Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 6

வருச நாட்டு ஜமீன் கதை - 6
வருச நாட்டு ஜமீன் கதை - 6

வாரிசு உருவானா சந்தோஷப்பட வேண்டிய ஜமீன்தாரு, ஏன் இப்பிடி நடுங்குறாரு?

‘ஒரு புத்திரனாப் பொறந்தாலும் குரு புத்திரனா இருக்கணும்’னு சொல்லுவாக.

வாரிசுதான் முக்கியம்னு வாஸ்தவமான முடிவெடுத்தாரு நம்ம ஜமீன்தாரு. வாழையடி வாழையா வாரிசு வளந்து, இவ்வளவு பெரிய ஜமீனக் கட்டி ராச்சியம் பண்ண முடியுதோ இல்லையோ... ஆண்டு அனுபவிச்சு மாண்டு போயிறணும்னு விரக்தியிலயும் ஒரு சந்தோஷத்தத் தேடினாரு.

வேத்து நாட்டு அரசனோட சண்டைக்குப் போறப்பதான், ‘ஆறுலயும் சாவு; நூறுலயும் சாவு’ன்னு வீராப்புப் பேசுவாங்க. ஆனா, நம்ம ஜமீன்தாரு கல்யாணம் செய்துக்கவே, ‘ஆறுலயும் சாவு; நூறுலயும் சாவு’ன்னு சம்மதிச்சாரு.

மாம்பாறை பெரியதனக்காரரும் கண்டமனூர் பெரியதனக்காரரும் கூடிப் பேசினாங்க. கல்யாண வேலைகள் ஆரம்பமாச்சு.

‘ஊரு குத்தம் நயிறு குத்தம் (ஊர் செய்ற குற்றம், அரண்மனை செய்ற குற்றம்)’னு சொல்லுவாங்க. மாம்பாறைல மொறப்படி பொண்ணு கேட்டு கெடு வெக்காம, வேலுத்தாயம்மாவ திருடிக்கிட்டு வந்ததால, குல வழக்கப்படி ஜமீன்தார தண்டம் கட்டச் சொன்னாங்க. பதினாரு அணா பைசா.

ஜமீன்தாரு ஆனாலும் ஜாமக் கோடாங்கி ஆனாலும் எல்லோருக்குமே ஒரே சட்டந்தான். ராஜகம்பளத்து நாயக்கருக சாயங்கால சமயத்துல, சாஸ்திர சாங்கியத்தோட தான் கல்யாணத்த நடத்துவாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 6
வருச நாட்டு ஜமீன் கதை - 6

எவ்வளவு பெரிய அரண்மனையாயிருந்தாலும், ஜமீன்தாரு கல்யாணத்த ஊருக்கு வெளிய வெவசாய நெலத்துலதான் நடத்தியாகணும். தாத்தாமாருக மொத மொதலா அந்த ஊருக்கு வந்து, நெருஞ்சி முள்ளு தூத்தி, கூட்டி அள்ளி, நெலம் வெட்டி, பயிர் பருவஞ் செஞ்ச எடம். அந்த எடத்துல பதினோரு கம்பம் நட்டு, ஒரு ஆளு உசரத்துக்கு சின்னப் பந்தல் கட்டி அது மேல குலைதழையப் போட்டாங்க. சின்னத்தோரண வாயில்.

வலது பக்கம் ஜமீன்தாருக்குச் சின்னக் குடிசு, எடது பக்கம் வேலுத்தாயம்மாவுக்கு சின்னக் குடிசு. பரந்து விரிஞ்ச அதிகாரம் படச்ச ஜமீன்தாரோட கல்யாணத்துல ஆடம்பரம் இல்ல! ஊர்வலம் இல்ல! (என்ன சிரிக்கிறீங்க..? எலிசபெத் மகாராணி நடத்துன கல்யாண நெனப்பு வருதா? பிரிட்டிஷ் ராசாங்கமே அவங்க கைல இருக்கறப்ப எப்பிடி வேணும்னாலும் கல்யாணம் நடத்தலாம்.)

பொம்பளைக அம்புட்டுப் பேரும் எளிமையா சேல கட்டி, ரவிக்கை போடாம அடக்கமா உக்காந்திருந்தாங்க.

‘ராயலுவாருக்குக் கப்பம்’னு சொல்லி, நாட்டாமைகிட்ட பத்தணா காசு கட்றப்போ, “ராயலுவாரு போயி, வெள்ளவாரு ஒச்சேசினாரு... இக்கம் எந்துக்கொசரம் கப்பம்?”னு சொல்லிச் சிரிச்சாங்க.

கிருஷ்ணதேவராயர் ராச்சியம் செய்ற காலத்துல, யார் கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் கப்பம் கட்டணும். ஒரு தடவ, பஞ்சம் வந்ததால சனங்க கப்பம் கட்ட முடியாம போயிருச்சு. நெறயப் பேரு கல்யாணமே செஞ்சுக்காம தாடி வளத்து தத்தளிச்சுப் போனாங்க. அப்புறம் வெள்ளக்காரங்க வந்த பெறகுதான் அந்த வசூல் நின்னுச்சு. இப்பவும் பொண்ணு பாத்து கெடுவச்ச பெறகு, தாடி வளக்கிற மாப்பிள்ள, கல்யாணத்து அன்னிக்குதான் தாடி மழிப்பாங்க. சாங்கியத்துக்குத்தான் கட்றது ‘ராயலுவாரு கப்பம்!’

மாப்பிள்ளை ஜமீன்தாருக்கு தலப்பா கட்டி, அதுமேலே பனை ஓலை செவரளிப் பூவுல பின்னி, வெள்ளிப் பட்ட வச்சு, நெத்திப் பட்டயத்த மாப்ள நாயக்கர் கட்டினாரு.

பந்த சர்மு - வெள்ளி வங்கி - கைல கட்டி, மல்லுத் துணிய மஞ்சள்ல நெனச்சு முறுக்கி, நெஞ்சு மேல மாரடிக்கட்டுக் கட்டினாங்க. பொண்ணு வேணாம்னு மாப்பிள்ளை ஓடிரக் கூடாதுனு அந்தக் காலத்து சாங்கியம். கழுத்துல பவளப் பாசி போட்டு, தோள்ல கம்பளி போட்டு, தயிர் மத்து சொமந்து தோரண வாயிலுக்கு மஞ்சள் குங்குமம் வச்சு, மாப்பிள்ளை ஜமீன்தாரு உள்ள நொழஞ்சாரு.

உறுமி மேளம் உறும, முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்த்த, வேலுத்தாயம்மா கழுத்துல ஜமீன்தாரு மங்கல நாணப் பூட்டினாரு.

அதுவரைக்கும் காத்திருந்த ஜம்புலி புத்தூர் தலயாரி, மாப்ள நாயக்கரு காதுல அந்த விஷயத்தச் சொல்ல... அவரு தயங்கித் தயங்கி ஜமீன்தாரு கிட்ட போயி, ‘ஜனகம் எலி பாஷாணம் குடிச்சுட்டா’னு சொன்னாரு.

கல்யாண சந்தோஷமெல்லாந் தொலஞ்சு போச்சு. ஜமீன்தாரும் மாப்ள நாயக்கரும் பெரியதனக்காரங்களும் ஜம்புலிபுத்தூருக்குப் பதறியடிச்சுக்கிட்டுப் போனாங்க. நல்ல நேரம் ஜமீன்தாருக்கு, கெட்ட நேரம் மாப்ள நாயக்கருக்கு. ஜனகத்த அங்க இருந்த ஒரு மருத்துவச்சி பொழைக்க வச்சுட்டா.

ஜனகம், முகத்தை மூடி அழுகைய நிறுத்த முடியாம தேம்பித் தேம்பி அவரு மார்ல சாஞ்சா.

முதுகுல தட்டிக் குடுத்து, “ஏன் இப்படி எல்லாம் செய்ற? உசுர மாய்ச்சுக்கிட்டா நான் மட்டும் சந்தோஷமா இருக்க முடியுமா? இந்தக் கல்யாணத்த நான் மட்டும் சந்தோஷமா ஏத்துக்கிட்டேனு நெனக்கிறயா?”னு கேட்டாரு.

“சுவாமி... நீங்க கல்யாணம் செய்துகிட்டதால நான் துக்கப்படல. ஆனா, இந்த ஊர்ல இருக்கிற சனங்க என்னப் பார்த்து...”

“அழாம சொல்லு ஜனகா...”

“என்னப் பார்த்து ‘போகம் வாளு, போகம் வாளு’னு சாடை பேசுறாங்க. என் உசுரு போனாலும் உங்க மடியிலதான் போகணும். இனி இன்னொரு வாழ்க்க யார் கூடவும் வாழ முடியாது. என்னப் போயி...”

காசுக்காக சொகம் கொடுக்கற பொம்பளைகளத்தான் ‘போகம் வாளு’னு சொல்லுற வழக்கம்.

“கொஞ்சம் பொறு ஜனகா... உனக்குத் தனியா அரண்மனை கட்ட உத்தரவு போட்டுட்டேன். அது முடிஞ்சதும் உன் இஷ்டப்படி அங்கயே ஜாகை போகலாம்”னு சொல்லி, அவ கண்ணீரத் தொடச்சாரு.

ஆச்சு... ஆறு மாசம்... ஒரு வருஷம் ஆச்சு.

வைகை நதிக்கரையில வேலப்பாடு ஜொலிக்க, ‘சின்ன அரண்மனை’ கட்டி முடிச்சாச்சு. ஏகாந்தமான எடம். மரஞ்செடியோட சிங்காரமாப் பூந்தோட்டம். ஆத்துல எறங்கிக் குளிக்கப் படிக்கட்டு. பெரிய அரண்மனையிலிருந்து பின்பக்கம், யானைக் கொட்டம் வழியா ஒரு தனிப் பாதைகூடப் போட்டாச்சு.

மொத மொதலா ஜனகத்த அந்தச் சின்ன அரண்மனைக்குக் கூப்பிட்டு வந்ததும், சொர்க்கமே இங்கதான்னு மனோ ராச்சியக் கனவுல சொக்கிப் போனாரு ஜமீன்தாரு!

“ஜனகா... இனி நீதான் என்னோட ஆஸ்தான நாட்டியக்காரி! ஆனா, எனக்காக மட்டுந்தான் ஆடப்போற. இந்த மாளிகை உனக்குப் பிடிச்சிருக்கா..? நான் சொன்னபடி உனக்காகக் கட்டியிருக்கேன் பாத்தியா? ஒரு லட்சம் செலவு செய்திருக்கேன்!”னு சொல்லிக் கிட்டே ஜனகத்தோட கன்னத்துல செல்லமா தட்டினாரு ஜமீன்தாரு.

ஜனகம் ரெண்டு கன்னத்துலயும் கைய வெச்சுக்கிட்டு, “அம்மாடியோவ்..! எனக்காக இவ்வளவு செலவழிச்சு மாளிகை கட்டுவீங்கன்னு நெனச்சுக்கூடப் பாக்கல சுவாமி. இந்த மாளிகைக்கு ‘வாணி விலாசம்’னு பேர் வைக்கப் போறேன். உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”னு கேட்டுக்கிட்டே ஜமீன்தாரோட மார்புல ஒவ்வொரு எழுத்தா விரலால எழுதிப் பாத்தா.

இது ஒரு பக்கம்னு சொன்னா... இன்னொரு பக்கம் நம்ம ஜமீன்தாருக்குத் தாம்பத்தியக் கடமைனு இருக்கே. வேலுத் தாயம்மா பாவம்! அந்தச் சின்னப் பொண்ணு... அரண்மனையப் புரிஞ்சு ஜமீன்தாரப் புரிஞ்சு முடிக்கறதுக்குள்ளவே ஒரு வருஷம் ஓடிப்போச்சு.

வருச நாட்டு ஜமீன் கதை - 6
வருச நாட்டு ஜமீன் கதை - 6

ஒரு நா ராத்திரி வேலுத் தாயம்மாவோட சுகிச்சுத் தூங்கிட்டிருந்தாரு ஜமீன்தாரு.

காலங்காத்தால குதிரைக் கொட்டிலுக்கு வந்த குதிரைக்காரன், அரண்மனை வாசல்ல இருந்த, பட்டுப்போன கொன்ற மரத்த அகஸ்மாத்தா நிமிர்ந்து பாக்குறான். மரத்துல ஒரே ஒரு பூவப் பார்த்து ஆடிப் போயிட்டான். ஓடிப்போயி பெரிய வீட்டு நாயக்கருகிட்ட சொன்னதும் அவரும் வந்து பார்த்தாரு.

ஆமா..! நாலு இலை தளிர்விட்டு, நடுவுல மஞ்சள் நெறத்துல ஒரே ஒரு பூ மட்டுந்தான் பூத்திருந்துச்சு!

உசுரக் கைல பிடிச்சுக்கிட்டு வந்த ஜமீன்தாரு, அந்த ஒரே பூவப் பாத்ததுமே நெஞ்சுல கீறல் விழுந்து நடுநடுங்கிப் போனாரு!

இருவத்தி நாலு வருஷத்துக்கு முன்னாடி ஜமீன்தாரு தன்னோட அம்மா வயித்துல துளிர்விட்ட சமயத்துல, இதே பட்ட மரம் தளிர் விட்டு ஒரே ஒரு பூ பூத்ததாப் பெரிய வீட்டு நாயக்கரு சொன்னாரு.

புரிஞ்சுபோச்சு... ஜமீன்தாரிணி வேலுத்தாயம்மாவுக்கு கரு உண்டாயிருக்குனு ஜமீன்தாரு முடிவு பண்ணிட்டாரு.

பெரிய ஜமீன்தாரு கண்டம கெண்டம ராமகிருஷ்ண நாயக்கருக்கு சாபம் கொடுத்த பளியஞ்சித்தன், நம்ம ஜமீன்தாரு மனசுல வந்து பேயாட்டம் ஆடுனான்.

அடுத்த பத்தாம் மாசம் தன் புள்ள வெளிய வந்து தரையில விழுகுறப்ப, அதப் பார்க்க அவரு உசுரோட இருப்பாரானு அந்த வேலப்பருக்குத் தான் தெரியும்.

பட்டுப்போன அந்த மரத்துல இருந்து பளியஞ்சித்தனோட அசரீரியா குரல் கேக்குது:

வில்லத்து, விசையத்து...

கல்லத்து, கருமலையத்து...

கொடியத்து, கொன்னவன் உயிரத்து...

‘ஆ’ன்னவன், ‘ஊ’ன்னவன் அத்தன பேரும்

சொல்லத்து, சொன்னவன் நாவத்து...

கரு முளச்சு, பட்டமரம் தளச்சு...

தகப்பன் முகத்துல புள்ள முழிக்காம,

புள்ள முகத்துல தகப்பன் முழிக்காம,

வம்சாவளியத்து, தலைமுறையத்து...

- சாபம், சாதாரண சாபம் இல்ல. ஆல கால விஷத்துல தோச்சு எடுத்து, கூர் முனை கட்டி பறந்தடிச்ச அம்பு, உச்சி மண்டையில பொளந்து பளியஞ்சித்தன காவு வாங்கினதால, அவன் கொடுத்த சாபம்!

வருச நாட்டு ஜமீன் கதை - 5

சாபத்தோட பூர்வீகம் என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்க வேணாமா?

கொன்ற மரத்தப் பாத்து ஜமீன்தாரு ஏன் பயப்படணும்?

கல்யாணம்னு பேச்செடுக்கும் போதெல்லாம் ஏன் பதட்டப்பட்டாரு?

வாரிசு உருவானா சந்தோஷப்பட வேண்டிய ஜமீன்தாரு, ஏன் இப்பிடி நடுங்குறாரு?

ஒரு நாப்பது அம்பது வருஷத்துக்கு இன்னும் பின்னாடி போனோம்னா...

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு