Published:Updated:

"உனக்குத் தெரியுமா?" சிவசங்கரி சிறுகதை

5.01.1969 - 70 – 'உனக்குத் தெரியுமா?' – சிவசங்கரி விகடனில் எழுதிய முதல் சிறுகதை.

என்னைச் சுற்றிலும் 'ஓ' வென்று இருள் - காரிருள் - சூழ்ந்து இருப்பது எனக்கு நன்றாக புரிகிறது. நன்கு பழக்கப்பட்ட இடமாதலால் இந்த சூழ்நிலையிலும் உன்னை நேராக என்னால் பார்க்கமுடிகிறது.

ஓ! நீதான் எவ்வளவு அழகாக இருக்கிறாய்? உன் கூர்மையான பரந்த கண்களை நேருக்கு நேர் காணும்பொழுது - அம்மா! இதென்ன இவ்வளவு ஆனந்தமான உணர்ச்சி! சக்தீ! ஒரு வேடிக்கை கவனித்தாயா? முன்பெல்லாம் உன்னை - உன் கணவனை சந்திக்கவே பயப்பட்டவன், இன்று உன் கண்களையே உற்று நோக்கிக்கொண்டு, அதை ஆனந்தம் என்கிறானே - இதை கவனித்தாயா?


இன்று மதியம் வந்து இங்கு உட்கார்ந்தவன் தான்; இன்னும் இந்த இடத்தை விட்டு எழவில்லை. இந்த இருட்டில் அமைதியான சூழ்நிலையில் கடிகாரம் போடும் சப்தமும் எங்கோ ஒரு சுவர்க்கோழி கத்துவதும் தான் எனக்கு கேட்கிறது. பக்கத்து வீட்டுக்காரன், எதிர் வீட்டுக்காரன், அவனுக்கும் அடுத்த வீட்டுக்காரன், இந்த ஊரில், நாட்டில் உள்ள அனைவருமே ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பார்கள். தினமும் ஐயோ அனைவரும் அவரவர் துணைகளுடன் சேர்ந்து உறங்குகிறார்களே, நான் மட்டும் இப்படி தன்னந்தனியாக இருக்கிறேனே, எனக்கு ஒருவருமே இல்லையே! என்று பாடும் பல்லவியை இன்று மட்டும் ஏன் என் மனம் பாடவில்லை? தனிமையில் இனிமை காண்கிறேனே, இது ஏன் தெரியுமா? எனக்கு ஞானம் பிறந்து விட்டதடி, சக்தீ! புத்தி தெளிந்துவிட்டது. புத்தனுக்குப் போதி மரத்தின் கீழ் ஞானம் பிறந்தது என்பார்கள்; எனக்கு?

எனக்கு இன்று குதிரைப் பந்தய மைதானத்தில் ஞானம் பிறந்தது. அதுவும் எப்படி? லட்சோப லட்சம் மின்னல்கள் ஒரே சமயத்தில் மின்னினால், எப்படிப்பட்ட அதிர்ச்சி உண்டாகும்? அப்படி ரூபாய் ஐந்நூறை, நான்காவது ரேசில் கட்டிவிட்டு நின்றுகொண்டிருந்த என் காதுக்குள் அசரீரிபோல இடி ஒன்று முழங்கியது. யாருக்காக டா இப்படி கெட்டு அலைகிறாய் - இதுவரையில் எத்தனையோ செய்தாயே அவற்றால் என்ன சுகம் கண்டாய்? வாழ்க்கையில் முக்கியமானவற்றையெல்லாம் விட்டுவிட்டு இங்கு ஏதோ கோட்டையை பிடிக்க போகிறவன் போல் வந்து நிற்கிறாயே; மதி கெட்டவனே! திருந்து! என்று அந்த இடி முழங்கி என்னை உலுக்கியது.

யாரது? என்று திரும்பித் திரும்பிப் பார்த்தால் ஒருவரும் இல்லை. மேலே ஆகாயம் நிர்மலமாக இருந்தது. சுற்றிலும் புல்வெளியோ பச்சை பசேலென்று இருந்தது. ஆனால், இதனூடே, பலிபீடத்திற்கு போகும் ஆட்டு மந்தையைப் போல ஜனங்கள் தலைகால் புரியாமல் ஆளுக்கு ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, வாழ்க்கையில் ஒரு குறிக்கோளும் இல்லாதவர்களாக கூச்சல் போட்டுக்கொண்டு, அந்த இடத்தையே இரண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்.

இதைப் பார்த்தேன் - குபீரென்று என்னுள் ஒரு வேகம் - சக்தீ! நீ புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன். ஏதோ அந்த கூட்டம் அனைத்தையும் அடித்து துரத்த வேண்டும் போல் ஆவேசம்; அதுவரை நானும் அவர்களில் ஒருவனாக இருந்து இருக்கிறேன் என்ற நினைப்பே குமட்டியது. அந்த நிர்மலமான ஆகாயத்தில் பறந்து, மேலே மேலே சென்று அப்படியே காற்றோடு காற்றாக ஐக்கியமாகி விட வேண்டும் போலவும் தோன்றியது அப்படியே புயலென வெளியில் வந்தேன். என் கூட வந்த சில 'பெரிய மனிதர்கள்' எங்கே எங்கே சார் போகிறார்கள்? என்பதையும் லட்சியம் செய்யாமல் வண்டியில் அமர்ந்து அதை ஓட்டினேன். எங்கு போகப் போகிறோம் என்று கூட தோன்றவில்லை. ஏதோ ஒன்று என்னை காந்தம் போல இழுப்பதை உணர்ந்தேன். வண்டி தானாகத் தான் ஓடியது போலும். கடைசியில் எங்கு வந்து இருக்கிறோம் என்று பார்த்தால், இங்கு, உன் எதிரில் வந்து நிற்கிறேன்.,

சக்தீ உன்னையே பார்த்துக் கொண்டு மெய்மறந்து உட்கார்ந்திருக்கிறேனே - அப்படி உன்னிடம் என்ன இருக்கிறது! நீ என்னுள் புகுந்து விட்டாய். ஆழமாக ஊன்றி கொண்டு விட்டாய். இனி இந்த 'பக்தி' மேலும் மேலும் ஆல விருட்சமாக வளரத்தான் செய்யுமே தவிர குறையாது. என்னை மாற்றிவிட்டாய் அம்மா!

உனக்கு நினைவிருக்கிறதா - உன்னை முதன் முதலில் எப்பொழுது பார்த்தேன் என்று? ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்னால், ஒரு நாள் வழக்கம் போல் என் வெளிநாட்டு நண்பர்கள் சிலருடன் கடலில் குளித்துவிட்டு அடையாறு வழியாகத் திரும்பி வரும்போது ஒருவன் வழியில் உள்ள சித்திர கூட்டத்தை பார்க்க வேண்டும் என்று சொன்னான் சரி என்று அனைவரும் இறங்கி உள்ளே சென்றோம்.

முன் அறையில் உள்ள சித்திர சிற்பங்களை எல்லாம் பார்த்து அனுபவித்து கொண்டே வந்தவன், சட்டென்று உன்னை கண்டேன். உன் சிவந்த முகமும், சிறுத்த உதடுகளும், அகன்ற கண்களும்; 'ஓ' இதுதான் தெய்வீக அழகா? உன் கண்களிலிருந்து காருண்யம் பெருகியதா, அல்லது கோபம் பெருகியதா? என்று சொல்ல முடியாதபடி ஒரு பாவம். இந்தப் பக்கம் நின்று பார்த்தால் நீ அழகாக சிரிப்பது போல் தோன்றினாய்; அந்தப் பக்கம் போய் பார்த்தாலோ கோபம் தெறித்து என்னை எரித்து விடுவது போலத் தோன்றியது. 'இது என்ன அருமை, என்ன வேடிக்கை' என்று எண்ணிக் கொண்டே உன் அருகில் வந்து உன்னை மெதுவாக தீண்டினேன். ஆஹா பாரதி பாடினானே தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் கிடைக்கு தையே, நந்தலாலா, என்று. அது இந்த உணர்ச்சிதான் என்றது என் மனம்.

'என்னை உன் உடைமையாக்கிக் கொண்டுவிடு' என்று நீ என்னிடம் சொல்வது போல ஒரு பிரம்மை. அதே சமயத்தில் இவளை உன் அருகில் வைத்துக் கொள்ளாதே! உன் உல்லாச வாழ்க்கையை நீ இழப்பது நிச்சயம் என்று என்னுள் ஏதோ ஒன்று சொல்லிற்று. ஆனாலும் உன்னை வாங்கி - ஆமாம், விலை கொடுத்து வாங்கும் ஒரு சித்திரம் தானே நீ! - என் வீட்டின் வரவேற்பு அறையில் சுவரில் மாட்டி னேன். அதன் பிறகு வீட்டிற்கு வருபவர்கள் எல்லாம் என்ன சார் இது! துர்க்கையின் உருவத்தை இவ்வளவு பெரிதாக வரைந்து அதில் மாட்டி வைத்து இருக்கிறீர்களே! உங்களுக்கு அதைப் பார்த்தால் பயங்கரமாக, பயமாக இல்லை? என்று கேட்டபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. உன்னை நான் சித்திரமாக ஒரு அழகிய வரைபடமாக தான் அங்கு வைத்து இருந்தேனே தவிர கடவுளாகவோ, துர்க்கையாகவோ துளியும் நினைக்கவில்லையே! அப்படியிருக்கையில் உன்னை கண்டு நான் ஏன் பயப்பட வேண்டும்?

சக்தீ! நான் எப்படிப்பட்டவன் தெரியுமா? என்னை உனக்கு இந்த ஆறு மாதமாக தான் தெரியும். ஆனால், அதற்கு முந்திய - நீ இந்த வீட்டுக்கு வருவதற்கு முந்திய பழங்கதை உனக்குத் தெரியுமா? சிறுவயதிலேயே அறிவும் ஆற்றலும் நிறைந்தவன் என்று எல்லோராலும் புகழப்பட்டவன் ஏழ்மையிலேயே அடிபட்டதால், வாழ்க்கையில் உயர வேண்டும் என்னும் வேகம் என்னுள் பேயாட்டம் போட்டு பறந்ததுண்டு.இரவல் புத்தகங்கள் வாங்கிப் படித்தேன்.

பணத்தில்தான் பிறகுச் சமானமாக இல்லை. அறிவிலாவது அவர்களை எல்லாம் மிஞ்ச வேண்டும் என்ற ஆவலில் நான் கரைத்து குடித்த மஹா காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் தான் எத்தனை எத்தனை. அந்த வயதில் நான் எத்தனை பாஷைகள் அறிந்து வைத்திருந்தேன்!

என் இளம் பிராயத்தில் உன்னிடமும், மற்ற கடவுள்களிடத்திலும் நிரம்ப பக்தி வைத்திருந்தவன் தானே அம்மா, நான். அப்பொழுதெல்லாம் வெள்ளை மனசோடு, எத்தனை ஸ்லோகங்களைப் பாராயணம், வியாக்கியானம் செய்வேன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்கு அப்போது 23 அல்லது 24 வயது இருக்கும். ராதாவை நான் முதன் முதலில் அப்போதுதான் சந்தித்தேன். ஓ! எத்தனை இன்பமான நாட்கள் அவை. எங்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆன உடன் எனக்கு நிகரில்லை - என்று இறுமாந்து இருந்தேன். ஆனால், திருமணத்திற்கு 10 நாட்கள் முன்பு ஒரு கார் விபத்து மூலம் அவளை என்னிடமிருந்து பறித்துக் கொண்டாய். நான் மட்டுமல்ல, இந்த ஊரே அல்லவா அவளுக்காக அழுதது.

அதன் பிறகு கூட நான் கேட்டு அழியவில்லையே, சக்தீ! உலகத்தையே வெறுத்து வாழ்ந்து கொண்டிருந்தேன்.

மறுபடியும் ஆறு வருடங்கள் கழித்து நீ என்னுடன் மீண்டும் விளையாட எண்ணினாய் போலும்! அதனால் தான் என்னை சாந்தியை காண வைத்தாய். அவள் தூய அன்பு மீண்டும் என் நெஞ்சில் பாசத்தை துளிர்க்க வைத்தது.அவள் காதல் தான் எத்தனை தெய்வீகமானதம்மா!அவளை மணந்து கொண்டு நான் வாழ்ந்த நான்கு வருடங்களையும் நிச்சயமாக சொர்க்க வாழ்க்கைக்கு ஒப்பிடலாம். எங்கள் அன்பின் பரிசாக தாரா உதித்தாள். ஆனால், அதிலிருந்தே சாந்தியின் உடல் பலவீனமடைய ஆரம்பித்துவிட்டது. தாராவிற்கு நாலரை வயதாவதற்குள் சாந்தியையும் நீ அழைத்துக்கொண்டாய். எனக்கு பைத்தியமே பிடித்து விட்டது. ஒரு மாதம் வரை அழுது திரிந்தவனுக்கு விரக்தி வர ஆரம்பித்தது. என்ன நேர்மை என்ன நாணயம் இதுதான் அவற்றிக்கு கடவுள் வழங்கும் பரிசா? என்ற ஆவேச குரல் என்னுள் 'ஓ' வென்று அலறி கொண்டு எழுந்தது. நல்லதையே செய்து வாழ்ந்தது போதும். இனி வேறு வழியாக நடக்கத் தீர்மானித்தேன். அதன் பிறகுதான் ஒரே பேயாட்டம்.

அந்த சின்னஞ்சிறு குழந்தை தாராவை வெறுத்து ஒதுக்கினேனே அது உனக்குத் தெரியுமா?

அந்த 'பிஞ்சு' என்ன செய்தது, என் வெறுப்பை தேடிக்கொள்ள? 'அப்பா, அப்பா' என்று இரு கரங்களையும் நீட்டி கொண்டு ஓடி வருமே - அதுதான் அது செய்த குற்றம் - அதற்கு ஒரு நாளாவது என் அன்பை காட்டி இருக்கிறேனா? ஊஹூம் - கிடையாது. இதெல்லாம் பழங்கதை. இதற்கு அப்புறம்தான் நீ என் வீட்டுக்கு வந்து விட்டாய் சக்தீ! நடப்பதை எல்லாம் நீயே கூட இருந்து பார்த்துக் கொண்டுதானே வருகிறாய்.

நீ என் வீட்டுக்கு குடி வந்த பிறகு கொஞ்சம், கொஞ்சமாக மாறுதல் ஏற்படத்தான் செய்தன அல்லவா? நன்றாக குடித்துவிட்டு வழியில் எவனுடனாவது சண்டை போட்டு கத்தியபடி வீட்டில் நுழைந்தால், நேராக நீ கண்களில் தெரிவாய். முதல் நாள் அப்படி வந்து உன்னை சந்தித்த போது, ஏதோ ஒரு பழுத்த இரும்புக் கம்பியை என் இதயத்தில் இழுத்தாற் போல இருந்தது, உன் பார்வை.

'அட சீ, சித்திரம் தானே' என்று ஒதுக்க முயன்றேன் - முடியவில்லை - அதற்கு பிறகு உன்னை பற்றி நான் அதிகம் நினைக்க ஆரம்பித்தேன். உன்னை நினைக்க கூடாது என்று எண்ண எண்ண, நீயே என்னுள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டாய். பகல் வேளையில் நான் சாதாரண மனிதனாக இருக்கும் போது உன் அருகில் வந்து நின்று பார்த்தால், நீ அழகாக சிரிப்பது போல தான் தோன்றும். ஆனால் இரவிலோ..? ஏன் அப்படி. எனக்கே புரியவில்லை.

ஒருநாள் ஒருத்தியை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தேனே அது உனக்கு ஞாபகமிருக்கிறதா? அவள் உள்ளே வந்து சுற்றுமுற்றும் பார்த்தவள் ஐயோ! இதென்ன பயங்கரம் முதலில் கழற்றி எறியுங்கள், என்று உன்னை பார்த்து சொன்னாளே, அது நினைவிருக்கிறதா? உடனே நான் என்ன செய்தேன்?

என்ன சொன்னாய்! பயங்கரமா, இவளா? வாயை மூடு, என்று கத்தினேன்.

இவள? 'இது' என்று சொல்லுங்கள், ஒன்றும் புரியவில்லையா, அல்லது இன்றைக்கு தண்ணி அதிகமா? என்று அவள் ஆங்கிலத்தில் என்னை கேலி செய்தவுடன், பளார் என்று அறைந்து வெளியில் தள்ளி, "இனி என் முகத்தில் விழிக்காதே" என்று சொல்லி போகச் சொன்னேனே; ஏன் இந்த ஆத்திரம் சக்தீ!

ஒரு அரைமணி கழித்து அந்த வேகம் அடங்கிய பிறகு உன்னை பார்த்ததும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அன்று 'இரவை'க் கெடுத்தவள் அல்லவா நீ! அன்று ஆரம்பித்ததுதான். பிறகு யாரிடம் போனாலும் உன் சிவந்த முகம் நடுவில் வருகிறாற்போல எனக்கு தோன்றும். கொஞ்சம் கொஞ்சமாக நான் உனக்கு அடிமை ஆகி கொண்டே இருந்தேன் என்பது எனக்கு புரிந்தது.

என்னுள் ஒரு பெரிய மாறுதல் போனமாதம் ஏற்பட்டதே, அது நன்றாக நினைவிருக்கிறது.

அன்று நான் 'அநுபமா' என்னும் சினிமா காணச் சென்றிருந்தேன். அந்தப்படம் தந்தையால் வெறுக்கப்படும் குழந்தையை மையமாகக் கொண்ட கதை. ஏனோ என் மனம் அக்குழந்தைக்கு பதில் என் தாராவையே அந்த இடத்தில் வைத்துப் பார்த்தது. என் தாய் தாராவை என்னதான் நன்றாக கவனித்தால் அந்த குழந்தைக்கு என் அன்பு, அரவணைப்பு இல்லையே? இத்தனை வருடங்களாக தோன்றாத நினைப்பு அன்று மட்டும் என் மனதில் தோன்றுவானேன். என் மனம் பலவீனமடைந்து வருகிறதா? அதற்கு காரணம் 'நீ' தான் என்று என் மனம் சொல்லியது.

படம் முடிந்து வீட்டுக்கு வந்து உன்னை பார்த்தேன் - உன் கண்களில் கோபம் இல்லை - ஆனாலும் ஒரு வேதனை வருத்தம் - இப்படி இருக்கிறாயே உனக்கு போய் ஒரு குழந்தையை கொடுத்து, அவள் வாழ்க்கையை கெடுத்து விட்டேனே என்று நீ வருத்தப் படுவது போல இருந்தது. நேராக தாராவின் அறைக்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம் பிஞ்சின் அழகிய முகத்தை பார்த்தேன். அவளிள் என் சாந்தியை, ராதாவை ஏன்? உன்னையே ஆமாம் சக்தீ! உன்னையே கண்டேன். தாராவை அள்ளி எடுத்து கொண்டு ஓ என்று வாய் விட்டு அழுதேன். அழ அழ மனசுமை கரைந்து குறைந்தாற்போல் தோன்றியது. தாராவை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வந்து விட்டேன். அன்றிலிருந்துதான் என்னுடனேயே இருந்தாள். அன்று தானே உன்னையும் என் அறைக்கு அழைத்து வந்தேன். என் படுக்கைக்கு நேராக உன்னை மாற்றினேன். சில இரவுகள் எங்காவது எழுந்து போக வேண்டும் போல தோன்றினாலும் உன்னையும் தாருவையும் மாறி மாறி பார்த்து என்னை அடக்கிக்கொண்டேன்.

இப்போதெல்லாம் உன்னை பார்த்துக் கொண்டே இருப்பதில் ஒரு அமைதியை கண்டேன். உன்னை நான் சித்திரமாக மட்டும் கண்டது போய், வேறு உருவங்களாகவும் காண ஆரம்பித்தேனே, அது உனக்குத் தெரியுமா? பாரதிக்குத் தான் பராசக்தி வெவ்வேறு ரூபங்களில் தெரி வாளா? எனக்கும்தான் நீ விதவிதமாக தெரிந்தாய்.

நேற்று இரவு நடுநிசி. கண்கள் உறங்கவில்லை - காலமெல்லாம் நான் இப்படியே தனியாக, சுமை தாங்கியாக இருக்க வேண்டியது தானா, என்ற பாட்டையே மனம் மீண்டும் மீண்டும் பாடியது. ஒருவித சலிப்பு, கோபத்துடன் நிமிர்ந்தவன் உன் கண்களை பார்த்தேன்.

"அம்மா! இதென்ன அந்த கண்களில் இருந்து நீயே ஒரு அழகிய பெண் உருவம் கொண்டு, பட்டாடை உடுத்தி தலையில் மல்லிகைபூ வைத்து கண்ணெல்லாம் மனமாக, உடலெல்லாம் காதலாக நடந்து வருவது போல ஒரு பிரம்மை. என் வாழ்விலும் இப்படி ஒரு தென்றல் வீச போகிறது என்பதை குறிக்க தான் நீ இப்படி உருவம் கொண்டாயா, சக்தீ! கலகலவென்று என் அருகில் வந்து சிரித்தாய் - பயப்படாதே, கண்ணா! இருள் உன் வாழ்விலிருந்து விலகிக் கொண்டிருக்கிறது. கட்டுண்டாய், பொறுத்திரு, பக்தி வெல்லும். இன்னும் கொஞ்ச நாள் தான், பிறகு என்னுடன் என் கோட்டைக்குள் வந்து விடு. அது அன்பு கோட்டை; இடிந்து விழாது; சந்தோசமாக, போலி வாழ்க்கை இல்லாமல், ஆனந்தமாக வாழலாம், வா என்று சொன்னாய்.

சக்தீ! அது கனவா, அல்லது நனவா? யாரிடமாவது சொன்னால் நிச்சயம் சிரிப்பார்கள், இல்லையா? திக் பிரமை பிடித்தவன் போல் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல நீ திரும்ப உன் கண்ணுக்குள்ளே சென்றுவிட்டாய்.

எனக்கு பைத்தியம் பிடிக்க போகிறது. சக்தி! உன் பைத்தியம் இல்லை என்றால் உன் மேல் காதல் கொள்வேனா? சித்திரத்தில் இருந்த பிரியம் இப்படி உன்னை ஒரு உருவமாக்கி, அதில் காதல் வேறு கொள்ளச் செய்கிறதே, இது ஏன்? என் வாழ்வு மீண்டும் மலர போகிறதா, சொல் சக்தி சொல் என்று நேற்று இரவு பூராவும் கதறிக் கொண்டு இருந்தேன். ஒன்றும் தெளிவாக இல்லை. எத்தனை நாளாக உருவாகி இருந்த குழப்பம். நேற்றுதான் உச்ச நிலையை அடைந்தது.

இன்று காலையில் இருந்து உடல், மனம் எல்லாமே மருத்து போய்விட்டாற் போல் இருந்தன. அப்பொழுதுதான் சில 'பெரிய மனிதர்கள்' என் வீட்டிற்கு வந்து இன்று குதிரை பந்தயத்திற்கு கண்டிப்பாக போக வேண்டும் என்றார்கள். போனது தான் எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது!

போலி சிரிப்பும், பேச்சும் ஆய் அங்கு உள்ள பெண்களைப் பற்றியோ, அல்லது அவர்கள் உடுத்தும் உடையைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக நானும் இருந்தேன். திடீரென்று ஏதோ ஒன்று மனதுக்குள் முறிந்து விழுந்ததைப் போல எனக்கு தோன்றியது. அதே நேரத்தில் கோடானு கோடி இடிகள் இடித்து, லட்சோப லட்சம் மின்னல்கள் மின்னின. உடம்பிலே மின்சாரம் பாய்ந்து தீயவை எல்லாம் கருகி, பழையதெல்லாம் அடியோடு அழிந்து விட்டாற் போன்ற உணர்ச்சி - நீ என்னுள் புகுந்து விட்டாய் என்பதை உணர்ந்தேன்.

இதை உணர இவ்வளவு காலமா, இத்தனை நாட்கள் தேவையா? என்று நீ கேட்கலாம் சக்தீ! நான் சாதாரண மனிதன் தானே, அம்மா!

'ஸவுந்தர்ய லஹரி' யிலிருந்து சிவன் சக்தியுடன் சேர்ந்தால்தான் 'சக்தன்' ஆகிறான். இல்லாவிட்டால் அவனால் துரும்பையும் அசைக்க முடியாது. என்னும் முதல் ஸ்லோகத்தை ஆயிரம் பேருக்காவது விலக்கி சொல்லியிருக்கும் நான், அதை எனக்கு நானே உணர இத்தனை நாட்கள் ஆகத்தான் ஆயிற்று.

இன்று உன்னுடன் சேர்ந்து விட்டேன். இனி நான் 'சக்தன்' ஆவேனா? சொல், சக்தீ! இது உனக்குத் தெரியுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு