்கர் காலத்துல கண்டமனூரச் சேர்ந்த அறுபத்து நாலு கிராமத்த எட்டயபுரம் ஜமீனுக்காக வள்ளல் நதி சப்-டிவிஷன்னு பிரிச்சு ஏலத்துல எடுத்தாச்சு இல்லையா..? மிச்சம் இருக்கிற ஏழு ஊரையும் எட்டயபுரம் மகாராஜாதான் ஏலத்துல எடுக்கப் போறாருனு ஊர்சனங்க பேசிக்கிட்டாங்க. ஆனா, அது அப்பிடியில்ல.

ஏற்கெனவே எடுத்த அறுவத்து நாலு கிராமத்தையும் கவனிக்க முடியாமத்தான் அப்பாவு பிள்ளைக்கு ‘பவுராப்படரணி’ குடுத்து அவர ஒரு திவான் மாதிரி உக்கார வெச்சுட்டாரு மகாராஜா.

இப்போ வேலுத்தாயம்மாவுக்கு ஆறுதலுக்காகவும், ஒரு ரோசனைக்காகவும்தான் எட்டயபுரம் மகாராஜா வந்திருக்காரு.

வேலுச்சாமி நாயக்கர் சோகமா இருந்தாரு. ஏனோ தெரியல, வேலுத்தாயம்மா மட்டும் எட்டயபுரம் மகாராஜா மேலத்தான் கோவமா இருந்தாங்க.

வேலுத்தாயம்மாவ சமாதானப்படுத்த மகாராஜா படாதபாடு பட்டாரு. நல்ல மன சுத்தியோடதான் வந்திருந்தாரு.

வேலுத்தாயம்மாகிட்ட நெலமைய பக்குவமா எடுத்துச் சொன்னாரு.

“கலெக்டர் துரை ஏற்கெனவே உங்களுக்குக் குடுத்த கெடு முடிஞ்சு போச்சு. வேற வழி இல்ல. அதனால... ஜமீனை கலெக்டர் துரையே நிர்வாகம் செய்யட்டும். உங்களுக்கு ஆயிரம் ரூவாயும், உங்க புள்ளைகளுக்கு ஐந்நூறு ரூவாயும் மாசா மாசம் தர்றதா கலெக்டர் சொல்றாரு. நீங்க என்ன சொல்றீங்க?”னு கேட்டாரு மகாராஜா. “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.

யாரோட காசு பணமும் எங்களுக்கு வேணாம். ஜமீன் ஏலத்துக்குப் போனாலும் போகட்டும். இனிமேல் சனங்ககிட்ட வரிவசூல் செஞ்சு கிஸ்தி கட்ட முடியாது”னு கோவமாச் சொன்னாங்க வேலுத்தாயம்மா.

“பதட்டப்படாம கேளுங்கம்மா. உங்க புள்ளை மைனர் பாண்டிய கோர்ட் ஆஃப் வார்டு மூலமா தத்தெடுத்து மதராசுப் பட்டணத்துக்கு அனுப்பி, அங்கயே படிக்க வெக்கிறதா கலெக்டர் சொல்றாரு. பதினெட்டு வயசு வர்ற வரைக்கும் அங்கயே படிக்கட்டுமே...”னு சொன்ன மகாராஜா, அந்தப் பள்ளிக்கூடத்தப் பத்தியும் சொன்னாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 33
வருச நாட்டு ஜமீன் கதை - 33

சென்னப்பட்டினத்துல கவர்னரா இருந்த எல்பின்ஸ்டன் 1840-ல ‘எடின்பரோ ஹவுஸ்’னு ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சாங்க. 1891 வரைக்கும் அங்கதான் சட்டப் படிப்பும் சொல்லித் தந்தாங்க. ஜமீன்தார்களோட பையன்கள் அம்புட்டுப்பேரும் இந்தப் பள்ளிக் கூடத்துலதான் படிப்பாங்க. அதுக்குதான், பிற்பாடு ‘சென்னை மாநிலக் கல்லூரி’னு பேர் வந்துச்சு.

சாமியப்ப நாயக்கரும் அந்தப் பள்ளிக்கூடத்துலதான் படிச்சாரு. அங்கதான் மைனரும் படிச்சா நல்லதுனு மகாராஜா எடுத்துச் சொன்னாரு.

“என் புருஷனை வெள்ளக்காரங்க படிக்கவச்சு வளத்த லட்சணம்தான் எனக்குத் தெரியுமே... என்னோட பையனை எப்பிடி வளர்க்கிறதுனு எனக்குத் தெரியும். அவங்களோட உபகாரம் எதுவும் எங்களுக்கு வேணாம்”னு கோவம் குறையாம பேசினாங்க வேலுத்தாயம்மா.

“வெள்ளக்காரங்கள எதித்துப் பேசறது அவ்வளவு சுவாதீனமாப் படலை. அவங்களால நமக்கு சகாயம் இருக்கு. உங்க பையனுக்குப் பதினெட்டு வயசு முடிஞ்சதும் உங்க ஜமீன் உங்க பையனுக்குத் திரும்ப வந்துரும்னு கலெக்டர் துரையே உறுதியா சொல்றார். அவர நம்பித்தான் ஆகணும்!”

“நீங்க வேணும்னா நம்புங்க. இனி மேற்பட்டு நாங்க யாரையுமே நம்பிப் பிரயோசனம் இல்ல. எங்களுக்கு இருக்கிற பண்ணை நெலங்கள வெச்சு நாங்க ஜீவனம் நடத்திக்கிறோம். இந்தப் பஞ்ச காலத்துல சனங்ககிட்ட வரி வசூல் செஞ்சு கிஸ்தி கட்ட முடியாது. ஏலத்துக்குப் போனா போகட்டும்!”னு உறுதியா சொன்னாங்க வேலுத்தாயம்மா.

நடக்கறது அம்புட்டையும் மகள் ராஜமாணிக்கமும் மைனரும் வேடிக்கை பாத்துக்கிட்டே இருந்தாங்க. அவங்க கண்ணு முன்னால ஜமீன் ஏலத்துக்குப் போறத நெனச்சா நெஞ்சு பதறுது!

கலெக்டர் துரை ஏற்கெனவே ஒரு முடிவோடதான் வந்திருந்தாரு.

லண்டன் கார்ப்பரேஷன் கம்பெனிக்காரங்களுக்கு அந்த வருச நாட்டு மலைப்பகுதி ரொம்பப் பிடிச்சுப்போனதால, அவங்களே அதிகத் தொகை குடுத்து ஏலத்துல எடுத்துக்கிறதா சொல்லியிருந்தாங்க.

ஆக, வேலுத்தாயம்மாவுக்குச் சொந்தமாயிருந்த தெப்பம்பட்டி அரண்மனையையும், மலைப் பகுதியில இருந்த பண்ணை நெலங்களையும் தவிர, மிச்சமிருந்த ஏழு ஊரையும் லண்டன் கார்ப்பரேஷன் கம்பெனிக்காரங்க ஏலத்துல எடுத்துக்கிட்டாங்க.

அதுவரைக்கும் தைரியமா இருந்த வேலுத்தாயம்மா, சனங்க அழுத அழுகையப் பாத்து மனசு உடஞ்சு அழ ஆரம்பிச்சாங்க.

நாட்டை நினைப்பாரோ? - எந்த

நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்ன

வீட்டை நினைப்பாரோ? - அவர்

விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல் கேட்டிருப்பாய் காற்றே - துன்பக்கேணியிலே யெங்கள் பெண்களழுத சொல் மீட்டு முறையாயோ? - அவர் விம்மிய பவுந்திறங்கெட்டுப் போயினர்.

வருச நாட்டு ஜமீன் கதை - 33
வருச நாட்டு ஜமீன் கதை - 33

- இப்படி யாரோ ஒருத்தன் வீதியில பாடிக்கிட்டே போனான்.

சனங்களுக்கு பளியஞ்சித்தன் குடுத்த சாபந்தான் நெனப்புக்கு வந்துச்சு. கண்டமனூர் அரண்மனையில இருந்த கொன்ற மரம் எதுவுமே தெரியாத மாதிரி எல்லாப் பருவங்களையும் எல்லா மனுஷங்களையும், பிறப்பு-இறப்பு அம்புட்டையும் அமைதியா வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்துச்சு!

நாள், வாரம், மாசம், வருசம் எல்லாமே யார்கிட்டயும் சொல்லிக்காம நகண்டு போய்க்கிட்டே இருந்துச்சு.

இனி, பேருக்குத்தான் ஜமீன்தாரிணி வேலுத்தாயம்மா. அதிகாரம், அந்தஸ்து கையவிட்டுப் போயிருச்சு.

மைனர் பாண்டியரு படிக்கிற வயசு வந்துச்சு. கொஞ்ச வயசுனாலும் கட்டுமஸ்தா, செவப்பா, அழகா இருந்தாரு. கூடவே குறும்புத்தனம் அதிகமா இருந்துச்சு.

போடிநாயக்கனூர் பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, அங்க இருந்த வௌக்க கல்லெடுத்து அடிச்சு உடச்சுப் போட்டாருனு சொல்லி, மைனர வீட்டுக்கு அனுப்பி வெச்சுட்டாங்க. அதோட மைனரோட பள்ளிக்கூடத்துப் படிப்பு நின்னுபோச்சு.

ஆனா, வேலுத்தாயம்மாவுக்கு முக்கியக் கடமை ஒண்ணு இருக்கே.

மகள் ராஜமாணிக்கத்துக்கு கல்யாணம் செய்து வைக்கணுமே. அது சம்பந்தமா பேசத்தான் பொறந்த ஊரு மாம்பாறைக்குப் போனாங்க. தன்னோட அண்ணன்-தம்பிகிட்டயே போய் ராஜமாணிக்கத்தைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லி கேட்டாங்க.

“ஜமீன் அழிஞ்சு போனபெறகு, உன் மகளைக் கட்டி என்ன பிரயோசனம்? முடியாது”னு சொல்லிட்டாங்க.

சாதாரண ஆளுக்கு ஜமீன்தார் பொண்ணக் கட்டிக் குடுக்க முடியுமா?

அதுக்குப் பெறகு விருப்பாச்சி ஜமீன்தாரப் பாக்கப் போனாங்க வேலுத்தாயம்மா.

அவரும், “என் பையன் இப்பத்தான் படிச்சுக்கிட்டு இருக்கான். உன் பொண்ணு சடங்காகி நாலு வருசமாச்சே. முறைப் பொண்ணா இருந்தாலும் சரிப்பட்டு வராது”னு சொல்லி தலையக் குலுக்கிட்டாரு.

மனசுல நிம்மதியில்லாம இருந்த வேலுத்தாயம்மாவுக்கு ஆறுதல் சொல்லி வேலுச்சாமி நாயக்கர் அவரோட வீட்டுக்கு வந்து இருக்கச் சொல்லி கேட்டுக்கிட்டாரு.

இப்பிடி நாளாவட்டத்துல மொட்டனூத்து கிராமத்துல வேலுச்சாமி நாயக்கர் வீட்டுல இருக்கும்போதுதான்... மகள் ராஜமாணிக்கத்துக்கு கல்யாணப் பிராப்தி கூடிவந்துச்சு!

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு