Published:Updated:

"சிறை" - அணுராதா ரமணனின் சிறுகதை

ஆனந்த விகடன் பொக்கிஷம்
News
ஆனந்த விகடன் பொக்கிஷம்

ரூ 10,000 முதல் பரிசு பெற்ற அணுராதா ரமணனின் சிறுகதை

அன்று - கௌதம முனிவனின் குடிலில் பொழுது புலர்வதற்கு முன், ஏற்பட்ட விபத்து - இன்று பாகீரதிக்கு ஏற்பட்டுவிட்டது. நேரமும் காலமும் மனிதர்களும் தான் வேறு... வேறு... சம்பவம் ஒன்றுதான்.

அகலிகையைப் போல, தன் கணவனுக்கும் அந்நிய புருஷனுக்கும் வித்தியாசம் தெரியாத மனுஷி இல்லை பாகீரதி.

''கடங்கார... பாவி... நீ நாசமா போகப் போற...'' -- என்று அவள் மனதார சபிக்கிறாள்.

இனி மேல் சபித்துப் பிரயோசனமில்லை . சபிப்பதனால் பாகீரதியின் கற்பு திரும்பி வந்து விடவா போகிறது...? மனிதர்களை முழுசாய் விழுங்கி, எழுந்துநின்று ஏப்பம் விடுகிற ராட்சஸனைப் போல் அந்த அறையின் நிலைப்படி தலையில் இடிக்க நின்று கொண்டிருக்கிறான் அந்தோணி.

அவனுடைய ஆறுமாத வேட்கை இன்று தணிந்துவிட்டது.

ஆறு மாதங்களுக்கு முன் கண்கள் நிறைய கனவுகளும் நெஞ்சு கொள்ளாத ஆசைகளுமாய்- ரகுபதி குருக்களின் மனைவியாய் இந்த ஊரில் அடி எடுத்து வைத்த பாகிரதி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள். இப்பேர்பட்டதோர் இடியை!

அந்தோணிசாமி தீர்மானிக்கிற -- திட்டம் தீட்டுகிற-- எதுவும் இதுவரையில் நடக்காமல் போனதில்லை. அந்த சிறிய கிராமத்தில் மூன்று அடுக்கு மாடி வீடு அவனுடையது. விடிகாலைப் பொழுதில் கழுத்தில் சுண்டு விரல் பருமனுக்கு மைனர் செயினும் இடுப்பில் தோல் பெல்டுமாய் அவன் திண்ணையில் உட்கார்ந்து நாட்டுத் துப்பாக்கிக்கு மருந்து கிட்டிக்கும் போது தெருவில் ஆண்களே நடமாட பயப்படுவார்கள்.

பக்கத்தில் ஓடுகிற காவேரிக்கு -- அந்தத் தெரு பெண்கள் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவது போல நாலு தெருக்களை பிரதட்சிணம் பண்ணிக்கொண்டுதான் போவார்கள். அவ்வளவு கிலி!

அசட்டு பாகீரதி முதல் இரண்டு நாட்கள்- அந்தோணி மாத்திரம் திண்ணையில் உட்கார்ந்திருந்த நேரத்தில், குடத்தைத் தூக்கிக்கொண்டு நாலுதரம் காவிரிக்கு நடந்திருக்கிறாள்.

''டேய் மருது நம்ம தெருவில புதுசா ஒரு பொண்ணு காலுல மெட்டியும் கழுத்தில் புது மஞ்சக் கயிறுமா போவுதே... யாருடா...?''-- அந்தோணி வேலைக்காரனிடம் விசாரிக்கிறான். ''ரகுபதி அய்யாவோட சம்சாரமுங்க''.

அன்றே அவன் அவளைத் தனியாகச் சந்திக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறான்.

நடுப்பகலில் ரகுபதி உச்சிகால பூஜைக்குக் கோயிலுக்கு போயிருந்த நேரத்தில் -- அந்தோணி அந்த வீட்டுக்குள் சர்வ சுதந்திரமாய் நுழைகிறான்.

