Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 40

வருச நாட்டு ஜமீன் கதை - 40
வருச நாட்டு ஜமீன் கதை - 40

1937-ல மொத மொதல்ல சென்னை ராஜதானிக்கு தேர்தல் நடந்துச்சு. காங்கிரஸ்காரங்க ஏழைக் குடியானவங்களோட நெலமைய மனசுல வெச்சுத்தான் ‘ஜமீன்தாரி முறைய ஒழிக்கப் போறோம்’னு தேர்தல் வாக்குறுதி குடுத்தாங்க.

பிரஞ்சுமேன் மலையிலிருந்த ஒவ்வொரு கோயிலயும் ஆராச்சி செஞ்சுக்கிட்டே வந்தாரு. புராதன பொருளெல்லாம் எங்கன பொதஞ்சு கெடக்குனு தோண்டிப் பாத்து ஒரு புஸ்தகத்துல எழுதிக்கிட்டே வந்தாரு.

பழைய வருச நாட்டுக்கோட்டை பக்கத்துல ஒரு அம்மன் கோயிலுக்கு முன்னாடி சனங்க கூடி நின்னு தங்களோட தலையவே திருகி என்னமோ வேண்டினாங்க.

இத கவனிச்ச பிரஞ்சுமேன், “என்ன வேண்டுதல்?”னு கேட்டாரு. “தலையத் திருகி தனத்தை பெறுக”னு இந்தக் கோயில் சாமிக்கிப் புடிச்ச ஒரு மந்திரம் இருக்குனு சனங்க சொன்னாங்க. பிரஞ்சுமேன் மூளக்காரரு இல்லையா? சனங்க எல்லாம் போன பெறகு, அன்னிக்கு ராத்திரி ரெண்டு மூணு பளியர்கள கூட்டிக்கிட்டு அந்தக் கோயிலுக்கு வந்தாரு. தீப்பந்த வெளிச்சத்துல அம்மன் சிலையவே உத்துப்பாத்தாரு. கழுத்துப் பக்கத்துல ஏதோ இடைவெளி இருந்துச்சு. கஷ்டப்பட்டு அம்மன் தலையத் திருகினாரு.

அந்த அதிசயம் நடந்துச்சு! அம்மன் காலுக்கடியில இருந்த கல்லுப் பலகை மெதுவா வெலக... எத்தனையோ வருஷமா அதுக்குள்ள கெடந்த நகைகளும் வைரங்களும் புதையலா கெடச்சது.

‘தலையத் திருகி தனத்தைப் பெறுக’னு சொல்ற மந்திரத்துக்கு இதுதான் அர்த்தம்னு பலகாலமா நம்ம சனங்களுக்குத்தான் தெரியாமப் போச்சு.

இப்பிடித் தெரியாமத்தான், புதையலுக்காக அடுத்தவனோட தலையத் திருகிக் கொன்னுபோட்டு ஓடினவங்க சமாச்சாரமெல்லாம் நடந்திருக்கு.

அப்புறம் அந்தச் சிலை ரொம்ப நாளா கண்டமனூர் பள்ளிக் கூடத்துலதான் இருந்துச்சு!

பிரஞ்சு மேனோட சம்சாரம் கிளாராவும் மகள் எமிலியும் வருச நாட்டுக்கு வந்து சேந்தாங்க. ரெண்டு பேருமே அழகுன்னா அழகு... அப்பேர்ப்பட்ட அழகு. வண்ணத்துப் பூச்சிக மாதிரி கலரு கலரா கவுன் போட்டு எப்பவும் சிரிச்ச மொகத்தோட இருந்தாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 40
வருச நாட்டு ஜமீன் கதை - 40

மயிலாடும்பாறை மாளிகை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. மரஞ்செடி கொடி, வைகை ஆறு, வேலை செய்ற அழகு... இப்பிடி எதப்பாத்தாலும் அவங்களுக்கு வேடிக்கைதான். வெயிலடிச்சுக்கிட்டே இருக்கும்போது மழையும் வர்றத ரசிச்சுப் பாத்தாங்க. ‘இந்தியா ரொம்ப பிடிச்சுப் போச்சு’னு ரெண்டு பேருமே சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

மைனர் பாண்டியர் ஒவ்வொரு கிராமமா போயி, “பிரஞ்சுமேனுக்கு ஒத்தாசை செய்யாதீங்க. நம்மளோட சொத்தையெல்லாம் கொள்ளையடிச்சு அபகரிச்சுட்டுப் போகத்தான் வந்திருக்கான். அதனால பிரஞ்சுமேன் எந்த உதவி கேட்டு வந்தாலும் செய்யாதீங்க”னு சொன்னாரு.

ஒரு நாள் பிரஞ்சுமேன் கண்டமனூருக்கு வந்து தன்னோட மகள் எமிலிக்கு பொம்மைக செஞ்சு தரச்சொல்லி சனங்ககிட்ட கேட்டாரு.

அதுக்கு சனங்க, “உங்க கொழந்த வெளையாடுறதுக்கு நாங்க பொம்மைக செஞ்சு குடுக்கணுமா? எங்க கொழந்தைகளப் பத்தி யாரு கெவனிக்கிறாங்க? ஜமீன்தாருகளுக்கும் உங்கள மாதிரி நிர்வாகஸ்தர்களுக்கும் நாங்க ஒழச்சு ஒழச்சு ஓடாப் போனதுதான் மிச்சம். நீங்கள்லாம் ரொம்ப உசரத்துக்குப் போயிட்டீங்க. நாங்க இன்னமும் அப்பிடியேதான் இருக்கோம். எங்களுக்கு யாரு வந்து நல்லது செய்யப்போறாங்க?”னு கொஞ்சம் கொதிச்சுப்போய்க் கேட்டாங்க.

உடனே பிரஞ்சுமேன், “உங்களுக்கெல்லாம் நல்லது செய்யத்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அங்கம், வங்கம், கலிங்கம் என்று பிரிந்து கிடந்த பிரதேசங்களையெல்லாம் ஒன்று சேர்த்து ‘இந்தியா’ என்று உருவாக்கியதே நாங்கள்தான். தேவையில்லாமல் சுயராச்சியம் கேட்டுப் போராடுபவர்கள் உங்களையும் இப்படிப் பேச வைத்துவிட்டார்கள்.

நீங்கள் எதிலும் தெளிவற்றவர்கள். எங்கள் இனம் உயர்ந்த இனமாக இருப்பதால்தானே உங்களை நாங்கள் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறோம். எங்கள் ஆட்சியில் நீங்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்தலாம்!”னு கொஞ்சம் மமதையா பேச ஆரம்பிச்சாரு.

அப்பாவி சனங்க, “எங்களுக்கு எங்கய்யா நிம்மதி..? இருக்கிற வெலவாசியில சாமாஞ் சட்டுக வாங்கி குடும்பத்த நடத்துறதே பெரும்பாடா இருக்கு. இந்த லெட்சணத்துல ‘வரியக்கட்டு... கெஸ்தியக் கட்டு’னு நாட்டாமைக தொந்தரவு வேற. கட்டாட்டி ஜப்தி வேற. போதாக்குறைக்கு மைனரும் நீங்களும் அடிச்சுக்கிட்டு எங்கள இம்ச பண்ணிகிட்டிருக்கீங்க. நாங்க யாருக்குத்தான் ஒத்தாசை செய்றது? இதையெல்லாம் நெனச்சுக்கிட்டு அன்னாடம் கஞ்சி காச்சி குடிக்கிறதே பெரும்பாடா இருக்கு. பொம்மை செய்ய எங்களுக்கு ஏதுய்யா நேரம்..?”னு வெடுக்குனு பேசினாங்க.

வர்ணாசிரம தர்மப்படி வழிவழியா வந்த முறைகள் விரிசல்விட்டு உடைய ஆரம்பிச்ச காலகட்டம் அது.

ஜமீன் கட்டுப்பாடுகளுக்கும் குடியானவங்களுக்கும் ஒரு இடைவெளி விழுந்துபோச்சு. ‘அரசாங்கத்துக்கும் குடியானவங்களுக்கும் ஊடால இடைத் தரகர்கள் எதுக்கு?’னு யோசிக்க ஆரம்பிச்சாங்க. ஜமீன்தாரி முறையே இருக்கக் கூடாதுனு வெறுத்துப்போயி பேச ஆரம்பிச்சாங்க.

அந்தச் சமயத்துலதான்.. 1937-ல மொத மொதல்ல சென்னை ராஜதானிக்கு தேர்தல் நடந்துச்சு. காங்கிரஸ்காரங்க ஏழைக் குடியானவங்களோட நெலமைய மனசுல வெச்சுத்தான் ‘ஜமீன்தாரி முறைய ஒழிக்கப் போறோம்’னு தேர்தல் வாக்குறுதி குடுத்தாங்க.

காங்கிரஸ் ஜெயிச்சதும், ‘ஜமீன் ஒழிப்புத் திட்டம்’னு தீர்மானம் கொண்டு வந்தாங்க. ஆனா, அப்ப இருந்த நெலவரத்துல ஜமீன்கள ஒழிக்க முடியல. ஏன்னா... குடியானவங்ககிட்ட வரி வசூல் செய்றதுக்கு ஜமீன்தார்களுக்குத்தான் செல்வாக்கு இருந்துச்சு. அரசாங்கமும் அதையே நம்பினதும் ஒரு காரணம். ரெண்டு வருஷம் இருந்த ராஜாஜி மந்திரிசபை உலக மகாயுத்தப் பிரச்னையால 1939-ல ராஜினாமா செய்ய வேண்டியதாப்போச்சு.

ஆக. ஜமீன்கள் திரும்பவும் வேர்பிடிக்க ஆரம்பிச்சது. அதே சமயத்துல, சனங்களோட சுயராச்சியப் போராட்டம் இன்னமும் தீவிரமா இருந்துச்சு.

பிரஞ்சுமேன் எப்பவும்போல புதையல் தேடுற நோக்கத்துல வருச நாட்டு மலைய தோண்டித் தோண்டி ஆராச்சி செய்துக்கிட்டிருந்தாரு. கிளாராவும் எமிலியும் அந்த எடத்துலயே ஓடி ஆடி சின்னச் சின்னப் பூச்சிகளப் பிடிச்சு வௌயாடிக்கிட்டிருந்தாங்க.

பிரஞ்சுமேன் ரொம்ப ஆர்வமா, பாத்தது எல்லாத்தையும் அளந்து அளந்து ஒரு நோட்டுப் புஸ்தகத்துல குறிப்பெழுதி வெச்சாரு. எல்லாமே பழங்காலத்து சங்கதிகள்.

அப்பத்தான்... அந்த மண்ணுக்குள்ள சுட்ட களிமண்ணால செஞ்ச மாடு பொம்மையும், பான ஓடுல செஞ்ச சக்கர வண்டியும் தட்டுப் பட்டுச்சு. அதுக்குப் பக்கத்துல மண்டை ஓடு, கையெலும்பு, காலெலும்பு... இப்பிடி முழுசா ஒரு சின்னக் குழந்தையோட எலும்புக்கூடும் கண்ணுக்குத் தட்டுப்பட்டுச்சு.

முன் காலத்துல ஒரு சின்னக் கொழந்தை வெளையாடிக் கிட்டிருக்கும்போது பிரளயம் வந்துச்சோ... இல்ல, பூகம்பத்தால வீடு இடிஞ்சு விழுந்துச்சோ... பிரஞ்சுமேன் மூளைக்குள்ள ஏதோ ஒண்ணு தெளிவாகுற மாதிரி அவரோட முகம் மாறிப்போச்சு. அந்த எடத்துலயே உக்காந்து ஒரு நாழிகை ஆடாம அசையாம ரோசனை செய்தாரு.

ஒரு கடிதாசி எழுத ஆரம்பிச்சாரு.

“மேன்மைதங்கிய இந்திய கவர்னர் ஜெனரல் அவர்கள் சமூகத்துக்கு இங்கிலாந்து பிரஜையின் வணக்கம்.

வருச நாட்டு ஜமீன் கதை - 40
வருச நாட்டு ஜமீன் கதை - 40

நான் இந்தியாவுக்கு வந்தது ஜமீன் நிர்வாகஸ்தர் வேலைக்கு மட்டுமல்ல; புராதனப் பொருட்கள் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற நோக்கத்தோடும் வந்தேன்.

நானறிந்த வரையில்... மனித இனங்கள் பற்றி ஒரு இறுமாப்புக் கருத்து என்னுள்ளே இருந்தது.

‘மனித இனங்கள் உடலியல் நோக்கிலும் உளவியல் நோக்கிலும் சமம் அற்றவை. உயர்ந்தவையும் தாழ்ந்தவையும், பண்பாடு வளர்ச்சி பெற வல்லமை உள்ளவையும் இல்லாதவையும் மனித இனங்களிலே உண்டு!’ இப்படித்தான் இதுவரையிலும் நம்பிக் கொண்டிருந்தேன். அந்த சித்தாந்தம் என்னுள்ளே வேர் விட்டு நிலைத்து இருந்ததால், இந்திய மக்கள் நமக்கு அடிமைகளாக இருப்பதில் நியாயம் இருக்கிறது என்று மமதை கொண்டிருந்தேன்.

சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒரு மனிதன் மனதளவில் சுதந்திரமாகச் செயல்படவும் வல்லமை பெறவும் துடிக்கிறான். எனவே, மனிதர்களின் மனதில்தான் யுத்தங்கள் தொடங்குகின்றன. அவர்களின் மனங்களில்தான் அமைதியையும் உண்டாக்க வேண்டும். நம்முடைய அரசாங்க இயந்திரங்களும் யுத்தத் தளவாடங்களும் அந்த அமைதியைக் கொண்டு வராது.

இந்த நிலை நீடித்தால் காலனி ஆதிக்கத்தை வளர்த்துவரும் நாமே எதிர்காலத்தில் இன்னொரு ஆதிக்கத்துக்குள் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு.

ஒரு மனித இனத்துக்கு எந்த அளவு சுதந்திரம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு உயர்வான படைப்புகளையும் பண்பாட்டையும் அவர்களால் உருவாக்க முடியும்.

ஆக.... எல்லா மக்களும் அவர்கள் எந்த இனத்தவராயினும் தங்களுடைய பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் தாங்களே வளர்க்கத் திறமை படைத்தவர்களே. தங்கள் விதியைத் தாங்களே நிர்ணயிக்க உரிமை உள்ளவர்களே! புதைபொருள் படிவ ஆராய்ச்சியில் நான் தெரிந்துகொண்ட விஷயங்கள் இவை. எனவே -

இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சுதந்திரம் வேண்டும்."

- இப்பிடி ஒரு கடிதாசி எழுதி முடிச்சு பிரஞ்சுமேன் நிமிந்து உக்காரும்போது...

‘வீ....ல்!’னு ஒரு சத்தம்!

பிரஞ்சுமேன் எல்லாத்தையும் உதறிப்போட்டு மேல ஏறி வந்தாரு. அந்தக் கொடுமையான காட்சிய கண்ணால பாத்தாரு.

மகள், எமிலியோட கால் இடாரியில மாட்டி துடிச்சுக் கிட்டிருந்தா. ரத்தம் ‘குபு... குபு..!’னு பொங்கி வருது. பொண்டாட்டி கிளாரா என்ன செய்றதுனே தெரியாம திண்டாடிக்கிட்டிருந்தா.

வருச நாட்டு ஜமீன் கதை - 40
வருச நாட்டு ஜமீன் கதை - 40

பிரஞ்சுமேன் துடிச்சுப்போயி ஓடிவந்து இடாரிய ரெண்டா பொளந்து எமிலியோட கால வெளிய எடுத்தாரு. எமிலி மயக்கமாகி கீழே சாஞ்சா. அதுக்குப் பெறகு கண்ணு தொறக்கவே இல்ல. பிரஞ்சுமேனுக்கு நல்லா தெரிஞ்சு போச்சு... காட்டு ஜீவாத்தியங்கள பிடிக்கறதுக்கு வெக்கிற இடாரியில யாரோ விஷத்தையும் தடவி வெச்சுட்டாங்க.

ஒரே மகள்... செல்ல மகள். அநியாயமா உசுரு போயிருச்சு. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம எமிலிய மயிலாடும்பாறையிலேயே பொதச்சாரு.

பம்பாய் பட்டேலுக்கு ஒரு கடிதாசி எழுதிக் குடுத்துட்டு திரும்பவும் இங்கிலாந்துக்குப் பொறப்பட்டுப் போயிட்டாரு.

அதுக்குப் பெறகு, கண்டமனூர் நிர்வாகஸ்தரா வந்தவருதான் பார்க்கர் துரை. கொஞ்சம் வயசானவரு. இந்தப் பார்க்கர் துரை ஏற்கெனவே நம்ம ஜமீன்தார் சாமியப்ப நாயக்கருக்கு நல்லா தெரிஞ்சவரு. அதனால அந்த துரை நம்ம மைனர் பாண்டியருக்கு ரொம்ப ஒத்தாசையா இருந்தாரு.

பார்க்கர் துரை செஞ்ச மொதல் காரியம்... மயிலாடும்பாறை மாளிகைய சீர்திருத்திக் கட்டினதுதான். அதே சமயத்துல மைனர் பாண்டியருக்கு ஒரு கெட்ட சகுனம் தெரிஞ்சது.

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு