Published:Updated:

சிறுகதை: "காட்டு மனிதர்களும் நாட்டு மிருகங்களும்" - எஸ். சங்கர நாராயணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"காட்டு மனிதர்களும் நாட்டு மிருகங்களும்"
"காட்டு மனிதர்களும் நாட்டு மிருகங்களும்"

ஆனந்த விகடன் பொக்கிஷம் சிறுகதை. 22-11-1998 ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை

ஊரே துக்கமாக இருந்தது. சலூனிலோ, டீக்கடையிலோ, தேர்முட்டியிலோ... மக்கள் வருத்தமாக பேசிக்கொண்டார்கள். 'அடடா சாமுண்டி மாட்டிகிட்டான் போல....'


பத்து பன்னிரண்டு கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் சுருளி மலை காடு. சாமுண்டி அங்கேதான் ஒளிந்திருந்தான். ஒருமுறை பத்திருபது போலீஸ்காரர்கள் துப்பாக்கியும் தோட்டாவுமாக உள்ளே புகுந்து தேடிப் பார்த்தார்கள். காடு முழுக்க அலசி பார்த்தாகிவிட்டது. சலித்து பார்த்தாகிவிட்டது. சாமுண்டியை காணவில்லை. போலீசுக்கே அழுகிவிட்டது. ஒரு சலனமில்லை. ஒரு அசைவுமில்லை. அவன் இங்கே இல்லை என்று முடிவு செய்து போலீஸ் திரும்பி போக முடிவு செய்தது. பத்து ஐம்பது அடி திரும்பி இருப்பார்கள்... குபீர் குபீர் என்று ஆங்காங்கே கண்ணி வெடிகள் ஒன்றும் புரியாமல் ஆளாளுக்கு பதறியடித்து ஓடி வந்தார்கள்.சாமுண்டி விளையாட்டுக்கார, தைரியமான ஆள் அவனைப் பிடிக்க முடியாது என்று மக்கள் நம்பினார்கள். அவன் மேல் அவர்களுக்கு ஒரு போதையான மரியாதை இருந்தது.ஆங்காங்கே அவனைப் பற்றி கட்டுக்கதைகள் உலா கிளம்பி இருந்தன.


சாமுண்டி ரகசியமாக ஊருக்குள் வந்து போகிறான். ஊருக்குள் அவன் மாறு வேஷத்தில் நடமாடுவான்.


அவனைப் பிடிக்க போலீஸ் வெறிபிடித்து திரிந்தது. விசாரணை என்ற பெயரில் கண்ட ஆட்களை மடக்கி ஸ்டேஷனுக்கு கூட்டிப்போயி உதைத்து அனுப்பி வைத்தார்கள். பொம்பளை தனியாக இருக்கும் வீடாக பார்த்து, ராத்திரி கதவைத் தட்டி உள்ளே புகுந்து பார்க்கிறார்கள். சோதனை போடுகிறார்களாம். யார் கேட்பது?


சாமுண்டியைப் பிடிக்க தனிப் போலீஸ் படை அமைத்திருந்தார்கள். அவனைப் பிடித்து தந்தாலோ, தகவல் தந்தாலோ பரிசு என்று அறிவித்தார்கள்.தெருவெங்கும் நோட்டீஸில் சாமுண்டி படம். சாமுண்டி குடியிருந்த வீடு பாழடைந்து கிடந்தது. அதற்கு இப்போது வரலாற்று சுவாரஸ்யம் வந்திருந்தது.


குடியென்ன, கூத்திவீடென்ன என்று நிதானம் கெட்டு தெரிந்து கொண்டிருந்த பயல் சவரிமுத்து. இப்போது கட்சிக் கரைவேட்டி தான். கழுத்தில் சங்கிலி தான். கூட நாலு பயல்கள். சண்டியர் நடையும் சவடால் பேச்சுமாக, ஊரில் இவர்கள் லூட்டி தாள முடியவில்லை. தண்ணீர் குழாய் பக்கம் நின்று கொள்வார்கள். கூட்டத்தை ஒழுங்கு செய்கிறார்களாம். அதற்கு வீட்டுக்கு வீடு இவ்வளவு என்று காசு வசூல். தெருவில் குமரிப் பிள்ளைகள் நடக்க முடியவில்லை. கைதட்டுவது, விசில் அடிப்பது, திரும்பி பார்த்தால் வேறெங்கோ பார்ப்பது போல் நிற்பது.. அட... போலீஸ்காரர்களையும் வளைத்துப் போட்டார்களே, அதைச் சொல்லுங்கள். ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிள்ளை போல ஒன்றாக திரிவதும் சாராயக் கடையில் ஒன்றாக சாராயம் ஊற்றிக் கொண்டு குலாவிக் கும்மாளம் அடிப்பதும்...

சந்தை பக்கம் காலையில் வருவார்கள். ஒவ்வொரு கடை முன்னாலும் இவர்கள் போய் நின்றதும் மாமுல் வெட்டியாக வேண்டும். தராவிட்டால் மிரட்டுவது, ஆள் வைத்து அடிப்பது... கொஞ்சநஞ்ச அக்கிரமமா செய்து இருக்கிறார்கள்? இதைக் கேட்க ஊருக்குள்ளே ஒரு நாதி இல்லாமல் போய்விட்டதே...ஒருநாள் சவரிமுத்து சந்தை வாசலில் செத்து கிடந்தான். தூய வெள்ளை வேட்டி சட்டையில் சகதியும் ரத்தமும் சிதறிக்கிடந்தன. வயிற்றில் ஆழமாக கத்தி குத்து. பழம் நறுக்கும் கத்தி.போலீசுக்கு ஆத்திரமான ஆத்திரம். கை தட்சிணை போச்சே... சந்தை வியாபாரி ஒருத்தனை விடவில்லை. நினைத்தவனையெல்லாம் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அடி பின்னி எடுத்து விட்டார்கள். துருவித்துருவி கேட்டுப் பார்த்தார்கள். வியாபாரி அத்தனை பேரையும் சவரிமுத்து பகைத்துக் கொண்டிருக்கிறான். யார் வேண்டுமானாலும் அவனைக் கொன்றிருக்கலாம் இல்லையா?
கன்னியம்மா மேல் ஏட்டு சாமியப்பனுக்கு ரொம்ப நாளாகவே ஒரு கண். அவள் படியாத ஆத்திரம். கெஞ்சி பார்த்தாகி விட்டது. மிரட்டி அரட்டி பார்த்தாகிவிட்டது. எதற்கும் மசிவது போல் இல்லை. சிறுக்கி மவளே... என்று காய்கறி கூடையை ஒரே உதை..உன் கடை பக்கம் தான் கொலை நடந்திருக்கு. கொலையாளியை நல்லா தெரியும்... மரியாதையா உண்மையை சொல்றியா... இல்லை உன்னையும் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி விசாரிக்கலாம் மொறைல விசாரிக்கட்டுமா என்கிறார். என்ன ஆவேசம்! ஏட்டையா என்னைய விட்டுருங்க... அன்னைக்கு எனக்கு வவுத்து நோவு. நான் கடையே தொறக்கல' என்கிறாள் கன்னியம்மா. என்னாடி வவுத்து நோவு உனக்கு? வூட்டு விலக்காயிட்டியா நீயி? என்று ஏட்டையா சிரிக்கிறார்.அது சாமுண்டியின் கத்தி.சாமுண்டி ரொம்ப அமைதியான மனுஷன். யார் வம்புக்கும் போகமாட்டான். கொடைக்கானல் ஊட்டியிலிருந்தெல்லாம் அவனுக்கு ஆரஞ்சும் ஆப்பிளும் வரும். பெட்டியை உடைத்து பழங்களை துண்டால் துடைத்து வண்டியில் அடுக்கும் அழகே அழகு. யார் எது கேட்டாலும் ஒரு சிரிப்பு. அவனிடம் வியாபாரம் பண்ணினாலும் பழத்தை திரும்ப வைத்து விட்டு போனாலும் அதே சிரிப்பு தான். அந்த சிரிப்புக்கே அவனுக்கு வியாபாரம் நடக்கும்.சாமுண்டி இப்போது ஊரில் இல்லை. சவரிமுத்துவை தீர்த்துக் கட்டியது அவன்தான். மாமூல் கேட்ட தகராறு முத்தியிருக்கிறது. சாமுண்டி ஆத்திரத்தில் சவரிமுத்துவை...பிடிடா அவனை என்று பரபரப்பானது போலீஸ்.அவன் வீட்டை பூட்டுடைத்து சூறையாடியது .பக்கத்து வீட்டுக்காரனுக்கு அடி உதை. அவன் என்னைக்காவது திரும்பி வந்தால் தகவல் சொல்லணும்... சொல்லாட்டி மவனே உன் கதி.. அவ்வளவுதான்' உச்சி முடியை பிடித்தபடி ஒரே அறை. உறிமிக் கொண்டு கிளம்பியது போலீஸ்.சவரிமுத்துவுடன் சதா சர்வகாலமும் திரியும் அந்த நான்கைந்து பேரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. கொஞ்சநாள் பரபரப்பு அடங்கியதும் சந்தையில் திரும்பவும் அமைதி. வியாபாரிகள் நிம்மதியாக வேலையை பார்த்தார்கள். எல்லாருக்கும் சாமுண்டி மேல் ஒரு கவலையும் வருத்தமும் இருந்தது. இன்னைக்கு நாம சந்தையில எந்த தொந்தரவும் இல்லாம யாவாரம் பாக்குறோம்னா அது அவனால் தான் இல்லையா?ஏட்டு சாமியப்பனுக்கு ஒரு துப்பும் அகப்படமாட்டேன் என்கிறது. விசாரிக்க கன்னியம்மா வீட்டுக்கு போய் வர ஆரம்பித்தார். ஒரே மிரட்டல் தான்.' உனக்கு தெரியாமல் இருக்கவே இருக்காது எங்க அவன் ஒளிஞ்சிட்டு இருக்கான் சொல்லு ,சொல்லு'ன்னு நெருக்கறாரு.எல்லாம் ஒரு பாவ்லா... அவர் எதுக்கு வர்றாருனானு அவளுக்குத் தெரியாதா என்ன?சண்டை பக்கமும் போலீஸ் நடமாடி நடமாடி அவர்களும் ஓசி காய்கறி, மாமூல் என்று ஆரம்பித்து விட்டார்கள். முன்னமாவது சாமுண்டி இருந்தான். ஒரு பயம் இருந்தது. இப்ப அவன் வரமாட்டான் என்று ஆகிவிட்டதே.. அதிலும் ஏட்டையாவோட விஷயம் தெரிந்த ஒரு புள்ளி அவன் கன்னியம்மா கிட்டே வந்து மாமூல் என்று நின்றான் பார்... காய்கறி மூட்டைகள்லேர்ந்து படுத்துக் கிடந்த சாமுண்டி திடுதிப்புனு எழுந்திருச்சாம் பார்... எடுத்தான் ஓட்டம்.போனவன் பத்திருபது பேருடன் திரும்பி வந்தான். அத்தனைபேர் கையிலும் ஆயுதம்.எங்கடி அவன், எங்கடி அவன் என்று ஆளாளுக்கு எகுறுகிறார்கள். ஏட்டையா அவளை ஒன்னும் பண்ணிடாதீங்க'ன்னு சொல்லி விட்டிருப்பார் போல.. யாரும் வரம்பு மீறவில்லை. ஐய சாமுண்டி இங்க ஏஞ்சாமி வரான்? ஐயா பயந்திருக்காரு... அதான் கண்டதெல்லாம் தெரியுது.. போய் மந்திரிச்சு அனுப்புங்க என்றார்கள் ஜனங்கள்.அதன் பிறகு அந்தப் பீசி சந்தை பக்கம் வருவதே இல்லை.இந்த நாட்களில் சாமுண்டிக்கு காடு பழகியிருந்தது. யாரும் ஆழம் காணமுடியாத காடு அது. உள்ளே போக போக திக்குதிசை குழப்பிவிட்டுவிடும். இந்த காட்டை அவன் எப்படி புரிஞ்சிட்டான்னு எல்லாருக்கும் ஆச்சரியம். இன்னும் சிலருக்கு உள்ளே இருந்த அவனுக்கு அரிசி பருப்பு போகிறது என்கிறார்கள். எல்லாம் பரம ரகசியமாக நடந்தது.


பண்ணையார் மகன் முருகேசனுக்கும் சம்சாரி கோமதிக்கும் இடையே கசமுசா ஆகி, ஊருக்கே தெரிந்து போய்விட்டது. நயமாகவும் பயந்து பயந்தும் கோமதியோட ஐயா நாலு பேரைக் கூட்டிக் கொண்டு போய் பண்ணையாரிடம் கேட்டுப் பார்த்தார்கள். முருகேசனோ வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கிறான். யாரு கோமதி? என்கிறான். அவ முழுகாம இருக்கான்னா அதுக்கு நான் என்ன செய்யட்டும் என்கிறான்.'ஏய்யா ஊர்ல எத்தினி பேரு இது மாதிரி கிளம்பியிருக்கீங்க..' ஒரே அலட்டல்தான். பேச வந்தவர்களுக்கு வாயடைத்துப் போய் விட்டது. கோமதியோ ஒன்றும் பேச முடியாமல் தவிக்கிறாள். ஒரே அழுகை. பெண் பிள்ளைகளுக்கு ஆசை அதிகம் தான். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டாமா?இந்த மூதேவிக்கு எங்கே போச்சு அறிவு? ஆண்பிள்ளைகள் காரியத்தை சாதிக்க நாலு வார்த்தை ஆசை வார்த்தை பேசுவது உண்டு தான். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.ரொம்ப கேவலமாக ஆகிவிட்டது அவளுக்கு. வெளியே நடமாட முடியவில்லை. வழக்கமாக காலையில் சோறாக்கி விட்டு காட்டுக்குள் போய் காய்ந்த சுள்ளி பொறுக்கிக் கொண்டு வருவாள். அன்றும் போகிறாள். நடக்க முடியவில்லை. அழுகை அழுகையாக வருகிறது. என்ன செய்வது என்கிற திகைப்பு. வழக்கமாகக் கூட வருகிற சினேகிதிகள் வரவில்லை. ஏதோ ஒரு வீம்பில் தனியாக வந்தவளுக்கு துக்கம் அடக்க முடியவில்லை.அந்த பயல் முருகேசன் ஒருநாள் கோமதி வீட்டுக்கு வந்து முறைப்படி பெண் கேட்டான். எல்லாருக்கும் ஆச்சர்யம்.. எப்படிடி இது சாத்தியம் என்று. பஞ்சாயத்தே அவர்கள் பஞ்சாயத்து. இதில் ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று பார்த்தால்... நினைத்துப் பார்க்காததெல்லாம் நடக்கிறதே!கோமதி காட்டுக்குள் ஒரு மரத்தில் தூக்கில் தொங்க போனாள் என்றும், அப்போது சாமுண்டி அவளை காப்பாற்றி, அவளுடைய குறையை கேட்டதாகவும் பேசிக்கொண்டார்கள். அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பி உதவுவானா? சாமுண்டி முருகேசனை தனியே பார்த்து மிரட்டி, இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்ள வைத்து விட்டதாக ஊருக்குள் வதந்தி.சாமுண்டி ஊருக்கே காவல் தெய்வமாகிப் போனான்.அதற்கப்புறம் உண்மையோ பொய்யோ பிரச்சனை என்றால் ஊரில் சாமுண்டி தலையிட வேண்டும் என்று பரவலாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். என்ன ஆச்சரியம்... அவன் பெயரைச் சொன்னாலே காரியம் நியாயப்படி நடந்து முடிந்தது. இதில் யார் அவனை காட்டிக் கொடுப்பார்கள்.வருஷம் மூணு ஆகிவிட்டது. சாமுண்டியை கண்டுபிடிக்க முடியவில்லை.இவனை விட கூடாது என்று இன்னொரு தடவை போலீஸ் காட்டுக்குள் புகுந்தது. இந்த முறை சாமுண்டியை பிடிக்காமல் திரும்ப மாட்டேன் என்று இன்ஸ்பெக்டர் சபதம் எடுத்தார். அட, அவனுக்கு பூஜை என் கையால் தான் என்று கிளம்பினார் ஏட்டையா.அவன் எப்போது ஊருக்குள் வருகிறான் எப்போது போகிறான்... ஒரு இழவும் தெரியமாட்டேனென்கிறது.. ஜனங்கள் கமுக்கமாக இருந்து கொள்கிறார்கள். நாயை அடிப்பது மாதிரி அடி நிமிர்த்தியாகிவிட்டது. வரவர நமக்கு எவன் பயப்படுகிறான்...? ஏட்டையா வீரத்த எல்லாம் நம்ம கிட்ட தான் காட்டுவுரு... சாமுண்டி கிட்ட நடக்குமா? அவனைப் பார்த்தாலே நடுங்கி செத்துடுவாரு - கன்னியம்மா அன்னிக்கு நாலு பேர் கிட்ட சொல்லி சிரிக்கிறாள். 'சிரிக்கிறியாடி சிரிக்கி' அவருக்கு கோபமான கோபம். இருந்தாலும் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை.அந்த வேட்டையின்போது பிடிபடாத சாமுண்டி, கரும்புத் தோட்டத்தில் மாட்டிக்கொண்டான். எப்படித்தான் தகவல் கிடைத்ததோ.. போலீசார் சுற்றி வளைத்து விட்டது. கோமதி குழந்தைக்கு ஆண்டு நிறைவு.. எப்படியும் அவன் வருவான் என்று எதிர்பார்த்தார்கள். அவனும் கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருந்துவிட்டு ஊரடங்க வெளியே வரலாம் என்று இருந்திருக்கிறான். மாட்டிக்கொண்டான்.நாலுபக்கமும் போலீஸ் சுற்றி வளைத்து விட்டது. அங்கே இங்கே அசைய முடியவில்லை. கிடுக்கிப்பிடி..ஏல மரியாதையா கையை தூக்கிட்டு நில்லு. தாக்க நினைச்சாலும் தப்பிக்க நினைச்சாலும் பொணமாயிருவே - ஏட்டு சாமியப்பன் கத்திய கத்தல் ஊருக்குள் கேட்டது. இந்த கட்டத்துக்காக அவர் எத்தனை வருஷம் காத்திட்டிருந்தாரு, இல்லியா? கையில் துப்பாக்கியோடு கிட்டே வந்து அவனை மடக்கி கையில் விலங்கு மாட்டி விட்டு, ஒரு சிரிப்பு சிரித்தார். வெறி சிரிப்பு! சாமுண்டியே மாட்டிகிட்டான்.. இனி ஊர்ல எவன் எனக்கு பயப்படாம நடக்குறான் பாக்குறேன். போடா மாப்ளே என்று சாமுண்டி பிடரியில் விட்டார் ஒரு அறை...குப்புற விழுந்தான் சாமுண்டி. டேய் நாயே விலங்க அவுத்துட்டு அடிடா பாப்பம்'னு எதிர் குரல் கொடுத்தான் அவன். அவன் பேசும் முன்னால் தாடையில் அடுத்த அடி. ரத்தம் கசிந்தது. சாமுண்டியைச் சங்கிலியில் கட்டி தெருத்தெருவாக இழுத்துக்கொண்டு வந்தார்கள்.ஊரே கூடி வேடிக்கை பார்க்கிறது. பஜார், கோயிலடி, தேர்முட்டி, சந்தை எல்லா பக்கமும் ஜனங்கள். திறந்த வாய் மூடவில்லை. எல்லாருக்கும் அவன் மாட்டிக் கொண்டதில் வருத்தம் தான். அவ்வப்போது, வேகமாக போடா நாயேன்னு அடி உதை. முதுகில் எத்து. ஏட்டுக்கு இருந்த வெறியில் என்ன செய்கிறோம் என்றே புரியவில்லை.ஊரே அன்றைக்குத் துக்கமாக இருந்தது. அதிலும் கன்னியம்மாவுக்கும் கோமதிக்கும் ஏற்பட்ட வருத்தம் இன்ன அளவு என்றில்லை.மறுநாள் பேப்பர் பார்த்ததும் ஊருக்கே தெளிவு வந்தது. ஆ.. அவன் கில்லாடிய்யா... நான் சொல்லல... என்று உற்சாகம் கரைபுரள ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்.விசாரணை என்று ஜீப்பில் அழைத்துப் போனபோது சாமுண்டி தப்பித்து விட்டானாம். ஜீப்பின் பெட்ரோல் டாங்கில் யாரோ சர்க்கரையை கொட்டி விட்டார்கள். பாதி வழியில் ஜீப் நின்றுபோனது. அப்படி இப்படி ஊரில் கதை. ஜனங்கள் உதவி செய்யாமல் அவன் தப்பிக்க முடியுமா என்ன?அதான் ஏட்டுக்கு ஆத்திரம்.. இத்தனை வருஷமா போக்கு காட்டிட்டு இருந்த பைய.. வசமா மாட்டிட்டான்னு பாத்தா நழுவி விட்டான். பிளாக் மார்க் அவருக்கு. இந்த முறை விடக்கூடாது எங்கே போய் விடுவான் அவன். அதையும் பார்த்துவிடலாம். காட்டுக்குள் இந்த முறை ஐம்பது பேர்.அந்தக் கதையை கன்னியம்மா சொல்லிச் சொல்லி சிரிப்பாள். எத்தனை தடவை சொன்னாலும் அவளுக்கு கதைசொல்லி அலுக்கவில்லை. சாமுண்டியை பிடிப்பது என்றால் என்ன இவர் உடும்பு வேட்டை என்று நினைத்தாரா?உலகத்திலேயே உடும்பை பிடிப்பதுதான் சுலபம் என்று சொல்வார்கள். மண்ணுக்குள் இருந்து பறித்து உள்ளே பதுங்கியிருக்கும் உடும்பு. உள்ளே உடும்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், ஒரு நீள குச்சியை ஒடித்து பொந்துக்குள் விடுவார்கள் உடும்பு லபக் என்று அதை கவ்விக் கொள்ளும். அப்புறம் என்ன குச்சியை வெளியே எடுக்க வேண்டியதுதான்.சாமுண்டியைத் தேடிப் போனவர் வழி தவறி விட்டார் காட்டுக்குள். கூட வந்த ஆட்கள் பிரிந்து திரும்பிப் போய்விட்டார்கள். ஏட்டையா தனியாக காட்டுக்குள்ளே. கையில் துப்பாக்கி இருக்கட்டும்... அதற்கென்ன..? அதை வைத்து என்ன செய்வது..?தனியாக தேடித் தடுமாறி வருகிறார் ஏட்டையா. திடீரென அவர் முன்னால் குதித்தான் சாமுண்டி. அடடே , ஏட்டையாவுங்களா? என்ன இவ்ள தூரம்?னு குசலம் விசாரித்துக் கொண்டு நிற்கிறான். ஒரே உதையில் துப்பாக்கி தூரப் போய் விழுந்து விட்டது. ஏட்டையா நிமிர்ந்து பார்க்கிறார். வானத்துக்கும் பூமிக்குமாக சாமுண்டி நிற்பது போல் தெரிகிறது. அவன் யார்? சூரனாச்சே... பேடிகள் அவன் முன்னால் நிற்க முடியுமா? கையில் ஆயுதம் ஒன்னும் கிடையாது. உன்னை கொல்ல ஆயுதம் ஒரு கேடா என்று நிற்கிறான். கையை ஓங்கிக் கொண்டு அவன் நிற்பது அய்யனார் சிலை போல இருக்கிறது.ஏட்டையாவுக்கு கைகாலெல்லாம் வெடவெடங்குது. பயம். நிக்க முடியல்ல. ஐயா தெய்வமே, என்னிய விட்டுரு..நான் உன் வழிக்கு வரமாட்டேன்னு கதர்றாரு. கெஞ்சுறாரு.. தலைமேல கையெடுத்து கும்பிட்டு நிக்காரு. ஒரே அழுகை. நான் புள்ள குட்டிக்காரன்... ஏய்யா சாமி... நீதா மனசு வெச்சு, உயிர்பிச்சை கொடுக்கணும்'ங்காரு. அப்படியே தடால்னு அவன் கால்ல விழுந்தாரு.சாமுண்டிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. 'அடச்சீ, எந்திரிய்யா இவ்வளவுதானா உன் வீரம்....''மாட்டேன் நீ மன்னிச்சேன்னு சொன்னாதான் எந்திரிப்பேன்...சாமுண்டி சிரித்தபடி அவரை தூக்கி நிறுத்தினான். போயி அம்மாகிட்ட பால் குடியும் என்று அனுப்பி வைத்தான்.அங்கே எடுத்த ஓட்டம்தான்... எப்படி தப்பித்தாரோ எப்படி வழி கண்டு பிடித்தாரோ... இல்லை சாமுண்டிதான் எல்லை வரை கொண்டு வந்து விட்டானோ?கன்னியம்மாவைத் தேடித்தான் ஊருக்குள் வருவதாக ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு