Published:Updated:

ஸ்கூல் டூர்! – சிறுகதை #MyVikatan

தேவியின் பெயரைச் சொல்லாமல், பசங்க என் பெயரைச் சொல்லிவிட்டனர். ஏனெனில், நான் கணிதப் பாடத்தில் புலி. அதனால் அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். கொஞ்ச நேரம் யோசிச்ச டீச்சர்... 'சரி, அரை நாள் சுற்றுலா மாதிரி எங்கையாவது போலாம்' எனச் சொன்னார்.

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

நானும் தேவியும் நண்பர்கள். ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தோம். நான் சேட்டைக்கார பையன். அவள் என்னை விட அறுந்த வாலு. நல்லா படிப்பா. நல்ல வாயாடி. அதனாலயே அவ கிளாஸ் லீடர். கிரவுண்டுல நடக்கிற பிரேயருக்கு கிளாஸ் ரூம்ல இருந்து வரிசையா கூட்டிட்டுப் போறது, வகுப்புல யாராவது பேசினா பேர எழுதி ஓவர் ஓவர் போடுறதுனு எல்லாமே அவதான். சேட்டையும் பண்ணுவா. அன்பாவும் இருப்பா. அவங்க அப்பா வி.ஏ.ஓ-வாக இருந்தாரு. எங்கப்பா கரும்பு இன்ஸ்பெக்டர். அவங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். அதேமாதிரி நாங்க இருவரும் நண்பர்கள். அன்பில் தர்மலிங்கம் – கருணாநிதி, அன்பில் பொய்யாமொழி – ஸ்டாலின், மகேஷ் பொய்யாமொழி – உதயநிதி ஸ்டாலின் மாதிரி பரம்பரை நட்பு எங்களோடது. எங்கள் வீட்டு அருகிலேயே இருந்தது பள்ளிக்கூடம்.

Representational Image
Representational Image

இருவரும் சேர்ந்தே செல்வோம். மாலையில் தேவியுடைய அப்பா இல்லையென்றால், என்னுடைய அப்பா வந்து இருவரையும் அழைத்துச்செல்வார்கள். பெரும்பாலும் தேவியின் அப்பாதான் வருவார். என் அப்பா வேலை காரணமாக வெளியூர் எங்காவது சென்றுவிடுவார். இரு அப்பாக்களும் வரவில்லையென்றால், நாங்கள் பேசிக்கொண்டே நடந்துவருவோம். அப்படி காத்திருந்து, வராத ஒரு நாளில் அருகில் உள்ள புவியாண்ட பெருமாள் கோயிலுக்கு போகலாம் என முடிவுசெய்தோம். இருபக்கம் மரங்களும் கோயிலைச் சுற்றி பல்வேறு பூக்களுமாக பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும் அந்தக் கோயில். அங்கிருந்த புளிய மரத்தில், புளியம்பிஞ்சுகளும் பூக்களும் காய்த்துத் தொங்கின. பறித்து சுவைத்தோம். கண்களையும் சேர்த்து கூசவைக்கும் அந்தப் புளிப்பு, மிகவும் சுவையாய் இருந்தது. சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பினோம்.

வீட்டில் பெரியவர்கள் யாரும் வராமல் கோயிலுக்குப் போனது அதுதான் முதல் முறை. மறுநாள், வகுப்பில் வந்து கொஞ்சம் பில்டப்போடு சேர்ந்து கோயிலுக்குப் போன கதையே டூர் போன கதை போல அவிழ்த்துவிட பசங்க ஆர்வமாகினர். நாமளும் ஒரு அரை நாள் பக்கத்துல எங்கையாவது டூர் போலாமா என்ற பேச்சு வகுப்பு முழுவதும் பரவியது. எங்கள் அனைவருக்கும் பிடித்த சுசீலா டீச்சர் வர, அவரிடம் எங்கள் ஆசையை வெளிப்படுத்தினோம். அவங்க, 'இது யார் குடுத்த யோசனை' எனக் கேட்க, தேவியின் பெயரைச் சொல்லாமல் பசங்க என் பெயரைச் சொல்லிவிட்டனர். ஏனெனில், நான் கணிதப் பாடத்தில் புலி. அதனால் அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். கொஞ்ச நேரம் யோசிச்ச டீச்சர்... 'சரி, அரை நாள் சுற்றுலா மாதிரி எங்கையாவது போலாம்' எனச் சொன்னார். எங்களுக்கு எல்லாம் ஆகாயத்தில் பறப்பதுபோல இருந்தது. உடனே, யார் என்ன கலர் டிரெஸ் அணிந்து வருவது, என்ன சாப்பாடு எடுத்துவருவது, எவ்வளவு காசு செலவாகும் என்ற பேச்சுகள் ஓட ஆரம்பித்தன. அதைவிட சுவாரஸ்யமான பேச்சுகள் வாழ்வில் குறுக்கிடுவதே கடினம்தான் போல. பக்கத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விசயம் போக, அது தலைமை ஆசிரியருக்குத் தெரிய வர, அரை நாள் சுற்றுலா... இரண்டு நாள் சுற்றுலாவாக பரிணமித்தது. டூர் இன்சார்ஜா சுசீலா டீச்சரை போட்டாங்க.

``ஜீவசமாதி அடையப்போறேன்”- விவசாயியின் போஸ்டரால் பதறும் சிவகங்கை... படை எடுக்கும் மக்கள் #MyVikatan

நிறைய பேரு வர்றதால, பஸ்ல போனாதான் சரியாக இருக்கும் என நினைத்து பஸ்ஸுக்கு பேசி விட்டு வந்தார்கள். இரண்டு நாளைக்குப் போக, வர 150 ரூபாய் என முடிவானது. தேவியும் நானும் வசூல் பண்ண ஆரம்பித்தோம். அன்றன்று வசூலாகும் தொகையை சுசீலா டீச்சரிடம் கொடுத்துவிடுவோம். வகுப்பில் பாடங்கள் ஓடவில்லை. சுற்றுலாவுக்கு செல்வது பற்றியே பேசிப் பேசி மகிழ்ந்து 10 நாள்கள் ஓடிவிட்டன. நாம் போகிற இடம் எப்படி இருக்கும். கடல்பகுதியா, சினிமாவில் காட்டுவது போல பூக்கள் நிரம்பிய பகுதியா, மலைப்பகுதியா என பேசிப்பேசி ஓய்ந்தோம். அப்பாவிடம் சொல்ல, சரி என்று சொல்லிவிட்டார். டூர் செல்வது பற்றியே மனது கிடந்து அடித்தது. எல்லாரிடமும் காசு வாங்கிக் கொடுக்கும் நான், இன்னும் காசு கொடுக்கவில்லை. தேவி கொடுத்துவிட்டாள். அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். 'குடுத்துக்கிடலாண்டா. இன்னும் நாள் இருக்குல' என்று சொல்லி விட்டார். 'டீச்சர் கிட்ட நான் சொல்லிடுறேன். இல்லனா அவங்கள பாத்தா குடுத்திர்றேன்' என்றார்.

Representational Image
Representational Image

பக்கத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விசயம் போக, அது தலைமை ஆசிரியருக்குத் தெரிய வர, அரை நாள் சுற்றுலா இரண்டு நாள் சுற்றுலாவாக பரிணமித்தது. டூர் இன்சார்ஜா சசீலா டீச்சரை போட்டாங்க.

நான் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அப்பா இல்லாமல் இருந்தது வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது. வீட்டில் நகி (நாகலட்சுமி) அக்காவிடம் சொல்லி வாங்கிவைக்கச் சொல்லியிருந்தேன். ஆனால், அப்பாவைத்தான் காணவில்லை. அந்த நாளும் வந்தது. 'அப்பா, வேலை விசயமா வெளியூர் போய்விட்டார். நீ கிளம்புவதற்குள் அப்பா வந்துவிடுவார்' என அம்மா ஆறுதல் சொன்னார்.

Representational Image
Representational Image

எனக்கு புளிசாதம் மிகவும் பிடிக்கும். எனக்கும், கூட வருகிறவர்களுக்கும் சேர்த்து அக்கா மூன்று புளிசாத பொட்டலமும் மூன்று முட்டைகளும் வைத்துக் கட்டினாள். அக்காவுக்கு என்மீது பிரியம் ஜாஸ்தி. அதனால், பொட்டலங்களும் புடைப்பாய் இருந்தது. மாலையாகிக்கொண்டிருந்தது. அப்பாவை இன்னும் காணவில்லை. கொஞ்ச நேரம் காத்திருந்த அக்கா, 'அம்மா, தம்பியை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போறேன். அப்பா வந்தா ஸ்கூலுக்கு வரச் சொல்லுங்க' எனச் சொல்லிவிட்டு, என்னை அழைத்துக்கொண்டு நடந்தாள். சாப்பாடு, டிரெஸ் பேக்கை எடுத்துக்கொண்டேன். தேவி போய் ஒரு மணி நேரம் இருக்கும் போல. அவளுடைய அப்பாவும் வெளியூர் சென்றிருந்தார்.

பின்னாடி பார்த்துக்கொண்டே இருவரும் நடந்தோம். அக்கா, தன் சேமிப்பான 20 ரூபாயை எடுத்து, இத வச்சுக்கோ தம்பி. நல்லதா வாங்கி சாப்பிடு என்றாள். அந்தக் காசைப் பார்த்ததும் சற்று ஆறுதல் பிறந்தது. பேருந்து வந்துவிட்டது. அடித்துப்பிடித்து எல்லாரும் பேருந்தில் ஏறினார்கள். ஜன்னலோரத்தில் அமர்ந்த தேவி, பக்கத்து இருக்கையை எனக்காகப் பிடித்து வைத்திருந்தாள். நான் பணம் கொடுக்காததால்தான் பேருந்தில் ஏறாமல் இருக்கிறேன் என்பதை அறிந்திருந்த தேவி, ''அம்மாகிட்ட போயி காசு வாங்கிட்டு வரவாடா'' என்றாள். ''இல்ல தேவி, டீச்சர் கிட்ட அப்பா தர்றேன்னு சொல்லியிருக்காரு. அப்பா வந்துருவாரு'' என்றேன். ''சரி'' எனச் சொல்லிவிட்டு மற்றவர்களுடன் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தாள். சுசீலா டீச்சர் வராதது வேறு என் பயத்தைக் கூட்டியது. அவருக்கு, காய்ச்சல் காரணமாக நேற்றிலிருந்தே பள்ளிக்கு வரவில்லை.

Representational Image
Representational Image

இரண்டு டீச்சர், இரண்டு சார் எல்லாரும் வந்துவிட்டார்கள். எனக்கு கண்ணீர் வருவதுபோல இருந்தது. அக்கா போய் சமூகவியல் டீச்சரிடம், ''அப்பா வெளியூர் போயிட்டு இன்னும் வரல. வந்தவுடனே பணம் கட்டிர்றோம் டீச்சர். தம்பிய கூட்டிட்டுப் போங்க'' என்றாள். ''இல்லமா பல பேரு பணம் கட்டல. அவங்க பேரன்ட்ஸுக்கு தெரிஞ்சா சங்கடம் வரும்னு நாசூக்கா மறுத்து ட்டார்.'' சுசீலா டீச்சர் இருந்திருந்தால் கட்டாயம் என்னை அழைத்துச் சென்றிருப்பார். ஆசைக்குக்கூட பேருந்தில் கால் வைக்கவில்லை. எட்டு மணியானவுடன் பேருந்து புறப்படத் தயாரானது. எனக்கு கண்ணீர் வரத் தொடங்கியது. என்னிடம் இருந்த சாப்பாட்டு பொட்டலத்தை ஜன்னல் வழியாக தேவியிடம் கொடுத்தாள் அக்கா.

பேருந்து கக்கிச் சென்ற புகையின் நடுவில், நானும் அக்காவும் அழுதுகொண்டே நின்றிருந்தோம். என் ஆசையும் பத்து நாள் கனவுகளும் அந்தப் புகையைப் போல காற்றில் கரைந்து கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்து அழுதுகொண்டே தூங்கி விட்டேன். மறுநாள் காலை எட்டு மணி. அப்பாதான் எழுப்பினார். காய்ச்சல் அடித்துக்கொண்டிருந்தது. ''டூர் போகலையா'' என்றார். மீண்டும் விட்ட இடத்தில் இருந்து அழுகை முட்டியது. அப்பாவை கட்டிப்பிடித்துக்கொண்டேன். ''ஏன்ப்பா ரெண்டு நாளா காணோம்''னு கேட்டேன். அவர் அம்மாவைப் பார்த்தார். அவளுக்குத்தானே தெரியும். அப்பாவிடம் காசு இல்லாததால்தான் காணாமல் போனார் என்று. அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். வரும்போது பரோட்டா வாங்கிக்கொடுத்தார். பரோட்டாவும் சால்னாவும் உள்ளே போகப் போக, எல்லாம் மறக்க ஆரம்பித்தது. அப்பா, நாள் முழுவதும் எங்ககூடவே இருந்தாரு. குடும்பமா புவியாண்ட பெருமாள்கோயிலுக்குப் போனோம்.

Representational Image
Representational Image

இரவு, அப்பா சினிமாவுக்கு அழைத்துச்சென்றார். சுற்றுலா முடித்துத் திரும்ப வந்தவர்கள், அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். தேவி, புளிசாதம் சூப்பரா இருந்ததாகச் சொன்னாள். நான் எதையும் காதில் வாங்கவில்லை. நாங்க குடும்பமா கோயிலுக்கு, டென்ட் கொட்டாயிக்குப் போனோம். பரோட்டா தின்னோம். சூப்பரா ஊர் சுத்தினோம் என சொல்லிக் கொண்டு திரிந்தேன். அதன் பின்னால் எத்தனையோ சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் வந்தன. முதல் சுற்றுலா செல்லாததின் வடு ஆழமாய் நெஞ்சில் பதிந்துவிட்டது. அப்பாகூட, பல முறை கைநிறைய பணம் கொடுத்து, 'ஜாலியா போயிட்டு வாடா' எனச் சொல்லியிருக்கிறார். மறுத்து விட்டேன். இப்போது என் பிள்ளைகள், பள்ளியில் சுற்றுலா செல்வதற்கு முதலாவது ஆளாய் பணம் கட்டுபவர்களாய் இருக்கிறார்கள். வாழ்வில் சுற்றுலாவே செல்லக் கூடாது என்ற என் சபதம், கடைசியாய் ஒரு இடத்தில் உடைந்தேவிட்டது. பள்ளியில் செல்ல முடியாமல் தவித்த இடம் ஊட்டி. தற்போது சென்றுவந்த இடம், அதே ஊட்டி.

-ச. சுகேஷ் & வி. டேனியல்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/