பாரதி நிலைப்படியைத் தலைக்கு அண்டக் கொடுத்தபடி ஈரக் கூந்தலை தலை விரித்து விட்டபடி, நிர்ப்பயமாய் வீட்டில் படுத்திருந்த நேரம்... அந்தோணியின் யானை பலத்துக்கு முன் பதினெட்டு வயசு பாகீரதி வெறும் கோழிக்குஞ்சு.

அவன் பெல்ட்டை இறுக்கிக் கொண்டு காலில் செருப்பை மாட்டும்போது...

''ஓம் பூர்ணமத; பூர்ணமிதம் பூர்ணாத்....''

ஒரு கையில் சிறிய வாதாம் இலை போட்டு மூடிய வெண்கலப் பானையும் மற்றொரு கையில் கோவில் சாவியுமாய் ரகுபதி!

ஒரு நொடிப் பொழுதில் அத்தனையும் புரிந்துவிட -- உடல் வியர்க்க உள்ளம் பதற கொதித்து நிற்கிறார் அவர். அவன் இவரை லட்சியமே பண்ணாமல் தலையைச் சிலுப்பிக் கொண்டு போகிறான்.

கொஞ்ச நேரம் கையில் பிடித்திருக்கும் வெண்கலப் பானையை கூடக் கீழே வைக்க மறந்து பாகீரதி படுத்திருக்கும் சமையற்கட்டுக்கு அடுத்த இருட்டு நடையையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நீண்ட கேவலும்... ''ஐயோ ஐயோ ''என்ன புலம்பலும்...

இவளை... இவளை.... என்ன செய்யறது?

இந்த பதைபதைக்கிற வெய்யில்லே காவிரிக்கு இழுத்துண்டு போய் தள்ளிவிட்டுடலாமா...?

ரகுபதியின் மனசில் ஆங்காரம் விஸ்வரூபம் எடுத்து அடுத்த கணமே தணிகிறது.

அவன் பண்ணின அபக்யாதிக்கு இவளைக் கொன்னு போடுவது என்ன நியாயம்...?

அப்போ - இவளோட திரும்பவும் நீ குடித்தனம் நடத்த போறியா? உன்னால முடியுமா? இவ பக்கத்துல நீ எப்படி நிம்மதியா படுத்துப்பே... ஊர் உலகம் என்ன சொல்லும்...?

மலைத்து நிற்கிறார் அவர்.

''ஐயோ சித்த முன்னால நீங்க வந்திருக்கப்படாதா...'' பாகீரதி ஆறுதல் தேடும் குழந்தையைப்போல கதறிக்கொண்டே பாய்ந்து வந்து அவரை அணைத்தபோது- உடம்பையே சாக்கடையில் போட்டு புரட்டி எடுத்தாற் போல கூசுகிறது ரகுபதிக்கு.

''இந்தா - தள்ளி நில்லு!''

அவரது குரலை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. காலை வரையில் தன்னிடமிருந்து நூலிழைக் கூட விலக விரும்பாத தன் கணவர் இப்பொழுது எங்கு கைக்கெட்டாத தூரத்தில் நிற்பது போல் பாகீரதிக்குத் தோன்ற அவள் இன்னும் பெரிதாக அழுகிறாள்.

''என்னை அப்படி பார்க்காதீங்கோ. எனக்கு பயமாயிருக்கு''

''வெளியில் போ!"

அவரது வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில் துள்ளி நிமிர்கிறாள்.

''நிஜம்தான். இனிமே ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்க முடியாது. ராத்திரியே நான் இந்த இடத்தை விட்டு போறேன். எங்கே போறன்னு சொல்லமுடியாது. இனிமே ஒரு க்ஷணம் கூட இந்த ஊர்ல நான் இருக்க மாட்டேன்.

''அப்படி சொல்லாதீங்கோ. எனக்கு உங்களை விட்டா யார் இருக்கா?' நீங்களே என் கழுத்தை நெரித்துக் கொன்று போட்டுடுங்கோ''

அவள் அழுகிறாள். ரகுபதியின் கால் இரண்டையும் கெட்டியாக பிடித்துக்கொண்டு புலம்புகிறாள். மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறுகிறாள்.

எப்படி இவரால் இந்த மாதிரி பேச முடிகிறது? இவர் இல்லாம இந்த ஊர்ல எனக்கு யாரை தெரியும்... கடவுளே... கடவுளே... இது என்ன சோதனை...? அன்று இரவோடு இரவாக வீட்டை பூட்டிக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தவர்தான் ரகுபதி.

காலைப் பிடித்துக்கொண்டு கதறிய பாகீரதியை ஒரு உதறலில் உதறி விட்டு சென்றவர்தான். ஊர்ப் பெரிய மனிதர்கள் யாரும் இந்த விஷயத்தில் வாயை திறக்க வழி இல்லை. ஊருக்கு பெரிய மனிதனே அந்தோணிசாமி தானே.

பெற்றோர் இல்லாத பாகீரதி எத்தனை நாள் இதே ஊரில் வாசல் திண்ணையில் படுத்திருப்பாள்...?

''சாக வேண்டியதுதானே இத்தனைக்கும் பிறகு எதுக்காக இருக்கணும்?'' இது ஊர் பெண்களின் விமரிசனம்.

கொஞ்சநாள் கோவில் வெளிப் பிராகாரத்தில் வாசம். கொஞ்சநாள் தபாலாபீசே கதியாய்... 'போனவரிடமிருந்து ஏதாவது பதில் வராதா' என்று தவம்.

ஊரார் தங்கள் வீட்டு பெண்களைத் திட்டும்போது பாகீரதி மாதிரி ஒரு நாள் தெருவுல நிக்க போறே... என்று சேர்த்துத் திட்ட ஆரம்பித்தார்கள். அன்று

யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்த அவள், தனது சிறிய துணிப் பையை தூக்கிக்கொண்டு அந்தோணியின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறாள். துப்பாக்கிக்கு மெருகேற்றியபடி உட்கார்ந்திருந்தவன்எதிரில் நிழலாட நிமிர்ந்து பார்க்கிறான். இரண்டு பெரிய கம்பளிப் பூச்சிகள் படுத்து கிடப்பது போன்ற புருவங்கள் மேலே ஏற, அவன் திடுக்கிட்டு போகிறான்.

எதிரில் நிற்பவளின் பார்வை... பார்வையா அது... இந்த பார்வையை அன்றே இவள் ஏன் தரிசிக்காமல் போனான்? மெல்ல துப்பாக்கியை சுவரில் சாய்த்துவிட்டு எழுந்து நிற்கிறான்.

இதுவரையில் அவனிடம் தன்னை இழந்த எந்த பெண்ணும் திரும்ப வந்து இப்படி உன் வீட்டு வாசலில் நின்று செங்குத்தாய் ஈட்டியை செருகுவது போல் பார்த்ததில்லை. நா

''நான் இனிமே இங்கதான் இருக்கப் போறேன்''

அவள் தடதடவென உள்ளே நுழைகிறாள். மருது திறந்த வாயை மூட மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்த வீட்ல பொம்பளை யாரும் இல்லைம்மா மருது கொஞ்சம் தைரியம் வந்து சொல்ல--

தெரியும்' பதில் அளித்துக் கொண்டே வீட்டின் இரண்டாம் கட்டுக்கு போகிறாள்.

துப்பாக்கியும் கையுமாக பின்தொடர்ந்த அந்தோணியை அந்த இரண்டாம் கட்ட நுழைவாசலில் அடி எடுத்து வைக்க விடாமல் தடுக்கிறாள்.

''அங்கேயே நில்லு... இந்த வாசப்படி தாண்டி இந்தப் பக்கம் வரக்கூடாது. எந்த காரணத்துக்காகவும் வரக்கூடாது. உள்ளே வந்தா என் பொணத்தைத்தான் பார்ப்பே...''

மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல அங்கேயே நிற்கிறான் அந்தோணி.

பெண்டாட்டி பிள்ளை யாரும் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தோணி வீட்டுக்குள் என்ன தைரியத்தில் நுழைந்தாள் அவள்?

தனியாக அவள் சமைத்து சாப்பிட, அந்தோணி பாத்திரங்களையும் பண்டங்களையும் வாங்கி போடுகிறான். இரண்டு வேளையும் காவேரி போய் குளித்துவிட்டு தண்ணீர் எடுத்து வரும் பாகீரதி, இப்பொழுது வம்புகளை லட்சியம் செய்வதில்லை. காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் பாகீரதி வீட்டுக்குள் நுழையும்போதே தோட்டத்திலிருந்து கொஞ்சம் செம்பருத்தி பூக்களை பறித்துக் கொண்டுதான் உள்ளே நுழைவாள். அந்தோணியின் வீட்டு நடுக் கூடத்தில் பளிங்கினாலான பெரிய அன்னை மேரியின் சிலை இருக்கும். இரண்டு பூக்களை அந்த பொம்மைக்கு சாத்தி விட்டு, தனது இருப்பிடத்திற்குள் புகுந்து கொள்வாள்.

அந்தோணி நடுக்கூடத்தில் உட்கார்ந்திருந்தாலும் அவனை நிமிர்ந்துகூட பார்க்க மாட்டாள்.

'உன்னுடன் எனக்கென்ன பேச்சு' என்பது போல...

அன்று பொறுக்க முடியாமல் அவன் வாய் விட்டு கேட்கிறான்.

''அம்மா கொஞ்சம் நில்லு...''

அவனது வார்த்தைகளுக்குக் கட்டுப்படும் அளவுக்கு அவனிடம் மதிப்பு எதுவும் இல்லையாயினும் அவன், ''அம்மா'' என்று அழைத்த தொனி அவளை சற்று நிற்க வைக்கிறது.

'' நீ இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்கப் போற?''

''எதுக்கு கேக்குற?'' என்பது போல அவள் அவனை ஏறிட்டுப் பார்க்கிறாள்.

''ஊருல உன்னையும் என்னையும் சேர்த்து நிறைய பேசுறாங்க. நான் பேச்சுகளுக்கு எல்லாம் பயப்படுறவன் இல்லை. அனாவசியமா உன் பேரு....''

''என் பேரு இனிமே கெட எதுவும் இல்லை .என்னிக்கு நீ என்னை தொட்டியோ அன்னிக்கே கெட்டாச்சு. ஆனா ஒரு தடவைதான் சகதியில் காலை விட்டுட்டோமே என்று திரும்பவும் இந்த சேத்துல விழுந்து சகதியை பூசிக்க நான் தயாரில்லை.

ஊர் என்ன வேணுமானாலும் சொல்லட்டும் உன்னாலதான் எனக்கு இந்த நிலைமை வந்தது. உன்கிட்ட என் தேகம் அந்த கணம் அடிமைப்பட்டு கிடந்த குற்றத்துக்கு தண்டனையை என் அகத்துக்காரர் கொடுத்துட்டார். என்னை தொட்ட பாவத்தை நீயும் கொஞ்சம் அனுபவிக்க வேண்டாமா...? அனுபவி...''

அவள் ஆவேசமுடன் கூறுகிறாள்.

நான் இதை தண்டனையை நினைக்கல. நான் செய்தது பெரிய தப்பு தான். என்னை கர்த்தர் மன்னிக்கவே மாட்டார். ஆனால், அதற்காக என் வீட்டில் எத்தனை நாள் இப்படி சிறைவாசம் அனுபவிப்பே? உன் புருஷனை தேடி உன்னை அவன்கிட்ட ஒப்படைச்சாத்தான்....'' அந்தோணியின் கண்கள் கலங்குகின்றன.

அத்தனை பெரிய உருவமான அவன் குழந்தை மாதிரி விசும்புவதை ஒரு வித திருப்தியுடன் ரசிக்கிறாள் அவள்.

என்னமோ அவரைத் தேடிப் பிடிச்சு என்னைக் கொடுத்தா அவரும் சுலபமா எல்லாத்தையும் மறந்துட்டு அழைச்சுப்பார்ங்கிற மாதிரியும் நானும் சுலபமா அத்தனை பழிச்சொல்லையும் தொடச்சி விட்டுண்டு அவர்கூட போயிடுவேன்கற மாதிரியும் பேசறயே. அந்தக் காலத்துல அசோகவனத்துல சிறை வச்சிருந்த சீதையை மீட்டு அயோத்தி அழைச்சுண்டு வந்த ராமன் சந்தேகத்துனால பொண்டாட்டியை தீக்குளிக்க வச்சான். நான் வீட்ல ஒண்டியா குடித்தனம் பண்ண வந்து ஒன்பது வருடங்களாயிடுத்து. சாதாரண சராசரி மனுஷரான அவர் இனிமேல் என்னை எங்கே ஏத்துக்கப் போறார்...?''

இனிமேல் நான் சாகறவரைக்கும் இந்த வீடுதான் எனக்கு....''

அவள் விருட்டென்று உள்ளே போகிறாள். அவனைப் பார்த்து கேலி செய்வது போல அவளது இடுப்பில் உள்ள தண்ணீர் குடம் க்ளுக்கெனத் ததும்பி விழுந்து சிரிக்கிறது.

அவர்களது வாழ்க்கை -- தெருவிலிருப்பவர்களுக்கும் வீட்டு வேலைக்காரர்களுக்கும் வேடிக்கையான ஒன்று. இருவரும் எந்த பந்தத்திலும் சிக்கிக் கொள்ளாமலேயே ஒருவருக்கொருவர் கடமைப்பட்டாற் போல வாழ்கின்றனர்.

வாழைத்தார் அறுத்தோமூங்க பண்ணை ஆள் அந்தோணியின் முன் பூவன் தாரை கொண்டுவந்து வைக்கிறான்.

''உள்ளார அம்மாகிட்ட கொண்டு கொடு போ. அந்தோணி தன் கம்பீரத்தில் சற்றும் குறையாமல் வாசலில் உட்கார்ந்தபடியே கூறுகிறான்.

அதுபோலவே குத்தகை பணம் ,கரும்பு விற்ற பணம்.... எல்லாமும் அம்மாகிட்ட கொண்டு கொடு...''

''என் தாயே, நான் செய்த தவற்றுக்கு அபராதமாக என் உயிரை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன். பெற்றுக்கொள் என்பதுபோல அந்தோணி அத்தனையையும் பாகீரதி முன் சமர்ப்பிப்பதும்....

என்னுடைய இழப்பை இதையெல்லாம் கொண்டு தீர்க்க முடியாது என்பதுபோல, பாகீரதி அவற்றைத் தொடாமல் கூடத்தின் நடுவில் உள்ள அன்னை மேரியின் முன் கணக்கு பார்த்து வாங்கி வைத்து, ''மருது இதை எல்லாம் பத்திரமா அய்யா கிட்டே கொடுத்துடு'' என்று சொல்லியபடி தன் கூட்டுக்குள் புகுந்து கொள்வதும்...

இது எல்லாவற்றையும் விட பெரிய ஆச்சரியம், பாகீரதி அந்த வீட்டுக்குள் நுழைந்த பின் அந்தோணி எந்த பெண்ணையும் நிமிர்ந்து கூடப் பார்ப்பதில்லை என்பதுதான்.

எத்தனை வருஷங்கள் இப்படி வெற்று வாழ்க்கை....!

''அந்தோணி பொண்டாட்டி போறாடோய்..."

அந்தோணி சிலுவை பூஜை பண்ணுவான், இவவரலட்சுமி பூஜை பண்றாளாம்டா!

இந்த வார்த்தைகள் இருவருடைய காதிலும் விழத்தான் செய்தன. அதையெல்லாம் தாங்கிக்கொள்ள மனோதிடம் வேண்டும்.

'நான்தான் இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் என் தலையெழுத்து. இவனுக்கு என்ன நெனச்ச மருதுவை விட்டு செத்த எலியை வாசலில் தூக்கி போடடுறப்போல என்னை வெளியில் கழுத்தை பிடித்துத் தள்ளி விட்டு பழையபடி இவன் குடியும் கூத்துமாக இருந்திருக்கலாமே.... இவன் ஏன் என் வார்த்தைக்கு கட்டுபடுறான்...?

நினைத்துப் பார்க்கிற பாகீரதிக்கு தன் கணவன் இந்த மாதிரி --- கொல்லைப்புறம் ஒரு குடிசை போட்டாவது கொடுத்திருந்தால் இப்படி பேச்சு கேட்க கொண்டிருக்க வேண்டாமே என்று தோன்றும்.

அவர் எங்கே இருக்கார்... எப்படி இருக்கார் ....இருக்காரா இல்லையா...? ஒண்ணுமே தெரியாத இந்த அவல வாழ்க்கைக்காகவா என்னை கல்யாணம் பண்ணி இந்த ஊருக்கு அழைச்சுண்டு வந்தார்.

--- இந்த நினைப்புகள் கண்ணாடியை பார்த்து பொட்டு வைத்துக் கொள்ளும் போது சில சமயங்களில் அந்த ஆறு மாசம் இல்வாழ்க்கையின் இனிப்பு அடிமனசில் பாகாய் கரையும் போது, கழுத்தில் கிடக்கும் மஞ்சள் கயிற்றில் கட்டி தொங்க விட்டாற்போல நெஞ்சு கனக்கும் போது --ஆரவாரமாய் எழுந்து அடங்கும்.

இதேபோல நினைப்புகள் அரிப்பெடுக்கற முள்செடி மேல பட்டுட்டாப் போல என்னைப் பார்க்கிற போதெல்லாம் இவன் மனசுலயும் அரிப்புகள் வேதனைகள் எல்லாம் இருக்குமோன்னோ"

இதோ 50 வயசான பாகீரதி குத்துவிளக்குக்கு மஞ்சள் குங்குமத்தை இட்டுக் கொண்டே -- கூடத்து கட்டிலில் இரண்டு காலையும் அசைக்கவே முடியாமல் வீக்கம் கண்டு படுத்திருக்கும் அந்தோணியை பார்த்தபடி நினைத்துக் கொள்கிறாள்.

அந்தோணி கிட்டதட்ட 70 வயது ஆகிவிட்டது. வயசானதன் கோளாறு இளவயதில் தறிகெட்டு இருந்தது எல்லாமுமாய் சேர்ந்து அவனை இப்பொழுது ஒரே படுக்கையாய்ப் போட்டிருக்கிறது. வேளாவேளைக்கு மருந்து கொடுத்து பார்த்துக்கொள்ள மருதுவை தவிர யாருமே இல்லை.

ஒரு தடவை அவன் மூச்சிரைக்க இறுமி விட்டு எச்சிலை துப்ப பீங்கான் குவளையைத் தேடியபோது கிடைக்காமல் எழுந்திருக்கவும் முடியாமல் சிரமப்பட்ட போது பாகீரதி ஓடி வந்து கட்டிலின் அடியில் இருந்த குவளையை எடுத்து நீட்டுகிறாள்.

அவன் பதறி போகிறான்.

''நீயா நீயா தாயே! மருது எங்கே...?

தெரியல பரவாயில்லை கொடு, நான் வாங்கி வைத்திருந்த பெரிய பாதகம் ஒண்ணும் வந்துடப் போறதில்ல.

''வேண்டாம்மா.இந்த காரியம் எல்லாம் செய்யக்கூடாது. ஏற்கனவே என் தப்புக்கு எப்படி பிராயசித்தம் செய்யறதுன்னு புரியாம தவிச்சுண்டிருக்கேன்.

அந்தோணியின் பருத்த கன்னமும் நரைத்த மீசையும் துடிக்கிறது. அத்தனை பெரிய சரீரம் அழுகையால் குலுங்குவதைப் பார்க்க அவளுக்குமே அழுகை வருகிறது.

ஒரு காலத்தில் இவன் அழுததை தான் ரசித்தது நினைப்புக்கு வர தன்மையையும் கோபமாகக்கூட வருகிறது அவளுக்கு.

இப்போ என்ன இத்தனை வருஷமா என்னை வீட்டில் வச்சுண்டு சோறு போடுவதற்கு நான் இதுவாவது செய்யக்கூடாதா? இதுவே நான் படுத்துட்டா நீ செய்ய மாட்டியா...? இந்த மனுஷாபிமானம்கூட இல்லைனா நான் வெறும் மிருகத்துக்கு சமானம்.

அவள் குவளையை அவன் எதிர்த்தாற் போல் இருக்கிற முக்காலியில் வைத்து விட்டுப் போகிறாள். அன்று காலை ---

அந்தோணியின் கதை முடிந்துவிட்டது. ஊரே திரண்டு வந்து வாசலில் நிற்க, பாதிரியார் அவனது இறுதிக் கடன்களை முன்னின்று நடத்த 30 வருடங்களுக்கு மேல் பாகீரதியுடன் ஊமை வாழ்க்கை நடத்தியவன் இன்று நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.

இனிமே அந்தோணி வீட்டு அம்மாவின் கதி என்ன?'' ஊராரின் கேள்விக்கு அவனின் நீண்ட உயிர் பதில் அளிக்கிறது.

இந்த வீட்டையும் இதில் உள்ள பொருட்களையும் பாகீரதி மிச்ச காலத்தை நிம்மதியாய் கழிக்க போதுமான தொகையும் தவிர, மீதியை அனாதை குழந்தைகளுக்கு எழுதி வைத்து விட்டான் அவன்.

''இது போதும் எனக்கு. எனக்கப்புறம் இதெல்லாம் அனாதைகளுக்கே போய் சேரட்டும்.''

பாதியாரிடம் சொன்னவளின் கண்களில் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் நாட்டுத் துப்பாக்கியும் கொசுவலை கட்டிய அவனது கட்டிலும் அன்னை மேரியின் பளிங்கு முகமும் கண்களில் தட்டுப்பட்டு கண்ணீரை பெருக்குகிறது.

அந்தோணி இல்லாத வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது இருட்டு மூலையில் ஒற்றை மெழுகுவர்த்தி துணியில் துணையில் அன்னை மேரி நிற்க. பாகீரதியின் நெஞ்சில் துக்கம் பந்தாக அடைக்கிறது.

இவன் யார்? இவனுக்கும் எனக்கும் அந்த ஒருநாள் அசந்தர்ப்பமான சந்திப்பைத் தவிர வேறு என்ன பந்தம்? இவன் போனதுலே என் இருதயமே வெடிச்சிடும் போல இருக்கே.

பாவம்! இவனுக்காக நான் என்ன செஞ்சேன்? அன்னிக்கி இவனுக்கு குவளை எடுத்துக் கொடுத்தேனே -- அதைத் தவிர இவனுக்கு ஒரு தம்ளர் தண்ணி கூட எடுத்து தந்ததில்லையே நான்.

ஆறு மாசம் என்னோட வாழ்ந்துட்டு ஒரே நொடியில் உதறி எறிஞ்ச என் அகத்துக்காரரைவிட -- ஒரு நாள் செஞ்ச தப்புக்காக வாழ்நாள் முழுக்க என்னை தன் பாதுகாப்புல எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வச்சுண்டிருந்த இவன் எத்தனை பெரிய மனுஷன்?

கும்பல் தேடி அந்தோணியின் உடலை சந்தனப் பெட்டியில் வைத்து தூக்கிச் சென்றபோது அடக்கி வைத்திருந்த அழுகை இப்பொழுது பீறிட்டுக்கொண்டு எழுகிறது. இந்த நிமிடத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வாழ்நாள் முழுக்க இவளை நான் காப்பாற்றுவேன்' என்று கூறி அழைத்து வந்து நடுத்தெருவில் நிறுத்தி விட்டு ஓடிய ரகுபதியை காட்டிலும் அந்தோணி தான் அவள் மனசில் உயர்ந்து நிற்கிறான்.

''ஐயோ என்னை தனியா விட்டுட்டு போயிட்டியே...'' அவள் ஓவென அலறியபடியே தன் கழுத்தில் உள்ள மஞ்சள் கயிற்றைக் கழற்றி சுவரில் தொங்குகிற துப்பாக்கியின் முனையில் மாட்டிவிட்டு, அப்படியே சுருண்டு படுக்கிறாள்.

ஆமாம்! இனிமேல் அவள் ரகுபதியின் மனைவியாக வாழ்வதைவிட அந்தோணிசாமியின் விதவையாக வாழ்வதே நியாயம் எனக் கருதி விட்டாள்.