Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 36

வருச நாட்டு ஜமீன் கதை - 36
வருச நாட்டு ஜமீன் கதை - 36

வேலுத்தாயம்மா என்ன நெனச்சாங்களோ தெரியல, துணிமணிகள எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக்கிட்டு பாலகோம்பைக்குப் பொறப்பட்டுப் போனாங்க.

கிறுக்கு துரை இறந்த பெறகு ஒரு நாப்பது அம்பது வருஷமா வேலப்பர் கோயில யாரும் சரியா கவனிச்ச மாதிரி தெரியல. புதர் மண்டிக் கெடந்தது. இடையில வந்த பஞ்சத்துனால பளியர்களும் வேற வேற மலைகளுக்குப் போயிட்டு இப்போ ஒவ்வொரு குடும்பமா வந்து சேந்தாங்க.

மைனர் பாண்டியரும் ரொம்ப நாளைக்குப் பெறகு, அப்பதான் வேலப்பர் கோயிலுக்கு வந்திருக்காரு.

வந்த எடத்துல நரச்ச முடிக் கெழவி ஒருத்தி, “பாதிக்கெணறத்தான் தாண்டியிருக்கீங்க. மீதிக் கெணற இந்த ஜென்மத்துல தாண்ட முடியாது”னு சொன்னதும் மைனருக்கு ஒண்ணும் புரியல.

அந்தக் கெழவிக்குப் பக்கத்துலயே நின்னுக்கிட்டிருந்த பளியர்க அந்தக் கெழவி யாருனு எடுத்துச் சொன்னதும் மைனருக்கு ‘பகீர்’னு ஆகிப்போச்சு.

அவ பளியஞ்சித்தனோட சம்சாரம் மீனாட்சி! கிட்டத்தட்ட நூறு வயசு இருக்கும். நல்ல கண் பார்வையோட, கூன் விழாம, திடகாத்திரமா, செக்கு மாதிரி இருந்தா. மைனரும் வேலுச்சாமி நாயக்கரும் தெகச்சுப் போயி பாத்துக்கிட்டு இருந்தாங்க.

“பஞ்சம் பொழைக்கச் சதுரகிரி மலைக்குப் போனவங்க அம்பது வருஷம் கழிச்சு இப்பத்தான் வந்தோம் சாமீ! உங்க ஜமீன ஏலத்துல எடுத்தவங்க ‘காடு வெட்டுற வேலைக்கு எங்க பளியர்கதான் வேணும்’னு சொன்னதால இங்க வந்தோம். ஜமீன்தாரு உங்க முகத்தையும் பாக்காம செத்துப் போயிட்டாருனு சொன்னாங்க. எனக்கு மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. என்ன செய்யிறது சாமீ... சாபம்னு ஒண்ணு இருக்கே!”னு கவலையா சொன்னா மீனாட்சி.

உடனே மைனர், “அதெல்லாம் அந்தக் காலம். சாபமெல்லாம் பலிக்கிற காலம் மலையேறிப் போச்சு”னு தெனாவட்டா பதில் சொன்னாரு.

“அப்பிடிச் சொல்லாதீங்க சாமீ. என் புருஷன் பளியஞ்சித்தன் குடுத்த சாபத்துக்குப் பரிகாரமோ, பிராயச்சித்தமோ கெடையாது. யார் யாரோ செஞ்ச பாவம்... இப்போ அந்தப் பழிய நீங்க சொமக்க வேண்டியதாப் போச்சு. ரெண்டு ஜமீன்தாரும் கொஞ்ச வயசுல செத்தது மாதிரி நீங்களும்...”

“ஏ கெழவி... கொஞ்சம் நிறுத்து. கொஞ்ச வயசுல சாகப்போற ஆளு நானில்ல. பூரண ஆயுசோட நூறு வயசு வரைக்கும் இருப்பேன். நான் கல்யாணமே செய்துக்கப்போறதில்லை. எனக்கு ஜமீனே இல்லேன்னு ஆகிப்போச்சு. இந்த ஜமீன் திரும்பவும் எப்ப என் கைக்கு வருதோ அப்பத்தான் நான் கல்யாணம் செய்துக்கப் போறேன். அதுக்குப் பெறகு சொகபோகமா கொழந்தை குட்டியோட வாழத்தான் போறேன்!”னு மைனர் சொல்லி முடிக்கறதுக்குள்ள -

“அது நடக்காது சாமி... என் புருசன் குடுத்த சாபம் வீண்போகாது. உங்க கடைசிக் காலத்த இங்க வந்து எங்க பளியர்க கூடத்தான் வாழப்போறீங்க. இது சத்தியம். அதுக்கு இதோ சாட்சி!”னு சொல்லி மீனாட்சி ஆகாசத்தைப் பாத்து கைய உசத்துனதும் பெரிய இடி இடிச்சுது. வானத்தப் பொத்துக்கிட்டு கொஞ்ச நேரத்துல மழை பெய்ய ஆரம்பிச்சது.

வருச நாட்டு ஜமீன் கதை - 36
வருச நாட்டு ஜமீன் கதை - 36

மழைனாலும் மழை... அந்த வருஷம் பேஞ்ச மாதிரி மழை இதுவரைக்கும் இல்ல. வைகைல வெள்ளம் பெருகி, பெரிய பெரிய மரங்களையெல்லாம் வேரோட சாச்சு கரை பொரண்டு ஓட ஆரம்பிச்சது.

இப்பிடிப் பருவங்கள் மாறிப் போச்சு.

உத்தமபாளையம் மக்கா ராவுத்தர், குர்த் துரைகிட்ட அடிக்கொசரம் தன்னோட நெலத்துக்குப் பட்டா வேணும்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருந்தாரு. ஆனா, குர்த் துரை பிடி நழுவாம பட்டா குடுக்கிறேன்... குடுக்கிறேன்னு சொல்லி ஏமாத்திக் கிட்டே இருந்தாரு. கோபமாகிப்போன ராவுத்தர் ஒரு முடிவுக்கு வந்தாரு.

கைவிட்டுப்போன ஜமீனை மீட்டுப் போடலாம்னு மைனருக்காக மக்கா ராவுத்தர் மதுரை கோர்ட்ல வழக்குப் போட்டாரு. அந்த விசாரணைக்காக மக்கா ராவுத்தரும், வேலுச்சாமி நாயக்கரும் மாறி மாறி மதுரைக்குப் போயிட்டு வந்துக்கிட்டு இருந்தாங்க.

இதுக்கு இடையில, மைனருக்கு வேலப்பர் கோயில விட்டுக்கொடுத்த மாதிரி வேற எந்த உதியும் செய்யக் கூடாதுனு அப்பாவு பிள்ளை குர்த் துரைகிட்ட சொல்லிக்கிட்டே இருந்தாரு. மைனருக்கு இனி எந்தச் சொத்துமே கிடைக்கவிடாம பம்பாய் படேலும் குர்த் துரையும் சேந்து செய்துக்கிட்டிருக்கிற சதி அப்பாவு பிள்ளைக்கே தெரியாது. எட்டயபுரம் ராஜாவும் மைனரோட சொந்த ஜாதிக்காரங்கதான். இருந்தாலும் வழக்கு விஷயமா மைனருக்கு அந்த ராஜா கடைசி வரைக்கும் எந்த உதவியும் செய்யல.

1934-ல எட்டயபுரம் ராஜா நோய் வாய்ப்பட்டு திடீர்னு இறந்துட்டாரு. அவருக்குப் பெறகு எட்டயபுரம் ராஜாவா பதவிக்கு வந்தவரு ராஜா ஜெகவீர ராமமுத்துக்குமார வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர் ஐயன். அப்போ அவருக்கு வயசு இருவதுதான். கண்டமனூர் பக்கம் எப்பவாவதுதான் வருவாரு. அதனால அப்பாவுபிள்ளை கொஞ்சம் செல்வாக்கோட தாட்டியம் செஞ்சுக் கிட்டிருந்தாரு.

இப்பிடி இருந்த நேரத்துலதான் கிறுக்கு துரை ராமகிருஷ்ண நாயக்கர் பேர்ல ‘ராமகிருஷ்ணாபுரம்’னு இருந்த ஒரு கிராமத்தோட பேரை ‘எட்டப்ப ராஜாபுரம்’னு மாத்தி வெச்சாரு அப்பாவுபிள்ளை. இப்போ எட்டயபுரம் ராஜாகிட்ட இருக்கிறதால அந்த விசுவாசத்தக் காட்டணும்னு நெனச்சு அப்பிடிப் பேர மாத்தி வெச்சாரு.

பேரு மாத்தின சங்கதிய மைனர் பாண்டியருக்கு யாரோ எடுத்துச் சொன்னாங்க.

அம்புட்டுதான்... வில்வண்டிய பூட்டிக்கிட்டு, சேவகமார்களோட புழுதி பறக்க அந்தக் கிராமத்துக்குள்ள நொழஞ்சாரு.

ரெண்டு கழுதைகள ஓட்டிக்கிட்டு முதுகுல அழுக்குத் துணி மூட்டையச் சொமந்துக்கிட்டு வந்த ஒருத்தன், “வாங்க சாமீ..!”னு கையெடுத்துக் கும்பிட்டான்.

கைல சவுக்கோட கோவமா எறங்கினாரு மைனர். “ஏண்டா... நீயெல்லாம் ‘வாங்க’னு கூப்பிட்டு நான் இந்த ஊருக்கு வரணுமா? எங்க தாத்தாவோட பேர மாத்தும்போது எதிர்த்துக் கேக்காம நீங்க அம்புட்டு பேரும் எங்கடா போயிருந்தீங்க?”னு கேட்டுக்கிட்டே அந்தச் சலவைக் காரனை சவுக்கால விளாசினாரு.

அவனத் தொவட்டி துவம்சம் செய்ய... பொதியோட இருந்த கழுதைக ரெண்டும் ‘காள் காள்’னு கத்திக்கிட்டு ஓட... ஊர்ப் பெரியவங்க நாயக்கமார்க ஓடிவந்து மைனரச் சமாதானப்படுத்தினாங்க.

மைனரோட கோவத்துக்குக் காரணம் தெரிஞ்சுக்கிட்டாங்க. கிறுக்கு துரை காலத்துல வந்த நாயக்கர்கள் நஞ்சை, புஞ்சைனு இப்போ நல்ல வசதியோட இருந்ததால மைனருக்குச் செலவுக்குப் பணமும் நெல்லு, ஆடு, கோழி இப்பிடி நெறையக் குடுத்து, சமாதானப் படுத்தினாங்க.

இப்பிடி அறுவத்துநாலு கிராமத்துலயும் மைனர் பாண்டியருக்கு ஒரு பயத்தோட மரியாதையும் குடுத்து வந்தாங்க.

சேந்த பணத்தை மைனர் தன்கிட்ட வந்துபோன பொண்ணுங்களுக்குக் கொடுப்பாரு. ஆடு, கோழி எல்லாத்தையும் சேவகக்காரங்ககிட்டயே குடுத்து, உரிச்சு உப்புக்கண்டம் போட்டு திங்கச் சொல்லுவாரு.

அதனால எதுக்கும் துணிஞ்ச பட்டாளம் மாதிரி மைனரச் சுத்தி எப்பவும் அம்பது, அறுபது சேவகக்காரங்க வந்துகிட்டே இருப்பாங்க. மைனருக்கு எதிரா பிராது குடுக்க எல்லோருக்குமே பயம்.

நெல்லு அறுவடை நடந்தா வண்டிக்கு ஒரு மூடை தெப்பம்பட்டி அரண்மனைக்கு அனுப்பி வெச்சாகணும்னு வாய்ச் சட்டம் போட்டாரு மைனரு.

வயல்பட்டிக்கும் சத்திரப்பட்டிக்கும் போய் குப்புசாமி நாயக்கர்கிட்டயும், பொம்மையசாமி நாயக்கர்கிட்டயும் தங்கமணிச் சம்பா நெல்லு வாங்கி வருவாரு. ரெண்டு பேரும் வீரபாண்டிக் கோயிலுக்கு மொதமைக்காரங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 36
வருச நாட்டு ஜமீன் கதை - 36

அழகாபுரி கிராமத்துல இருந்த சுப்பஞ் செட்டியாரு, “மைனர் என்ன மன்னரா, ஜமீன்தாரா? அவருக்கு எதுக்கு நெல்லு மூட்டை குடுக்கணும்?”னு வீராப்பா பேசி, அந்த வருச மகசூல்ல ஒரு நெல்லு மணிகூட குடுக்க முடியாதுனு சொல்லிட்டாரு.

மைனருக்குக் கோவம் வந்து, “செட்டியாரோட வயலுக்கே போயி அத்தன வண்டி நெல்லு மூட்டை களையும் அரண்மனைக்குக் கொண்டு வாங்க. அழகாபுரிப் பொண்ணுகள அரண்மனைக்குத் தூக்கிட்டு வாங்கடா!”னு உத்தரவு போட்டாரு.

வண்டிகளோட எரநூறு மூட்ட நெல்லும் ரெண்டு மூணு பொண்ணுகளும் அரண்மனைக்கு வந்து சேந்து போச்சு.

அதுக்குப் பெறகு சுப்பஞ் செட்டியாரு மைனர்கிட்ட வந்து கெஞ்சிக் கெதறி அம்பது மூட்ட நெல்லையும் பத்து ஆடுகளையும் தந்துட்டு, எல்லாத்தையும் மீட்டுக்கிட்டுப் போனாரு.

இப்பிடி மைனர் செய்ற அட்டகாசத்த எல்லாம் பொறுக்க முடியாத முதலாளிக, ஜமீன்தாரிணி வேலுத்தாயம்மாகிட்ட சொல்லி, வருத்தப்பட்டாங்க.

ஒரு நாள், மொட்டனூத்துல வேலுத்தாயம்மாவுக்கும் வேலுச்சாமி நாயக்கருக்கும் பெரிய சண்டையே வந்துருச்சு.

“பாண்டியன கெடுத்துக் குட்டிச் சுவராக்குறது நீங்கதான். எத்தன பொண்ணுக ஊரைவிட்டு ஓடிப் போறாங்க தெரியுமா? ஜமீனே கைவிட்டுப் போயிருச்சு. இருக்கிற மரியாதையக் காப்பாத்திக்கிட்டு, என் மகனையாவது நல்லபடியா கொண்டு வரலாம்னு நெனச்சேன். அதுக்கு நீங்கதான் எடஞ்சலா இருக்கீங்க..!”னு வேலுத்தாயம்மா கத்தினாங்க.

அதுக்கு வேலுச்சாமி நாயக்கர், “கொஞ்சம் பொறுமையா இருங்க. நம்ம ஜமீன் நெலங்க திரும்பவும் நம்ம கைக்கே வந்துரும். இப்பவும் நம்ம பாண்டியருதான் ஜமீன்தார். எதுக்கு வீணா கவலைப்படுறீங்க?”னு பதிலுக்குச் சொன்னாரு.

“பாண்டியனுக்கு ஒரு கல்யாணத்த செஞ்சு வெச்சா ஒழுங்கா இருப்பான். அத விட்டுப்போட்டு பொண்ணுங்க ளோட கூடிக் கொட்டமடிச்சிக்கிட்டு இருக்கான்.”

“கல்யாணமே வேணாம்னு சொல்றாரே... நான் என்ன செய்ய..?”

“எல்லாம் என்னோட தலையெழுத்து. பாலகோம்பைக்காரங்க அப்பவே என் மகனைக் கூப்பிட்டுக்கிட்டு வாங்கனு சொன்னாங்க. நான்தான் அவங்க பேச்ச கேக்காம போயிட்டேன்”னு சொல்லிக்கிட்டே தலையில அடிச்சுக் கிட்டாங்க.

வேலுத்தாயம்மா என்ன நெனச்சாங்களோ தெரியல, துணிமணிகள எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக்கிட்டு பாலகோம்பைக்குப் பொறப்பட்டுப் போனாங்க.

பங்காளி ராமகிருஷ்ணசாமியோட பேரன் துரைக்கண்ணுவைக் கூப்பிட்டுக்கிட்டு கண்டமனூர் ஜமீன் எல்லையைக் கடந்து தொட்டப்ப நாயக்கனூர் போய்ச் சேர்ந்துட்டாங்க.

அந்த நேரத்துலதான் கண்டமனூர் ஜமீன் நிர்வாகஸ்தரா இருந்த குர்த் துரை மாறி... புதுசா ‘பிரஞ்சுமேன்’னு ஒரு வெள்ளைக்கார துரை வந்தாரு.

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு