Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 44

வருச நாட்டு ஜமீன் கதை - 44
வருச நாட்டு ஜமீன் கதை - 44

‘மைனர் பாண்டியருக்குக் குஷ்டரோகம்தான்’னு வைத்தியருக முடிவா சொல்லிட்டாங்க. மைனருக்குப் பாதி உசுரு அப்பவே போயிருச்சு. உக்கி உருகிப் போயிட்டாரு. முகச் சாந்தியும் இறுகிப்போச்சு.

ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு வைத்தியருக வந்து, அவங்கவங்களுக்குத் தெரிஞ்ச பாண்டித்தியத்தக் காட்டுனாங்க. வெள்ளலரி, செவ்வலரி, மஞ்சளலரி இதுகளோட வேர்ப் பட்டைகள பொடி செஞ்சு விரல்ல தடவினாங்க. காட்டு அத்தி, கொடி அத்தி, பேய் அத்தி இந்த மூலிகைகளோட பாலை சேகாரஞ்செஞ்சு, பக்குவமா தடவிப் பாத்தாங்க. கருநெல்லி, காயச்சித்தி, மூலிகைனு வண்டி வண்டியா கொண்டுவந்து, ‘இதுதான் வீரியமான ஔடதம்’னு சொல்லிக் கசக்கிப் பிழிஞ்சதுதான் மிச்சம். ம்ஹும்... ஒண்ணும் மசியல!

‘பளியஞ்சித்தன் இன்னும் சாகலை... கொன்ற மரத்துல உசுரோட உக்காந்துக்கிட்டு இருக்கான்’னு வைத்தியருங்களுக்குத்தான் தெரியாமப் போச்சு. பளியசித்தனோட சாபத்துக்கும், வைத்தியருக கொண்டுவந்த மூலிகைகளுக்கும் ஒரு குருச்சேத்திர யுத்தமே நடந்துச்சு! மூலிகையோட உக்கிரம் சாபத்துக்குக் கட்டுப்பட்டு செயலத்துப்போச்சு.

நாள் கூடக்கூட மைனருக்குக் கைவிரலும் கால் விரலும் கோரமா சுருண்டு, சுருங்க ஆரம்பிச்சிருச்சு. மைனர, தேவலோகத்து ஆணழகனா பாத்த வேலம்மா அழுத அழுகைல, அம்மா சொன்ன முருங்கை மரம் ஞாபகத்துக்கு வந்துச்சு.

‘சந்தனப் பொட்டும் நெத்தியில வச்சு, சரிகைத் துண்டும் தலையில கட்டி, தும்பப்பூ வேட்டி கட்டி, துள்ளி வாராரு துரைப்பாண்டியரு’னு கொலவைப் போட்டுப் பாடுன பொம்பளைக விக்கி வெறச்சுப் போனாங்க. ஜமீன்தாரு வண்டியில போறாருனு ஆசையோட பாத்த பொண்ணுக, இப்போ மைனர் நடந்து போறத எட்ட நின்னு வேடிக்கை பாத்தாங்க.

வண்டி வேகத்துக்குப் புயல் மாதிரி மைனர்கூடவே ஓடிக்கிட்டிருந்த சேவகமார்க, கொஞ்சங்கொஞ்சமா ஒதுங்க ஆரம்பிச்சாங்க. அரிசி, பருப்பு, உப்பு, புளி, மொளகா வரத்து குறைய ஆரம்பிச்சது. அரிசிச் சோறு போயி கம்மங் கூழு வந்துருச்சு.

தெப்பம்பட்டி அரண்மனை வீட்டுல வேலம்மா மட்டுந்தான் சமச்சுப் போட்டுக்கிட்டிருந்தாங்க. மைனர் அரண்மனைக்குள்ளயே புஸ்தகம் படிக்க ஆரம்பிச்சாரு. தாயுமானவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், விவேகசிந்தாமணி பாட்டெல்லாம் ஏதோ தனக்குத் தோதா எழுதுன மாதிரியே படிச்சு மனப்பாடம் செய்தாரு. நொந்து வெந்துபோன மனசுக்கு அந்தப் பாட்டுதான் மயிலிறகு காத்து மாதிரி மைனருக்கு ஆறுதலா இருந்துச்சு. அதே சமயத்துல, எம்பது வயசுல வர வேண்டிய கவலை, நாப்பது வயசு மொகத்துலயே தாடியா வளர ஆரம்பிச்சது.

ஒரு நாளு, மைனர் கம்பிளியப் போத்திக்கிட்டு கண்டமனூர் அரண்மனைக்கு வந்தாரு. வேட்டைக்குப் போன சிங்கம் இரையும் கிடைக்காம, கால்ல அடிபட்டு ரத்தக் காயத்தோட சோர்வா நடந்து குகைக்குத் திரும்பினாலும், அந்தச் சிங்கத்தப் பாத்த உடனே மான் எப்பிடி வெரண்டுக் கிட்டு ஓடுமோ... அதுமாதிரி, அரண்மனை வாசல்ல இருந்த வேலுப்பிள்ளை மைனரப் பாத்ததும் தலைமறைவா ஓடி ஒளிஞ்சாரு.

அரண்மனைக் கட்டடம் அழுக் கடஞ்சு, துரு ஏறிப்போச்சு. நூலாம்படையும் அதோட வயச ஏத்திக்காட்டுச்சு. தண்ணி தெளிக்க ஆளில்லாததால, செடி, கொடியெல்லாம் காஞ்சு கருவாடாப்போச்சு.

அரண்மனை வராந்தாவுல ரெட்டத் தூணுக்கு அடியில சம்மணங்காலு போட்டு உக்காந்தாரு மைனரு. மதிய நேரம். சுள்ளுனு வெயில் ஏறிப்போச்சு. மைனருக்குப் பசியெடுக்க ஆரம்பிச்சது. எப்பவும் அரண்மனைப்புதூர்ல இருந்து சரியான சமயத்துக்குத் தூக்குச் சட்டியில கம்மங் கூழு ஊத்தி, வெங்காயத்தக் கட்டி அனுப்பி வெச்சிருவாங்க. பெரிய வீட்டு ராமலிங்கம்தான் கொண்டு வருவாரு. மைனர் அவருகிட்ட, ‘ஜமீன்தாரு கூழுதான் குடிப்பார்னு யார்கிட்டயும் சொல்லிறாத... சோத்துக்கு வழியில்லாமத்தான் கூழு குடிக்கிறார்னு மத்தவங்க நெனப்பாங்க. யாராவது கேட்டா, அரிசிச் சோறுனு சொல்லணும்’னு சொல்லி வெச்சாரு.

அன்னிக்கு ராமலிங்கம் வர்றதுக்குத் தாமசம் ஆகிப்போச்சு. அரண்மனைக்கு முன்னால ஒரு அம்மா, மைனர வேடிக்கை காட்டி சின்னக் கொழந்தைக்குச் சோறு ஊட்டிக்கிட்டு இருந்தாங்க. மைனர், அந்தக் கொழந்தையவே பாத்துக்கிட்டு இருந்தாரு. கொழந்த மைனரப் பாத்துச் சிரிச்சதும், ‘கொழந்த.. எனக்குச் சோறு குடுக்குமா?’னு ஜாடையா கேட்டாரு மைனர்.

வருச நாட்டு ஜமீன் கதை - 44
வருச நாட்டு ஜமீன் கதை - 44

வேடிக்கையாதான் கேக்குறாருனு நெனச்சு அந்தம்மா, ‘உங்களுக்கில்லாத சோறா?’னு சொல்லிக்கிட்டே, பக்கத்துல வந்து ஒரு கவளம் உருட்டி மைனருக்குக் குடுக்கிற மாதிரி குடுத்தாங்க. மைனரும் ஆசையா வாங்கிச் சாப்பிட்டு, பொறங்கையால கண்ணத்தொடச்சாரு.

“தொர... எதுக்கு அழறீங்க?”னு அந்தம்மா பதறிப்போயி கேட்டாங்க.

“ஒண்ணுமில்ல புள்ள... எனக்கு எங்கம்மா ஞாபகம் வந்துருச்சு. இன்னொரு உருண்ட குடும்மா... கொழந்த கோவிச்சுக்காதே..?”

ஒரு காலத்துல அதே எடத்துல பிள்ளைச்சோறு வாங்க வரிசை கட்டி நின்ன பொம்பளைங்க, ‘ஜமீன்தாரு தருமவான் நல்லாயிருக்கணும்’னு வாயார வாழ்த்திட்டுப் போனாங்க. இப்போ, அதே எடத்துல பிள்ளை சாப்பிடுற சோறுல பங்கு கேட்டுச் சாப்பிடுற ஜமீன்தார பாத்துக்கிட்டே வந்தாரு பெரியவீட்டு நாயக்கரு. மைனருக்குப் பக்கத்துல வந்து, “தொர... அந்தப் பொம்பளைதான் வெவரங் கெட்டதனமா குடுக்குறானா, நீங்களும் வாங்கிச் சாப்பிடுறீங்களே..? இந்தாம்மா... போ அந்தப் பக்கம்!”னு வெரட்டினாரு.

“அடச் சும்மா இருப்பா... நான்தான் கூப்பிட்டுக் கேட்டேன்...”

“நீங்க எதுக்கு இங்க இருக்கீங்க..? பேசாம தெப்பம்பட்டியிலயே இருக்க வேண்டியதுதான... உங்களுக்குச் சமச்சுப்போட வேலம்மா இருக்காங்களே...”

“இருக்கா.... அவ என்னப் பாக்குறப்பெல்லாம் அழுதுக்கிட்டே இருக்கா. அவளுக்கு நான் என்ன சேத்து வெச்சிருக்கேன்..? இனிமே நான்தான் அலையணும்...”

“சொல்லி அனுப்பினா பாலகோம்பை பங்காளிக உங்களுக்கு வேணும்கிற அரிசி, பருப்பு, சீமத்தண்ணி முதக்கொண்டு அம்புட்டும் கொண்டு வந்து குடுப்பாங்களே... எதுக்கு இப்பிடி அலையறீங்க..?”

“அடப்போப்பா... நான் நல்லா இருக்குற காலத்துலயே எங்க பங்காளி களுக்கு நான் என்னத்தச் செஞ்சு போட்டேன்..? இப்பப் போயி, அவங்க கிட்ட என்னத்தக் கேக்குறது..? பெத்த அம்மாவே சதமில்லனு ஆகிபோச்சு. மத்தவங்களச் சொல்லிக் குத்தமில்ல... எல்லாமே நான் செஞ்ச பாவம்...

வாயில் ஓர் ஐந்தில் புலன்எனும்

வேடர்

வந்த எனை ஈர்த்து, வெங் காமத்

தீயிலேயே வெதுப்பி உயிரோடும்

தின்னச்

சிந்தை நைந்துருகி மெய்ம் மறந்து,

தாயிலாச் சேய்போல் அலைந்து

அகப்பட்டேனே....

வெம்மாயக் காட்டில் அலைந்தேனே...

அந்தோ என் விதிவசமே.

-னு மைனர் பாடிக்கிட்டே மெள்ள எந்திரிச்சு, பொடிநடையா நடந்து போயிட்டாரு.

கண்ணு மூடி கண்ணு தொறக்க... பவுர்ணமி, அமாவாசை தேஞ்சு வளந்து, கடந்துபோய்க்கிட்டே இருந்துச்சு. ஆனா, மைனரோட கைவிரலும் கால்விரலும் மூக்கும் தேஞ்சுக்கிட்டேதான் இருந்துச்சு. புண்ணு பெரிசாகிச் சீழ்பிடிக்க ஆரம்பிச்சது.

ஒரு நாளு வேலம்மாவோட தம்பி மதுரையிலிருந்து வந்து, “குஷ்டரோகத்தக் குணப்படுத்த இங்கிலீஸ் வைத்தியரு மதுரைக்கு வந்திருக்காரு”னு சொன்னாரு. அன்னிக்கே வேலம்மா, மைனரக் கூப்பிட்டுக்கிட்டு மதுரைக்குப் போனாங்க. வைத்தியருகிட்ட போயி மருந்தெல்லாம் வாங்கின பெறகு, ரெண்டு பேரையும் நாடகம் பாக்கக் கூப்பிட்டாரு வேலம்மாவோட தம்பி. (ஏ.பி.நாகராஜன் நடத்துற நாடக கம்பெனியில வேலம்மாவோட தம்பியும் வேஷங்கட்டி நடிப்பாரு. அதுக்குப் பெறகு அவரு தயாரிச்ச சினிமாவுலயும் நடிச்சிருக்காரு. பாலசுந்தரம்னு பேரு.)

மைனரும் வேலம்மாவும் நாடகக் கொட்டகைக்குப் போனதும், அங்க வந்த பஸ் கம்பெனி மொதலாளி, வேலம்மாவ பிராமணப் பொண்ணுனு நெனச்சுக்கிட்டு,

வருச நாட்டு ஜமீன் கதை - 44
வருச நாட்டு ஜமீன் கதை - 44

“வேலம்மா... குஷ்டரோகியோட எத்தன நாளுதான் இருந்து காலந்தள்ளப்போற... பாக்குறதுக்கு லெட்சணமா, அழகா இருக்க... கொஞ்ச வயசுலயே உன் வாழ்க்கைய வீணாக்கிடாத. பேசாம என்கூட வந்துரு. பத்து பவுன் சங்கிலி போடுறேன். மாசா மாசம் ஐந்நூறு ரூவா தர்றேன்.

உங்கம்மாவுக்கும் சேத்துப் பணம் அனுப்பிவைக்கிறேன். என்ன சொல்றே..?”னு கேட்டாரு.

வேலம்மா திரும்பிக்கூடப் பாக்காம மைனரக் கூப்பிட்டுக்கிட்டு மதுரைல இருந்து ஓடிவந்துட்டாங்க. அன்னிக்கு ராத்திரி மைனர், “வேலம்மா... எனக்காக நீ படுற கஷ்டத்த நெனச்சா, இன்னும் நான் பாவஞ் செஞ்சுக்கிட்டு இருக்கேனோனு தோணுது. யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிரு. உனக்குத்தான் மூணு கொழந்தைக்கு யோகம் இருக்குனு ஜாதகத்துல சொன்னாங்கனு ஒரு தடவ சொல்லியிருக்கியே... என்கூட நீ இருந்தா, உனக்கும் இந்தச் சீக்கு வந்துரும். உனக்காக நான் என்ன ஐவேஜ் சேத்து வெச்சிருக்கேன்..? எனக்குப் பெறகு யாரு உன்னக் காப்பாத்துவாங்க..? அதனாலதான் சொல்றேன், யாரையாவது கல்யாணம் செஞ்சுக்கிட்டு நல்லா இரு”னு சொன்னாரு.

உடனே வேலம்மா, “இனியொரு வாட்டி இந்த மாதிரி சொல்லாதீங்க... உங்ககூடத்தான் சேந்து வாழணும்னு பூர்வ ஜென்மத்துல பெரியவங்க மங்களசாசனம் எழுதி வெச்சிருக்காங்க.

அறுவத்திநாலு கிராமத்துலயும் நல்லபுள்ளனு பேரெடுத்துச் சாகணும்னுதான் தவங்கெடக்கேன். என்னய பாவஞ் செய்யச் சொல்லாதீங்க. கவலப்படாம தூங்குங்க...”னு சொல்லி மைனருக்கு கை, கால் எல்லாம் அமுக்கிவிட்டாங்க.

ஆனா, மைனருக்குத்தான் தூக்கம் வரல. நடுச் சாமத்துல எந்திரிச்சு உக்காந்துக்கிட்டாரு.

‘இனிமே நான் உசுரோட இருந்து என்ன சாதிக்கப்போறேன்..? என்னால மத்தவங்களுக்குத்தான் கஷ்டம். இனிமே அடுத்தவங்களுக்குப் பாரமா இருக்கக் கூடாது. யார் கண்ணுலயும் படக்கூடாது...’

மைனர் ஒரு முடிவோட எந்திரிச்சாரு. நல்ல மையிருட்டுல வேலப்பர் கோயிலப் பாத்து நடந்தாரு. மாவூத்துக் கருப்பசாமி கோயில்ல போயி, வெட்டருவா சூலாயுதத்துக்கு நடுவுல நின்னாரு.

“வேட்டக்கருப்பா... ஜமீனத்தான் காப்பாத்தாம விட்டுட்ட... என்னய மட்டும் ஏன் உசுரோட வெச்சிருக்க..? நான் மட்டுமில்ல, என் பரம்பரையில யார் பாவஞ் செஞ்சிருந்தாலும் அதுக்குப் பிராயச்சித்தம் செய்ய வந்திருக்கேன்”னு சொல்லி, ரெண்டு கையால சூலாயுதத்த எடுத்தாரு.

- தொடரும்
அடுத்த கட்டுரைக்கு