Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 45

வருச நாட்டு ஜமீன் கதை - 45
வருச நாட்டு ஜமீன் கதை - 45

‘‘சாமீ..! கொஞ்சம் பொறுங்க..!” - இருட்டுக்குள்ளயிருந்து அசரீரி மாதிரி ஒரு கெழவியோட குரல் கேட்டுச்சு. மைனர் பாண்டியரு, கையிலிருந்த சூலாயுதத்த அப்பிடியே நெஞ்சுக்கு முன்னால நிறுத்தித் திரும்பிப் பாத்தாரு.

பளியஞ்சித்தனோட சம்சாரம் மீனாட்சிக் கெழவி! அவளோட ரெண்டு மூணு பளியர்களும் வேல் கம்போட நின்னுக்கிட்டிருந்தாங்க.

“சாமீ... கடைசியா எங்க வரணுமோ அங்கயே வந்து சேந்துட்டீங்க. சூலாயுதத்த கீழ போடுங் சாமீ... உங்க உசுர மாய்ச்சுக்க உங்களுக்கு அதிகாரமில்ல.”

வருச நாட்டு ஜமீன் கதை - 45
வருச நாட்டு ஜமீன் கதை - 45

“எதுக்குத் தடுக்கிற மீனாட்சி..? நானே ஒரு குஷ்டரோகி. உசுரோட இருக்கிறது யாருக்கு என்ன பிரயோசனம்..?”

“கொலையும் தற்கொலையும் பாவம்னு நாஞ்சொல்லியா உங்களுக்குத் தெரியணும்? என் புருஷன் பளியஞ்சித்தன், ஜனகம், செங்கமலம் இவங்கல்லாம் ஒரு பாடமா இல்லயா?”

“பாவம் ஒரு எடத்துல, பழி என் தலையிலனு... யாரோ செஞ்ச பாவம் என்னோட முடியட்டுமே. எனக்கென்ன புள்ளகுட்டியா, வாரிசா..?”

“வாரிசுதான். வேலப்பர் கோயிலுக்கு நீங்கதான் வாரிசா இருக்கீங்களே சாமீ. நீங்க உசுரோட இருக்கிறவரைக்கும் கோயிலுக்குத் திருப்பணி செய்ய வேணாமா? சாபக்கட்டு பாவத்த நாங்க எதுக்கு சுமக்கணும்? அத தீக்க வேணாமா? அதனால, உங்களுக்கு உபசாரம் அம்புட்டும் எங்க இனத்துப் பளியர்க செய்வாங்க. வாங்க என்கூட...”

மீனாட்சிக் கெழவி மைனர சமாதானப்படுத்தி, வேலப்பர் மலைக் குகைக்குக் கூப்பிட்டுப் போனாங்க. பளியர்க மைனருக்கு தேத்தண்ணி காச்சிக் குடுத்தாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 45
வருச நாட்டு ஜமீன் கதை - 45

பொழுது செவ செவனு விடியிற சமயம்... தெப்பம்பட்டியிலிருந்து பூசாரி நாயக்கர் ஓடிவந்து, “என்ன பாண்டியா..! இப்பிடித் தேட வெச்சுட்டீங்க? அங்கன வேலம்மா அழுது பொலம்பிக்கிட்டிருக்கு. எல்லாருமே பயந்து நடுங்கிப் போயிட்டோம் தெரியுமா? அப்பாடா... கண்ணாரப் பாத்துட்டேன். அப்புறம் ஒரு விஷயம் பாண்டியா... நம்ம தேசத்துக்கு சுதந்திரம் குடுத்துட்டாங்களாம். காலங்காத்தால ரேடியோவுல சொன்னாங்க!”

மைனர் விரக்தியா சிரிச்சுக்கிட்டே பின்னாடி திரும்பி குகையப் பாத்தாரு. குகைக்குள்ள இருட்டா இருந்துச்சு. தேசத்துக்கு வெளிச்சம் வர்றப்ப மைனர் பாண்டியரு இருட்டான குகைக்குள்ள போனாரு.

அன்னிக்கிருந்து மைனர் பாண்டியருக்கு குகைவாசம்தான். ஞாபகமிருக்கா... பளியஞ்சித்தனும் மீனாட்சியும் மொத மொதல்ல ஜீவனம் நடத்துனாங்களே... அதே குகை! பளியர்கதான் பாதுகாப்பா இருந்தாங்க.

மைனருக்கு, கோயில்லயிருந்து பொங்கல் பிரசாதம் வரும். அதுமட்டுமில்ல... தெனமும் காலையில தெப்பம்பட்டியிலிருந்து வேலம்மாவும் சமச்சுக் கொண்டுவந்து மைனருக்கு ஊட்டிவிடுவாங்க.

ஒரு தடவ வேலம்மா பகல் நேரத்துல குகைக்கு வந்த சமயம் மைனர் திட்டிட்டாரு, “நீ அரண்மனைப் பொண்ணு வேலம்மா. ஆம்பளைங்க கண்ணுல படக்கூடாது. விடியிறதுக்கு முன்னால இங்க வரணும், இருட்டான பெறகுதான் இங்கிருந்து போகணும். தொணைக்கு பளியர்கதான் வருவாங்க...”னு சொல்லிட்டாரு. வேலம்மாதான் பாவம்... மைனருக்குக் கைங்கர்யம் செய்றதுக்குத்தான் பொறந்திருக்கு. வேலம்மாவுக்கு பட்டப்பேரு என்ன தெரியுமா? ‘நளாயினி!’ மைனர கூடையில வெச்சு நளாயினி மாதிரி செமக்கவும் தயாராத்தான் இருந்தாங்க வேலம்மா. பழைய துணிய கிழிச்சு மைனருக்குக் கைலயும் கால்லயும் கட்டுப் போட்டு விடுவாங்க. இறுக்கிக் கட்டுறப்போ, பழைய துணி அறுந்து போகும். வேலம்மாவ மைனர் இடிப்பாரு.

கோயிலுக்கு வர்ற சனங்க, தன்ன கேலியா பாப்பாங்கனு நெனச்சுக்கிட்டு மைனர் குகைய விட்டு வெளிய வர மாட்டாரு. ஒரு சின்ன மரப்பெட்டி வெச்சிருந்தாரு. அதுக்குள்ளயிருந்து தான் எதையோ எடுத்துப் பாக்குறதும், பூட்டுறதுமா இருந்தாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 45
வருச நாட்டு ஜமீன் கதை - 45

ஒரு நாளு, கண்டமனூர்லயிருந்து மாப்ள நாயக்கரு வந்து ஒரு தாம்பாளத் தட்டுல புது வேஷ்டி, புதுச் சட்டை, வெத்தல பாக்கு வெச்சு மைனருக்குக் குடுத்து கல்யாணத்துக்கு வரச் சொன்னாரு. மொதல்ல ‘முடியவே முடியாது’னு சொன்னவரு, பிடிவாதத்துக்குப் பெறகு மாப்ள நாயக்கரோட வில்வண்டியில கண்டமனூருக்கு வந்து சேந்தாரு.

கம்பளத்து நாயக்கமார் சனங்க கல்யாண வீட்டுல கூடியிருந்தாங்க. மைனரு வண்டியிலிருந்து எறங்குறப்ப வேஷ்டிய சரி செஞ்சு இடுப்புல கட்டினாரு. அப்போ வேஷ்டி மடிப்பிலிருந்து ஒரு ஓட்ட முக்காத் துட்டு நழுவி தரையில விழுந்து உருண்டு ஓடிச்சு. உடனே மைனரும் சடுதியா ஓடி, குனிஞ்சு ரெண்டு கையால அந்தத் துட்ட எடுத்தாரு.

கல்யாணத்துக்காக கூடியிருந்த சனங்க அம்புட்டுபேரும் அதப் பாத்து ‘ஓ’னு அழுதாங்க. ஜமீன்தாரு கையால பணங் காசு வாங்கினவங்க எத்தன பேரு... வீடு வாச வாங்கினவங்க எத்தன பேரு... நெலம் நீச்சுனு வாங்கினவங்க எத்தன பேரு..! பாவம், ஒரு ஓட்ட முக்காத் துட்டு மண்ணுல விழுந்துபோனதுக்கு, அத ஓடி எடுக்கறாரு ஜமீன்தார்..

முதலிருந்த ஊழ்வினையும்

முப்பாழைச் சுட்டுப்

பதறா மதிபாடுபட்டேன் -

முதலிருந்த

நல்வினையும் தீவினையும்

நாடாமலும் பிறந்து

வல்வினையில் போக்கிவிட்டேன்

வாழ்வு.

இப்பிடியிருக்கிற சமயத்துல 1948-ல சென்னை ராஜதானி காங்கிரஸ் சர்க்காரு ஒரு வழியா ‘ஜமீன் ஒழிப்புச் சட்டம்’ கொண்டு வந்துட்டாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 45
வருச நாட்டு ஜமீன் கதை - 45

ஜமீன்தாரி முறைய ஒழிச்சு ரயத்துவாரி முறையக் கொண்டு வந்தாங்க. ஜமீன்தாருகளுக்குத் தாக்கல் குடுத்து, ஜமீன் நெலங்க அம்புட்டையும் கையகஞ் செய்றதுக்கு சர்க்காருக்கே அதிகாரம் வந்துருச்சு. ஜமீன்தாருக அம்புட்டுபேரும் ஈட்டுத் தொகை அதாவது, மானியம் வாங்கிக்கிட்டு ஜமீனை சர்க்காரு கிட்டயே ஒப்படச்சாங்க. குடியானவங்களுக்கே சர்க்கார் ரயத்துவாரி பட்டா குடுத்துச்சு. இப்பிடித்தான் சுயராச்சிய சர்க்கார் வந்த பெறகு சனங்களுக்கே அதிகாரம் கூடிவந்துச்சு.

மைனர் பாண்டியரு ‘சர்க்கார் மானியம்’ கேக்கவேயில்ல. அறுவத்தி நாலு கிராமத்துச் சனங்க அரிசி, பருப்பு மைனருக்குக் குடுத்தனுப்புவாங்க. பிரியப்பட்டவங்க பணங் காசு கொண்டு வந்து குடுப்பாங்க!

நாளாக நாளாக மைனர் பாண்டியரு மெலிஞ்சு, குஷ்டம் ரணமாகி, சோக பிடிச்சவரு மாதிரி போயிட்டாரு.

அன்னிக்குப் பவுர்ணமி... தைப்பூசம்.

கொடுவிலார்பட்டி தாய்மார்க வெள்ளனா எந்திரிச்சு, வாச தெளிச்சு, கோலம் போட்டுக்கிட்டிருந்தாங்க.

அச்சம்மா கெழவி ஆப்பஞ் சுட்டுக்கிட்டிருந்துச்சு. கைக் கொழந்தையோட வந்த புள்ளக ஆப்பத்துக்குக் காத்துக் கிட்டிருந்தாங்க. குடிசை மேலயிருந்த சேவல் யாரையோ புதுசா பாக்குறது மாதிரி மண்டைய வெட்டி வெட்டி அங்கிட்டும் இங்கிட்டும் பாத்துக்கிட்டிருந்துச்சு.

கிராம முனிசீப் கம்பராஜுலு ராமசாமி மாட்டு வண்டியில, யாரோ குளிருக்கு சாக்கப் போத்திப் படுத்துக்கிட்டிருந்தாங்க.

“யாருப்பா... ஊருக்குப் புதுசா..? எந்திரிப்பா!”னு தட்டி எழுப்பினாரு. மெள்ள எந்திரிச்ச அந்த உருவம் சாக்கையும் கம்பிளியையும் வெலக்கி, “நீங்க யாரு..?”னு திருப்பிக் கேட்டுச்சு.

அடடா... இது மைனர் பாண்டிய ரோட குரலாச்சேனு தெகச்சுப்போன ராமசாமி, “என்ன பாண்டியரே... இப்பிடி இந்தக் கோலத்துல..?”

வருச நாட்டு ஜமீன் கதை - 45
வருச நாட்டு ஜமீன் கதை - 45

“என்ன செய்றது..? வௌக்கு எரிக்கணும். சீமத் தண்ணி தீந்து போச்சு. எல்லாருமே தைப்பூசத்துக்கு அங்க இங்கனு போயிட்டாங்க. பாவம் வேலம்மாவ அனுப்ப முடியுமா? யாரையும் தொந்தரவு செய்ய பிடிக்கல. அதான் நானே நடந்து ராத்திரியே வந்து படுத்துக் கிட்டேன். அதுசரி... நீங்க யாருனு சொல்லலியே...”னு கேட்டுக்கிட்டு உத்துப் பாத்தாரு.

“என்னைத் தெரியலையா பாண்டியா? நாந்தான் ராமசாமி... உங்களுக்கு நாந்தான் சீமத் தண்ணி அனுப்பிக்கிட்டிருக்கேன். ஆறு வருசத்துக்கு முன்னாடி கிராம முனிசீப் வேலைக்கு உங்ககிட்ட சிபாரிசு கடிதாசி வாங்க வந்தேனே...”

“எத்தனையோ பேருக்கு சிபாரிசு செய்தேன்... ம், நல்லாயிருக்கியா? எத்தன கொழந்தைங்க?”

“உங்க ஜமீன் புண்ணியத்துல நல்லா இருக்கோம். அதிருக்கட்டும், ராத்திரியே வந்துட்டீங்களே... சாப்பிட்டிங்களா? கொஞ்சம் பொறுங்க...”னு சொன்ன ராமசாமி நாயக்கரு, ஓடிப்போயி அச்சம்மா சுட்டுக்கிட்டிருந்த ஆப்பத்துல ரெண்டு எடுத்துக்கிட்டு வந்தாரு.

மைனர் வாய்ல தண்ணிய ஊத்தி கொப்பளிக்கச் சொன்னாரு. ஆப்பத்த பிச்சு மைனருக்கு ஊட்டிக்கிட்டே, “என்ன பாண்டியா... பெரிய டின்னுல சீமத் தண்ணி ஊத்தி அனுப்பட்டுமா?”னு கேட்டாரு ராமசாமி.

“போதும்பா... நீ நல்லாயிரு... இந்தச் சீசா நெறைய சீமத் தண்ணி ஊத்திக் குடுத்தா போதும். இது தீர்றதுக்குள்ள என்னோட உசிரு தீந்துபோகும்..!”

“நல்ல நாளும் அதுவுமா அப்படிச் சொல்லாத பாண்டியா... உங்களுக்கு ஒண்ணும் ஆகாது...”னு சொல்லிக்கிட்டே மைனர் கொண்டுவந்த சீசாவ வாங்கி அது நெறைய சீமத் தண்ணி ஊத்திக் குடுத்தாரு.

“என்ன பாண்டியா... இப்பிடியிருக்கீங்க. தேஜஸ் போயிருச்சே...வில்வண்டி மணிமாடு போயிருச்சே... உங்களச் சுத்தி எவ்வளவு சேவகமார்க இருந்தாங்க... உங்களுக்குப் போயி இந்த கதியா..?” - ராமசாமிக்குக் கண்ணுல தண்ணி வந்துருச்சு.

“நீ எதுக்கு அழற ராமசாமி...”னு சொல்லிட்டு,

ஆலிலை பூவும் காயும்

அலிதரும் பழமும் உண்டானால்

சாலவே பச்சியெல்லாம்

தன்குடி என்றே வாழும்.

ஆலிலை உதிர்ந்து

மரம் சாய்ந்துபோனால்

அங்கு வருவார் ஒருவர்

உண்டோ?

-னு கையெடுத்துக் கும்பிட்டு, பாடிக்கிட்டே நடந்து போனாரு மைனர்.

ரெண்டு நாள் கழிச்சு... எப்பவுமில்லாத செங்காத்து, புயல் மாதிரி வீச ஆரம்பிச்சது. ‘ஓ’ன்னு இரைச்சல் வேற. வீதியில யாரும் கண்ணு தொறந்து நடக்க முடியல. தகரம், ஓடுக பறக்குது. அண்டா, குண்டா, சட்டி பானைக உருளுது.

வருச நாட்டு ஜமீன் கதை - 45
வருச நாட்டு ஜமீன் கதை - 45

அரண்மனைக்கு முன்னால இருந்த பட்டுப்போன கொன்ற மரம் வேரோட தூரோட சாஞ்சு விழுந்துச்சு.

தலையாரி தமுக்கடிச்சுக்கிட்டே வந்தாரு.

டம் டம் டம்... “ஐயா... கண்டமனூர் ஜமீன்தாரு மைனர் பாண்டியரு சிவலோக பதவி அடஞ்சுட்டாருய்யா... இன்னிக்குச் சாயங்காலம் கண்டமனூர் வைகாத்தங் கரையில...” டம் டம் டம்...

அறுவத்திநாலு கிராமத்துச் சனங்களும் வைகை ஆத்தங்கரையில கூடிப்போனாங்க.

மைனர் பாண்டியரோட அம்மா வேலுத்தாயம்மா மட்டும் வரவேயில்ல. ‘செத்தாலும் மைனரோட மூஞ்சியில முழிக்கவே மாட்டேன்’னு சொல்லியிருந்தாங்க இல்லியா? மைனர, பழைய ஜமீன்தாருக சமாதிகிட்ட பொதைக்கலாம்னு முடிவு செய்றப்போ, மைனரப் பொதைக்கிறதுக்கு இது அவரோட சொந்த நெலமில்லன்னு சொல்லி ஒரு கூட்டம் வாதாட ஆரம்பிச்சுது.

பெரிய வீட்டு சுருளியாண்டி நாயக்கரு ‘மட மட’னு கொன்ற மரத்த வெட்டிக்கொண்டுவந்து ஆத்தங்கரையில அடுக்கி வெச்சாரு. அதுக்கு மேல மைனரோட உடல படுக்க வெச்சாங்க. மைனர் கடைசியா வெச்சிருந்த அந்த மரப்பெட்டியவும் சிதைல தூக்கிப் போடும்போது... ‘உள்ள என்ன இருக்கு’னு பாக்குறப்போ... அடடா.... வேலுத்தாயம்மாவோட போட்டா படம் இருந்துச்சு!

மைனர் பாண்டியருக்கு நேரடி வாரிசு இல்லாததால பாலகோம்பை பங்காளி ஐயலுசாமி நாயக்கரு சிதைக்குக் கொள்ளி வெச்சாரு.

கொன்ற மரத்துல இருந்த பளியஞ்சித்தனும் சந்தன மரமா எரிஞ்சு மைனர் பாண்டியரோட உசுரில்லாத உடம்ப ஆகுதி செய்ய, தீக்கங்கு சாம்பலாகி வானத்துல பறந்து காத்துல கலந்துபோச்சு. - இந்தக் கதை இதோட முடிஞ்சுடப் போறதில்ல.

வருச நாட்டு மலையிலிருந்து வீசுற அந்தக் காத்தக் கேளுங்க.. சித்தர்களோட மூச்சுக் காத்துக்கு எவ்வளவு வீரியம் இருக்குனு சொல்லும்!

வருச நாட்டு ஜமீன் கதை - 45

மக்கிப்போன இலை தழைக மட்டுமே பூமிக்கு உரமில்ல. புராணங்களும் இதிகாசங்களும் சித்தாந்த வேதாந்த தத்துவக் கதைகளும்கூட இந்தப் பூமிக்கு உரமா இருக்கு!

ரிஷிக, ரிஷி பத்தினிக, நாடாண்ட செங்கோல் மன்னர்க, கொடுங்கோல் மன்னர்க, பொறந்த ஒடனே ஜீவனத்தத் தொலச்சுப்போட்டுக் கோமணத்தத் தேடுற குடியானவங்க - இப்பிடி எத்தனையோ கதைக நம்ம கலாசாரத்தோட சிக்கிச் சிதிலமாகி மக்கிப்போயி பூமிக்குள்ள பொதஞ்சு கெடக்கு. அதுல ஒரு கதைதான் தோண்டியெடுத்து இதுவரைக்கும் உங்களுக்கு நாஞ் சொல்லிவந்தது..

சாபத்தோட வீரியத்துக்கு சாம்ராச்யம் உரமாச்சு... பூமியில பொதஞ்ச கதை மறுபடியும் கருவாச்சு... நல்ல சனங்க போற பாதையில நல்ல விதை முளைக்கும்... சரித்திரத்தச் சொல்லுகிற சாட்சியாக இருக்கும்...
- முற்றும்.
அடுத்த கட்டுரைக்கு