Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 4

வருச நாட்டு ஜமீன் கதை - 4
வருச நாட்டு ஜமீன் கதை - 4

ஜமீன்தாரோட சௌஜன்யமா பழகுறது அவளுக்கே வேடிக்கையா இருந்துச்சு. கசப்பான வாழ்க்கைய ஒரு பக்கம் மறக்க நெனச்சாலும், மறுபக்கம் எதிர்காலத்தை நெனச்சா ஜனகத்துக்குப் பயமாத்தான் இருந்துச்சு.

‘தும்பி பறந்தா தூரத்துல மழை’னு சொல்லுவாங்க. ஈசானிய மூலைல மப்பும் மந்தாரமுமா மழை எறங்கியிருந்துச்சு. ஜம்புலிபுத்தூர் கிராமத்துக்கு ஜமீன்தாரு போய்ச் சேரவும், சரியான அடை மழை வானத்தைப் பொத்துக்கிட்டு ஊத்துது. ராணி மங்கம்மா காலத்துல வெச்ச புளிய மரம், பேய்க்காத்துல பெருமாள் கோயில் சுவத்த ஒட்டி ஒரசி ஆடி அலையுது.

ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் இருக்கே... அத சுத்திப் பெரிய பெரிய சமாசாரம் இருக்கு.

பெரிய ஜமீன்தாரு திருமலை கெண்டம கண்டம ராமகிருஷ்ண நாயக்கர், தனக்குக் குழந்தை இல்லைனு சொல்லி நாலு கல்யாணம் செஞ்சாரு. வாரிசு உண்டாகல. இந்தப் பெருமாள் கோயிலுக்கு வந்துதான் புத்திரமேட்டி யாகம் செஞ்சாரு. அதுக்குப் பெறகுதான் ரெண்டாவது பொண்டாட்டிக்கு நம்ம ஜமீன்தாரு பொறந்தாரு. பாவம், குழந்தை முகத்தைக் கூடப் பாக்காம நாப்பது வயசுல பரலோகம் போய்ச் சேர்ந்துட்டாரு பெரிய ஜமீன் ஐயா... (அது ஒரு பெரிய கதை! அதுக்குத்தான் பின்னாடி வரப்போறேன்).

பெரிய ஜமீன்தாரு கருமித்தனமா இருந்தாலும் பிற்பாடு ஊரூருக்குக் கோயில் கட்றது, நெலம் ஒதுக்கிறது, தண்ணிக் கெணறு தோண்டுறது, குளங் குட்ட வெட்டி பாசனஞ் செய்றது, தாகப்பட்டு வர்றவங்களுக்கு பானகம் ஊத்துறதுனு சகாயமாத்தான் செஞ்சிருக்காரு.

ஜம்புலிபுத்தூர் கோயிலுக்கு அவரு தந்த மரியாதையால சித்திர மாசம் எட்டாந் திருநாளு மண்டகப்படி இதுகால பரியந்தமா ஜமீன் வாரிசுகளுக்குத்தான் போயிக்கிட்டிருக்கு!

இன்னொரு பெரிய சமாசாரம் என்னன்னா... இங்க இருந்த முதலியார்க குடும்பத்துல தலப் புள்ள பொம்பளப் புள்ளயாப் பொறந்தா இந்தக் கோயிலுக்கு ‘பொட்டுக்கட்டி’ விட்டுருவாங்க. அதாவது... பொண்ணு பூப்படஞ்சதும் கோயில் பூசாரி ஐயரு அந்தப் பொண்ணுக்கு நல்ல நாள் பார்த்து ஒரு தாலியக் கட்டி விட்டுருவாரு.

அதுக்குப் பெறகு, அந்தப் பொண்ணு நரசிங்கப் பெருமாளுக்குத்தான் பொண்டாட்டி. தேவதாசிகனு சொல்றமே... அவளுகதான்! எல்லாப் பராக்கிரமும் நெறஞ்ச ஜமீன்தாருகளயும் கடவுளாத்தான் சனங்க நெனக்கிறாங்க. அப்புறமென்ன... அவங்க கடிச்சுப் போட்டது போக மீதிதான் மத்தவங்களுக்கு. ஜமீன்தாருக, மிட்டா மிராசுக, நல்ல நாள் பொல்ல நாள்ல இங்கன வந்து கூடிக் களச்சுப் போவாங்க. அனுபவிச்சதுக்கு ஈடா அணாவோ, பைசாவோ உண்டியல்ல போட்டுட்டுத் திமிரா போவாங்க.

மத்த நாள்ல அந்த தேவதாசிக கோயிலச் சுத்தம் பண்றது, விளக்கேத்தறது, சங்கீதம் படிக்கிறது, பூப்பறிக்கிறது, புள்ள பெத்துக்கிற துன்னு நாள் கெழம ஓடிப் போயிரும்.

நாஞ் சொல்றது ஏகக் கொடுமதான்..! என்ன செய்ய..?

நல்லவேள, இப்பல்லாம் தொடச்சுத் தூரப் போட்டுட்டாங்க.

அடை மழை விட்டாலும் செடி மழை விடாதுன்ற மாதிரி அங்கன இங்கன நடந்துகிட்டுத்தான் இருக்கு.

நாம தொட்ட எடத்துக்கே வருவோம். அடை மழை இன்னும் விடலை! நம்ம ஜமீன்தாரோட சாரட் வண்டி பெருமாள் கோயில் தெருவுக்குள்ள நொழையும்போதே ‘ஜல் ஜல்’னு சலங்கைச் சத்தம் ஜனகம் தங்கியிருந்த வீட்டுக்குள்ளயிருந்து வருது. சாளரத்து வழியா உள்ளாற எட்டிப் பார்த்துக்கிட்டிருந்த சின்னஞ் சிறுசுக குதிரையைப் பார்த்ததும் கும்மாளிச்சு ஓடுதுக.

ஜமீன்தாரு வாசல்ல நொழையவும், முகத்துல சாயம் பூசுன நாலஞ்சு பொண்ணுக, “வர்றேங்க்கா”னு சொல்லி கால் தடுக்காம சேலையத் தூக்கிப் பிடிச்சுக்கிட்டு வெளிய ஓடுதுக.

வருச நாட்டு ஜமீன் கதை - 4
வருச நாட்டு ஜமீன் கதை - 4

ஜனகம் ‘ஜல் ஜல்’னு ஓடி வந்து முந்தானையால ஜமீன்தாரு தலையத் துவட்டினா. அவரு, அவளோட இடுப்புல கிள்ளி இழுக்க, சடார்னு கைய உதறின ஜனகம், தள்ளி நின்னு முதுகைக் காட்டி, “உங்க மேல எனக்குக் கோவம்”னு சொல்லி கண்ண உருட்டி சேல நுனிய திருகித் திருகி கொணட்டிக்கிட்டு நின்னா.

“ரொம்ப தாமசமா வந்துட்டேனா?”

“அதெல்லாம் இல்ல... உங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சுன்னு (ஓடி வந்து ஜமீன்தாரோட கன்னத்தக் கிள்ளி) பொய்தான சொன்னீங்க? அதும் மூணு பொண்டாட்டியாம். (நெஞ்சுல செல்லமா குத்தி) எதுக்குப் பொய் சொன்னீங்க?”

“எனக்குக் கல்யாணம் ஆயிருச்சுனு பொய் சொன்னது வாஸ்தவந்தான். அதனால உனக்குச் சந்தோஷமா? வருத்தமா?”

“ம்... சந்தோஷந்தான்!” - ஜல் ஜல்.

“தெரியிது... தெரியிது... சங்கதி

தெரிஞ்சதும் இப்ப சந்தோஷப்படுற பாரு... அதுக்குத்தான் பொய் சொன்னேன்...”

அவரு கொடுத்த பதில்ல மெச்சிப்போன ஜனகம், அவரக் கட்டிப்பிடிச்சு ரெண்டு கன்னத்துலயும் மாறி மாறி முத்தம் வெச்சா. கால்ல கட்டியிருந்த சலங்கை ‘அது சரிதான், அது சரிதான்’னு சொல்ற மாதிரி ‘ஜல் ஜல்... ஜல் ஜல்...’னு ஆமோதிக்க -

“இதென்ன சலங்கை?”

“உங்களயே நெனச்சுக்கிட்டிருந்த தால, என் உடம்புல பசல பூத்திருச்சு. பசியில்ல... தூக்கமில்ல... கால் பின்னிக்கிட்டு நடக்க முடியாம தவிக்கிறேன். ‘நீங்க வேணும், வேணும்’னு மனசு கெடந்து அடிச்சுக்குது. ஒரு மாத்தத்துக்கு ஆடிப் பார்க்கலாம்னு சலங்கை கட்டுனனா... பக்கத்து வீட்டுல இருந்து நாலஞ்சு பொண்ணுக வந்துட்டாளுங்க...”

“ஓஹோ... அவங்க சொல்லித்தான் என் சரித்திரத்தைக் கரச்சுட்டியா..?” - ஜனகத்தைத் தூக்கி....

“ஐயோ, கீழ விடுங்க... வலிக்குது. இருந்தாலும் உங்க பால வயசு முகத்த மொத மொதலா பார்த்ததுமே ரோசன செஞ்சேன்... நீங்க ஏன் இன்னமும் கல்யாணம் செய்துக்காம இருக்கீங்க..?

உங்க அரண்மனையில கொஞ்ச வயசுலயே கல்யாணம் செஞ்சு வச்சுருவாங்களே!”

“நெசந்தான்... கல்யாணம்னு சொன்னாலே எனக்கு ஒரு பயம் வந்துருது ஜனகா... நான் ரொம்ப நாளைக்கு உசுரோடு இருக்கணும்னு ஆசப்படுறேன். இருக்கட்டும்... அதெல்லாம் இன்னொரு நாளைக்குச் சொல்றேன்...” - ஜமீன்தாரு மனசுல பட்டுப்போன கொன்ற மரம், நிழலா வந்து மறையுது.

ஜமீன்தாரோட சௌஜன்யமா பழகுறது அவளுக்கே வேடிக்கையா இருந்துச்சு. கசப்பான வாழ்க்கைய ஒரு பக்கம் மறக்க நெனச்சாலும், மறுபக்கம் எதிர்காலத்தை நெனச்சா ஜனகத்துக்குப் பயமாத்தான் இருந்துச்சு.

“இந்த ஜம்புலிபுத்தூர் கிராமத்துக்கு அடிக்கொசரம் வருவீகளாமே..?” - கண்சிமிட்டிக் கேட்டா ஜனகம்.

“எங்க பரம்பரைல விட்ட குறை தொட்ட குறை இருக்குமில்லையா..? வருவோம், போவோம்...”

“அதெல்லாம் இனி வேணாம் சுவாமி... எல்லாக் குறையும் தீர்க்க நானிருக்கேன்”னு சொல்லி, ஜமீன்தாரோட கையத் தூக்கித் தன் தோள்ல போட்டுக்கிட்டு, அவரு இடுப்பு வழியா சட்டைக்குள்ள ரெண்டு கையையும் உள்ள விட்டு முதுகுல தடவிக் குடுத்தா.

ஜனகத்தோட வடிவான உடம்பை மொத்தமா ஜப்தி எடுத்தவரு மாதிரி, அவளை வாரித் தூக்கிக் கட்டிலுக்குக் கொண்டு போனாரு. மழை நின்னபாடில்லை. கொஞ்சம் இருட்டாவும் கொஞ்சம் குளிரடிச்சும் இருந்த சயன அறை, ஜமீன்தாருக்குப் போதையக் கௌப்பி விட்டுருச்சு.

கண்கொட்ற நேரத்துல ரவிக்கைய கழட்டியிருந்தா ஜனகம். ஜமீன்தாரு கண்ணுக்குப் பொழிவு பொங்க இருந்தா.

கட்டில்ல மல்லாக்கப் படுத்து, ரெண்டு கையையும் அவருக்காக நீட்டினா ஜனகம். அவளோட காலுக்கிடையாலயே ஊர்ந்து மேலுக்கு வந்த ஜமீன்தாரு, அவ வயித்துல கன்னத்த வச்சு மூச்சு விட்டாரு.

“என்னக் கல்யாணம் செஞ்சுக்க உங்க ஜமீன்ல ஒப்புக்குவாங்களா..?”

“ஒப்புக்க மாட்டாங்க. இருந்தாலும், இனிமே உன்னத் தவிர வேற யாரு கூடவும் வாழ விருப்பமில்ல. வேற யாரையும் கல்யாணமும் செஞ்சுக்க மாட்டேன். உன் அழகுக்கு, நீ மகாராணியா இருக்க வேண்டியவ. ஆனா, எங்க ராஜகம்பளத்துப் பொண்ணுதான் ஜமீன்தாரிணியா இருக்கணும்னு சொல்லுவாங்க...”

“அப்ப உங்க அரண்மனைக்குள்ள நான் வரவே முடியாதா..?”

“ஏன் முடியாது..? வைகை நதிக் கரையில உனக்குத் தனியாவே அரண்மனை கட்டித் தர முடிவு செஞ்சுட்டேன். யார் என்ன சொன்னாலும் கேக்கமாட்டேன் ஜனகா”னு சொல்லி, இன்னும் மேல ஊர்ந்து வந்தாரு. மதமதனு சூடு ஜமீன்தாரு நெஞ்சுக்குள்ள கதகதனு ஊடுருவிப் பரவுச்சு.

கண்கள மூடினாங்க, வாய்ப் பேச்சு வரல. காதுல தேவ ரீங்காரம் மட்டும் கேக்குது.

எத்தன நாழிகை எந்த லோகத்துல பறந்தாங்களோ... தெரியல!

மழைச் சத்தம் நின்னு தவளச் சத்தம் ‘கர்ர்ரக்... கர்ர்ரக்’னு கேட்க ஆரம்பிச்சிருச்சு.

வருச நாட்டு ஜமீன் கதை - 3

ஜமீன்தாரு ஜம்புலிபுத்தூருக்கு வந்தது ‘மாப்ள நாயக்கர்’ கூட்டத்துக்கு எப்பிடித் தெரிஞ்சுதுனு தெரியல. அவரத் தேடி மாப்ள நாயக்கர் கூட்டம் ஒரு சமாசாரம் சொல்ல வந்துச்சு.

அதாவது... நம்ம ஜமீன்தார பார்க்க மாம்பாறை ஜமீன்தாரு குமார கதிரைய நாயக்கரு இப்ப வந்து அரண்மனையில காத்துக் கிட்டிருக்காராம். தன் மகள் வேலுத்தாயம்மாள நம்ம ஜமீன்தாருக்குத்தான் கல்யாணம் செய்து கொடுக்கப் போறதா ஒரு முடிவோட வந்திருக்காராம்!

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு