Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 8

வருச நாட்டு ஜமீன் கதை - 8
வருச நாட்டு ஜமீன் கதை - 8

ஜமீன்தாருக்கு மனசுல கோபம் இருந்தாலும் அத வெளிக்காட்டல. தன்னோட பரிவாரங்களக் கூப்பிட்டு, “தயாரா இருங்க... தேன்பாறைக்குப் போறோம்”னு உத்தரவு போட்டாரு.

சனிக்கெழம.. வில்லங்கம், விஸ்தி, பிராது, வழக்கு அம்புட்டுக்கும் அன்னிக்குத்தான் உபாயம், தீர்ப்பு, வாய்தா சொல்ற நாளு.

நம்ம கிறுக்கு துரை, ராமகிருஷ்ண நாயக்கரு காலைல கண்ணு முழிச்சுப் பார்க்கறப்ப, அரண்மனைக்கு வெளியில சனங்க மொய்க்கற சத்தம் கேட்டுச்சு. ‘பூசணிக்காய்ல ஒரே விதை’னு சொன்ன பளியனப் பத்தின நெனப்பே ராத்திரி முச்சூடும் அலமோதிக்கிட்டிருந்ததால ரெண்டாஞ் சாமத்துலதான் அவருக்குத் தூக்கமே வந்துச்சு. பளியன்கிட்ட நல்லது பொல்லது விசாரிச்சுப் போடணும்னு நெனச்சாரு.

நீதி பரிபாலன பிரதானி வந்து காத்துக்கிட்டிருந்தாரு. ஜமீன்தாரு குளிச்சு கிளிச்சு தயாரானதும் சேவுகனக் கூப்பிட்டு, “பளியன சடுதியா கூப்பிட்டுக்கிட்டு வா. ‘ஜமீன்தாரு உனக்கு விருந்து வெக்கப் போறார்’னு சொல்லி, அவன் மேல கை படாம கூப்பிட்டு வா!” உத்தரவு போட்டாரு.

‘பளியனுக்கு எப்பிடியெல்லாம் கிறுக்கு துரை விருந்து வெக்கப் போறாரோ’னு சிரிப்ப அடக்க முடியாம சேவுகன், குதிரை மேல ஏறி கெழக்கு முன்ன பாஞ்சுட்டான்.

பிரதானி ராமய்யர், கர்ணம், மணியகாரங்க, நாட்டாமைக அம்புட்டு பேருக்கும் நடுவுல ஜமீன்தாரு உக்காந்தாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 8
வருச நாட்டு ஜமீன் கதை - 8

அன்னிக்கு ஒரு விசித்திரமான வழக்கு அரண்மனைக்கு வந்துச்சு.

ஜக்கன், மூக்கன்னு அரண்மனைல வேலை பார்த்துக்கிட்டிருந்தவங்க அண்ணந் தம்பி ரெண்டு பேரு. ரெண்டு பேத்துக்குமே கல்யாணமாயிருச்சு. அண்ணங் காரனுக்கு வாரிசு உண்டாகல. தம்பிக்குப் பொறந்தது மூணும் பொம்பளப் புள்ளைக.

என்ன வழக்குனு கேளுங்க... அண்ணந் தம்பி ரெண்டு பேத்துக்கும் மொறப் பொண்ணாகப்பட்டவ ஒருத்தி, இள வயசுலேயே புருசன் செத்துப்போயி அவ விதவையா இருக்கா. அவள யார் வெச்சுக்கிறதுனு ரெண்டு பேருமே குத்து வெட்டுல எறங்கிட்டானுக.

ஜமீன்தாருகிட்ட அண்ணங்காரன் மொதல்ல பிராது கொண்டு வந்தான் - “சாமி... எனக்குக் கல்யாணமாயி ஏழு வருசமாச்சு. என் பொண்டாட்டி வயித்துல ஒரு புழு - பூச்சி தங்கல. மொறப் பொண்ணு விதவையா இருந்தாலும் பரவாயில்ல, ரெண்டாந் தாரமா அவள நான் வெச்சுக்கிறேன்”னு விடாக்கண்டன் அண்ணங்காரன் சொல்றான்.

“அதெப்பிடி சாமி... எனக்குந்தான் ஆண் வாரிசு இல்ல. அதோட, அவ எங்கூடத்தான் இருக்கணும்னு பிரயாசப்படுறா. நாந்தான் அவள வச்சுக்குவேன்”னு கொடாக்கண்டன் தம்பி சொல்றான்.

பிரதானி ராமய்யர் அந்த விதவைப் பொண்ணப் பாத்து, “உனக்கு யாருகூட போக இஷ்டம்?”னு கேட்டாரு. அவ இருந்துகிட்டு, “சின்னவருகூட போறேன்”னு சொல்றா. தம்பிக்காரன் அதாஞ் சரிங்கிறான். அண்ணங்காரன் விட்டுக்கொடுக்காம அதெப்பிடிங்கிறான்.

ஜமீன்தாரு யோசிச்சாரு. ஒரு படி நெய்ய நல்லா காய்ச்சச் சொன்னாரு. அண்ணந் தம்பி ரெண்டு பேத்தையும் அந்த நெய்ச் சட்டியில கைய விடச் சொன்னாரு. ரெண்டு பேர் கையும் ‘கொத... கொத...’னு புண்ணாகிப் போச்சு.

“யாரு கைல சீக்கிரமா புண் ஆறுதோ... அவனுக்குத்தான் இந்தப் பொண்ணு... அதுவரைக்கும் இவ எங்கிட்ட இருக்கட்டும்”னு தீர்ப்புச் சொன்னாரு.

நாயக்கர் காலத்துல ஒரு குத்தம் நடந்துபோச்சுனா, ஆவணம், வேத்தாள் சாட்சி, பிரதானியோட அபிப்பிராயம், மனு சாஸ்திரம், பரம்பர வழக்கம், பிராமணர் முடிவு இதையெல்லாம் வச்சுத்தான் நீதி பரிபாலனம் செய்தாங்க.

நெய்ல கை வச்சு வெந்து நொந்து அவங்க போனதும், அரண்மனைக்கு வெளியில கொஞ்சந் தூரத்துல சேவுக மார்க ஒரு வாட்டசாட்டமான ஆள கயித்துல கட்டி இழுத்து வந்தாங்க.

மதுரை கஜானாவுக்கு வில் வண்டியில கொண்டுபோன நகை - நட்டு, பணம் அம்புட்டையும் ஆண்டிபட்டி கணவாய்ல கொள்ளையடிச்ச கும்பல்ல ஒருத்தன். அவம் பேரு கழுவன். களவாணிப் பய.

வருச நாட்டு ஜமீன் கதை - 8
வருச நாட்டு ஜமீன் கதை - 8

இவனத்தான் ராமய்யர் ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்தாரு. துப்பு ஆளு வச்சு அவனப் பிடிச்சாச்சு. நெறயப் பேரு ஓடிப் போயிட்டானுக. ‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் எடத்துல குரு.... அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி’னு சொன்ன மாதிரி, கழுவன இழுத்து வந்து பிரதானி முன்னால நிறுத்தினாங்க.

காடு, மேடு சுத்தினாலும் கடைசியா கண்டம நாயக்கன் கவட்டுக்குள்ளதான் நொழையணும்!

கிறுக்கு துரை சவுக்கெடுத்து விளாசினாரு. அவன் மேல தண்ணிய ஊத்தி, திரும்பத் திரும்ப சவுக்கெடுத்து விளாசினாரு.

நாயக்கர்களுக்கு எப்பவுமே இந்தக் களவாணிப் பயலுகதான் பெரிய தல முறுக்கு. இவங்கள அடக்கத் திண்டாடித் திணறி வழிக்குக் கொண்டு வர்றதுக்கே வருமானத்துல பாதி செலவாச்சு. இதுக்காக பாடி காவல், எல்லக் காவல், சேனைக் கொடைனு சொல்லி ஏகப்பட்ட வரி வசூல் செஞ்சாங்க.

கெழக்குச் சீமைல களவாணிக் கூட்டமே இருந்துச்சு. கொள்ளையடிக் கறதையே ஒரு தொழிலா செஞ்சு வந்துச்சு. மதுரை கலெக்டருக்கு கிஸ்தி கட்டுறது அவங்களுக்குப் பிடிக்காதாம். அந்தக் கூட்டம் ஆடுகளையும் மாடுகளையும் திருடுறது மட்டுமில்ல... கொஞ்சம் அசந்தா ஆளுகளையே தூக்கிட்டுப் போயிடுவாங்க. சின்னப் பையன்களுக்கு ‘கொள்ளையடிக்கிறது எப்படி?’னு சொல்லித் தந்து பிஞ்சுலவே பழுக்க வச்சுருவாங்க.

கூட்டாளிக யாருன்னு கேட்டும் கல்லுளி மங்கனாட்டம் வாயே திறக்காம இருந்ததால கழுவன் கழுத்துல தொழுக்கட்டைய மாட்டச் சொன்னாரு கிறுக்கு துரை. தொழுக்கட்டைன்றது ரொம்ப கனமா, கழுத்துலயும், கைலயும் சேத்து மாட்ற மாதிரி இருக்கும். திரும்பவும் அவன சவுக்கால அடிச்சு அங்க இருந்த கல் தூணுல கட்டிப் போட்டாங்க. ‘அவன் கூட்டாளிக யாருன்னு சொல்ற வரைக்கும் ஆகாரம் - தண்ணி கொடுக்கப்படாது’ன்னு உத்தரவும் போட்டாரு கிறுக்கு துரை.

இதுக்குள்ள காலைல பளியன கூப்பிடப் போனவன் வெறுங்கையோட திரும்பி வந்தான். சேவுகன் கொஞ்சம் தயங்கி, “ஜமீன்தாரய்யா... பளியன் நம்ம அரண்மனைக்கு விருந்தாளியா வரமாட்டானாம். நாளைக்கு அமாவாசையா இருக்கிறதால தேன் எடுக்க தெப்பம்பட்டி தேன் பாறைக்குப் போயிக்கிட்டிருக்கானாம். உங்களப் பார்க்க விருப்பமில்லையாம்..”

ஜமீன்தாருக்கு மனசுல கோபம் இருந்தாலும் அத வெளிக்காட்டல. தன்னோட பரிவாரங்களக் கூப்பிட்டு, “தயாரா இருங்க... தேன்பாறைக்குப் போறோம்”னு உத்தரவு போட்டாரு.

உச்சி வெயில் தணிஞ்சுது. சூடும் தணிஞ்சுது. வேலப்பர் கோயில் போற வழியில தெப்பம்பட்டி தேன் பாறைக்குப் போய்ச்சேர்ந்தாரு கிறுக்கு துரை. குதிரை மேல இருந்து அண்ணாக்க மேல பாத்தாரு. குரங்குக மரத்துக்கு மரம் தாவி குதியாட்டம் போட, செம்போத்துப் பறவ மனுஷப் பயலாட்டம் கத்துது. கொஞ்ச தூரத்துல கரும்பாறை உச்சியில கயித்தக் கட்டி அத்துவானத்துல பளியன் தொங்கிக்கிட்டு இருந்தான். பாறை இடுக்குல அடை (தேன் கூடு) ராட்டு ராட்டா தொங்குது. பளியனச் சுத்தி அத்தன தேனீ சுத்தினாலும் ஒண்ணுகூட அவன் மேல கொட்டல. அவனோட துணையாளுக, கைல கலயத்த வெச்சுக்கிட்டு நிக்கறாங்க.

கொஞ்சம் பக்கத்துல போன கிறுக்கு துரை கண் கொட்டாம பளியனையே பாத்துக்கிட்டிருந்த சமயத்துலதான் பளியன் திடீர்னு, “சாமீ...! வலது பக்கமா விலகி ஓடுங்க. உங்க தலைக்கு மேல பாறை உருண்டு வருது”னு கத்தினான். ஜமீன்தாரும் பரிவாரத்து ஆளுகளும் வலது பக்கமா தாவிக் குதிச்சுத் தப்பிக்க, ஒரு சின்னப் பாறை, மரப் பிடிப்பு விலகி, சொன்ன மாதிரியே ஜமீன்தாரு நின்னுக்கிட்டிருந்த பக்கமா உருண்டு வந்து அடிவாரத்துக்கே ஓடிப் போயிருச்சு.

‘பளியனுக்கு சித்து விளையாட்டு ஏதும் தெரியுமோ?’னு ஜமீன்தாரு தெகச்சுப் போயி நிக்க... கயித்துல இருந்து எறங்கின பளியன், அவர ஆசுவாசப்படுத்தி அவன் தங்கியிருந்த குகைக்குக் கூப்பிட்டுப் போனான்.

வருச நாட்டு ஜமீன் கதை - 8
வருச நாட்டு ஜமீன் கதை - 8

“சாமீ... நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கக் கூடாது. ஆனா, விதி நம்ம ரெண்டு பேரையும் துரத்துதே. நேத்திக்கு நான் வேலப்பர் கோயிலுக்கு வந்தேன். இன்னிக்கு நீங்க தேன்பாறைக்கு வந்துட்டீங்க.”

“அதுல ஒண்ணும் தப்பில்ல. எனக்கு ஒரு சந்தேகம். அதைத் தீத்துக்கணும். ‘பூசணிக்காய்க்கு ஒரு விதை’னு அதெப்பிடி சரியாச் சொல்ல முடிஞ்சுது?”

“இப்பவும் சொல்றேன் சாமீ.. பூசணிக் காய்க்கு ஒரே ஒரு விதைதான். ஒரு விதையில இருந்துதான் ஒரு பூசணிக் கொடி வருது. அதுல இருந்து காய் வருது. அந்த அர்த்தத்துல சொன்னேன். என் ஆயுசு கெட்டியா இருக்கிறதால நீங்க வெட்டின பூசணிக்காய்ல நிசத்தாலயுமே ஒரே ஒரு விதை இருந்துச்சு!”

ஜமீன்தாரு மனசுல ‘சுரீர்’னு ஏதோ தச்ச மாதிரி தெரிஞ்சுது. அந்தத் திகைப்பு மாறாம புருவத்த மேலத் தூக்கி, “காய்ல வெட்டினா காய்க்கும் கேடு... விதைக்கும் கேடுன்னு சொன்னது..?”

“காயா இருக்கும்போது வெட்டினா அது ஆகாரத்துக்குப் பயன்படாது... விதையும் முத்தியிருக்காது. அதனால முளைக்காது. ரெண்டுக்குமே கேடுதான். பழமா இருந்தா ஆகாரமா இருக்கும். விதையும் முளைச்சு சந்ததி பெருகும்!”

ஜமீன்தாருக்கு லௌகீக வாழ்க்கையோட தத்துவம் புரிஞ்ச மாதிரி இருந்துச்சு. ஜமீன்தாரு செஞ்சுக்கிட்ட பால வயசு கல்யாணத்தக் குறிச்சு சொல்ற மாதிரி தோணுச்சு. அந்தச் சமயத்துலதான் ஒரு பொண்ணு, கைல கலயம் வச்சுக்கிட்டு நடந்து வந்து நேரா பளியன் முன்னாடி உக்காந்து, அவனோட கால் பாதத்த தண்ணியில நனச்சு துணியில துடச்சு விட்டா. ரெண்டு காலையும் துடச்சுக்கிட்டிருக்கும்போது ஜமீன்தாரு அவள வச்ச கண்ணு எடுக்காம பாத்துக்கிட்டிருந்தாரு. ‘மலைக் காட்டுல இவ்வளவு அழகான பொண்ணா? பளியனுக்கு இந்தப் பொண்ணு என்ன உறவு?’ ஜமீன்தாரு சிந்தனைல இருக்கும்போதே...

வருச நாட்டு ஜமீன் கதை - 7

“சாமீ... இவதான் என் சம்சாரம். போன பிறவியில மதுரை கடைசி அரசி மீனாட்சியா பொறந்தவ!”

“போன பிறவியா..?” - ஜமீன்தாரு தெகச்சுப்போயி கேட்டாரு.

“ஆமா... உங்க நாயக்கர் வம்சம் மதுரையில வர்றதுக்குக் காரணமாயிருந்த அரியநாத முதலியாரா நாந்தான் பொறந்தேன்..!”

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு