Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 37

வருச நாட்டு ஜமீன் கதை - 37
வருச நாட்டு ஜமீன் கதை - 37

கட்டபொம்மு வேஷங்கட்டின மைனர் பாண்டியரு பட்டாக்கத்திய உருவிக்கிட்டே மேடையில வந்து குதிச்சாரு.

பம்பாய் பட்டேலுக்கு கண்டமனூர் ஜமீன் மூலமா எதிர்பார்த்ததவிட கொள்ளை லாபம் கெடச்சது. 1935-ல துவாரகா, பிருந்தா, அருணா, வசந்தா - இப்பிடிப் பேர்ல ஏகப்பட்ட எஸ்டேட்டுக வளந்துபோச்சு.

அதே சமயத்துல குடியானவங்களுக்காக மலை நெலங்களச் சீர்திருத்தி பயிர் பருவஞ் செய்றதுக்கு நீர்ப்பாசனக் கால்வாய், திட்டு, திடல், குளங்கள், கண்மாய்... இப்பிடி ஏகப்பட்ட செலவும் கூடிப்போச்சு.

நிர்வாகஸ்தர் குர்த் துரை கடைசியா மூணரை லட்ச ரூவாய்க்கு ஒரு திட்டத்த வரஞ்சு குடுத்தாரு. வைகை நதிக்குக் குறுக்கால ஒரு அணை கட்டினா, அதனால ஒரு அஞ்சாயிரம் ஆறாயிரம் ஏக்கருக்குப் பாசன வசதி கெடைக்கும்னு எழுதிக் குடுத்தாரு.

பம்பாய் பட்டேல், ‘ரோசனை செய்றேன்’னு சொல்லிட்டு, அந்தத் திட்டத்த மூலைல தூக்கிப் போட்டுட்டாரு. அணைக்குக் கீழ தன்னோட நெலங்க இல்லாததால, தன்னோட ஜமீனுக்கு எந்த உபயோகமும் இல்லனு முடிவு செஞ்சுதான் தூக்கிப் போட்டுட்டாரு.

நொந்துபோன குர்த் துரை, உடம்புக்குச் சுகமில்லைனு சொல்லி ஓய்வுக்காக கொடைக்கானல் மலைக்குப் போய்ட்டாரு. அங்கயே தங்கியிருந்து, வருச நாட்டு மலையைப் பத்தியும் சனங்களோட ஜீவனத்த பத்தியும் நாலு புஸ்தகம் எழுதினாரு.

அதுக்குப் பெறகுதான் ஜமீன் நிர்வாகஸ்தரா ‘பிரஞ்சுமேன்’னு ஒரு பூனக்கண்ணு துரை வந்தாரு. அடாதடியான ஆளு. ஆறடி உசரத்துக்கு ஆஜானுபாகுவா இருப்பாரு.

எட்டயபுரம் - வள்ளல் நதி சப்-டிவிஷன் நிர்வாகஸ்தர் அப்பாவு பிள்ளை, ஆரம்பத்துலயே பிரஞ்சுமேன் துரையைச் சந்திச்சு நேர்முகஞ் செய்துக்கிட்டாரு.

குர்த் துரை, மைனர் பாண்டியருக்கு ரொம்ப சலுகைகள் செய்து குடுத்த விவரங்களையெல்லாம் சொன்னாரு.

“மைனர் பாண்டியனுக்கு ஏன் பயப்படுகிறார்கள்..?”னு பிரஞ்சுமேன் அதிகாரத் தோரணையில கேட்டாரு.

அதுக்கு அப்பாவுபிள்ளை, “ஜமீன் முழுக்க ஒரு காலத்துல அவங்க பரம்பரைக்குச் சொந்தமா இருந்துச்சு. நல்ல செல்வாக்கோட இருந்தவங்கதான். அவங்களோட ஆடம்பரச் செலவுனாலும் வருமானத்த மிஞ்சின கடன்களாலயும் ஜமீன் கைவிட்டுப் போயிருச்சு. இப்பவும் உங்க ஜமீனை மீட்டுப் போடலாம்னு மதுரை கோர்ட்ல வழக்குப் போட்டிருக்காங்க. திரும்பவும் ஜமீன்தாரா வந்துருவாருனு ஊர்ச் சனங்கள பயமுறுத்தித் தன் கட்டுப்பாட்ல வெச்சிருக்காரு. அவரச் சுத்தி எப்பவும் சேவகமார்கள் கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். வௌச்சல்ல மட்டுமில்ல... ஆடு, மாடு இதிலெல்லாம் பங்கு கேப்பாரு... பயந்துக்கிட்டுக் குடுத்துருவாங்க”னு சொன்னாரு.

“மைனர் பாண்டியன் கொடுமைப் படுத்துவதாக மதுரை கலெக்டரிடம் மக்கள் மனு கொடுக்கலாமே?”னு துரை நெத்தியச் சுருக்கினாரு.

“ஐயையோ! அப்புறம் அந்த மைனர்கிட்ட யாரு சவுக்கடி வாங்குறது..? வயசு வித்தியாசமெல்லாம் பாக்கமாட்டாரு. யாரையும் கூசாம அடிப்பாரு. இப்பவும் உங்க ஜமீன்ல, மலையில வெளையிற புளியம்பழத்துல பாதிய மைனர் கொண்டு வந்துருவாரு. அதைக்கேக்க யாரு இருக்கா?”னு சொல்லி, அரைக்கண்ணால துரையப் பாத்தாரு அப்பாவு பிள்ளை.

“நான் கேட்கத்தான் போகிறேன்!”

“அதானே... உங்களப் பாத்தா, யாருக்கும் எதுக்கும் பயமில்லாதவர் போலதான் தெரியுது!’

“சரியாகச் சொன்னீர்கள். பயந்தவனாக இருந்தால் இந்தியாவுக்கே வந்திருக்க மாட்டேன்...”

“உங்களுக்கு ஆபத்து வராமப் பாத்துக்கங்க... குர்த் துரைகிட்ட என் மகன் செல்லக்குமார் பிள்ளைக்கு, உங்க ஜமீன் எஸ்டேட்டுல வேலை கேட்டிருந்தேன். மைனர் சொல்லித்தான் குரத் துரை முடியாதுனு சொல்லிட்டாரு. நீங்க இப்ப மனசு வெச்சா முடியும்...”

“சரி... வேலை போட்டுக் கொடுப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. முதல் வேலையாக மைனரை அடக்கியாக வேண்டும். நானே மைனர் பாண்டியனை அழைத்து, எச்சரித்து அனுப்பட்டுமா..? இல்லை... நீங்களே புத்திமதி சொல்கிறீர்களா..?”

“நா இதுவரைக்கும் சொன்னத நீங்க காதுல வாங்கிக்கலன்னு தெரியுது. மைனரக் கூப்பிட்டா வரமாட்டாரு. யாருமே அவருக்குப் புத்திமதியும் சொல்ல முடியாது. நான் மைனருக்கு எடஞ்சலா இருக்கேன்னு நெனச்சு, என் மேல கோவமாத்தான் இருக்காரு. நான் எட்டயபுர ராஜாகிட்ட வேலை செய்றதால, ராஜாவுக்கு ஒத்தாசையா அவரோட சொல் பேச்சு கேட்டுத்தான் நடக்க முடியும். மகாராஜா எனக்கு பவுராபடரணி குடுத்திருக்காரு. என்னய செல்லமா ‘திவான்’னு கூப்பிடுவாரு. எனக்குப் பெறகு என்னோட இன்னொரு மகன் வேலுப்பிள்ளைதான், எங்க ஜமீன் நிர்வாகஸ்தர். இதனாலதான் மைனர் பாண்டியனுக்கு என் மேல எரிச்சலா இருக்கும். நாளைக்குச் சாயங்காலம் தெப்பம்பட்டியில மைனர் ஏதோ நாடகம் போடுறாராம். நேர்ல போய் பாத்தா தான் அவரோட குணாதிசயங்கள் தெரியும்”னு சொன்னாரு அப்பாவு பிள்ளை.

வருச நாட்டு ஜமீன் கதை - 37
வருச நாட்டு ஜமீன் கதை - 37

நம்ம தேசத்துக்கு சுயராச்சியம் வேணும்னு 1920-லயிருந்து 1942 வரைக்கும் உச்சகட்ட போராட்டமா இருந்துச்சு. பிரசங்கம் செய்துகிட்டிருந்த தலைவர்கள் ஜெயிலுக்குப் போனாங்க. தொண்டர்கள் வீட்டவிட்டு ஓடிப்போயி, தலமறவு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க.

வெளிப்படையா வெள்ளக்காரனத் திட்டிப்பேச முடியாதுங்கறதால நாடகம், பாட்டு, பஜன... இப்பிடி நூதனமா சுயராச்சியப் பிரசாரத்துல எறங்கிட்டாங்க.

அந்தக் காலத்துல நாடகத்தோட சக்தி என்னனு வெள்ளக்காரனுக்குத் தெரிஞ்சதால, 1876-லயே ‘நாடகச் சட்டம்’னு கொண்டு வந்தாங்க. எந்த நாடகம் போட்டாலும் சர்க்காரோட அனுமதியில்லாம போட முடியாது. ஒரு பக்கம் பாட்டு, நாடகத்துக்கெல்லாம் தடை போட்டு... பாடுனவங்க, வேஷங் கட்டினவங்க எல்லாத்தையும் ஜெயிலுக்கு அனுப்பி, உப்பில்லாத களிச் சோறு திங்கச் சொன்னாங்க.

கிராமங்களுக்கெல்லாம் சுயராச்சியப் போராட்டம் பத்தி அவ்வளவா தெரியாது.

எட்டயபுரம் மகாராஜா மாதிரி சில ஜமீன்தார்கள், வெள்ளக்காரனுக்குச் சாதகமாகவும் சில ஜமீன்தார்க ‘ஆத்துல ஒரு காலு சேத்துல ஒரு காலு’னு பட்டும் படாமவும் இருந்த காலம்.

நாடகத்துக்கு பாஸ்கர தாசு விடுதலைப் பாட்டு எழுதுவாரு. விசுவநாததாசு, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் இவங்கெல்லாம் மேடையில பாடிக்கிட்டிருந்த காலம். தெலுங்கு கீர்த்தனைகள் எல்லாம் கொஞ்சங் கொஞ்சமா மறஞ்சு, தமிழ் பாட்டுக நெறயப் பாட ஆரம்பிச்சாங்க.

வள்ளி திருமணம் நாடகம் நடக்கும். வண்ண மயில்மேல உக்காந்து முருகக் கடவுள் ஏழரைக் கட்டையில,

சுத்த சுதேசித் துணியே

சொகுசான உடையே - சுவாமி

சுயராச்சியம் வருவிப்பது

தொண்டர்களின் படையே...

கொடுப்பது எப்போ சொல்லு..? - சுயராச்சியம்

கொடுப்பது எப்போ சொல்லு..?

- னு பாடுவாரு.

அதுக்கு வள்ளிக் குறத்தி,

ஆலோலங்கடிசோ...

வெள்ள வெள்ளக் கொக்குகளா

இங்கிலாந்து பட்சிகளா

சொந்த நாட்டத் தேடிப் போங்க

பரங்கித் தலப் பட்சிகளா...

ஆலோலங்கடிசோ...

- னு கவண் வீசிப் பாடுவா.

ராமாயண நாடகத்துல மரவுரி தரிச்ச ராமர், கானகம் போவாரு. உடனே பரதன், “இந்திய மகாசனங்களே..! வெள்ளையர் ஆதிக்கம் இருக்கும்போது எனதருமை அண்ணன் சீதாப்பிராட்டி யாருடன் இந்த நாட்டில் எப்படிக் காலந்தள்ளுவாரு? ஆகவே, ராம ராச்சியம் வரவேண்டாமா? வெள்ளக்காரன விரட்டவேண்டாமா?”னு கேப்பாரு.

இப்பிடித்தான் கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, தேவராட்டம், தெருக்கூத்து எல்லாத்துலயும் கட்டபொம்மு கதை போடுவாங்க.

அன்னிக்குத் தெப்பம்பட்டிக்கு மதுரையிலிருந்து பத்மாசினி அம்மையார் வந்தாங்க. நம்ம மைனர்கிட்ட பேசினாங்க.

“நாங்க தேசிய பஜனக் கோஷ்டியைச் சேர்ந்தவங்க. உங்க ஆதரவோட பிரசாரம் செய்யப்போறோம்”னு சொன்னாங்க.

“என்ன பாட்டுப் பாடப்போறீங்க?”னு கேட்டாரு மைனர்.

“பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பாடுவோம். ராட்டினமே காந்தி கைபாணமே நம்மைக் காக்கும் பிரமாணமே-னு பாடுவோம்.”

“இப்பிடியெல்லாம் பாடுனா, எங்காளுக தூங்கிருவானுங்க. எங்க ராசகம்பளத்து கட்டபொம்மு நாடகம் போடமுடியுமா?”னு கேட்டாரு மைனர்.

“வேஷத்துக்கு ஆளு இல்லீங்க... அதுவுமில்லாம அந்த நாடகம் போடக் கூடாதுனு சர்க்காரு உத்தரவு இருக்கே?”

“அதப்பத்தி நீங்க எதுக்குக் கவலைப்படுறீங்க? நானே கட்ட பொம்முவா வேஷம் போட்டு, பாட்டு படிக்கிறேன். சம்மதமானா இங்க நடத்தலாம்... இல்லனா வீட்டுக்குப் போகலாம்”னு காட்டமா சொன்னாரு.

இப்படியாகத்தான் அன்னிக்குச் சாயங்காலம் தெப்பம்பட்டியில கட்டபொம்மு நாடகம் போட்டாங்க.

மேடையில என்னவோ மொதல்ல பஜனப் பாட்டுதான் பாடிக்கிட்டிருந் தாங்க. கொஞ்ச நேரத்துல பிரஞ்சுமேன் துரையும், அப்பாவு பிள்ளையும் வந்து சேந்ததும்... மதுரையிலிருந்து கலெக்டர் துரைதான் வந்திருக்காருனு நெனச்சு சனங்க தெறிச்சு ஓட ஆரம்பிச்சாங்க. அப்புறமாத்தான் தெரிஞ்சது... புதுசா வந்தவரு கண்டமனூர் நிர்வாகஸ்தர்னு.

கட்டபொம்மு வேஷங்கட்டின மைனர் பாண்டியரு பட்டாக்கத்திய உருவிக்கிட்டே மேடையில வந்து குதிச்சாரு.

வாராண்டா வாராண்டா வெள்ளக்காரன்

வரட்டும் கும்பினித் தொப்பிக்காரன்

வானம் பொழியுது பூமி வௌயுது

கும்பினிக்கு ஏண்டா தீர்வைப் பணம்?

-னு கத்தியச் சுழட்டிப் பாடினாரு.

அப்பாவு பிள்ளை பிரஞ்சுமேன் கிட்ட, “நான் சொன்னேன் இல்லையா... அந்த மைனர்தான், உங்களைத் திட்டிப் பாடுறாரு!”னு சொன்னாரு.

“நாடகங்களுக்குத் தடை இருக்கின்றதே... நாடகத்தை நிறுத்தச் சொல்ல முடியாதா?”

“அதானே முடியாது... கூட்டத்தச் சுத்தி தடிகளோட இருக்கிறது மைனரோட சேவகக்காரங்க... பொறுமையா கவனிங்க...”

கட்டபொம்முவா நின்ன மைனரு, அப்பாவு பிள்ளைப் பக்கம் கைய நீட்டி, “எட்டப்பா... உனக்கும் ஒரு பாட்டு வெச்சிருக்கேன்...

வெள்ளக்காரன் போட்ட வெள்ளிப் பணம் - இங்க

வேடிக்கை காட்டுது கொள்ளைப் பணம்.

வெள்ளிப் பணத்துக்கு ஆசைப்பட்டு

நீ வேஷம் போடாத ஆண்டியப்பா

-னு கத்தியச் சுழட்டிக் குத்துற மாதிரி மேடைய பலமா உதச்சாரு.

சனங்க பிரஞ்சுமேன பாத்துச் சிரிக்க ஆரம்பிச்சாங்க.

மைனர் விடாப்பிடியா, “ஏ... வெள்ளக்காரா... உனக்கெதுக்குடா வரி, வட்டி, கிஸ்தி..? எங்க நெலத்துல நெல்லு வௌயுது... எங்க புளியமரத்துல புளியங்கா காய்க்குது... எங்களுக்குத்தான்டா சொந்தம்... எங்க சனங்களுக்குத்தான்டா சொந்தம்... பாளையம் உங்க பாட்டன் சொத்தா..? பட்டயத்துக்கு நீ என்ன பஞ்சாயத்தா..? சிங்கத்துக்கு நரி பட்டம் கட்டுறதா..? ஓடிப்போடா வெள்ளக்காரா..!”னு வாய்க்கு வந்தபடியெல்லாம் வசனம் பேசினாரு.

கோவமா இருந்த பிரஞ்சுமேனைச் சமாதானப்படுத்தி, அப்பாவு பிள்ளை கூப்பிட்டுக்கிட்டுப் போயிட்டாரு.

மைனர் பாண்டியருக்கு அப்போ சந்தோஷமாத்தான் இருந்துச்சு. ஆனா, அவருக்கு ஒரு பெரிய தோல்வி காத்துக்கிட்டு இருக்குனு அப்போ தெரியல.

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு