Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 7

வருச நாட்டு ஜமீன் கதை - 7
வருச நாட்டு ஜமீன் கதை - 7

பதினெட்டாவது வயசுல ‘ஜமீன்தார்’ ராமகிருஷ்ண நாயக்கர் பட்டம் கட்டி பரிபாலனத்துக்கு வந்தாரு.

‘‘ஆட்டுத்தோல் அளவுக்கு எடம் கொடுத்தா போதும்”னு ஆற்காடு நவாபு கிட்ட வெள்ளக்காரன் கேட்டான். கடல் தாண்டி யாவாரம் பண்ண வந்தவங்களுக்கு இதுகூடவா செய்யக்கூடாதுனு நெனச்சு, “சரி, எந்த எடம் வேணும்?”னு நவாபு கேட்டாரு. வெவரமான வெள்ளக்காரன், கையோட கொண்டுவந்த ஆட்டுத்தோல அவருக்கு முன்ன விரிச்சுக் காட்டினான்.

அதுல ஊரு, ஆறு, குளங்குட்ட, கடலு, மல, ரஸ்தா எல்லாமே கோடு கோடா வரஞ்சிருந்தாங்க. அதுல... ஆத்து ஓரமா இருக்கற ஒரு எடத்தக் காட்டி, ‘இந்த எடம் குத்தகைக்கு வேணும்’னு வெள்ளக்காரன் கேட்டான். ‘ஆட்டுத் தோலால வருது நாட்டுக்கு நட்டம்’னு அப்போ நவாபுக்குத் தெரியாது. ‘சரி’னு சொல்லிட்டாரு.

“இனி நீங்க சனங்ககிட்ட வரி வசூல் பண்ணி கஷ்டப்பட வேணாம்... நாங்களே பண்ணிக்கறோம். இந்தா பிடிங்க ரொக்கப் பணம்”னு நவாபுக்குக் கடன் கொடுத்தாங்க. ‘குதிரை, யானை, பூனை எல்லாத்தையும் நாங்களே மேச்சுக்கறோம்’னு அதுக்கும் பணத்தக் கொடுத்த வெள்ளக்காரன், நவாபுகிட்ட இருந்த அம்புட்டையும் கிட்டத்தட்ட ஏச்சு வாங்கிப் போட்டான்.

குட்டிக் குட்டி ராசாகிட்ட கலகத்தத் தூண்டிவிட்டு அவங்களயும் வெரட்டி நாட்டையும் சேனையையும் சேத்துக்கிட்டான்.

ராசாக்களை எல்லாம் ஒழிச்சான். கோட்டை கொத்தளங்க அம்புட்டையும் இடிச்சான். எல்லா பாளையப்பட்டக்காரங்களுக்கும் ‘நெரந்தர நிலத் தீர்வைத் திட்டம்’னு கொண்டுவந்தான் வெள்ளக்காரன்.

மதுர மீனாட்சி கோபுரத்தையும் சிவகெங்கை சேனை ஆட்களையும் கறுப்பு மல்லிகைப் பூ மாதிரி சுய லெட்சணமா இருந்த பொம்பளைங்களயும், மலைல வெளையற ஏலங் கிராம்பு, வாசனத் திரவியம், தேனு, தெனமாவுனு தின்பண்டத்தையும் பாத்து அனுபவிச்ச வெள்ளக்காரன், பாளையக்காரங்களுக்கு நெலத்தப் பிரிச்சுக் குடுத்து வருமானத்தப் பெருக்கணும்னு முடிவு பண்ணிட்டான்.

பணிஞ்சு போன பாளையக் காரங்களுக்கு ‘ஜமீன்தார்’னு பேர் வெச்சாங்க. வருச நாட்டு கண்டமனூர் ஜமீன்லதான் அதிகப்படியான கிஸ்தி வசூல் ஆச்சு. அந்தச் சமயத்துல கண்டமனூர் ஜமீன்தாரா இருந்தவரு, கொண்டல நாகம நாயக்கர். வேலப்பர் கோயிலக் கட்டினது இவர்தான். வெவசாயம் ஏக போகமா இருந்துச்சு. இவருக்குப் பெறகு பட்டத்துக்கு வந்தவரு - அவரு மகன் ஆண்டி வேலப்ப நாயக்கரு. இவரு பத்துப் பதினஞ்சு கல்யாணம் செய்துகிட்டு வேலப்பர் கோயிலுக்கு வெள்ளையடிச்சதோட சரி.

வேலப்ப நாயக்கர் வாரிசு இல்லாம இறந்த பெறகு, பங்காளி வாரிசு பட்டக்காரரா வந்தவர்தான் நம்ம பெரிய ஜமீன்தாரு திருமலை கெண்டம கண்டம ராமகிருஷ்ண நாயக்கரு.

அப்போ அவருக்கு ஆறு வயசுதான். மைனரா இருக்கறதால மதுர கலெக்டரு, அவர கோர்ட் வார்டு மூலமா தத்து எடுத்து அவரோட தாயார் வெள்ளத்தாயம்மா பொறுப்புல விட்டு வளர்த்தாங்க.

ஒரு எடத்துல உக்காரமாட்டாரு. எதையாவது எடுத்து ஒடச்சிக் கிட்டிருப்பாரு. பொம்பளைக ஆத்துல குளிக்கும்போது பின்னாடி போயி துணிமணிகள ஒளிச்சு வெச்சுக்கிட்டு வேடிக்கை காட்றது, கவ்வக் கட்ட வில்லு எடுத்து, கல்லால தண்ணிக் குடத்த ஒடைக்கிறதுனு ஒரே குசும்பும் வெளையாட்டுமா திரிஞ்சாரு. பொண்ணுகளுக்கும் இந்த மைனர் வெளையாட்டு இஷ்டமாத்தான் இருந்துச்சு.

அரண்மனைக்குப் புதுசு புதுசா பொண்ணுக வரும். அவங்களுக்குப் பன்னண்டு பதிமூணு வயசுதான் இருக்கும். ஒரு வாரம் ரெண்டு வாரம் அங்கயே தங்கியிருந்து பன்னாங்குழி, தாயக்கட்டம் ஆடிட்டுப் போயிருவாங்க. இவங்கெல்லாம், ‘எதுக்கு வராங்க போறாங்க’னு மைனர் ஜமீன்தாருக்குத் தெரியாது. அந்தப் பொண்ணுகளோட காதப் பிடிச்சி, கன்னத்தக் கிள்ளி வெளையாடுவாரு. அதோட சரி, வேற ஒரு வெவரமும் தெரியாது.

அரிசிச் சோறு அரண்மனையில மட்டுந்தான். புள்ளச் சோறுக்கு வரிசகட்டி நிப்பாங்க.

வருசத்துக்கு ஒண்ணு பெத்துப் போடு

புள்ளய வெச்சு மயங்க வேணாம்

புள்ள சோறு தரும் தருமவானாம்

நம்ம கண்டமனூர் துரை இருக்கையில

புல்லு அறுத்தா தொழுபட்டிக்குதான்

புள்ள சமஞ்சா அரண்மனைக்குதான்

காத்துக் கருப்பு அடிச்சிராமதான்

காப்பாத்துவாரு நம்ம துரைதான்

- கோயில் கும்புட்டுக்கு இப்படி ஒரு கும்மிப் பாட்டு கேட்டிருக்காரு மைனர். ஆனா, அர்த்தந் தெரியாது.

வருச நாட்டு ஜமீன் கதை - 7
வருச நாட்டு ஜமீன் கதை - 7

அரண்மனை மணியக்காரங்க மைனருக்கு அர்த்தம் சொன்னாங்க. ஊருல எந்தப் பொண்ணு சடங்கானாலும் அவளத் தலைக்குக் குளிப்பாட்டி, காத்துக் கருப்பு அடிச்சிரக்கூடாதுனு அரண்மனைல வந்து விட்டுட்டுப் போயிருவாங்க. அந்த வெடலப் பொண்ணுக ஒரு வாரம் ரெண்டு வாரம் அரண்மனையில தங்கியிருப்பாங்க. ஜமீன்தாருக தேவைக்கேத்த மாதிரி அவங்களப் பயன்படுத்திக்குவாங்க.

சில பொண்ணுக கை, காலு அமுக்கி விடறதோடு சரி, கொஞ்சம் அழகா செவேர்னு இருக்கற பொண்ணுகள வேலைக்கும் வெச்சுக்குவாங்க; ஆசைக்கும் வெச்சுக்குவாங்க.

பதினெட்டாவது வயசுல ‘ஜமீன்தார்’ ராமகிருஷ்ண நாயக்கர் பட்டம் கட்டி பரிபாலனத்துக்கு வந்தாரு. ‘குப்பம்மாள்’னு ஒரு பொண்ண கல்யாணமும் செய்து வெச்சாங்க.

ஆனா ஜமீன்தாரு, மத்த ஜமீன்தாருக மாதிரி இல்லாம சனங்களோட சனமா எறங்கிப் பழகுவாரு.

முண்டாசு கட்டி நெலத்துல எறங்கி வேல செய்வாரு. புதுசா எதையாவது கண்டுபிடிச்சு வெவசாய நெலத்துல ரெட்ட சால் போட்டு மாடு கட்டி உழுவாரு. எதக்கேட்டாலும் தெரியாதுனு சொல்லமாட்டாரு.

எவனாவது இவருகிட்ட வந்து “பொடி குடுங்க”னு கேப்பான். இவரு தன் மடியிலயிருந்து பக்குவமா எடுத்துக் குடுப்பாரு. வாங்குனவன் மூக்குல வெச்சு ஒற்று இழுப்பு இழுப்பான். அம்புட்டுதான்... கத்திக் கதறி சுருண்டு விழுந்துருவான். மடியில இருந்து அவரு குடுத்தது மிளகாப் பொடியாயிருக்கும்!

இப்பிடிக் கிறுக்குத்தனமா எதையாவது செய்றதால அவருக்குக் ‘கிறுக்கு துரை’ன்னே பேர் வெச்சாங்க.

இப்படி இருக்குற சமயத்துலதான், நாட்டுல ஆடு களவாணிப்பயல், மாடு களவாணிப்பயல் தொந்தரவு அதிக மாயிருச்சு. அரண்மனைக் கஜானாவுக்கு வரவேண்டிய காசு பணத்தக் கொள்ளை அடிச்சுக்கிட்டு போயிட்டாங்க.

ஜமீன்தாரு மேல ஒரு பயம் இருந்தாத்தான் இது மாதிரி எதுவும் நடக்காதுனு சொல்லி, அறுவத்திநாலு கிராமத்துலயும் துப்பு சொல்ல ஆளுகளப் போட்டாரு.

நெனச்சாப்பல யாராச்சும் வழிப் போக்கனக் கூப்பிட்டு கேள்வி கேப்பாரு... விடுகதை போடுவாரு. சரியா பதில் சொல்லாட்டி, கண்ணுல மிளகாப் பொடியப் போட்டு, சாட்டையால ஒரு விளாசு விளாசுவாரு.

இப்பிடித்தான் ஒரு தடவ, வேலப்பர் கோயில் பங்குனித் திருவிழாக்கு கரகம், காவடினு சனங்க கூட்டம் கூட்டமா போய்க் கிட்டிருந்தாங்க. நம்ம கிறுக்கு துரை குதிரை மேல உக்காந்துக்கிட்டு எல்லாரையும் கவனிச்சுக் கிட்டிருந்தாரு.

அந்த வழியாக ஆட்டம் போட்டு காவடியத் தூக்கிக்கிட்டுப் போனவன்ல ஒருத்தனக் கூப்பிட்டு ஒரு பூசணிக்காயக் கொடுத்து, “இதுக்குள்ள எத்தன விதை இருக்கு?”னு கேட்டாரு. எத்தனை விதைனு எவந்தான் அப்பிடியே சொல்ல முடியும்?

குருட்டாம்போக்குல “நாலு டஜன் விதை”னு சொன்னவனுக்கும் சவுக்கடி... “தெரியாது”னு சொன்ன வனுக்கும் சவுக்கடி! அப்பத்தான் கொஞ்ச தூரத்துல பொங்கல் வாங்கி சாப்பிட்டு, தலைக்கு மேல கையத் தூக்கி, ‘அரோகரா... அரோகரா’னு சத்தம் போட்டுக்கிட்டு வர்ற ஒரு பரதேசியப் பார்த்தாரு. அவன் கைல பூசணிக்காயக் குடுத்து, “இதுக்குள்ள எத்தன விதை இருக்கு?”னு வழக்கம்போல கேட்டாரு ஜமீன்தாரு.

பரதேசி கொஞ்சங்கூட தயங்காம, “ஒரே ஒரு விதைதான் இருக்கு சாமி”னு சொன்னான்.

“ஒரு விதைக்கு மேல இருந்தா உன் தலைய வெட்டிருவேன், தெரியுமா?”னு கண்ண உருட்டி மெரட்டிக் கேட்டாரு ஜமீன்தாரு.

“உங்க கையால என் தலை போற நேரம் இன்னும் வரல சாமி... ஒரே ஒரு விதைதான் இருக்கு!”னு திரும்பவும் அமைதியா சொன்னான் பரதேசி.

குதிரைலயிருந்து எறங்கினாரு ஜமீன்தாரு.

பூசணிக்காய ஒரே வெட்டா வெட்டினாரு.

சரிபாதியா கீழே விழுந்த பூசணிக்காய்ல இருந்தது, ஒரே ஒரு விதைதான்!

பரதேசி அமைதியா, “தானா கனிஞ்சு விதை வெளிய வந்தா பூசணிக்குக் கேடில்ல. காயில வெட்டி எடுத்தா காய்க்கும் கேடு... விதைக்கும் கேடு சாமி!”னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காம ‘வேலப்பருக்கு அரோகரா’னு கோயிலப் பாத்து நடையக் கட்டினான்.

ஜமீன்தாருக்கு முகரை வெளுத்துப் போச்சு. குதிரைய திருப்பிக்கிட்டு சோகமா அரண்மனைக்கு வந்து சேர்ந்தாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 6

ராத்திரி முழுக்க தூக்கம் வரல. அந்தப் பரதேசியோட முகம் மட்டுந்தான் நெனவுல வந்துகிட்டே இருந்துச்சு.

‘காய்க்கும் கேடு... விதைக்கும் கேடு’னு திரும்பத் திரும்ப காதுல கேட்டுக்கிட்டே இருந்துச்சு.

பரிவாரத்துல ஒரு ஆளக் கூப்பிட்டு, “அந்தப் பரதேசி யாரு? எங்க இருக்கான்?”னு கண்டுபிடிக்கச் சொன்னாரு. அவன் யாருன்னு தெரிஞ்சுக்காம சாப்பிடக் கூடாதுனு முடிவெடுத்தாரு.

மறுநாள் தகவல் சொன்னாங்க - “அவன் ஒரு மலை ஜாதி பளியன். வேலப்பர் மலைக் குகைல இருக்கான்.”

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு