Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 43

வருச நாட்டு ஜமீன் கதை - 43
வருச நாட்டு ஜமீன் கதை - 43

மைனர் பாண்டியருக்குத் தூக்கம் தொலைய ஆரம்பிச்சது.

திடீர்னு நடுச்சாமத்துல எந்திரிச்சு படுக்கைல உக்காந்து தன்னோட கை விரலயே பாத்துக்கிட்டிருந்தாரு. விரல் சரியா மடங்காம உள்ளுக்குள்ள எதுவோ இழுத்துப் பிடிச்சுக்கிட்ட மாதிரி உணர்ந்தாரு. விரல நீவிக்கிட்டே உள்ளங்கையப் பாத்தாரு.

அப்போதான் மைனருக்குத் தன்னோட தாயார் ஞாபகம் வந்துச்சு. நல்லா தூங்கிக்கிட்டிருந்த வேலம்மாவத் தட்டி எழுப்பி, “வேலம்மா... எனக்கு எங்கம்மாவப் பாக்கணும்போல இருக்கு. பாக்கப்போனா என்ன சொல்வாங்களோ தெரியல. விடிஞ்சதும் எரசக்கநாயக்கனூர் போகணும்”னு கண் கலங்கிக்கிட்டே சொன்னாரு.

மைனரோட அடாவடித்தனம் பிடிக்காம, வெளியபோன ஜமீன்தாரிணி வேலுத்தாயம்மா அதுவரைக்கும் மகன பாக்காமதான் இருந்தாங்க.

எரசை ஜமீன்தார் கதிர்வேலுச் சாமிக்குத்தான் மைனரோட அக்கா ராஜமாணிக்கத்தைக் கல்யாணம் செஞ்சு வெச்சாங்கனு சொல்லியிருக்கேன். ராஜமாணிக்கத்துக்குப் பொறந்தது ‘ரத்னாமணி, ராதாமணி’னு ரெண்டு பொண்ணு.. ‘காமராஜேந்திர கதிர்வேல் பாண்டியன்’னு ஒரு ஆணு. இவங்கள கவனிக்கிறதுக்குத்தான் மைனரோட தாயார் வேலுத்தாயம்மா எரசைக்குப் போயி அரண்மனையிலயே தங்கியிருந்தாங்க.

நம்ம மைனரு வில்வண்டியில எரசைக்குப் போய்ச் சேந்தாரு. தன்னோட தாயாரு முகத்தப் பாக்கணும்னு ஏக்கத்தோட எறங்கி வாசல்ல நின்னாரு.மைனர் வந்திருக்காருனு தெரிஞ்சும் அரண்மனைக்குள்ளயே இருந்த வேலுத்தாயம்மா வெளிய வரவேயில்ல. தம்பிக்கு உபசாரம் செய்யணும்னு அக்கா ராஜமாணிக்கம் ஓடிவர்றப்ப அவங்களயும் தடுத்துட்டாங்க.

ஒரு சேவகன்கிட்ட, “என் மகனோட முகத்துலயே முழிக்கக் கூடாதுனு முடிவு செஞ்சுதான் இங்க வந்து மகளோட நிம்மதியா இருக்கேன். இங்கயும் வந்து எனக்குத் தொந்தரவு தரப்போறானா? ஆடுற ஆட்டமெல்லாம் ஆடி, கொஞ்ச நஞ்சம் இருந்த சொத்தையெல்லாம் தொலச்சுட்டானே. இங்க வந்து என் மானத்த வாங்கப் போறானா? அவன் உள்ளயே வரக்கூடாது. செத்தாலும், அவன் முகத்துலயே முழிக்க மாட்டேன். திரும்பிப் போகச் சொல்லு..!”னு உத்தரவு போட்டாங்க.

வேலுத்தாயம்மா கத்தினது வாசல்ல காத்துக்கிட்டிருந்த மைனருக்குக் காதுல கேட்டுச்சு. சேவகக்காரன் வந்து சொல்றதுக்குள்ள மைனர் வில்வண்டியில ஏறி பொறப்பட்டுப் போயிட்டாரு.

பக்கத்துலதான் உத்தமபாளையம். மக்கா ராவுத்தரோட பேரன் அப்துல் லத்தீப்பைப் பாக்கணும்னு அவரோட வீட்டுக்குப் போய்ச் சேந்தாரு.

அப்துல் லத்தீப்கிட்ட மைனர், தன்னோட வாழ்க்கைல நடந்த எல்லா சம்பவங்களையும் சொல்லிச் சொல்லி அழுதாரு. அம்மாவையும் அக்காவையும் பாக்க முடியாத ஏக்கம் வேற.

“என்னோட துர்நடவடிக்கையால என் வாழ்க்கைய நானே கெடுத்துக்கிட்டேன். எங்க ஜமீன எனக்கே மீட்டுக்குடுக்கணும்னு உங்க தாத்தா பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போனது என்னாலதான். இப்போ அந்தப் பாவத்த அனுபவிக்கிறேன். நீயாவது நல்லா இரு தம்பி”னு அழுது தீத்தாரு மைனர்.

உடனே லத்தீப், தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியக் கழட்டி, “அண்ணே... இந்தச் சங்கிலி நான் சின்னப் பையனா இருக்கும்போது உங்கப்பா சாமியப்ப நாயக்கரு எனக்குக் குடுத்தது. இத போட்டுக்கங்க. உங்க யோகத்துக்கு அதே செல்வாக்கு திரும்ப வந்துரும்...”னு சொல்லி, சங்கிலிய மைனருக்குப் போட்டு விட்டாரு.

அந்தச் சமயம் பாத்து எரசை ஜமீன்தார் கதிர்வேலுச்சாமி அங்க வந்தாரு. மைனரப் பாத்து, “என்ன மாப்ள... அம்மா திட்டுனாங்கனு கோவிச்சுக்கிட்டு வந்துட்டீங்களா? உங்க அக்கா ராஜமாணிக்கம்கூட என்னய திட்டிக்கிட்டேதான் இருக்காங்க. நம்ம சொத்து எல்லாம் பிராது, வழக்குனு கோர்ட்ல இருக்கிறதால என் மேலயும் கோவமாத்தான் இருக்காங்க. அம்மாவும் மகளும் குழந்தைகள கூட்டிக்கிட்டுத் திருப்பரங்குன்றத்துக்குப் போயி தங்கப்போறாங்களாம். அரண்மனையில எனக்கும் நிம்மதியில்ல. வழக்கு எல்லாத்தையும் பி.டி.ராஜன்கிட்டதான் ஒப்படச்சிருக்கேன். அவரு எல்லாத்தையும் பாத்துக்கிட்டு நமக்கு ஒத்தாசையா இருக்காரு. அவரப் பாக்கத்தான் போய்கிட்டிருக்கேன்”னு சொன்னாரு.

(பி.டி.ராஜன் ‘ஜஸ்டிஸ் கட்சி ஜாம்பவான்’னு சொல்லுவாங்க. நம்ம சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் இருக்காரே, அவரோட தகப்பனார்தான். பி.டி.ராஜனோட தாத்தா வக்கீல் தியாகராஜ முதலியார் செங்கல்பட்டச் சேந்தவரு. நல்ல செல்வாக்கோடவும் வாதாடுற திறமையினாலயும் அப்போ எரசக்க நாயக்கனூர் ஜமீன்தாரிணி அக்குலம்மாவுக்கு அறிமுகமானாரு.

நெலம் சம்பந்தமான ஒரு சிக்கலான வழக்குல சென்னை ராஜதானி கோர்ட்ல ஜமீன் பக்கம் வாதாடி ஜெயிச்சுக் குடுத்தாரு. அப்பெல்லாம் வக்கீலுக்குப் பணம் கொடுக்கிற பழக்கமில்ல. அதனால தியாகராஜ முதலியாருக்கு எரசக்க நாயக்கனூர் ஜமீன்ல ஒரு பகுதி நெலத்தப் பிரிச்சுக் குடுத்து திவானா நெயமிச்சாங்க. அப்பத்தான் கம்பம், உத்தமபாளையம் பகுதியில நிறைய நெலம் சம்பாதிச்சாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 43
வருச நாட்டு ஜமீன் கதை - 43

அந்தச் செல்வாக்குலதான் பி.டி. ராஜன் லண்டன்ல போயி வக்கீலுக்குப் படிச்சுப்போட்டு இந்தியாவுக்கு வந்து அப்புறமா அரசியல்ல சேந்து நீதிக்கட்சிக்குத் தலைவராயிட்டாரு.

இப்பவும் பி.டி.ராஜன் பேர்ல முல்லையாத்துலயிருந்து ஒரு கால்வாய் ஓடிக்கிட்டிருக்கு.

நம்ம மைனரும் ஜமீன்தாருகூட போயி பி.டி.ராஜனச் சந்திச்சாரு.

“கண்டமனூரைச் சேந்த அறுவத்திநாலு கிராமத்து சனங்களையும் ஒண்ணு சேத்து ஒரு கூட்டம் போட்டா நல்லாயிருக்கும். அதுக்கு ஏற்பாடு செய்ங்க. உங்களுக்கும் நல்லதே நடக்கும். காங்கிரஸ்காரங்க ஜமீன்தாருகள ஒழிக்கணும்னு ஒரே குறியா இருக்காங்க. அதனால, ஜமீன்தாருக, மிட்டாமிராசுக அம்புட்டு பேரும் நம்ம கட்சியிலதான் சேர்றாங்க”னு மைனர்கிட்ட பி.டி.ராஜன் கேட்டுக்கிட்டாரு.

மறுநாள் தெப்பம்பட்டியிலிருந்து மைனரும் வேலம்மாவும் வில்வண்டியில ஏறி பரிவாரங்களோட ஒவ்வொரு ஊராப் போனாங்க.

கண்டமனூர்ல ஜமீன் சமாதிகிட்ட வண்டிய நிறுத்தி சாமி கும்பிட்டாரு. அந்தச் சமயம் பாத்து அம்பாசமுத்திரம் கிராமத்தச் சேந்த வெங்கிடசாமி நாயக்கரு ஓடிவந்து, “தொரை.. உங்களத்தான் பாக்கணும்னு வந்தேன். இந்தச் சமாதி நெலத்துல பயிர் பச்சை வௌச்சல் செய்துக்கறேன். அதோட வண்டல் மண்ணு அள்ளிக்கவும் தோதா இருக்கும். இந்தா பிடிங்க எரநூறு ரூவா..”னு சொல்லி ஒரு சுருக்குப் பை நெறைய சில்லறைக் காசா கொண்டுவந்து குடுத்தாரு. மைனரு சந்தோஷமா கைல வாங்கினாரு.

அந்தச் சமாதி எடத்துல தனக்கும் ஆறடி நெலம் வேணுமேனு அப்போ மைனர் ரோசனை செஞ்சாரா? இல்ல!

வேலம்மாதான் சட்டுனு மைனரோட கையப்பிடிச்சு, “வேணாங்க... இருக்கிறது இந்த நெலம் மட்டுந்தான். இதயும் குடுத்துட்டீங்கனா பின்னாடி உங்களுக்குத் தேவப்படும்போது...”னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே, “அடிப்போடி பைத்தியக்காரி! தானா வர்ற எரநூறு ரூவாய வேணாம்னு சொல்லக்கூடாது. இனிமே கடன் வாங்கக்கூடாதுனு முடிவெடுத்துட் டேன். தொலஞ்சுபோன எல்லாமே என்னோட முப்பத்தஞ்சாவது வயசுல திரும்ப வரும்னு ஜாதகத்துல சொல்லியிருக்கு. எழுவது வயசு வரைக்கும் சாகமாட்டேன். கனவாவது பாம்பாவது... எவனோ மடப்பய சொன்னான்னு நானும் நம்பித் தொலச்சுட்டேன். பயப்படாத... நாளக்கி நடக்கிற கூட்டத்துல என்னோட செல்வாக்கு எப்பிடித் திரும்பி வருது பாரு..!”னு சொல்லி சுருக்குப் பைய வாங்கி உள்ள போட்டுக்கிட்டாரு.

மறுநாள்.. கண்டமனூர் ஜமீனே ஆடிப்போச்சு. மோட்டார் காருக வர்றதும் போறதும், கடாவெட்டும் நெல்லுச் சோறும் வீரபாண்டி திருவிழாக் கூட்டம்தான். ஏகப்பட்ட செலவு. கூட்டிக் கழிச்சுப் பார்த்தா மைனருக்கு நூத்தி முப்பது ரூவா கடன் ஆகிப்போச்சு!

மைனரு கொஞ்ச நேரம் யோசிச்சாரு. அப்பத்தான் நாகமுத்து நாயக்கரு தேனி சந்தையிலிருந்து வந்துக்கிட்டிருந்தாரு.

மைனர் அவரக் கூப்பிட்டு, “ஜோப்புல எவ்வளவு பணம் வெச்சிருக்க?”னு கேட்டாரு.

“வேணாம் பாண்டியா... பருத்தி வித்த காசு நூத்தி ஐம்பது ரூவாதான் இருக்கு. ஊருக்குக் கொண்டு போகணும்”னு ஜோப்ப இறுக்கிப் பிடிச்சுக்கிட்டுப் பதறினாரு நாகமுத்து நாயக்கரு.

“சும்மா குடுக்க வேணாம்பா... நூத்தி முப்பது ரூவா மட்டும் குடு. என்னோட வில்வண்டியையும் மாடுகளையும் சேத்து கொண்டுபோ!”னு சொன்னாரு மைனரு.

“இப்ப குடுத்துப்போட்டு... அப்புறம் வந்து சவுக்கெடுத்து அடிக்க மாட்டியா?”

“பயப்படாத. நான் முந்தி மாதிரியில்ல. காசு சேந்ததும் குதிரை வண்டி வாங்கப் போறேன்!”னு சொன்ன மைனர், நூத்திமுப்பது ரூவாய்க்கு வில்வண்டியையும் மணிமாடுகளையும் அவருக்கே குடுத்துட்டாரு. இனிமே வில் வண்டியும் மாடுகளும் வாங்கவே முடியாதுனு அப்போ மைனருக்குத்தான் தெரியாமப் பேச்சு.

(அந்த நாகமுத்து நாயக்கர் இப்பவும் கடமலைக்குண்டுல இருக்காரு).

அன்னிக்கு ராத்திரி மைனர் எல்லாத்தையும் மறந்து தூங்கிக்கிட்டிருந்தாரு. ரெண்டாஞ்ஜாமத்துல திரும்பவும் அதே கனவு வந்துச்சு. அதே கொன்ற மரத்துல பளியஞ்சித்தன் கெக்கலி போட்டுச் சிரிக்கிறான். இந்தத் தடவ வெள்ளப் பாம்புக மைனரோட கைவிரல கொத்த ஆரம்பிச்சது.

பதறிப்போயி கண்ணு முழிச்சாரு மைனர்... விரல மடக்கி நீட்ட முடியாம தவிச்சுப்போனாரு. ரத்தம் சூடேறிப்போச்சு. “அம்மா... அம்மா!”னு கத்தினாரு. வேலம்மா துடிச்சுப்போயி எந்திரிச்சாங்க.

சேவகமார்க ரெண்டு பேரு அரத் தூக்கத்துல எந்திரிச்சு வைத்தியரக் கூப்பிட ஓடினாங்க. மூணு வைத்தியருக அரண்மனைக்கு வந்து சேரும்போது நல்லா விடிஞ்சுபோச்சு.

மைனரோட விரல்ல எண்ணெயப் போட்டு வழிச்சு நீவினாங்க. ஒரு வைத்தியரு கண்ணால ஜாட காட்டினாரு. இன்னொரு வைத்தியரு, “நீசஸ்திரி சம்போகம், மேகநீர் மரண ரோகம்!”னு முணுமுணுத்தாரு.

மைனர் கொஞ்சம் பதட்டத்தோட, “என்கிட்ட சொல்லுங்க, எனக்கு என்ன வியாதி?”னு கேட்டாரு.

“பாண்டியரே... நாங்க அத எப்பிடிச் சொல்றது? சொஸ்தப்படுத்திக் காட்டத்தான் நாங்க இருக்கிறோமே..!”

“சும்மா சொல்லுங்க..!”- மைனர் அவசரப்படுத்தினாரு.

“அது வந்து... உங்க ராஜ அம்சத்துக்கு இந்த வியாதி வரப்படாது. அது வந்து.. பெருவியாதி!”

“குஷ்டமா..!?”

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு