Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 42

வருச நாட்டு ஜமீன் கதை - 42
வருச நாட்டு ஜமீன் கதை - 42

இப்பிடி இருக்கிறப்பதான் ஒரு நாளு... கொடுவிலார்பட்டியிலிருந்து பழனியாண்டி சாமியாரு மைனரப் பாக்க வந்திருந்தாரு. அவரு மைனரப் பத்தி ஏதோ கனவு கண்டாராம்.

வேலம்மாதான் தொடர்ந்து சொல்றாங்க.

“மைனர் பாண்டியரு, தன்னோட ராஜகம்பளத்து சாதியில பொண்ணெடுத்துக் கல்யாணம் செய்துகிட்டாதான் அந்தக் கல்யாணத்த மொறப்படி அரண்மனையிலே ஏத்துக்குவாங்க. என்னை மாதிரி வேத்து சாதி பொண்ண கல்யாணம் செய்துகிட்டா, அவங்க சாதிக்காரங்களும் ஏத்துக்க மாட்டாங்க... எங்க சாதிக்காரங்களும் ஏத்துக்கமாட்டாங்க.

இந்த விஷயம் எனக்கும் தெரியும். இருந்தாலும் மைனர் பாண்டியருதான் என் புருஷன்னு முடி செய்துகிட்டேன்.

மைனருக்கு அப்போ முப்பத்தஞ்சு வயசு. எனக்குப் பதிமூணு வயசு. ஏணி வெச்சாலும் எட்டாத வயசுப் பொருத்தம். ஏழு ஜென்மம் காத்திருந்து இந்த மகாராஜாவைக் கல்யாணம் செய்யணும்னு பூர்வஜென்ம விதியிருந்துச்சோ என்னவோ தெரியல... இந்த ஜென்மத்துல கடைசி வரைக்கும் மைனருக்குக் கைங்கரியம் செய்யணும்னு அந்த பிரம்மா என் தலையில எழுதி வெச்சுட்டான்.

மைனர் என்கிட்ட, ‘கவலைப்படாத வேலம்மா. இதுவரைக்கும் எந்தப் பொண்ணுக்கும் நான் மாலை மாத்தினது இல்ல. கடைசிவரைக்கும் நீதான் என்கூட இருக்கப்போற. நம்ம ஜமீன் நமக்கே வந்துரும். அப்போ உனக்கு ஊரறிய தாலி கட்டி கல்யாணம் செய்துக்கறேன். அதுவரைக்கும் தெப்பம்பட்டியில அந்தப்புரத்துலயே இரு. யார் கூப்பிட்டாலும் போகாதே..!’னு தெகிரியம் சொன்னாரு.

மூணே முக்கால் நாழிகைல நாலே முக்கால் தேர் ஓட்றவரு நம்ம மைனரு. அவரோட பேச்சுல சொக்கிப் போனேன்.

வேலப்பர் கோயில்லயிருந்து தெப்பம்பட்டி அரண்மனைக்குப் போய்ச்சேரும்போது, அங்கன போலீஸ்காரங்க வந்து நிக்கிறாங்க.

என்னைய மைனர் கடத்திக்கிட்டுப் போயிட்டதா பிராது குடுத்திருக்காங்க. எங்க சொந்தம், மாமன், மச்சான் அம்புட்டு பேரும் தெரண்டு வந்துட் டாங்க. எங்கம்மா என்னப் பாத்ததும் ‘ஓ’னு அழுதக்கிட்டு வந்தாங்க.

‘அடிப்பாவி முண்ட... இப்பிடி சந்தி சிரிக்க வெச்சுட்டியே... எல்லாத்தையும் உதறிப் போட்டுட்டு வாடி. நம்ம சாதியில வேற மாப்பிள்ளைக்கு உன்னைக் கட்டி வெக்கிறேன். வாடி வீட்டுக்குப் போகலாம்’னு கையப் பிடிச்சு இழுத்தாங்க.

‘இனிமே மைனர்கூடத்தான் இருப்பேன். அவர கையப் புடிச்ச பெறகு இன்னொருத்தர் கையப் புடிக்கமாட்டேன். நீங்க கவலைப் படாம வீட்டுக்குப் போங்க’னு கைய உதறிக்கிட்டு ‘விடுவிடு’னு அரண்மனைக்குள்ள ஓடிப் போயிட்டேன்.

‘புளியங்கொம்பா புடிச்சிருந்தா கவலைப்பட மாட்டேன்டி.. போயும் போயும் முருங்க மரத்தைப் புடிச்சிட்டியே... சொத்து-பத்து இல்லாதவங்ககூட எத நம்பி வாழப் போறியோ?’னு கத்தினாங்க அம்மா.

அதுக்குப் பெறகு போலீஸ்காரங்க மைனரையும் என்னையும் கோர்ட்டுக்கு வந்து வாக்குமூலம் குடுக்கச் சொன்னாங்க. உடனே மைனரு, ‘கோர்ட்டுக்கு நான் மட்டுந்தான் வருவேன். வேலம்மா அரண்மனைப் பொண்ணு.. அவ கோர்ட்டுக்கு வரமாட்டா!’னு சொல்லி அனுப்பினாரு.

‘நான் கோர்ட்டுக்குப் போகாம இருக்க மைனர் கோர்ட்டுக்குப் போயி படிச் செலவு கட்டினாரு. அதனால என்கிட்ட வாக்குமூலம் வாங்க கோர்ட்லேயிருந்து வக்கீல், போலீஸ் அம்புட்டு பேரும் அரண்மனைக்கே வந்தாங்க. வேலுச்சாமி நாயக்கரும்கூட இருந்தாரு.

‘என்னைய மைனர் கடத்தல.. கட்டாயப்படுத்தித் தாலி கட்டல... இனிமேல்பட்டு மைனர் பாண்டியரு கூடத்தான் ஜீவனம் நடத்தப் போறேன்’னு எழுதி கையெழுத்துப் போட்டுக் குடுத்தேன்.

அப்பவே, எங்க சாதியிலிருந்து என்னை ஒதுக்கிவெக்கிறதா ஒரு பெரிசு சத்தம் போட்டுச் சொன்னாரு.

அதுக்குப் பெறகு, தெப்பம்பட்டி அரண்மனையிலதான் வெயில் மொகம்படாமலும், ஆம்பளைங்க பார்வ படாமலும் இருந்தேன்.

அரண்மனைக்குள்ள மானு, மயிலு, முயலு எல்லாமே இருந்துச்சு. தெனமும் என்கூட வெளையாட ஐயங்கார் வீட்டுப் பொண்ணுக வருவாங்க, போவாங்க. நாட்டியக்காரி ஜனகத்தோட முதல் புருஷனுக்குப் பொறந்த பொண்ணு.. மீனாட்சியோ வாணியோ.. பேரு சரியா ஞாபகமில்ல. அந்தப் பொண்ணு அரண்மனைக்கு வந்து பழைய கதையெல்லாம் பேசிட்டுப் போச்சு. சாப்பாட்டுக்குக் கவலையில்ல. மைனர் என்கிட்ட காசு பணம் குடுக்கமாட்டாரு. ஆனா, சந்தோஷமாத்தான் இருந்தேன்.

‘கோயிலு, திருவிழா, பஞ்சாயத்து’னு வெளிய போவாரு. திரும்பி வரும் போது ‘வேஷ்டி, துண்டு, பரிவட்டம்’னு வருவாரு. துண்டுல இருக்கிற ஜரிகைய மட்டும் இப்போ உருவி வித்தா ஆயிரம் ரூவாய்க்குப் போகும்.

இம்புட்டுச் செல்வாக்குல அறுவத்திநாலு கிராமத்துக்கும் மைனர்தான் ராஜகம்பளத்துத் தலைவரா இருந்தாரு.

மைனர் பாண்டியருக்கு புதுத் தெம்பு வளந்து போச்சு. சேவகமார்கள் சின்ன ராமன், பெரிய ராமன், இருளப்பன், குண்டுவாடன், மோனையன் இப்பிடி எல்லாத்தையும் கூப்பிட்டுக்கிட்டு கண்டமனூர் அரண்மனைக்குப் போனாரு. “இனிமே கண்டமனூர் அரண்மனையிலதான் இருப்பேன்”னு சொல்லிட்டு அங்கேயே பஞ்சாயத்து செய்ய ஆரம்பிச்சாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 42
வருச நாட்டு ஜமீன் கதை - 42

சித்தர மாசம் பொறந்தா போதும்... கூட்டு வண்டிய ஏற்பாடு செஞ்சு அதுல ரெண்டு பக்கமும் உண்டியல் கட்டிவெச்சு வேலப்பர் கோயிலுக்குப் பொறப்படுவாரு. தெப்பம்பட்டி பாலு நாயக்கர்தான் வண்டி ஓட்டுவாரு. எல்லா கிராமத்துச் சனங்களும் போடுற பணங் காசுல உண்டியல் நெறஞ்சு வழியும்.

ஆடி வேட்டைக்குப் போகும்போது, அவருகூட பெரிய வீட்டு சுருளியாண்டி நாயக்கரும் போவாரு. வேட்டையில கெடைக்கிற காட, கவுதாரி, மான், மயிலு, முயலு எல்லாத்தையும் பங்கு போட்டுக் குடுப்பாரு.

இப்பிடித்தான் ஒரு நாளு... உள்காட்டுப் பக்கம் வேட்டைக்குப் போயிட்டு சேவகமார்களோட அரண்மனைக்குத் திரும்பினாங்க. அரண்மனை வாசல்ல, கொன்ற மரத்துக்குப் பக்கத்துல பெரிய பாம்பு ஒண்ணு ஊர்ந்து போறத சின்ன ராமன் பாத்துட்டாரு. அத ஒரே கையால பிடிச்சு, சுத்தி அடிச்சு தூக்கிப் போட்டாரு. மைனர் அதப் பாத்துட்டு, ‘பாம்பு வந்தது கெட்ட சகுனம்னு நெனக்கிறேன். இன்னிக்கு அரண்மனையில தங்கமாட்டேன். தெப்பம்பட்டி அரண்மனைக்குப் போறேன்’னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

மறுநாள்.... ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரங்க, தெப்பம்பட்டியில ஒண்ணு சேந்தாங்க. ‘வேலப்பர் கோயிலுக்குள்ள நுழையப்போறோம். நாங்களும் பூசை செய்யப் போறோம்’னு துணிஞ்சு வேலப்பர் மலைக்குக் கௌம்பிப் போனாங்க.

1921-ல மதுரைக்கு வந்த காந்திஜி, “தாழ்த்தப்பட்டவங்கள எப்போ கோயிலுக்குள்ள அனுமதிக்கிறீங்களோ... அதுக்குப் பெறகுதான் நானும் மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ள நுழைவேன்”னு சொல்லியிருந்தாரு.

1939-ல மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ள மொத மொதல்ல தாழ்த்தப்பட்டவங்கள கூப்பிட்டுக்கிட்டுப் போயி சாதன செஞ்சாரு வைத்தியநாத ஐயர். ராஜாஜியோட தளகர்த்தர். சுதந்திரப் போராட்டத் தியாகி.

கோயில் நுழைவுப் போராட்டம் முடிஞ்ச பெறகு, 1946-ல காந்திஜி மதுரைக்கு வந்தப்பதான் மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ள நொழஞ்சி தரிசினம் செஞ்சாரு.

வைத்தியநாத ஐயர் குடுத்த தெம்புல ‘வேலப்பர் கோயிலுக்குள்ள நாங்களும் பூச செய்வோம்’னு அந்தக் குறிப்பிட்ட சாதிக்காரங்க போறப்பதான், ஏற்கெனவே பூச செய்துக்கிட்டிருந்த பளியர்க அரண்டு ஓடிவந்து மைனர் பாண்டியர்கிட்ட விஷயத்தச் சொன்னாங்க.

மைனர் பாண்டியர், அடியாட்கள கூப்பிட்டுக்கிட்டு வேலப்பர் மலைக்குப் போயி எல்லாரையும் அடிச்சுத் துரத்தினாரு. அடிவாங்கினவங்க ஆண்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன்ல பிராது குடுத்துட்டாங்க.

மைனருக்குக் கோவம் வந்து, சவுக்கெடுத்து போலீஸ்காரரை விளாசி தூணுல கட்டிவெச்சாரு.

மைனர்கிட்ட அடி வாங்கின சனங்க தெரண்டு வந்து அரண்மனைய சுத்தி நின்னுக்கிட்டாங்க.

மைனருக்கு ஆபத்துனு விஷயம் தெரிஞ்சதும் சின்ன ராமன் ஏழு ஊரு சனங்கள கூப்பிட்டுக்கிட்டு கட்ட, கம்பு எடுத்துக்கிட்டு வந்து கூட்டத்த அடிச்சுத் துரத்திக்கொண்டு போயி ஒரு மைதானத்துல நிறுத்திட்டாங்க. யாரையும் வெளியில விடல. ‘மைனர எதுத்தவங்க யாரா இருந்தாலும் இதுதான் கதி’னு அன்னிக்குப் பூராவும் அவங்களுக்குக் கஞ்சி தண்ணி குடுக்காம அடி பின்னிட்டாங்க.

மறுநாள், மதுரையில இருந்த கலெக்டர் துரைக்கு யாரோ விஷயத்தைச் சொல்ல, அவரு வந்து சமாதானப்படுத்தி சனங்கள விடுவிச்சாரு.

இப்பிடி இருக்கிறப்போ.. வரும்படி கம்மியா இருக்குனு சொல்லி, பம்பாய் பட்டேலு கண்டமனூர் ஜமீன விட்டுட்டுப் போயிட்டாரு.

1943-வது வருசம் கோயம்புத்தூர் காரங்க பி.எஸ்.ஜி.வெங்கிடசாமி நாயுடு, திவான் பகதூர் ரங்கசாமி நாயுடு, கெங்கா நாயுடு, நாராயணசாமி நாயுடு இப்பிடி அண்ணந் தம்பிக போல கண்டமனூர் ஜமீன் கைமாறி வந்துருச்சு.

‘தெலுங்குக்காரங்க கைல ஜமீன் வந்துருச்சு.. நமக்கு ஒத்தாசையா இருப்பாங்க’னு மைனர் சந்தோஷப் பட்டாரு. ஜமீன் வேலைக்கு சிபாரிசு வேணும்னு சனங்க மைனர்கிட்ட வந்துதான் கடிதாசி வாங்கிட்டுப் போவாங்க.

எங்க மாமியாரு வேலுத்தாயம்மா மட்டும் கொஞ்சம் உஷாரா இருந்திருந்தா, எங்க மைனரோட ஐவேஜை சனங்க மெச்சிப் போயிருப்பாங்க.

வரி கட்ட முடியாம காடு, கழனி, வாய்க்கா வரப்பு, சட்டிப் பான மொதக்கொண்டு அம்புட்டும் ஏலத்துக்குப் போயிருச்சு. அதுதான் போச்சு.. மைனரப் படிக்கவாவது வெச்சிருக்கலாம். ‘சென்னப் பட்டினத்துல இங்கிலீஷ்காரனோட பள்ளிக்கூடத்துலச் சேத்துப் படிக்க வெக்கிறோம்’னு கலெக்டர் துரையும் எட்டப்ப ராஜாவும் கேட்டாங்களாம். வேலுத்தாயம்மாதான் முடியாதுனு சொல்லிட்டாங்களாம். மைனரு வருத்தப்பட்டு என்கிட்ட சொல்லிக் கிட்டேயிருப்பாரு.

ஒரு நாளு மைனர்கிட்ட, ‘இனிமே கோபப்பட மாட்டேன். யார் கூடவும் வம்பு வழக்குனு போகமாட்டேன்னு சத்தியம் செஞ்சு குடுங்க’னு கேட்டேன். அதுக்கு மைனர், ‘கோவம், வம்பு, வழக்கு இதெல்லாம் இருந்தாத்தான் ஒருத்தன் ஜமீன்தாராவே இருக்க முடியும்’னு சொல்லிட்டாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 42
வருச நாட்டு ஜமீன் கதை - 42

அதென்னவோ நான் கேட்டுக்கிட்ட பெறகு மைனர் யார் கூடவும் வம்பு வழக்குனு போகல... யார்கிட்டேயும் கை நீட்டிப் பணம் வாங்கல. அவங்களா கொண்டுவந்து குடுத்தத வாங்கிக்கிட்டாரு.

இப்பிடி இருக்கிறப்பதான் ஒரு நாளு... கொடுவிலார்பட்டியிலிருந்து பழனியாண்டி சாமியாரு மைனரப் பாக்க வந்திருந்தாரு. அவரு மைனரப் பத்தி ஏதோ கனவு கண்டாராம்.

‘பாண்டியரே.. அரண்மனைக் கொன்ற மரத்துல நெறைய வெள்ளைப் பாம்புக சுத்திக்கிட்டு படமெடுத்து ஆடுற மாதிரி கனவு வந்துச்சு. வேலப்பர் கோயில்லயிருந்து மயிலு பறந்துவந்து அந்தப் பாம்புகள கொத்தித் தூக்கிட்டுத் திரும்பவும் வேலப்பர் மலைக்கே பறந்து போறது மாதிரி தெரிஞ்சுது!’னாரு.

‘அப்படியா..? அந்தக் கனவுக்கு என்ன பலாபலன்?’னு மைனர் கேட்டாரு.

‘கிறுக்கு துரை காலத்துக்குப் பெறகு வேலப்பர் கோயில் திருப்பணிய யாருமே செய்யல. உண்டியல் வருமானத்த மட்டும் நீங்க அனுபவிச்சா போதுமா? எனக்கென்னவோ பழைய சாபம் நிறைவேறப்போகுதோனு கனவு அடையாளம் சொல்லுது. வியாதி வரப்போகுதுன்னு ஒரு அறிகுறி! அதனால, பரிகாரத்துக்கு வேலப்பர் கோயிலுக்கு படிக்கட்டு கட்டி திருப்பணிய ஆரம்பிச்சிருங்க’னு ஒரு ரோசனை சொன்னாரு பழனியாண்டி சாமியாரு.

ராமலிங்காபுரத்துலயிருந்து தாசுமுத்து கவுண்டரும் ஓடிவந்து, ‘எனக்கும் கனவுல வெள்ளப் பாம்பு வந்துச்சு’னு மைனர்கிட்ட சொன்னாரு.

மைனருக்கு நெசமாவே பயம் வந்துருச்சு. கிறுக்கு துரையும் சாமியப்ப நாயக்கரும் கொஞ்ச வயசுலயே செத்துப் போயிட்டாங்களா. அதனாலதான் மட்டுமாவது பூரண ஆயுளோட இருக்கணும்னு மைனர் ஆசப்பட்டாரு.

வேலப்பர் கோயிலுக்குப் படிக்கட்டு கட்டணும்னு தீர்மானிச்சாரு. எல்லா ஜமீன்தாருகிட்டயும் எல்லா ஊரு சாதி சனங்ககிட்டயும் பணம் வசூல் செய்தாங்க. அப்போ மைனர்கிட்ட இருந்தது வெறும் அம்பது ரூவா அஞ்சணா மூணு பைசாதான். முழுசா அப்பிடியே குடுத்துட்டாரு.

அன்னிக்கு ராத்திரி நல்லா தூங்கிக்கிட்டு இருக்கிறப்ப ரெண்டாஞ் ஜாமத்துல... ஒரு ஜாமக்கோடாங்கி, ‘அரண்மனைக் கொம்பனுக்குக் கண்டம் நெருங்கி வருது.. வருது’னு உடுக்கு அடிச்சான். எப்பவும் ஜாமக் கோடங்கி அரண்மனைக்கு முன்னால உடுக்கு அடிக்க மாட்டாங்க.

மைனர் திடீர்னு எந்திரிச்சு, கையி, காலு எல்லாத்தையும் உதற ஆரம்பிச்சாரு. அரத் தூக்கத்தில இருந்த நானும் பதறிப்போயி எந்திரிச்சு, ‘என்னாச்சு..? என்னாச்சு..?’னு கேட்டேன்.

‘வேலம்மா... எனக்குக் கெட்ட கனவு வந்துருச்சு! என் கைலயும் கால்லயும் வெள்ளப் பாம்புக சுத்திக்கிட்டுப் படமெடுத்து ஆடுது. பளியஞ்சித்தன் சத்தம் போட்டு சிரிக்கிறான்!’னு பெருமூச்சுவிட்டாரு.

‘வேலப்பர் துணையிருக்கார். அமைதியா தூங்குங்க’னு சொல்லி, குடிக்க தண்ணி குடுத்து தூங்க வெச்சேன்.

ஐயா... நான் என்னத்தச் சொல்ல...

தேனி வயலழகு,

தேவாரம் சிலையழகு,

கண்டமனூர் துரையழகு

-னு என் மைனரோட கால் அழக, கை அழக, மூக்கு அழக வர்ணிச்சு வர்ணிச்சு எத்தன பொம்பளைங்க பாடுனாங்களோ... எத்தன ஆம்பளைங்க பொறாமைப்பட்டாங்களோ..? ஆபத்து வந்துருச்சய்யா.. வந்துருச்சு..!”

மைனர நெனச்சு வேலம்மா அழ ஆரம்பிச்சாங்க.

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு