Published:Updated:

``தமிழய்யா சொன்ன ஆங்கில வார்த்தைப் புதிர்..!'' - வாக்கிங் டாக்கிங் - 1 #MyVikatan

மனைவியோடு வாக்கிங் போவேன் என்று சொன்னேன் அல்லவா? அப்படி வாக்கிங் போகும் போது என்னை நீண்ட தூரம் நடக்க வைக்க அன்னார் பல உத்திகளைக் கையாள்வார்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நாங்களாகிய நானும் மனைவியும் வாக்கிங் போகுமிடம் வனமாகி, வயலாகி, காடாகி பின் உடைந்துபோய் வீட்டுமனைகளாகிக் கிடக்குமிடம். மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரம். அதை நிரூபிப்பது போல அடிக்கடி யானைகளும் வாக்கிங் வருவதுண்டு. சென்ற நூற்றாண்டில் அவை விளையாடிய மைதானமாகக்கூட இருந்திருக்கலாம்.

காதலர்களுக்கு அடுத்து 'அருகில்' என்ற வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்தது இந்த வீட்டுமனைகள்தான். விளம்பரங்களில் 'அங்கீகாரம்' என்ற வார்த்தைக்கு அடுத்து மிகப்பெரிய அங்கீரம் பெற்று அழகும் காசும் சேர்த்தது 'அருகில்' என்ற வார்த்தைதான். விளைவு, அப்பால் இருந்த விமான நிலையங்கள்கூட 100 கி.மீக்கு அருகில் வந்தன.

திங்களன்று வாக்கிங் பின்னடைவுதான். வயிற்றின் முன்னடைவுக்கு ஞாயிறுதான் பிரதான காரணம்.

மனைவியோடு வாக்கிங் போவேன் என்று சொன்னேன் அல்லவா? அப்படி வாக்கிங் போகும்போது என்னை நீண்ட தூரம் நடக்க வைக்க அன்னார் பல உத்திகளைக் கையாள்வார். அவற்றைக் கண்டுப்பிடிக்கும்போது மூச்சிரைக்க ஆரம்பிக்கும். இன்றைக்கு எந்த உத்தியும் தென்படவில்லை.

Walking
Walking

வெறுமனே நடையல்ல. கடைக்கண் பார்வையில் அங்குமிங்குமாக வேடிக்கை.

ஒருவர் வாஸ்து பார்த்து வாக்கிங் போவதுபோல வடக்கு தெற்காக நடந்துகொண்டிருந்தார். உற்றுநோக்கியதில் அவர் தரையில் கல்லால் கீறி கண்ணும்கருத்துமாக அதன்மேல் எட்டுப்போட்டுப் பாய்ந்துகொண்டிருந்தார். இந்த மாதிரிக் காட்சிகள் காண்பதெல்லாம் அபூர்வம். தரையில் எட்டுப்போட்டால் 17 வகையான நோய்கள் குணமாகுமாம். எட்டுப்போட்டால் நோய் எட்டப்போகும் என யாராவது அவருக்குச் சொல்லியிருக்கலாம்.

வாக்கிங் வகைகள் யாவை? அவற்றை விளக்குக எனப் பத்து மதிப்பெண் கேள்வியே கேட்கலாம். அந்த அளவுக்கு நம்மவர்கள் வாக்கிங்கை பிரியமாய் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். மாடி வாக்கிங். வராண்டா வாக்கிங். கிச்சன் வாக்கிங்... இப்படியாகப் போகிறது. நடுவே நீண்டு கிடக்கும் சாலைகள். நடப்பவர்களில் முதியவர்கள் சதுரம், நடுத்தர வயதானவர்கள் செவ்வகம், என்னைப் போலச் சுறுசுறுப்பானவர்கள் வட்டம் என எல்லோரும் ஏக பிசி.

காலையில் குளித்து மின்னலடிக்கும் வெள்ளைச் சட்டையணிந்து ஆபீஸுக்குப் போகும் ஸ்டைலில் வாக்கிங் வருகிறார் ஒருவர். அவரின் நோக்கம் என்னவாக இருக்கும்?

அவர்களின் நோக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இப்போதைய எனது நோக்கம் ரெஸ்ட்.

வாக்கிங் என்பதைத் தமிழ்ப்படுத்தி நடைப்பயிற்சி எனச் சொல்லலாமே என நினைப்பீர்களானால் மேற்கொண்டும் படிக்காமல் என்னோடு உட்கார்ந்து சற்றே இளைப்பாறலாம்.

அங்கே என்னைப்போலவே வாய்க்”கிங்” கள் சிலர் ரெஸ்டில் இருந்தனர். அவர்கள் அதிசிரத்தையாக உடற்பயிற்சி செய்வது போல இருந்ததேயொழிய உண்மையில் வெட்டிப்பேச்சு வெகு கொடூரமாகப் போய்க்கொண்டிருந்தது. நானும் மெதுவாகக் கால் கைகளை ஆட்டினேன். அவர்களுக்கு இது ஆறுதலாக இருந்திருக்கும். இவை மட்டுமே நான் படிக்கும் காலத்தில் கற்றுக்கொண்ட உடற்பயிற்சியின் எச்சம்.

உரையாடல் களைகட்டியது. காற்றில் போனது பல. காதில் விழுந்தவற்றில் சில.

Walking
Walking
Caleb Ekeroth on Unsplash

*

மனசுக்கு வாக்கிங் போவது பிடிச்சிருச்சா?

அதிலென்ன சந்தேகம்? நம்மை விட பெரிய தொப்பைகளை வாக்கிங் போகும்போது பார்க்கிறது மனதுக்கு மிகப்பெரிய ஆறுதல்தானே?

*

உங்க ரசனைதான் என்ன?

வாக்கிங் போகலாமுன்னு நினைச்சிட்டே படுத்துட்டிருக்கிற என்னை வாக்கிங் கூப்பிட்டு வந்து ரசனை என்னன்னு கேட்கலாமா?

*

சமீபத்தில் உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன?

வாக்கிங் போகும்போது பார்த்தேன். லாக்டெளன் அன்னிக்கு ஆட்டுக்கறிக்கடை உள்ளே பயமில்லாம ஆடுக மேஞ்சுட்டு இருந்ததுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

*

வாக்கிங் போகும்போது மனநிலை எப்படியிருக்கு?

ஒரு உதாரணம் சொல்றேன். அதிலிருந்து நீங்க தெரிஞ்சுக்கலாம். இன்னிக்கு வாக்கிங் போறப்ப புதுசா ஒருவர் அறிமுகம் ஆனார். அடுத்த நிமிஷம் அவரோட வாட்ஸப் குரூப்பில சேர்த்துக்கிட்டார். என்னத்தச் சொல்ல?

*

வாக்கிங் வர்றதில எதாவது சிக்கல் இருக்கா?

அப்படிக் குறிப்பிட்டு எதுவும் சொல்ல முடியாது. ஆனா, வாக்கிங் போறதுல இருக்கிற சிக்கலே நமக்கு சுகர் இல்லை என நம்பவைக்கிறதுதான்.

*

வாக்கிங் போகும் போது சிந்திப்பீர்களா?

இதொரு இனிப்பான செய்தி: சம்பாரிக்கிறவனும் நடக்கணும். சம்பாரிச்சவனும் நடக்கணும்.

வாக்கிங் போக தலையாய காரணமே தலையணை மாதிரி முன்னாடி போற தொப்பைதான். அதுபற்றிய சிந்தனைதான்.

*

ஏன் ஓரமாகவே நடக்கிறீங்க?

நடைப்பயிற்சிதான். ஆனா, சில பேரு 'பாக்ஸிங்' போடற மாதிரி எதிரில் வர்றாங்க.

*

வாக்கிங் போறதால என்ன லாபம்?

'நடக்கிறேன்' எனச் சொல்றதுக்குப் பதிலா 'வாக்கிங் போறேன்'னு சொல்றதே கொஞ்சம் கெத்தாதான் இருக்கு.

*

எத்தனை மணிக்கு வாக்கிங் ஆரம்பிப்பீங்க? எப்பவெல்லாம் வாக்கிங் போவீங்க?

இரண்டுக்கும் ஒரே பதில்தான். கிச்சனில் பாத்திரங்கள் உருளற சத்தம் அதிகமா கேட்கிறபோதே சத்தமில்லாம வாக்கிங் கிளம்பறதுதானே புத்திசாலித்தனம்.

*

யாரெல்லாம் வாக்கிங் விரும்புவதில்லை?

நடப்பது நடக்கும் என நினைப்பவர்கள் வாக்கிங் போவதில்லை.

*

வாக்கிங்கில் டெக்னாலாஜி வளர்ந்திருக்கா?

ஏன் வளரல? அன்னிக்கு சாதாரண நாய், இன்னிக்கு அல்சேஷன். அன்னிக்கு வாட்ச். இன்னிக்கு ஆக்சிமீட்டர்.

Walking
Walking

*

இதற்குமேலாக சும்மா இருக்க முடியவில்லை. அளவாகப்பேசறதும், அளவா சாப்பிடறதும் எந்த மனுசனுக்கும் பிரச்னை வராது எனச் சொல்ல வாய் துடித்தது. வெட்டிப்பேச்சில் கலந்துகொள்ள ஆர்வமானேன். இருந்தாலும் நடக்க ஆரம்பிப்பது போல சின்ன பாவ்லா.

அப்போது, வேகமாக பைக்கிலிருந்து குதித்து நேரிடையாக வாக்கிங்கில் இறங்கினார் நீண்டகால வாக்கிங் நண்பர். தமிழாசிரியர்...

திருமதி என்னோடு வாக்கிங் வராத நாள்களில் நானாகவோ அல்லது தானாகவோ தொற்றிக்கொள்ளும் அன்பர். வாக்கிங் மகான். அதாகப்பட்டது, நீண்ட காலமாக வாக்கிங் மேற்கொள்பவர்.

அவர் குதிப்பு, தாமதமாக வந்ததன் சமாளிப்பு என அவர் நினைத்திருக்கலாம். இறங்கிய சூட்டோடு பயிற்சியில் மூச்சை வெளியே தள்ளுகிறார். அவரே இடையில் அறுகம்புல் ஜூஸை வேறு உள்ளே தள்ளுகிறார். வாக்கிங் வந்து அறுகம்புல் ஜூஸ் குடித்துவிட்டால் தொப்பை கரைந்து காற்றில் போய்விடுமென்ற அபார நம்பிக்கை.

அவரிடம் விசாரித்தால், நம்பிக்கைதானே வாழ்க்கை என்பார்.

ஒரு முறை நம்பிக்கைதானே வாழ்க்கை, ”ஒரு லட்சம் ரூபாய் கைமாத்துக் கொடுங்களேன்” எனக் கேட்டேன். ஒரு வாரம் அவர் வாக்கிங் வரவே இல்லை.

கொஞ்ச நாள் தனியாக வாக்கிங் போக ஆரம்பித்தார். ஒரு வாரத்திற்குப்பின் நீண்ட தூரத்தில் வருவது தெரிந்து அவரைத் தவிர்க்க திரும்ப ஓடினேன். ஓரிரு நிமிடங்களில் அதே வட்டத்தில் அவர் மீண்டும் எதிர்ப்பட்டார். ஒருவேளை என்னைத் தவிர்க்க அவரும் திரும்ப ஓடியதில் இந்த சந்திப்பு விபத்து நடந்தேறியிருக்கலாம். யார் கண்டது? இருந்தாலும் அதை வெளிகாட்டாமல். ஐயா செளக்கியமா எனக்கேட்டேன். எனக்கென்ன கேடு என திருப்பி அடித்தார். இப்போது புரிந்திருக்கும் நான் திரும்ப ஓடியதன் காரணம்.

சார், லேசான எரிச்சலோடு ஏன் திரும்பி நடந்தீங்க?

அவர் சார் என்பார், நான் ஐயா என்பேன்.

சற்றே சமாளிப்புடன், அவர் தமிழய்யா என்பதால் என் ஆங்கிலப் புலமையை லைட்டாக புரிய வைக்க, 'ஆன்ந்தரோபோபியோ' எனச் சொன்னேன். மக்களைப் பார்த்தால் பயம் என்ற அர்த்தத்தில்.

பதிலுக்கு சிரித்துக்கொண்டே எனக்கு 'சூபோபியா' எனச் சொல்லிக்கொண்டே நகர்ந்தார். அவர் நகர்ந்ததை உறுதி செய்து நின்று நிதானித்து 'சூபோபியா' என்பதன் அர்த்தத்தை கூகுள் ஆண்டவரிடம் சமர்ப்பித்தேன். அது விலங்குகளைப் பார்த்தால் பயம் என்று விளக்கம் அளித்தது. அவர் எண்ணம் ஆசை எல்லாம் புரிந்தது.

Walking
Walking

அதிலிருந்து அவரிடம் வார்த்தை விளையாட்டுகளை வைத்துக்கொள்வதில்லை. இன்று, ”சார் லேட்டு ஆயிடுச்சு மாதிரி” என்றேன். ”ஆமாம், லேட்டாயிடிச்சு” என்றார்.

சிலேட் பிடித்த காலத்திலிருந்தே, ”ஏன் லேட்?” என்ற கேள்விக்கு ”லேட்” என்பதுதான் சர்வதேச பதிலாக இருந்தது; இருக்கிறது; இருக்கும். உலகில் கேள்வியே பதிலாக இருப்பவற்றில் இதுவும் ஒன்று.

ஒரு கேள்வியோடு பேட்டியை முடித்துக்கொண்டு மனைவியோடு மீண்டும் நடக்க ஐக்கியமானேன்.

உடன் வருபவர்கள் கேட்கும் கேள்விகளைவிட எதிரில் கைகளை வேகமாக வீசிக்கொண்டு வருபவர்கள் வீசும் கேள்விகள் வசீகரமானவை. அலாதியானவை.

அப்படித்தான் போன வாரம் இப்படியொரு சம்பவம் நடந்தது.

வழக்கமாகப் பேசிக்கொண்டே எதிரில் வரும் இரு பெண்களில் ஒருவர் மட்டுமே அன்றைய தினம் வந்தார்.

திருமதி அந்தப் பெண்மணியிடம், "என்ன அந்த அக்காவைக் காணல?” என்ற புலனாய்வுக்கேள்வியை வீச, "அவங்க சுகர் டெஸ்ட்டுக்குப் போய்ட்டாங்க” என்ற பதிலில் ஒரு துப்புக்கிடைத்த சந்தோசத்தில் திருமதி நடக்க ஆரம்பித்தார்.

அடுத்த நாள் நான் அந்தப் பெண்மணியிடம், "உங்க சுவர் லெவல் எப்படியிருக்கு?” எனக்கேட்க அவர்கள் பிபி லெவல் அதிகமாகிவிட்டது.

சாத்தான்களின் குளம்! - சிறுகதை #MyVikatan

யார் சொன்னாங்க?

”அவங்கதான்” என சக பெண்மணியை நான் கைகாட்ட அங்கே சகட்டுமேனிக்குசின்ன வசைமழை பொழிய ஆரம்பித்தது.

உற்றுக்கேட்டேன். தேன் வந்து பாய்ந்தது காதினிலே.

எனக்கு சுகர் இருக்கிறது கண்டவர்களுக்கெல்லாம் தெரியுணுமா?

கண்ட நாய் என்ற வார்த்தை வருவதற்குள் திருமதி என் கையில் கிள்ளி தள்ளிக்கொண்டு நகர்ந்தார்.

அதற்குப்பின் இருபுறமும் உதிர்ந்த வார்த்தைகள் கேட்கும் அரிய வாய்ப்பை இழந்தேன்.

அடுத்த நாள் தூரத்தில் தனித்தனியாக நடப்பது தெரிந்தது.

நான் திருமதியிடம், ”அவங்க பிரிஞ்சுட்டாங்கபோல…” எனச்சொல்ல,

”ஆமா.., வீட்டுல எதாவது பொருள் கேட்டா மட்டும் கண்ணாடி போடணுமுன்னு சொல்லுங்க,ரோட்டில ஒரு கிலோமீட்டருக்கு தள்ளி ஆளுகெல்லாம் கண்டுபிடிப்பீங்க” என ஆரம்பித்தார்.

அதற்குப்பின் வந்த ஏகவசனத்தை சபையின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

-தொடரும்

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு