Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 39

வருச நாட்டு ஜமீன் கதை - 39
வருச நாட்டு ஜமீன் கதை - 39

இப்பிடித்தான் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமா மைனருக்கு ருசியான சாப்பாடும், ராத்திரியானா பட்டாம்பூச்சிகளும் விதவிதமா கெடச்சதால கல்யாணத்தப் பத்தியே ரோசனை செய்யல.

போலீஸ் பட்டாளம் ‘தாட்பூட்’னு ஓடி எல்லா தெருவையும் வளச்சு நின்னாங்க. கலெக்டர் துரை கடமலைக்குண்டு சனங்கள மொரச்சுப் பாத்துக்கிட்டே அங்கன நின்னுக்கிட்டிருந்த வில்வண்டிக்குள்ள எட்டிப் பாத்தாரு.

உள்ளுக்குள்ள ஒரு ஆர்மோனியப் பொட்டியும் ஒரு கஞ்சிராவும் இருந்துச்சு. மைனரும் சேவகக்காரங்களும் எங்க மறஞ்சாங்கனே தெரியல.

ரத்தக்களறியாயிருந்த பிரஞ்சுமேன் முகமெல்லாம் கன்னிப்போயி, வலிதாங்காம முனங்கிக்கிட்டே இருந்தாரு. கலெக்டரோட மோட்டார் கார்ல அலாக்கா தூக்கிப் போட்டு மதுரை பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோயிட்டாங்க.

துப்பாக்கிக் குண்டு பாஞ்ச கதவையும் பாத்தாரு கலெக்டர். கதவுக்கு மறுபக்கம் எதிர் சுவத்துல ஆழமா பதிஞ்சிருந்த ஈயத்தைச் சொரண்டி எடுத்துக்கிட்டாரு.

ஆண்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன்ல பிராது பதிவு செஞ்சாங்க. உசிலம்பட்டி கோர்ட்லதான் வழக்கு நடந்துச்சு.

“திருட்டு மூட்டைகளைக் கைப்பற்றச் செல்லும்போது பாண்டியரும் அவருடைய சேவகக்காரர்களும் என்னைக் கொலை செய்ய முயற்சி செய்தார்கள். அதனால் தற்காப்புக்காக கதவைச் சுட்டேன்!”னு பிரஞ்சுமேன் வாக்கு மூலம் குடுத்தாரு.

ஓட்டையான கதவையே பேத்து எடுத்துத் தூக்கிக் கிட்டுப்போயி, “பிரஞ்சுமேன் சுட்டதனாலதான் சேவகக்காரங்க அடிச்சாங்க!”னு மைனரும் வாக்குமூலம் குடுத்தாரு. இப்பிடியே விசாரணை போய்க்கிட்டிருந்துச்சு.

அதுக்குப் பிற்பாடு ஒரு நாளு... தொந்தித் தேவர் வீட்டுக்கு மைனர் போயிருந்தாரு. வீட்ல இருந்த சின்னமனூர் முத்தம்மா, மைனரப் பாத்ததுமே அழுதுக்கிட்டே, “தல தப்பினது தம்பிரான் புண்ணியந்தான். சண்டாளப் பயலுக உங்களச் சுட்டுப் போட்டு ஓடிப்போயிருந்தா நாங்க தவியா தவிச்சுப்போயிருப்பம். எங்க வீட்டு ராசி உங்கள உசுரோட பாத்துட்டோம். அதுசரி கண்ணு... கோர்ட்டுக்குக் கொண்டுபோன கதவு திரும்பி வரல. புதுசா ஒரு கதவு செஞ்சு போடச்சொல்லு கண்ணு..!”னு உரிமையோட கேட்டாங்க.

(இப்போ இருக்கற கதவு மைனர் செஞ்சு போட்டதுதான். பழைய கதவு இன்னும் உசிலம்பட்டி கோர்ட்லதான் இருக்கு.)

அறுவத்திநாலு கிராமத்துலயும் மைனர் பாண்டியரோட வீரப் பிரதாபங்களப் பேசிப்பேசி மாஞ்சு போனாங்க. புதுசு புதுசா சேவகக் காரங்க சேர ஆரம்பிச்சாங்க. ‘எள்ளு’னு சொல்லி முடிக்கறதுக்குள்ள எண்ணெயோட காத்துக்கிட்டிருந்தாங்க.

இப்பிடித்தான் ஒரு நாளு... புதுசா சேந்த சேவகக்காரங்க ரெண்டு பேரு, அரப்படி நல்லெண்ணெய மைனரோட தலையில தேச்சு, மொத்து மொத்துனு கை கால பிடிச்சு நீவிவிட்டு தலைக்குக் குளிப்பாட்டி விட்டாங்க.

அதுல ஒருத்தன் மைனரோட தலைமுடிக்குச் சாம்பிராணி புகைபோட்டு “தொர... இந்தக் குளியலுக்கு நம்ம அரண்மனைப் புதூர் கத்திரிக்கா பிஞ்ச ருசி பார்த்தீங்கனா... அடடா, ஆட்டுக் கறி, கோழிக்கறியவிட மிஞ்சின ருசியா இருக்கும் போங்க!”னு சொன்னான்.

இன்னொருத்தன் மைனர் உடம்புல ஜவ்வாது பூசிவிட்டு, “அட... அதவிடுங்க. நான் கொண்டு வரேன் பாருங்க... நல்ல எளம் பிஞ்சு. எல்லாத்துக்கும் மிஞ்சின ருசி!”னு மைனர அரக் கண்ணால பாத்தான்.

உடனே மைனரு, “என் தல முடி உலர்றதுக்குள்ள ரெண்டு பேருமே ஓடிப்போயிக்கொண்டாங்க”னு வெளிய அனுப்பிவெச்சாரு.

மொதல்ல சொன்னவன் பத்து மைலு ஓடிப்போயி கத்திரிக்கா பிஞ்சு பிடிங்கிக்கிட்டு தெப்பம்பட்டி அரண்மனைக்கு வந்து சேந்தான்.

‘கத்திரிக்கா பிஞ்சு’னா தப்பர்த்தம் எடுத்துக்கிட்ட இன்னொரு புது சேவகக்காரன் தளதளனு ஒரு இளவயசுப் பொண்ணக் கூட்டிக்கிட்டு வந்து சேந்தான்.

மைனரு பாத்தாரு. அவரா சிரிச்சுக்கிட்டாரு. “சரி... அந்தப் பிஞ்சு மதிய சாப்பாட்டுக்கு இருக்கட்டும். இந்தப் பிஞ்சு ராத்திரி சாப்பாட்டுக்கு இருக்கட்டும்!”னு சொல்லி அந்தப் பொண்ணோட இடுப்பக் கிள்ளினாரு மைனரு.

ராத்திரியானதும் அந்தப் பொண்ணுகிட்ட மைனர் நெருங்கினாரு. அவளுக்கு ஒரு பதினஞ்சு பதினாறு வயசுதான் இருக்கும். கொஞ்சங்கூட பயமோ நடுக்கமோ இல்லாம சிரிச்சுக்கிட்டே இருந்தா.

மைனர், “என்னாடி... ஜமீன்தாருகிட்ட படுக்கப் போறோமேனு பயமா இல்லையா?”னு கேட்டாரு.

“நானெதுக்கு பயப்படணும்..? நானே ஆசப்பட்டுத்தான் உங்கிட்ட வந்தேன்!”

“பணங்காசு வேணுமா?”

“இல்ல... இல்ல..!”

“அப்புறம்?!”

“உங்கள மாதிரி செவப்பா அழகா ஒரு கொழந்த வேணும்...”

“கொழந்தையா..? உனக்குக் கல்யாணம் ஆயிருச்சா?”

“ஆயிருச்சே... முந்தா நாள்தான் ஆச்சு!”

“உன் புருஷன் என்ன வேல செய்றான்..?”

“என்னைய இங்க கூப்பிட்டுக்கிட்டு வந்தாரே... அந்தா... வெளிய நிக்கிறாரே, அவருதான்!”

“தாலி எங்க?”

வருச நாட்டு ஜமீன் கதை - 39
வருச நாட்டு ஜமீன் கதை - 39

“அவருதான் ‘ஜமீன்தாருகிட்ட போறோம், தாலிய கழட்டி வெச்சிரு’னு சொல்லி கூட்டி வந்தாரு. வீட்டுக்குப் போனதும் எடுத்துக்கட்டிக்குவேன். நான் ரொம்பக் கொடுத்து வெச்சவ... என்னை மாதிரி எத்தனையோ பொண்ணுக உங்க சங்காத்தம் கெடைக்கணும்னு ஏங்கிக் கிட்டுருக்காளுக. உங்கள இவ்வளவு பக்கத்துல... உங்க மூக்கு ரொம்ப அழகா இருக்கு. தொட்டுப் பாக்கட்டுமா?”னு கேட்டுக்கிட்டே மைனரோட மூக்க மெதுவா ஒரு வெரல்ல தொட்டா.

மைனர் அவள இழுத்துப் பிடிச்சு, “அட... என் கத்திரிக்காப் பிஞ்சே..!”னு நான் சொல்லக்கூடாத எடத்துல கிள்ளி வெச்சாரு.

இப்பிடித்தான் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமா மைனருக்கு ருசியான சாப்பாடும், ராத்திரியானா பட்டாம்பூச்சிகளும் விதவிதமா கெடச்சதால கல்யாணத்தப் பத்தியே ரோசனை செய்யல.

திடீர்னு ஒரு நாளு... மதுரைல இருந்து பச்சக்காக்கி உடுப்பு போட்டு பெரிய பெரிய அதிகாரிக மோட்டார்ல வந்து எறங்கினாங்க. சிப்பாய் பட்டாளத்துக்கு ஆளு வேணும்னு சொல்லி வீதியில போற வார எளந்தாரிப் பயலுகள எல்லாம் பிடிச்சுக்கிட்டு மதுரைக்குக் கொண்டுபோனாங்க.

பச்ச உடுப்புக்காரனப் பாத்ததும் தோட்டத்துல உழுதுக்கிட்டிருந்த ஆளுக கலப்பையையும் மாடுகளையும் விட்டுப்போட்டு ஓடிப்போயி கெணத்துக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டாங்க. பட்டாளத்துக்குப் போனா ஜப்பான்காரன் குண்டுபோட்டுக் கொன்னு போடுவான்னு பயந்து அவனவன் அலறியடிச்சுக்கிட்டு வருச நாட்டு மலைப் பக்கம் ஓடி காட்டுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டானுக.

அப்புறமாத்தான் தெரிஞ்சது... நம்ம பிரஞ்சுமேன் மதுரையிலயிருந்த பட்டாளத்து அதிகாரிக்குக் கடிதாசி எழுதி அவங்கள வரவெச்சிருக்காருனு. கடிதாசில, ‘எங்கள் ஜமீனைச் சேர்ந்த இளைஞர்கள் நன்றாகத் தின்று விட்டு ஒரு வேலையும் செய்யாமல் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். சிப்பாய் வேலைக்கேற்ற உடல்வாகும், வலிமையும் முரட்டுத்தனமும் மிக்க முட்டாள்களாகவும் இருக்கிறார்கள். எப்படியெல்லாம் வளைத்துப் பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் வளைத்து வேலை வாங்கலாம்!’ - இப்பிடி எழுதியிருந்தாரு.

அந்த நேரத்துல மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஜில்லாவுலயிருந்து பட்டாளத்துக்குப் போனவங்கதான் ரெண்டாம் உலக யுத்தத்துல முன்னுக்கு நின்னாங்க.

மைனருக்கு ஒரே எதிரி பிரஞ்சு மேன் துரைதான். அவர எப்பிடியாவது ஜமீனை விட்டே விரட்டணும்னு குறியாயிருந்தாரு.

ஒரு நாளு... மயிலாடும்பாறைக்குப் பக்கத்துல நரியூத்து கிராமத்துலயிருந்து ரெண்டு மூணு குடியானவங்க பதட்டத்தோட மைனர் பாண்டியர்கிட்ட வந்தாங்க.

“ஜமீன்தாரய்யா... நரியூத்து செம்மண் பூமில மழை பேஞ்சதும், நெறைய பொற்காசு தட்டுப் பட்டுச்சு. ஒரு கலயத்துல நகை நட்டுக அகப்பட்டுச்சு. சின்னப்பசங்க மூலமா இந்த விஷயத்த எப்பிடியோ தெரிஞ்சுக் கிட்ட பிரஞ்சுமேன் அந்த நெலத்துல ஆராய்ச்சி செய்யப் போறேன்னு எங்களை விரட்டறான்”னு அப்பாவித்தனமா சொன்னாங்க.

அதேசமயம் பிரஞ்சுமேன் அங்கயே டேரா போட்டு தன்கூட ரெண்டு மூணு பளியர்களச் சேத்துக்கிட்டு அந்த நெலத்த தோண்ட ஆரம்பிச்சாரு.

தோண்டத் தோண்ட பழங்காலத்துப் பொற்காசுகளும், கலையங்களும், முதுமக்கள் தாழியும், எலும்புக்கூடுகளுமா வந்துக்கிட்டே இருந்துச்சு.

அப்பத்தான் பிரஞ்சுமேனுக்கு அந்தக் கடிதாசி வந்துச்சு. அதப் பிரிச்சுப் படிச்சாரு. சந்தோஷமா கத்தினாரு. அவரோட சம்சாரம் வெள்ளக்காரம்மாவும், குழந்தையும் இங்கிலாந்துல இருந்து வருச நாட்டுக்கு வர்றதா கடிதாசியில எழுதியிருந்தாங்க.

இந்த சமாசாரம் ஒரு பளியன் மூலமா நம்ம மைனர் பாண்டியருக்குத் தெரிய வந்துச்சு.

பிரஞ்சுமேன் அலறியடிச்சுக்கிட்டு இந்த ஜமீனைவிட்டே ஓட மைனர் ஒரு திட்டம் போட்டாரு.

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு