Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 35

வருச நாட்டு ஜமீன் கதை - 35
வருச நாட்டு ஜமீன் கதை - 35

வருச நாட்டுக் கோட்டையில பொதஞ்சு போயிருந்த புதையலைத் தோண்டிக் கண்டுபிடிக்கறதுதான் குர்த் துரைக்கு மொத வேலையா இருந்துச்சு. அதப் பத்தி ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சாரு..

நாடு பிடிக்க நம்ம தேசத்துக்கு வந்த வெள்ளைக்காரங்க, பிரெஞ்சுக் காரங்க, டச்சுக்காரங்க இப்பிடி அத்தனை பேருமே கொடுமைக் காரங்கனு சொல்ல முடியாது.

சனங்க மேல அக்கறையெடுத்து சர்வகலாசாலை, சுத்தபத்த சுகாதாரம், நிர்வாகம், விவசாயம், நீர்ப்பாசனம் இப்பிடிச் சமாசாரங்கள சீர்திருத்தி சனங்ககிட்டே ஒரு தெளிவ உண்டாக்கினவங்களும் இருந்தாங்க.

ஜாலியன் வாலாபாக்ல, பத்தாயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்துல சிப்பாய்கள வெச்சு, முன்னூத்து எழுபத்தொம்பது பேரச் சுட்டுக் கொன்னுபோட்டு, `தோட்டா தீந்து போச்சு... இல்லன்னா இன்னும் நெறைய பேத்தச் சுட்டிருப்பேன்’னு சொன்ன ஜெனரல் டயர் மாதிரி கொடுமைக்கார அதிகாரிகளும் வந்தாங்க.

‘எங்கள் அப்பன்’னு சொல்லப்பட்ட ரிப்பன் பிரபு, ‘கருணையுள்ளம்’னு சொல்லப்பட்ட கானிங் பிரபு, வீரமாமுனிவர், கால்டுவெல், பென்னி க்யுக் இப்பிடியாகப்பட்டவங்களும் நம்ம தேசத்துக்கு வந்தாங்க.

‘நம்ம சனங்கள முன்னுக்குக் கொண்டு வரணும்னு அக்கறையெல்லாம் கெடையாது. வெள்ளக்காரங்க தங்களோட சுயநலத்துக்குக் கொறஞ்ச சம்பளத்துல வேலைக்கு ஆள் பிடிக்கணும்னுதான் நம்ம சனங்களுக்குக் கணக்கு வழக்குகளக் கத்துக்குடுத்தாங்க’னு சொல்றவங்களும் இருக்கிறாங்க.

எது எப்பிடியோ... வருச நாட்டு மலைப்பகுதி நெலங்கள நல்ல நெலமைக்குக் கொண்டுவர முடியும்னு நெனச்சுத்தான் ‘எஸ்.கே.குர்த்’னு ஒரு வெள்ளக்கார துரை பம்பாய் பட்டேல்கிட்டச் சொல்லி கண்டமனூர் ஜமீனை ஏலத்துல எடுக்கச் சொன்னாரு. அதுமட்டுமில்ல.. பம்பாய் பட்டேல் நம்ம தேசத்தோட கலைப் பொக்கிஷங்கள பிரிட்டிஷ்காரங்களுக்கு ஏத்துமதி செய்றவருனு தெரிஞ்சதால, ‘வருச நாடு மண்ணுக்குள்ள தங்கம், ஐம்பொன் சிலைகள், பாண்டியர் காலத்துக் கல் சிலைகள், பூர்வீகப் புதையல் பொக்கிஷங்கள் இருக்கு’னு வேற ஆசையக் காட்டினாரு.

இப்பிடியாகத்தான் 1922-ல ரஸ்டஞ்சிபாய் பட்டேல், மினேச்சர் பெஸ்டஞ்சி பட்டேல், சோராப் பெஸ்டஞ்சி பட்டேல், பிகராம் பெஸ்டஞ்சி பட்டேல் இப்பிடி அண்ணந் தம்பிக நாலு பேர் கூட்டுச் சேந்து ஏழு கிராமத்தையும் மலை நெலங்களயும் அஞ்சரை லட்ச ரூவாய்க்கு ஏலத்துல எடுத்துக் கிட்டாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 35
வருச நாட்டு ஜமீன் கதை - 35

ஜமீன் நிர்வாகஸ்தரா குர்த் துரைதான் பொறுப்பெடுத்துக் கிட்டாரு. அவரே ஒரு இன்ஜினீயரு. அதனால மலை நெலங்க, ஆறு, குளம், வாய்க்கால் அம்புட்டையும் அளந்து பகுதி பகுதியா பிரிச்சாரு.

நஞ்சை, புஞ்சை வகையறாவுல பயிர் சாகுபடிக்கு ‘முச்சலிக்கை’ எழுதிக்கொடுத்துப் பிற்பாடு சனங்களுக்கே பட்டா போட்டுக் குடுத்தாரு பட்டேல். உத்தமபாளையம் மக்கா ராவுத்தர், “நாலு கண்மாயும் மூவாயிரத்து ஐந்நூறு ஏக்கரும் எனக்குக் குடுங்க”னு கேட்டதுக்கு, நானூறு குழி நெலத்துக்கு மட்டும் பட்டா போட்டுக் குடுக்கறதா சொன்னாரு பட்டேல்.

கூடவே ஒரு கட்டுப்பாடும் போட்டாரு, “அதாவது... பழைய ஜமீன்தார் மகன் மைனர் பாண்டியருக்கோ அவரோட வகையறா சனங்களுக்கோ எந்தவிதமான பணம், பொருள் குடுத்து உதவுறதோ, தஸ்தாவேஜுகள குடுத்து உதவுறதோ கூடாது!”னு சொன்னாரு.

மைனருக்கு மறைமுகமா உதவி செய்யலாம்னு மனசுல நெனச்சுக்கிட்ட மக்கா ராவுத்தர் அந்தக் கட்டுப்பாட்டுக்கு ஒத்துக்கிட்டாரு. குர்த் துரை, மரம் வெட்டுறதுக்கும் பாறைகள ஒடைக்கிறதுக்கும் புதுப்புதுக் கருவிகளக் கொண்டு வந்தாரு. சனங்களுக்கு வேல குடுத்தாரு.

ஒலகம் உற்பத்தி ஆன நாள்லயிருந்து அதுவரைக்கும் மனுசன் நொழையாத எடமெல்லாம் வெளிய தெரிஞ்சது. ஒரு பக்கம் விஷப்பூச்சிக் கடி, மறுபக்கம் புலி, கரடி, யானை இப்பிடிக் காட்டு ஜீவாத்யங்களோட பயம். இரும்பு மனசோட இருக்கிற சனங்கதான் இங்க வேலை செய்ய முடியும். எல்லாத்தையும் எதித்து நின்னு காட்ட அழிச்சு நெலத்தைத் தோண்ட ஆரம்பிச்சாங்க.

பழங்காலத்துக் கோயில்கள கண்டுபிடிச்சாங்க. பெரிய பெரிய மரங்கள வெட்டிச் சாச்ச பெறகு வேர்ப் பிடிப்புல ஐம்பொன் சிலைகள், கல் சிலைகள் நெறைய வெளிய வந்துச்சு. வருச நாட்டுக் கோட்டையில பொதஞ்சு போயிருந்த புதையலைத் தோண்டிக் கண்டுபிடிக்கறதுதான் குர்த் துரைக்கு மொத வேலையா இருந்துச்சு. அதப் பத்தி ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சாரு.

முஸ்லிம்கள் படையெடுப்பு நடந்தப்போ அடிச்சுப் பிடிச்சு ஓடி ஒளிஞ்ச வருச நாட்டு சனங்க கோயில் சிலைகள், நகைகள் எல்லாத்தையும் மண்ணுக்குள்ள பொதச்சு, அடையாளத்துக்கு ஒரு மரத்தை நட்டு வெச்சிருக்காங்கனு தெரிஞ்சது.

இப்பிடித்தான் சகாப்தம் 1668, சித்தார்த்தி வருசம் வைகாசி மாதம் முஸ்லிம் படைகள் மதுரைய நெருங்கற சமயத்துல அப்போ மதுரைல இருந்த நாயக்க மன்னர் என்ன செய்றதுனு தெரியாம தெகச்சுப்போன நேரத்துல, மறவர் சீமையிலிருந்து சேதுபதி மன்னர் உதவிக்கு வந்தாரு. ராத்திரியோட ராத்திரியா மீனாட்சி, சுந்தரேஸ்வரர், கூடலழகர் சிலைகள் அம்புட்டையும் எடுத்துக்கிட்டு மானாமதுரைக்குக் கொண்டுபோயிட்டாரு. படைகள் பயம் நீங்கின பெறகு ரெண்டு வருசம் கழிச்சுத்தான் அந்தச் சிலைகள மறுபடியும் பாதுகாப்பா மதுரைக்குக் கொண்டுவந்து சேத்தாரு.

வீரபாண்டி முல்லையாத்துக் கரையில இருந்த அரச மரத்த வேரோட தோண்டுறப்ப வேருக்கடியில எட்டு ஐம்பொன் சிலைகள் கெடைச்சது. இப்போ வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்குள்ள இருக்கிறது மாரியம்மன் சிலை கிடையாது. அது காளியம்மன் சிலை! அந்தச் சிலையும் குர்த் காலத்துல வருச நாட்டுப் பள்ளத்தாக்குல தோண்டும்போது கெடச்சதுதான்னு சொல்றாங்க.

இப்பவும் வருச நாட்டுப் பள்ளத்தாக்குல ‘சீலிநாயக்கன் சுனை’னு ஒரு எடத்துல நெறைய புதையல் இருக்கிறதா நம்பிக்கிட்டுத்தான் இருக்காங்க. மயிலாடும்பாறை வைகைக் கரையில ‘சங்கிலிக் காடு’னு சொல்ற எடத்துல பாழடஞ்ச கெணத்துக்குள்ள நூறு அடி நீளத்துக்குப் பலமான இரும்புச் சங்கிலி உள்ள போகுது! ஒருவேளை சுரங்கப் பாதையா இருக்குமோனு சந்தேகமா இருக்குது.

நரியூத்துக் கிராமத்துல பழங்காலத்து நாணயங்கள கண்டுபிடிச்சாங்க.

ஜமீன் நெலங்களோட விலை மதிப்பைக் கூட்டணும்னு சொல்லி குர்த் துரை ஓயாம வேலை செஞ்சாரு. நூறு பேர வேலைக்கு வெச்சு ஜமீனோட தெற்கு எல்லை வரைக்கும் அளந்தாரு. இப்பவும் ‘ஜீட்டியெஸ்’னு சொல்ற எடத்துல ஒரு கல்லு இருக்கு. இந்தியா சர்வே பணியில ஒரு முக்கியமான எடம். கேரள மாநில எல்லையில மூணு மலையும் ஒண்ணு சேர்ற எடந்தான் அது.

இங்க உற்பத்தியாகுற சின்னச் சின்ன ஆறுகள் மேற்க பாஞ்சு வெட்டியா கடல்ல கலக்குது. அதையெல்லாம் கெழக்கத் திருப்பினா நம்ம தமிழ்நாட்டுக்கு உபகாரமா இருக்கும்.

என்ன செய்றது? நதிகளைத் திருப்புறதுக்கு மலை ஒரு தடையே இல்ல... மனுசங்களோட மனசுதான் தடையா இருக்கு!

இம்புட்டு வேலைகளயும் இதுக்கு முன்ன இருந்த ஜமீன்தார்களே செய்திருக்கலாம். வருமானம் மொத்தத்தையும் டாம்பீகமா செலவு செஞ்சே காலத்தக் கடத்திட்டாங்க.

நம்ம கதைக்கு வருவம்... ‘பழி ஒரு பக்கம்; பாவம் மறுபக்கம்’னு சொல்ற மாதிரி நம்ம மைனர் பாண்டியருக்கு ஜமீனே இல்லைனு ஆகிப்போச்சு!

மைனருக்கு சரியா பதினெட்டு வயசு வந்துருச்சு. குலவழக்கப்படி ஜமீன் வாரிசுப் பட்டம் கட்டியாகணுமே. ஊர் எல்லையில இருந்து உறுமி மேளம் அடிச்சு, தேவராட்டத்தோட ஊர்வலம் வந்து தெப்பம்பட்டி அரண்மனையில சேந்தாங்க. மைனர் பாண்டியருக்குப் பரிவட்டம் கட்டி, ‘சமுதாடு’னு சொல்ற கத்தி, மூங்கில் கம்பு குடுத்து, ‘ஜமீன்தார்’ பட்டத்தைக் கட்டிவச்சாங்க.

அன்னிக்குச் சாயங்காலம் பம்பாயிலிருந்து ஒரு சாமியாரு அரண்மனைக்கு வந்தாரு. கோமணங்கட்டி புலித்தோல் போர்த்தியிருந்தாரு. தலையில ஊதா நெறத்துல உருமால் கட்டியிருந்தாரு. அவருகூட இன்னுங் கொஞ்சம் சாமியார்களும் கோவப்பழச் செவப்புல வடநாட்டுப் பொண்ணுகளும் காவி உடுப்போட வந்திருந்தாங்க. அதுமட்டுமில்ல... பத்துப் பன்னண்டு பாஷையில பேசிக் காட்டினாரு.

அந்தச் சாமியாரு, “வேலப்பர் கோயிலைத் தரிசிக்க வந்தேன். உங்கள் முன்னோர்கள் கோயில் தெய்வீகம் பொருந்தி இருக்கிறது”னு உச்சுக் கொட்டிச் சொன்னாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 35
வருச நாட்டு ஜமீன் கதை - 35

அதுக்கு, “இப்போ எங்களுக்குச் சொந்தமில்லாம போயிருச்சு. எனக்குச் சொந்தமா இருந்திருந்தா உங்களுக்கு நாங்களே மாலை மருவாதை செஞ்சு, அங்க உக்கார வெச்சிருப்போம்”னு ஓரக் கண்ணால சாமியாரிணிகளப் பாத்துக்கிட்டே பெருமையா சொன்னாரு மைனர்.

“அந்தக் கோயில் உங்களுக்கே கிடைக்க ஆவன செய்யட்டுமா?”

“ஓ... பேஷா செய்யலாமே. வேலப்பர் கோயில் எங்களுக்குத் திரும்பக் கெடைக்குமா?”

“கெடைக்குமாவா! கெடைக்கும்! அதுக்கு நானாச்சு. என்னை நம்புங்கள். நாளை பட்டேலும் குர்த் துரையும் வேலப்பர் மலைக்கு வருவார்கள். நீங்கள் அவர்களிடம் சென்று, ‘எங்கள் வேலப்பர் சாமியையுமா ஏலத்தில் எடுத்துவிட்டீர்கள்’ என்று மட்டும் கேளுங்கள். நடப்பதைப் பாருங்கள்...”னு சொல்லிட்டு சுண்டக் காச்சின அரப் படிப் பால ஒரே மூச்சாக் குடிச்சிட்டுப் போயிட்டாரு பம்பாய் சாமியாரு.

மறுநாள்...

பம்பாய் பட்டேல் கண்டமனூர் ஜமீனை சுத்திப்பாத்துட்டுக் கடைசியா வேலப்பர் மலைக் கோயிலுக்கு வந்தாரு. அவரு வந்த தாக்கல் தெரிஞ்சதும் மைனர் பாண்டியரும் வேலுச்சாமி நாயக்கரும் பரிவாரங்களோட வில்வண்டியில வேலப்பர் மலைக்குப் போய்ச் சேர்ந்தாங்க. பட்டேலும் நிர்வாகஸ்தர் குர்த் துரையும் குதிரைல வந்திருந்தாங்க.

பரஸ்பரம் எல்லாருமே ஒருத்தரை ஒருத்தர் நமஸ்காரம் செஞ்சு பாறையில உக்காந்து பேச ஆரம்பிச்சாங்க.

மைனர்தான் முதல்ல, “எங்களுக்குச் சொந்தமான பண்ணை நெலங்கள எங்களுக்கே விட்டுக் குடுத்துருங்க. ஏழு கிராமத்தோட வசூலை மட்டும் நீங்க வெச்சுக்குங்க”னு சொன்னாரு.

அதுக்குப் பட்டேல், “எல்லாம் சேர்த்துத்தான் ஏலத்துல எடுத்திருக்கோம். வருமானம் வர்றதுல நாங்க எதையுமே விட்டுக்கொடுக்க முடியாது. அதுமட்டுமில்ல... என்னோட மானேஜர் என்கிட்ட ஒரு திட்டத்தையும் சொல்லியிருக்காரு. வைகை நதிக்குக் குறுக்க ஒரு அணை கட்டணும்னு விரும்புறாரு. ஆக, நிர்வாகச் செலவு அதிகமா வரும்கிறதால ஒவ்வொரு அணாவும் எங்களுக்கு முக்கியம்!”னு சொன்னாரு.

“கோயில் வருமானத்தையும் நீங்களே எடுத்துக்கிட்டா எப்பிடி? வேலப்பர் கோயில் சாமியக்கூடவா ஏலத்துல எடுத்துக்கிட்டீங்க? நாங்க உருவாக்கின கோயில். அது எங்களுக்குத்தான் சொந்தம்”னு மைனர் சிரிச்சுக்கிட்டே கேட்டாரு.

பட்டேல் திரும்பி குர்த் துரையைப் பாத்தாரு. உடனே குர்த், “விட்டுக்குடுக்கலாம். இந்தக் கோயில் பழைய ஜமீன்தார்களின் தெய்வம் என்று மக்கள் என்னிடம் சொன்னார்கள்”னு சொன்னாரு.

இப்பிடித்தான் வேலப்பர் கோயிலோட உண்டியல் வசூல் அம்புட்டும் மைனர் பாண்டியருக்கு வந்து சேந்துச்சு.

புலித்தோல் சாமியார் சொன்னது சரியா நடந்துபோச்சுனு மைனர் சந்தோஷப்பட்டாரு. அந்தச் சாமியாரை அதுக்குப் பெறகு பூரணமா நம்ப ஆரம்பிச்சாரு. அடிக்கொசரம் வரப்போக இருந்தாரு.

அந்த சந்தோஷத்துல வேலப்பர தரிசனம் செய்றதுக்குப் படியில்லாத பாதையில கஷ்டப்பட்டு மேல ஏறிக்கிட்டிருந்தாரு மைனரு. நரச்ச முடிக் கெழவி ஒருத்தி, மைனர் பாண்டியருக்குப் பக்கத்துல வந்து, “பாதிக் கெணறுதான் தாண்டியிருக் கீங்க... மீதிக் கெணற இந்த ஜென்மத்துல நீங்க தாண்ட முடியாது சாமீ..!”னு அமைதியா சொன்னா.

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு