Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 9

வருச நாட்டு ஜமீன் கதை - 9
வருச நாட்டு ஜமீன் கதை - 9

பளியனோட பேசப் பேச அவனைப் பத்தி சமாசாரங்கள் தெரியத் தெரிய அவன் ஒரு `சித்தன்’னு முடிவுசெஞ்சாரு.

மதுரைல ஆட்சி செஞ்ச கடைசி பாண்டிய மன்னருக, வாரிசுப் பட்டத்துக்காக ஒருத்தருக்கொருத்தர் போட்டி பொறாமைல அடிச்சுக்கிட்டு செத்துக்கிட்டிருந்தப்போ...

சந்திரசேகர பாண்டியன், விசய நகரத்துக்கு ஓடிப்போனாரு. கிருஷ்ண தேவராயர் கால்ல விழுந்து, `என்னையும் எம் பொண்டாட்டி புள்ளைகளயும் எப்படியாவது ரட்சகம் பண்ணுங்க’னு மன்றாடினாரு. உடனே ராயர், தன்னோட மந்திரி நாகம நாயக்கர கூப்பிட்டு பெரிய சேனைய மதுரைக்கு அனுப்பி வச்சாரு. அந்த சேனைக்குத் தளபதிதான் அரியநாத முதலியாரு.

நாகம நாயக்கர் மீசைய முறுக்கறதோட சரி... அரியநாதர்தான் வியூகம் அமச்சு மதுரையைச் சுத்தி வளைச்சுப் பிடிச்சாரு.

‘தட்சிண மகாமண்டலேஸ்வரர்’னு நாகம நாயக்கர் மதுரைல பதவி ஏத்துக்கிட்டதும் அரியநாதர் மட்டும் திரும்பவும் விசயநகரத்துக்குப் போயிட்டாரு.

மதுரை செல்வச் செழிப்புல தன்ன மறந்து டாம்பீகமா ஆட்டம் போட்டுக் கிட்டிருந்தாரு நாகமர். வரி, தண்டம் எல்லாம் தன்னிஷ்டத்துக்கு வசூல் செய்துகிட்டு, விசயநகரத்துக்கு அனுப்பவேண்டிய திறையையும் கொடுக்காம பாண்டிய மக்கள இம்சையும் செஞ்சாரு.

இப்பிடியே விட்டுவச்சா நம்ம பேரு கெட்டுப்போகும்னு நெனச்ச ராயர், இந்தத் தடவ விசுவநாத நாயக்கர மதுரைக்கு அனுப்பி வச்சாரு. இப்பவும் சேனைக்குத் தளபதியா நிக்கிறது அரிய நாத முதலியாருதான்.

விசுவநாதருக்குக் கொஞ்ச வயசுதான். அரியநாதர் ரோசனைப் படிதான் நாகமரோட படைய தோக்கடிச்சாங்க. நாகமரக் கட்டித் தூக்கிக்கிட்டுப்போயி ராயர் முன்னால நிறுத்தினாரு விசுவநாதரு.

மெச்சிப்போன ராயர், “நம்ம பேரரசுல எந்த ராச்சியம் வேணும்னாலும் எடுத்துக்க... கருவூலத்துல இருந்து எவ்வளவு வேணும்னாலும் அள்ளிக்க... வேற என்ன ஒனக்கு வேணும்?”னு கேட்டாரு.

அதுக்கு விசுவநாத நாயக்கர், கண்ணுல தண்ணிய தேக்கிக்கிட்டு, “எனக்கு என்னோட அப்பாதான் வேணும் ராஜா”னு கேட்டாரு.

ராயரோட உத்தரவுக்காகப் போயி யாரக் கட்டித் தூக்கிட்டு வந்தாரோ... அந்த நாகம நாயக்கர்தான் விசுவநாத நாயக்கரோட சொந்த அப்பா! ‘அப்பா வேணும்’னு அப்பிடி கேக்கச் சொல்லிக் குடுத்ததே அரியநாதர்தான்.

ராயர் சந்தோஷப்பட்டு, “சரி... சரி... அப்பனும் மகனுமா மதுரையில இருந்து நல்லபடிக்கா ஆட்சி செய்ங்க”னு அனுப்பி வெச்சாரு. விசுவநாத நாயக்கர், அரியநாத முதலியாருக்கு ‘தளவாய்’னு ஒரு புதுப் பொறுப்பைத் தந்தாரு. தளவாய்னு சொன்னா அமைச்சர் பதவியும் படைத் தளபதி பதவியும் ஒண்ணா சேந்த மாதிரி!

அரியநாதர் தளவாய் ஸ்தானத்துக்கு வந்த பெறகுதான் மதுரைய மையமா வச்சு எழுவத்தி ரெண்டு பாளையப்பட்டா பிரிச்சாரு. அவருக்குத் தோதான ஆளுகள பாளையக்காரங்களா நெயமிச்சாரு. மதுரைல கோட்டை, கொத்தளங்க கட்டுனது மட்டுமில்ல... கோயில் கட்றது, குளம் வெட்றது, காட்ட அழிச்சுப் பயிர் பருவஞ் செய்ய நெலத்தப் பிரிச்சுக் குடுக்கிறதுன்னு ஏகப்பட்டது இவர் பொறுப்புலேயே செஞ்சாரு. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போனீங்கன்னா அங்க ஆயிரங்கால் மண்டபத்துல குதிரைமேல நிமிர்ந்து உக்காந்திருக்காரே... அவர்தான் நாஞ்சொல்லுற அரியநாத முதலியார்.

பொறப்பட்ட இடத்துக்கே வருவோம்...

‘நாயக்கருங்க வம்சம் மதுரை சீமைல வர்றதுக்கு காரணமாயிருந்த அரியநாத முதலியாரா முந்துன பிறவியில நாந்தான் பொறந்தேன்’னு பளியன் சொன்னதுமே ஜமீன்தார் ராமகிருஷ்ண நாயக்கருக்கு எடது பக்கம் பல்லி கெவுளி சொல்லிச்சு.

பளியன் தன்ன அரியநாத முதலியாரா ருசுப்படுத்தும்போது அவன் ஒரு அதிமேதாவியா இருப்பான்னு ஜமீன்தாருக்குப் பொறி தட்டுச்சு.

பளியனோட பேசப் பேச அவனைப் பத்தி சமாசாரங்கள் தெரியத் தெரிய அவன் ஒரு ‘சித்தன்’னு முடிவுசெஞ்சாரு.

லௌகீக வித்தை, பரமார்த்திக வித்தை, வைத்யம், தர்ம சாஸ்திரம், தர்க்கம், சங்கீதம், சாகித்யம், வியாகரணம், ஜோதிடம், மீமாம்சம் எல்லாம்தெரிஞ்சவனா இருந்தான் பளியஞ்சித்தன்.

ஜமீன்தாரு புதுசு புதுசா என்னத் தெல்லாமோ கத்துக்கணும்னு நெனச்சாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 9
வருச நாட்டு ஜமீன் கதை - 9

பளியஞ்சித்தனோட சம்சாரம் ‘மீனாட்சி’ ஒரு கலயத்துல தேனும் தினை மாவும் கொண்டுவந்து தயங்கித் தயங்கி ஜமீன்தாருக்குக் கொடுத்தா.

“சாமீ... உங்களுக்கு மீனாட்சி கதைய இன்னொரு நாளைக்குச் சொல்றேன்”னு பளியஞ்சித்தன் சொன்னதைக் கேக்காம கிறுக்கு துரை பாறைல இருந்த பல்லியவே பாத்துக்கிட்டிருந்தாரு.

“சாமீ... நீங்க என்ன ரோசனை செய்றீங்கன்னு புரியுது. பால வயசு கல்யாணத்துனால உங்களுக்கு வாரிசு உண்டாகலயேனு கவலைப்படுறீங்க... அப்பிடித்தான?”

ஜமீன்தாரு ஆமோதிச்சு தலை யாட்டினாரு.

“உங்க மொத ஜமீன்தாரிணிக்குக் கொழந்த பாக்கியம் இருக்காது..! நீங்க ரெண்டாவதா ஒரு கல்யாணம் செஞ்சாகணும் சாமி!”

“இருக்கட்டும். நான் எத்தனை கல்யாணம்தான் செஞ்சுக்கிட்டாலும் பரம்பரையா வர்ற வாரிசுக எனக்கப்புறம் நிம்மதியா ராச்சியம் செய்ய முடியுமா..? சுத்தி இருக்கிற கொள்ளைக் கூட்டம், ஜமீன் சொத்துகள் அம்புட்டையும் களவாண்டுக்கிட்டுப் போயிடுதே..! அதுமட்டுமில்ல, இந்தப் பசலி வருஷத்துல கஜானாவுல இருப்பு ரொம்ப கொறஞ்சு போச்சு..!” - ஜமீன்தாரு வருத்தப்பட்டுச் சொன்னாரு.

கொஞ்ச நேரம் கண்ண மூடித் தொறந்தான் பளியஞ்சித்தன். “அதுக்கு ஒரு உபாயம் சொல்றேன் சாமீ... ஆயிரங் காக்காவுக்கு ஒரே கல்லு போதும். கழுவன் ஒருத்தன வச்சு அந்தக் களவாணிக் கூட்டத்தையே செதறடிச்சுறலாம். அதுக்கு அவங்க இருப்புத் தெரியணும், அம்புட்டுதான்.”

“எப்படிக் கண்டுபிடிக்கிறது..?’

“களவாணிப் பய கழுவனை பிடிக்கும்போது கொள்ளக் கூட்டத்தச் சேர்ந்த ஒரு தட்டி வண்டியும், ரெண்டு காள மாடுகளும் கெடச்சது இல்லையா... அது போதும்...”

மறுநாள் காலைல கண்டமனூர் அரண்மனைப் பிரதானி ராமய்யரோட சேவுகமார்களும் எல்லக் காவல்காரங்களும் சுறுசுறுப்பா இருந்தாங்க.

தட்டி வண்டியில காள மாடுகளப் பூட்டினாங்க. மயக்கமா இருந்த கழுவன அதுல கெடத்திப் படுக்க வெச்சுட்டாங்க. நேத்து பூரா ஆகாரந் தண்ணி இல்லாததால வெறும் மூச்சு மட்டும் வந்து போய்க்கிட்டிருந்துச்சு. கழுத்துலயும் கைலயும் ரத்தம் கன்னிப் போயிருந்துச்சு. அந்த வண்டிக்குப் பின்னாடி ஜமீன் வண்டிக நாலஞ்சு நிறுத்தி அதுல சாக்கு மூட்டைக வரிசையா ஒண்ணு சொன்னாப்பிடி இருந்துச்சு.

ஊர் நாட்டுல தடம் பார்த்துப் போயி வந்து பழகின மாடுக, வண்டிக்காரன் இருந்தாலும் இல்லாட்டியும் பொறப்பட்டு வந்த சொந்த எடத்துக்கே அதுவா போய்ச் சேந்துரும். பளியஞ்சித்தன் பெரிய உபாயக்காரன்தான். அவன் சொன்னபடிக்கே, தட்டி வண்டி ஆண்டிப்பட்டிக் கணவாய்ல ஏறி உசிலம்பட்டிக்கு வடக்கால திரும்பி ஒரு காட்டுக்குள்ள போய் நின்னுருச்சு.

வண்டி போய் நின்னதுதான் தாமசம். தூங்கிக்கிட்டிருந்த களவாணிப் பயலுக வண்டிச் சத்தம் கேட்டு திடுக்குனு எந்திரிச்சாங்க. அம்புட்டுதான்...

வருச நாட்டு ஜமீன் கதை - 9
வருச நாட்டு ஜமீன் கதை - 9

சாக்கு மூட்டையிலிருந்து உதறித் தெறிச்சு வந்த ஜமீன்தாரோட ஆளுக கத்தியோட வண்டியிலிருந்து பாய, களவாணிப் பயலுக திக்கித் தெணறி நடுநடுங்கிப் போயிட்டானுக. அம்புட்டு பேத்துக்கும் அள்ளயில கத்திக்குத்து விழுந்துச்சு.

செத்தது போக மிச்சம் மீதி களவாணிக அம்புட்டு பேத்தையும் சாக்கு மூட்டைல கட்டிக்கிட்டு தட்டி வண்டியில தூக்கிப் போட்டாங்க.

பளியஞ்சித்தன் மேல ஜமீன்தார்வாளுக்கு பக்தி முத்திப் போச்சு. வாரிசு உண்டாக சித்தன் சொன்ன ரெண்டாவது உபாயத்துல உடனே எறங்கிட்டாரு.

கிறுக்கு துரை திடீர்னு இப்படி பவுசா நடந்துக்கிட்டது சனங்களுக்கு வேடிக்கையா இருந்துச்சு. அவருக்கு ரெண்டாவது கல்யாணம் செய்து வெக்க மாப்ள நாயக்கரு எல்லா ஏற்பாடும் செய்துட்டாரு.

பரம்பரையா கும்பிட்டுக்கிட்டு வந்த பட்டாக் கத்திக்கு புளியம்பழம் தேச்சு, சாம்பல் போட்டு மினுக்குனாங்க. அதுக்கு நாமம் போட்டாங்க. அந்தக் கத்திக்கு ‘ஜமுதாடு’னு பேரு.

முந்தி ஒரு தடவ ஜமீன்தாரு மொறப்படி ஒரு பால வயசுப் பொண்ண கல்யாணம் செய்துக்கிட்டாரு இல்லையா... இனிமே செய்ற கல்யாணத்துக்கு ‘ஜமுதாடு பெள்ளி’ (கத்திக் கல்யாணம்) அப்பிடின்னு சொல்லுவாங்க.

ஜமீன்தாருக்கு எந்தப் பொண்ணைப் பிடிக்குதோ அந்தப் பொண்ணு வீட்டுக்கு ஜமீன்தாருக நேரடியா போகவேண்டியதில்ல. அவரோட கத்திதான் போகும்!

அதும்படி மாப்ள நாயக்கரு எல்லா அம்சமும் நெறஞ்ச ஒரு பொண்ணப் பாத்து, இவ ஜமீன்தாருக்குத்தான்னு ருசுப்படுத்தினாரு. பொண்ணு வீட்டுக்கு வேணும்கற நகை-நட்டு, துணி-மணி, புஷ்பம், பழக்கூடை அம்புட்டையும் வில் வண்டியில ஏத்திக்கிட்டுப் போனாங்க.

பொண்ணு வீட்டுக்குள்ள மாப்ள நாயக்கரு கத்திய சமானமா புடிச்சு நொழஞ்சாரு. ஜமீன்தாரே வீட்டுக்குள்ள வந்தா என்ன மரியாதை இருக்குமோ, அதவிடக் கூடுதலான பயபக்தி அந்தக் கத்தி மேல தெரிஞ்சது.

பொண்ணை... சும்மா தக்காளிப் பழம் மாதிரி ‘தகதக’ன்னு அலங்கரிச்சு வச்சிருந்தாங்க. தொணப் பொண்ணு கைத்தாங்கலா அவள புடிச்சுக்கிட்டு வர, மாலைய கத்திமேல போட்டு அதுக்கு சந்தன குங்குமம் வச்சு பொண்ணை ஜமீன்தாரிணியா ஆக்கிட்டாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 8

ரெண்டாவது ஜமீன்தாரிணி!

வில் வண்டி அரண்மனைக்கு வந்து சேர்ந்துச்சு. பளியஞ்சித்தன் கைல ஒரு மரக்கன்னு... பாதுகாப்பா கொண்டு வந்து அரண்மனைக்கு முன்னால காத்துக்கிட்டிருந்தான். ஜமீன்தாரு கிட்ட அந்த மரக்கன்னைக் கொடுத்து, “சாமி... உங்க கல்யாணத்துக்கு அரியநாதரே வந்து கொடுக்கிற வெகுமதியா நினைச்சுக்கங்க. உங்க வம்சவிருத்திக்குக் கண்ணாடி மாதிரி இந்த கொன்ற மரத்தைக் கொண்டு வந்திருக்கேன். அரண்மனை முன்னால வலது பக்கமா நட்டு வைங்க. இது பட்டுப் போகாம தண்ணி ஊத்திக்கிட்டே வாங்க”னு சொன்னான்.

எருக்குழியில இருந்து மண்ணெடுத்து வந்தாங்க. ஜமீன்தாரு அரண்மனைக்கு முன்னாடி இருந்த தோட்டத்துல அந்தக் கொன்ற மரத்த நடும்போது அவரு உடம்புல மின்னலடிச்ச மாதிரி ரத்தம் சூடேறிச்சு.

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு