Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 41

வருச நாட்டு ஜமீன் கதை - 41
வருச நாட்டு ஜமீன் கதை - 41

அணையப் போற வௌக்கு பிரகாசமா எரிஞ்சுட்டு திடீர்னு அணைஞ்சு போகும், பாத்திருக்கீங்களா?

‘கல்யாணமே வேண்டாம்’னு சொல்லிக்கிட்டிருந்த மைனர் பாண்டியருக்கு திடீர்னு ஒரு நாளு கல்யாண ஆசை வந்துச்சு.

ஒரு நாளு, நம்ம மைனர் வேலப்பர் கோயிலுக்கு வில் வண்டியில பொறப்பட்டாரு. போற வழியில காட்டு வேலைக்குப் போய்க்கிட்டிருந்த பொம்பளைங்க வில்வண்டிக்கு வழிவிட்டு ஓடி ஓடி ஒதுங்கினாங்க. மைனருக்கு வேடிக்கையாவும் சிரிப்பாவும் இருந்துச்சு.

ஒரு அழகு தேவதையோட கண்ணு மட்டும் மரத்துக்குப் பின்னாடியிருந்து வண்டியவே கவனிச்சுக்கிட்டிருந்துச்சு. மைனர் அகஸ்மாத்தா அந்தக் கண்ணப் பாத்தாரு. வண்டிய நிறுத்தச் சொன்னாரு.

மெதுவா இறங்கின மைனர், மரத்துக்குப் பின்னாடி இருந்த பொண்ண தாவிப் பிடிச்சாரு. அப்பிடியே தூக்கி வண்டிக்குள்ள போட்டு அவரும் ஏறினாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 41
வருச நாட்டு ஜமீன் கதை - 41

வெடவெடத்துப்போன அந்தப் பொண்ணு வண்டிக்குள்ள மண்டிக்காலு போட்டு, “என்ன விட்டுருங்கய்யா... எங்கம்மா திட்டுவாங்க... என்ன விட்டுருங்கய்யா...”னு சொல்லி திமிறினா. வண்டியிலிருந்து கீழ குதிச்சது அந்தப் பொண்ணு...

கொஞ்சம் பொறுங்க... நாஞ் சொல்ற அந்தப் பொண்ணுக்கு இப்போ எழுவது வயசு. இப்பவும் உசுரோடத்தான் இருக்காங்க. அவங்களோட பேரு வேலம்மா.

இப்ப அவங்க என்ன சொல்றாங்கனு கேளுங்க.

“அப்போ எனக்குப் பதிமூணு வயசு இருக்குமய்யா... அப்பா எறந்துட்டாரு. அதனால அம்மாதான் என்ன வளத்தாங்க.

நான் சடங்காகி மூணு மாசம் ஆகியிருக்கும். மொத மொதல்ல அன்னிக்குத்தான் கடலைக் காட்டுக்குக் கூலி வேலைக்குப் போய்க்கிட்டிருந்தேன்.

ஏற்கெனவே மைனர் பாண்டியரு பத்தி எங்கிட்ட கதை கதையா சொல்லியிருந்தாங்க. ‘மைனர் ஒரு புலி மாதிரி.. வேலைக்குப் போறப்ப ஜாக்கிரதையா போகணும்.. அவரு கண்ணுல தட்டுப்பட்டா அம்புட்டுதான்’ அப்பிடி இப்பிடினு நெறய சொல்வாங்க.

அன்னிக்கு வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தப்போ எனக்குப் பின்னாடி ‘ஜல் ஜல்’னு வில்வண்டி வர்ற சத்தம் கேட்டுச்சு. ஓடிப்போயி ஒரு வேப்ப மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டேன். மரத்துக்குப் பக்கத்துல வண்டி வந்ததும் ‘ஜல் ஜல்’ சத்தம் நின்னுபோச்சு! ‘போச்சு... எல்லாமே போச்சு’னு பயந்து நடுங்கிப் போயிட்டேன்.

வருச நாட்டு ஜமீன் கதை - 41
வருச நாட்டு ஜமீன் கதை - 41

ஒரே தாவுல மைனர் என் தாவணிய பிடிச்சு நிறுத்திட்டாரு. தப்பிக்க முடியல. என் இடுப்பைச் சுத்தி வளைச்சு அப்பிடியே உச்சந்தூக்கா தூக்கி வண்டிக்குள்ள போட்டாரு.

அவரு முகத்தக்கூட நான் பாக்கல. மண்டிக்காலு போட்டு, தலையக் குனிஞ்சு, ‘என்னைய விட்டுருங்கய்யா’னு கையெடுத்துக் கும்பிட்டேன்.

‘உன்னைய ஒண்ணும் செய்ய மாட்டேன். வேலப்பர் மலைக்குத்தான் நானும் போறேன். போற வழியில உன்ன எறக்கி விட்டுர்றேன்’னு மைனர் சொல்லிக் கிட்டிருக்கும்போதே.. நானு வண்டியிலயிருந்து தொப்புனு குதிச்சுட்டேன்.

செம்மண் புழுதியில விழுந்து பொரண்டு எந்திரிக்கிறதுக்குள்ள மைனர் ஓடிவந்து தாவிப் பிடிச்சு வண்டியில மறுதடவ தூக்கிப் போட்டாரு.

‘பயப்படாத! உன்னைய நான் கல்யாணம் செய்துக்கப்போறேன்’னு சொல்லி, என்னைய மடியில அமுக்கிப் பிடிச்சுக்கிட்டு என் கன்னத்தைப் பிடிச்சுத் திருப்பினாரு.

அப்போதான் மைனர் முகத்தையே நான் மொத மொதல்ல பாக்குறேன்.

ஐயா... இதுவரைக்கும் அவரோட அழக நீங்க சொல்லவேயில்ல... மைனர் ஒரு தேவலோகத்து அழகன். செக்கச் செவேர்னு அம்புட்டு நெறமானவரு. சுருள் முடி. முறுக்கின மீசை. எந்தப் பொண்ணும் ஆசைப்படுவா.

நானும் நல்ல செவப்புத்தான். என்னோட கண்ணுதான் அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

ம்... வண்டியில ஏத்திக்கிட்டாரா? நேரா வேலப்பர் கோயிலுக்கே கொண்டுபோயிட்டாரு. கோயிலுக்குள்ள போனதும் அங்கேயிருந்த பளியங்ககிட்ட, ‘இவதான் என் பொண்டாட்டி. இவளைத்தான் நான் கல்யாணம் செய்துக்கப் போறேன். ரெண்டு மாலைய எடுத்துக்கிட்டு வாங்க’னு கேட்டாரு.

வேலப்பர் மேல இருந்த மாலையக்கொண்டுவந்து குடுத்தாங்க. எனக்குப் பேச்சே வரல. மாலைய மட்டும் என் கழுத்துல போட்டாரு மைனரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 41
வருச நாட்டு ஜமீன் கதை - 41

‘உன் பேரு என்ன?’னு அப்புறமா தான் கேட்டாரு.

‘வேலம்மா’னு சொன்னேன்.

‘எனக்கும் உனக்கும் பேர் பொருத்தம், நிறப் பொருத்தம் எல்லாமே இருக்கு. இனிமே நீதான் கண்டமனூர் ஜமீன்தாரிணி யம்மா’னு என்னவெல்லாமோ சொன்னாரு. என்னால நம்பவே முடியல.

கொஞ்ச நேரங் கழிச்சு வேலப்பர் மலைக் குகைக்குக் கூப்பிட்டுக்கிட்டுப் போனாரு. அங்கன பாத்தா நெறைய பூவக் கொண்டு வந்து போட்டு பளியர்க அலங்காரம் செய்து வெச்சிருந்தாங்க.

அன்னிக்கு ராத்திரிதான் மைனர் பாண்டியரு என் சரீரத்த எடுத்துக்கிட்டாரு.

பூமியில மிஞ்சினவரு கண்டமனூர் துரை. மைனர் பாண்டியர விட்டு இனிமே பிரியக்கூடாதுனு முடிவெடுத்துட்டேன்.

நானு வளையக்கார பட்டணத்து செட்டிப் பொண்ணு. என்னோட சாதி, சனம், சொந்தக்காரங்களுக்குத் தெரிஞ்சுபோச்சு. அவங்க சும்மா விட்டுருவாங்களா?”

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு