Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 38

வருச நாட்டு ஜமீன் கதை - 38
வருச நாட்டு ஜமீன் கதை - 38

எல்லாருமே மதியம் சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சுப் பார்த்தா மைனர் பாண்டியர் மட்டும் காணாமப் போயிட்டாரு.

அன்னிக்கு புதங்கிழம.

மைனர் பாண்டியரோட அந்தஸ்து, கவுரத, ஜமீனோட சொத்து சுகம் எல்லாமே, அன்னிக்கு மதுரை கோர்ட்ல நீதிபதி சொல்லப்போற தீர்ப்புலதான் அடங்கியிருக்கு!

‘சாயங்காலம் நாலு மணிக்கு தீர்ப்பு சொல்லப்போறேன். அதனால ரெண்டு தரப்பு ஆளுகளும் வந்து சேரணும்’னு கண்டிப்பா சொல்லியிருந்தாரு நீதிபதி.

ஜமீன் அந்தஸ்து கிடைக்காம போனாக்கூட பம்பாய் பட்டேல் அனுபவிச்சுக்கிட்டிருக்கற நெலங்கள் மட்டுமாவது மைனர் பாண்டியருக்குக் கெடைக்கும்னு எல்லாருமே பேசிக்கிட்டாங்க.

அதுக்காகத்தான் மைனர் பாண்டியரு, மக்கா ராவுத்தர், தொட்டப்ப நாயக்கனூர் ஜமீன்தாரு, எரசக்க நாயக்கனூர் ஜமீன்தாரு வேலுச்சாமி நாயக்கர், சீப்பாலக் கோட்டை கிச்சம நாயக்கர், நாட்டாமை லட்சுமண நாயக்கர் இப்பிடி நெறைய பேரு மதுரைக்கு வந்து அங்க இருக்கற போடி ஜமீன் பங்களாவுல தங்கியிருந்தாங்க.

எல்லாருமே மதியம் சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சுப் பார்த்தா மைனர் பாண்டியர் மட்டும் காணாமப் போயிட்டாரு.

எல்லாத் தெருவுலயும் தேடிப் பாத்தாங்க. மாசி வீதி, ரத வீதியச் சுத்தியும் மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ளயும் தேடிப் பாத்தாங்க. எங்கயுமே கண்ணுக்குத் தட்டுப்படல.

மக்கா ராவுத்தர், ‘இந்த வழக்குதான் மானப் பிரச்னை’னு சொல்லி மைனருக்காகத்தான் செலவு செய்துக்கிட்டு இருக்காரு. அவரும் துடிச்சுப் போயிட்டாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 38
வருச நாட்டு ஜமீன் கதை - 38

நாலு மணி ஆச்சு!

பம்பாய் பட்டேல், பிரஞ்சுமேன், சாட்சிக்கு அப்பாவு பிள்ளையும் கோர்ட்டுக்கு வந்து சேந்துட்டாங்க.

மைனர் கடைசிவரைக்கும் வந்து சேரல.

நீதிபதி தீர்ப்பு சொன்னாரு. “ஆக, கண்டமனூர் ஜமீன் அந்தஸ்து பம்பாய் பட்டேல் சகோதரர்களுக்குததான் சொந்தம். அவங்களோட பரிபாலனத்துலதான் ஏழு ஊர்லயும் கிஸ்தி, தீர்வைப் பணம் வசூல் நடக்கணும்.”

அதுமட்டுமில்ல... “லேட் ஜமீன்தார் சாமியப்ப நாயக்கரின் மகன் ‘மைனர்’ கதிர்வேல்சாமி பாண்டியன் கோர்ட்டுக்கு நேரடியா வந்து தனக்குள்ள சொத்தைக் கேட்காததால ஜமீன் நெலங்கள் பம்பாய் பட்டேலுக்குத்தான் சொந்தம்”னு தீர்ப்பு சொல்லிட்டாரு.

ஜமீனச் சேந்த அத்தன பேருக்குமே அதிர்ச்சியா இருந்துச்சு. அன்னிக்கு ராத்திரி பூராவும் மைனர் பாண்டியரத் தேடித் தேடிக் களச்சுப்போயி, எல்லாருமே மதுரையிலிருந்து திரும்பிட்டாங்க.

மைனர் பாண்டியர் எங்கதான் போனாரு?

தீர்ப்பு சொல்ற அன்னிக்கு மதியம் எல்லாரும் தூங்கிக்கிட்டு இருந்தப்ப... பாண்டியர் இருந்த எடத்துக்கு ஒரு சாமியார் வந்தாரு. அவருகூட ரெண்டு அழகான இளம் பெண்ணுகளும் வந்திருந்தாங்க.

“உங்களுக்கு சாதகமா கோர்ட் தீர்ப்பு வர்றதுக்கு நான் ஏற்பாடு செய்றேன். இவங்க ரெண்டு பேரும் என்னோட சிஷ்யப் பொண்ணுக”னு சொல்லி அந்தச் சாமியாரு மைனர்கிட்ட இனிக்க இனிக்கத் தேனொழுகப் பேசினாரு. வேலப்பர் கோயில் கெடைக்கக் காரணமா இருந்த சாமியாராச்சே!

“எல்லாருமே தூங்கட்டும். நாம தனியாப் போயி பேசலாம்”னு சொல்லி அங்கயிருந்து மோட்டார் கார்ல மைனரக் கூப்பிட்டுக்கிட்டுப் போயிட்டாரு.

என்னத்தக் குடுத்து சாப்பிட வெச்சாங்களோ தெரியல... அன்னிக்குப் பூராவும் அந்தப் பொண்ணுகளோட மடியிலதான் விழுந்து கெடந்தாரு நம்ம மைனர்.

விடிஞ்சு எந்திரிச்சுப் பார்த்தா... சாப்டூர் பக்கத்துல ஒரு மலைக் கோயிலுக்குள்ள கெடந்தாரு. காவலுக்கு ஆளுகளோட அந்த புலித்தோல் சாமியாரும் கூட இருந்தாரு.

ரெண்டு மாசத்துக்கும் அந்த மலைக்கோயில்லதான் சாப்பாடு, தண்ணி எல்லாம். மைனர நல்லா கவனிச்சுக்கிட்டாரு சாமியாரு.

திடீர்னு ஒருநாள் ராத்திரி, சாமியார் பட்டாளம் காணாமப் போனதும், எல்லாமே பம்பாய் பட்டேலோட கண்ணாமூச்சி வித்தைனு அப்புறமாத்தான் தெரிஞ்சது.

மைனர் மட்டும் தனியா உத்தம பாளையத்துக்கு வந்து சேந்தாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 38
வருச நாட்டு ஜமீன் கதை - 38

அப்போதான்... மக்கா ராவுத்தர் கோவமாகி தஸ்தாவேஜுகள எல்லாம் தூக்கி எறிஞ்சு மைனரப் பார்த்து, “நீதான் பண்டாரமா ஆயிட்டேன்னா... என்னையும் பக்கீரா ஆக்கிட்டியே! உனக்காக எவ்வளவு பாடுபட்டிருப்பேன்? கடைசியா, என்னைய இவ்வளவு அவமானத்துக்குக் கொண்டுவந்து சேத்துட்டியே!”னு தலையில அடிச்சுக்கிட்டாரு.

ஜமீன்தார் சாமியப்ப நாயக்கர் சாகும்போது சொன்ன ஒரு வார்த்தைக்கு இத்தன வருஷமா மைனர் பாண்டியருக்கு ஒத்தாசையா இருந்தாரு மக்கா ராவுத்தர்.

அந்த வருஷமே 1935-ல உடம்புக்குச் சௌகரியமில்லாம மக்கா ராவுத்தர் இறந்துட்டாரு.

(அதுக்குப் பெறகு, மக்கா ராவுத்தரோட மகன் காதர் மீரா லெவை ராவுத்தர் ஒரு வேதாந்தி மாதிரிதான் இருந்தாரு. இப்போ மக்கா ராவுத்தரோட பேரன் அப்துல் லத்தீப் இருக்காரே அவருதான் இந்த அறுவது வருஷமா தனக்குச் சேர வேண்டிய சொத்துனு சொல்லி கோர்ட்டு வழக்குனு பகீரதப் பிரயத்தனம் செய்துக்கிட்டிருக்காரு.)

கண்டமனூர் ஜமீன் நிர்வாகஸ்தர் பிரஞ்சுமேன் துரைக்கு செல்வாக்கு கூடியிருந்த சமயம். குதிரையும் துப்பாக்கியுமா சுத்திக்கிட்டு இருந்தாரு.

அப்பாவு பிள்ளை மகன் செல்லக் குமார் பிள்ளைக்கு, துரைதான் கடமலைக்குண்டு கிராமத்துல வேல போட்டுக் குடுத்தாரு. வரதராஜ பிள்ளைதான் ஜமீன் ஃபாரஸ்டர்.

மைனர் பாண்டியருக்கு பிரஞ்சுமேன் மேலதான் கோவம் முழுசா இருந்துச்சு. ஒரு நாள் கடமலைக் குண்டுக்குத் தன் பரிவாரங்களோட வில்வண்டியில பொறப்பட்டுப் போனாரு.

சேவகக்காரங்க சின்ன ராமரு, பெரிய ராமரு, இருளப்பன், குண்டு வாடன் இப்பிடி ஏகப்பட்ட பேரு வண்டிக்கு முன்னாடியும் பின்னாடியும் தவிக்காம ஓடிக்கிட்டிருந்தாங்க.

கடமலைக்குண்டு பெரிய தனக்காரர் முத்தப்ப நாயக்கரோட வீட்டுக்குப் போய்ச் சேந்ததும், அம்புட்டு சேவகக்காரங்களையும் கூப்பிட்டாரு.

தலையிலிருந்த தலைப்பாகையக் கழட்டி திரும்பவும் விறுவிறுக்க கட்டினாரு மைனர்.

வருச நாட்டு ஜமீன் கதை - 38
வருச நாட்டு ஜமீன் கதை - 38

“கோர்ட்ல நமக்கு பாதகமா தீர்ப்பு சொல்லிட்டாங்கனு யாரும் கவலப்படாதீங்க. அறுவத்திநாலு கிராமமும் வருச நாட்டு மலை நெலங்களும் நமக்குத்தான் சொந்தம். இப்பவும் நான்தான் ஜமீன்தார். வழக்கம்போல விளைச்சல்ல பங்கு கேளுங்க. ஆடு, மாடு கேளுங்க. எவனும் எதுத்துப் பேசினா அடி பின்னிப் போடுங்க. வர்றத நான் பாத்துக்கறேன். அந்தப் பூனக்கண்ணு பிரஞ்சுமேனுக்கு யாரும் பயப்படாதீங்க. மக்கா ராவுத்தர் கண்மாய்ல அவரு வளத்த புளிய மரம் அவருக்கே இல்லைனு சொல்லிட்டாங்க. இப்போ நான் சொல்றேன், புளிய மரம் மட்டுந்தான் அவங்களுக்குச் சொந்தம்... அதுல வர்ற புளியம்பழம் நமக்குத்தான் சொந்தம்! இப்பமே வண்டி மாடுகளோட போயி அம்புட்டையும் அடிச்சுக்கொண்டு வாங்க!”னு உத்தரவு போட்டாரு மைனர்.

சேவகக்காரங்களுக்கு இவ்வளவு உசுப்பேத்திவிட்டா பத்தாதா? மதியத்துக்குள்ளவே நாப்பது வண்டியில புளியம் பழம் மூட்டைகள அடிச்சுக்கொண்டுவந்து சேத்துட்டாங்க. அன்னிக்கு மதியம் அம்புட்டுப் பேருக்கும் கடாக்கறி நெல்லுச் சோறுதான்.

அப்பாவு பிள்ளை மகனுக வேலுப்பிள்ளையும் செல்லக்குமார் பிள்ளையும் ஓடிப்போயி பிரஞ்சுமேன் துரைகிட்ட இந்த விஷயத்தச் சொன்னாங்க.

‘எப்படா சமயம் கெடைக்கும்’னு காத்துக்கிட்டிருந்த பிரஞ்சுமேன், மைனர் பாண்டியர இந்தத் தடவ கட்டித் தூக்கிக்கிட்டு வந்துரணும்னு முடிவெடுத்தாரு.

கண்டமனூர்லயே கொச்சக் கயிறு வாங்கிக்கிட்டு காவக்காரங்களோட கடமலைக்குண்டுக்குக் குதிரைல ஏறிப் பொறப்பட்டாரு.

முத்தப்ப நாயக்கர் வீட்டுல இருந்த மைனருக்கும் சேவகக்காரங்களுக்கும் பிரஞ்சுமேன் துப்பாக்கியோட வருவார்னு தெரியாது. மைனரோட சேவகக்காரங்க துப்பாக்கியப் பாத்ததும் கொஞ்சம் பயந்துதான் போனாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 38
வருச நாட்டு ஜமீன் கதை - 38

மைனர் அங்கயிருந்து ஓடி, தொந்தித் தேவர் வீட்டுக்குள்ள புகுந்துக்கிட்டு கதவை இறுக்கிச் சாத்திக்கிட்டாரு. அந்த வீட்டுக்குள்ள வேட்டைத் துப்பாக்கி இருக்கானு தேடினாரு.

கடமலைக்குண்டு சனங்க அம்புட்டு பேரும் அந்த வீதியில ஹோ... ஹோ..!னு கூடிப்போனாங்க. வீடுக மேலயும் மரங்க மேலயும் ஏறின சனங்களுக்கு நல்ல வேடிக்கதான்.

பிரஞ்சுமேன் துப்பாக்கிய ஏந்திப் பிடிச்சுக்கிட்டு அந்தக் கதவை பூட்சுக் காலால உதச்சாரு. கதவு கிடுகிடுனு ஆடுதே தவிர ஒடைக்க முடியல.

“ஏ பாண்டியா... வெளியே வரவில்லை என்றால் உள்ளே நுழைந்து சுட்டுப் பொசுக்கிப் போடுவேன்”னு பிரஞ்சுமேன் கண்ண உருட்டிப் பெருமூச்சு விட்டுக் கத்தினாரு.

“உள்ள வந்தா உன் தலைய வெட்டிப் போடுவேன்”னு வீறாப்பா சத்தம் போட்டாரு மைனரு.

கதவ இடிச்சு நெம்பிப் பாத்த பிரஞ்சுமேன், திடீர்னு கதவு மேல மூணு தடவ ‘டமார்... டமார்’னு துப்பாக்கியால சுட்டாரு.

உள்ள இருந்த மைனர், “டேய் சின்ன ராமா... பெரிய ராமா... இன்னுமாடா வேடிக்கை பாத்துக்கிட்டு நிக்கிறீங்க. பூனக்கண்ணு பயல அடிச்சுத் தூக்குங்கடா!”னு பலமா சத்தம் போட்டாரு.

அம்புட்டுதான்... குண்டுவாடன் ஓடிவந்து பிரஞ்சுமேன் முதுகுல முட்ட, சின்ன ராமனும் பெரிய ராமனும் துரையோட காலப் பிடிச்சு உச்சந்தூக்கா தூக்கி ‘மடார்’னு கட்டாந்தரையில போட்டு மாறி மாறி ஏறி மிதிச்சாங்க. இருளப்பன் பூணுக்கம்பால அடிச்சான்.

பிரஞ்சுமேன் பன்னி கத்துற மாதிரி கத்துனாரு. மொகம், கையி, காலு, முதுகு எல்லா எடத்துலயும் ரத்தக் காயம். உதடும் கன்னமும் வீங்கித் தொங்கிப்போச்சு.

ஜமீன் ஃபாரஸ்டர் வரதராஜ பிள்ளையும், முத்தப்ப நாயக்கரும் ஓடிவந்து புளிச்ச தண்ணியக் குடுத்து பிரஞ்சுமேன் துரையக் கைத்தாங்கலா தூக்கி நிறுத்தினாங்க.

விஷயம் தெரிஞ்சதும் கலெக்டர் துரை போலீஸ் பட்டாளத்தோட கடமலைக்குண்டு கிராமத்துக்கு வந்தாரு.

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு