Published:Updated:

வாஷிங்டனில் திருமணம் - 10

வாஷிங்டனில் திருமணம் - 10
வாஷிங்டனில் திருமணம் - 10

எழுத்தாளர் சாவியின் சூப்பர்ஹிட் நகைச்சுவைத் தொடர். பகுதி 10...

காலையிலிருந்தே கல்யாண வீடு பரபரப்பாயிருந்தது. சாஸ்திரிகள் அனைவரும் ஸ்நானத்தை முடித்துவிட்டு கோஷ்டியாக உட்கார்ந்து இட்லி காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பெண்கள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர். பொழுது புலர்ந்த பிறகும் அணைக்கப்படாமல், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காஸ் லைட்டுகள் ‘உஸ்ஸ்’ என்று சத்தமிட்டுக்கொண்டிருந்தன.

‘‘காட்டன் ஸாரை எங்கே காணோம்?’’ என்று கேட்டார் அம்மாஞ்சி.

‘‘ஹாலிவுட்டிலிருந்து சினிமா ஸ்டார்ஸெல்லாம் வருகிறார்களாம். ஏர்போட் போயிருக்கிறார்’’ என்றார் அய்யாசாமி.

அந்தச் சேதியைக் கேள்விப்பட்ட அம்மாஞ்சி வாத்தியார், ‘‘அடாடா! தெரிந்திருந்தால் நானும் ஏர்ப்போர்ட்டுக்குப் போயிருப்பேனே!’’ என்றார்.

‘‘இந்த நியூஸெல்லாம் நம்மிடம் யாரும் சொல்ல மாட்டார்கள். வைதிகாள்தானேங்கற அபிப்பிராயம்’’ என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.

‘‘...ஹ்ம்... மர்லின் மன்ரோவைத்தான் நேரில் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆம்பிஷன். கொடுத்து வைக்கவில்லை’’ என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார் அம்மாஞ்சி.

‘‘அதோ யார் வர்றா பாருங்கோ!’’ என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள் சிரித்துக் கொண்டே.

வாஷிங்டனில் திருமணம் - 10
வாஷிங்டனில் திருமணம் - 10

‘‘அடேடே! ராக்ஃபெல்லர் மாமி’’ என்று அதிசயப்பட்டார் அம்மாஞ்சி.

ஸ்பெஷலாக வரவழைத்திருந்த சரிகை போட்ட பனாரஸ் பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டு நெற்றியில் குங்குமப் பொட்டுடன் வந்து கொண்டிருந்தாள் அந்தச் சீமாட்டி.

‘‘பேஷ்! பேஷ்! உங்களுக்கு இந்த ரோஸ் கலர் புடவை பிரமாதமாயிருக்கு!’’ என்றார் அம்மாஞ்சி.

‘‘மகாலட்சுமி மாதிரி இருக்கு’’ என்றார் சாஸ்திரிகள்.

‘‘அது யார் மகாலட்சுமி!’’ ராக் மாமி கேட்டாள்.

‘‘அந்த அம்மாள் வைகுண்டத்திலே இருக்கிறார். உங்க மாதிரி பெரிய கோடீசுவரி!’’ என்றார் அம்மாஞ்சி.

‘‘ஸாஸ்ட்ரீஸெல்லாம் இட்லி சாப்பிட்டாச்சா? இட்லி கோகனட் சட்னியும் நல்ல காம்பினேஷன். நான்கூட நாலு இட்லி சாப்பிட்டேன்’’ என்றாள் மிஸஸ் ராக்.

‘‘எங்களுக்கென்ன அவசரம்? முதல்லே சம்பந்திகளை கவனிக்கச் சொல்லுங்க! பிள்ளைக்கு மாமா ரொம்பக் கோபமாக இருக்கிறாராம். சம்பந்தி வீட்டார் யாரும் சாப்பிடவில்லையாம்!’’ என்றார் அம்மாஞ்சி.

‘‘என்ன கோபம்?’’ என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

‘‘சம்பந்திகளுக்கு பவுடர் பால் காப்பி அனுப்பி விட்டார்களாம். அதான் கோபம்!’’ என்றார் அம்மாஞ்சி.

‘‘கோபத்துக்கு அது மட்டும் காரணமில்லே! நேற்று ஜானவாசத்தின்போது மாப்பிள்ளையின் மாமாவை நீங்க யாருமே கவனிக்கவில்லையாம். அவர் ஒரு கார் கேட்டிருந்தாராம். அதுவும் கொடுக்கவில்லையாம். அதனால் அவர் ரொம்பக் கோபமாக இருக்கிறார்!’’ என்றார் அய்யாசாமி.

‘‘அதோ காட்டன் ஸார் வர்றாரே!’’ என்று கூறினார் அம்மாஞ்சி

‘‘மெட்ராஸிலிருந்து பாப்ஜியும் வந்தாச்சு மேடம்!’’ எனக் கூறிக்கொண்டே வந்த பஞ்சு தன் நண்பனை மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

அந்த சீமாட்டி மகிழ்ச்சியோடு பாப்ஜியின் கையைக் குலுக்கி, ‘‘பாப்ஜி! ஐ ஆம் வெரி ஹாப்பி டு மீட் யூ! யு ஹாவ் கம் ஜஸ்ட் இன் டைம்! வெரி வெரி சந்தோஷம்! சங்கீத கோஷ்டியினர் எப்போது வருகிறார்கள்?’’ என்று விசாரித்தாள்.

‘‘பத்து மணிக்கு’’ என்றான் பாப்ஜி.

‘‘சரி; முதலில் இட்லி காப்பி சாப்பிட்டு விட்டு வா. மறுபடியும் ஏர்போர்ட் போகணும்’’ என்றான் பஞ்சு.

‘‘பஞ்ச்! உனக்கு ஏன் இப்படி தொண்டை கட்டிப் போச்சு? பாவம், சரியாகவே பேச முடியவில்லையே உன்னால்!’’ என்று வருத்தப்பட்டாள் மிஸஸ் ராக்.

‘‘ஒரு மாசமாய்க் கொஞ்சமான அலைச்சலா? கத்திக் கத்திக் குரலே வரவில்லை அவருக்கு’’ என்றார் அம்மாஞ்சி.

‘‘ஸ்டார்ஸையெல்லாம் மேப்ளவர் ஓட்டல்லே இறக்கிவிட்டேன், மேடம்!’’ என்றான் பஞ்சு.

‘‘வெரி குட்! இப்ப சம்பந்திச் சண்டை எந்தப் பொஸிஷன்லே இருக்குதுன்னு எனக்குச் சொல்ல முடியுமா?’’ என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

‘‘இதோ, இம்மீடியட்டா நான் போய்ப் பார்த்துட்டு வந்து சொல்றேன் மேடம்!’’ என்று கூறிவிட்டு வெளியே புறப்பட்டான் பஞ்சு.

பஞ்சுவைக் கண்டதும் பிள்ளைக்கு மாமா ஓரேயடியாய்க் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.

‘‘ஏன் இப்படி அலட்டிக்கிறீங்க? என்ன நடந்துவிட்டது இப்போது?’’ என்றான் பஞ்சு.

‘‘இன்னும் என்ன நடக்கணும்? செய்வதையெல்லாம் செய்துவிட்டு, என்ன நடந்துவிட்டது என்று வேறு கேட்கிறீர்களா?’’ என இரைந்தார் மாமா.

‘‘சாமாவய்யர்! உமக்கு போட்டியாகக் கத்துவதற்கு எனக்குத் திராணி இல்லை. விஷயத்தைச் சொல்லாமல் கத்தினால் எப்படி?’’ என்றான் பஞ்சு.

‘‘ஒகோ! நான் கத்துகிறேனா? அவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டதா விஷயம்? இன்னும் கொஞ்ச நேரம் போனால் குரைக்கிறேன் என்று கூடச் சொல்வீர்! ஆகட்டும், ஆகட்டும்; இன்றைக்குப் பெண்ணின் கழுத்தில் தாலி ஏறிவிடுகிறதா என்று பார்த்துவிடுகிறேன்’’ என்று கறுவினார் பிள்ளைக்கு மாமா.

இந்தச் சமயத்தில் அய்யாசாமி அய்யரே அங்கு வந்து சேர்ந்தார். அவர் பிள்ளையின் மாமாவைப் பார்த்து, ‘‘ஓய்! என்ன சொன்னீர்? என் பெண் கல்யாணம் நின்றுவிடும் என்றா சொன்னீர்? பார்த்துவிடலாமே அதையும்தான். என்னைய்யா செய்துவிடுவீர்! நானும் ராத்திரியிலிருந்து உம்மை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். வேண்டுமென்றே வம்புச்சண்டைக்கு இழுத்துக் கொண்டிருக்கிறீரே!’’ என்றார்.

இதற்குள் இவ்விரண்டு பேரும் சண்டையிட்டுக் கொள்வதை வேடிக்கை பார்க்கப் பெரும் கூட்டம் கூடிவிட்டது. சம்பந்திச் சண்டை முற்றிவிட்டது என்ற சேதியைக் கேள்விப்பட்ட மிஸஸ் ராக்ஃபெல்லர் தன்னுடைய சிநேகிதர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு ஓடோடிச் சென்றாள்.

சம்பந்தி வீட்டு மாமாவும், அய்யாசாமி அய்யரும் மல்யுத்தத்துக்கு நிற்பவர்களைப் போல் சீறிக் கொண்டிருந்தார்கள்.

‘‘வாட் பஞ்ச்! அங்கிள் ஸாம் என்ன சொல்கிறார்?’’ என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

‘‘முகூர்த்தம் நடக்காதாம். பார்த்து விடுகிறேன் ஒரு கை என்கிறார்’’ என்றார் பஞ்சு.

மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு கவலை வந்துவிட்டது. கல்யாணமே நின்று விடுமோ என்று அஞ்சினாள்.

‘‘சம்பந்திச் சண்டையை நிறுத்த என்ன செய்யலாம் பஞ்ச்?’’ என்று வேதனையோடு விசாரித்தாள்.

‘‘ஒன்றுமில்லை மேடம்! நீங்க மாமாவைப் பார்த்து பேசிவிட்டால் போதும்! எல்லாம் சரியாய்ப் போய்விடும்!’’ என்றான் பஞ்ச்.

உடனே மிஸஸ் ராக்ஃபெல்லர் கோபமாக நின்று கொண்டிருந்த மாமாவின் அருகில் சென்று அவர் கைகளைக் குலுக்கி, ‘‘வெரி ஸாரி மிஸ்டர் ஸாம்! ஏதோ தெரியாமல் நடந்து போச்சு, எக்ஸ்க்யூஸ் மி! எழுந்து வாங்க; முகூர்த்தத்துக்கு நேரமாச்சு’’ என்றாள்.

அவ்வளவுதான்; மாமாவின் கோபம் மாயமாக மறைந்துவிட்டது! முகத்தில் அசடு வழிய, ‘‘எனக்கொன்றும் கோபமில்லை. இந்தப் பெண்டுகள்தான் பவுடர் பால் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கென்ன வேலை?’’ என்றார் மாமா.

‘‘நீங்கள் எதையும் ‘ஹார்ட்’லே வைச்சுக்கக் கூடாது. இது உங்க வீட்டுக் கல்யாணம். எனக்குப் பிள்ளை வீடு, பெண் வீடு இரண்டுமே ஒண்ணுதான். வாங்க, வாங்க... பஞ்ச்! மாமாவுக்கு ஒரு கார் கொண்டு வரச் சொல்லு!’’ என்றாள் மிஸஸ் ராக். இதைக் கேட்டதும் மாமாவின் உச்சி குளிர்ந்து போயிற்று! உடனே, ‘‘அடே ராஜா!... முகூர்த்தத்துக்கு நேரமாச்சு. உம். உம்! புறப்படு’’ என்று மாப்பிள்ளையைத் துரிதப்படுத்தினார்.

வெளியே வந்த மிஸஸ் ராக், பஞ்சுவைப் பார்த்து, ‘‘வாட் பஞ்ச்! ஷம்பந்தி ஷண்டய் இவ்வளவுதானா?’’ என்று கேட்டாள்.

‘‘இவ்வளவுதான் மேடம்! இப்படித்தான் ஒன்றுமில்லாத அற்ப விஷயத்துக்கெல்லாம் சண்டை போட ஆரம்பித்துவிடுவார்கள். கல்யாணமே நின்றுவிடுமோ என்று கூடத் தோன்றிவிடும். விசாரிக்கப் போனால் விஷயம் ஒன்றுமிருக்காது. அநேகமாகக் காப்பியில்தான் தகராறெல்லாம் கிளம்புவது வழக்கம்’’ என்றான்.

வாஷிங்டனில் திருமணம் - 10
வாஷிங்டனில் திருமணம் - 10

‘‘அங்கிள் ஸாம் ஸீம்ஸ் டு பி வெரி மிஸ்சுவஸ்! இவரை ரொம்ப உஷாரா கவனிச்சுக்கணும்’’ என்றாள் மிஸஸ் ராக்.

‘‘கார் கொடுப்பதாகச் சொல்லிவிட்டீர்கள் அல்லவா! அது போதும்; இனி எல்லாக் கோபமும் தீர்ந்துவிடும்’’ என்றான் பஞ்சு.

மாப்பிள்ளை ராஜகோபாலன் பரதேசிக் கோலம் புறப்படுவதற்குத் தயாராக நின்றான்.

அங்கிள் ஸாம் மிகவும் உற்சாகத்தோடு புதுக்குடையை பிரித்து மாப்பிள்ளையின் தலைக்கு நேராகப் பிடித்தார். மாப்பிள்ளைத் தோழன் விசிறியைக் கொண்டு வந்து ராஜாவிடம் கொடுத்தான்.

நாகஸ்வரக்காரர்கள் முன்னால் செல்ல, ஆடவரும், பெண்டிரும் பின் தொடர, மாப்பிள்ளை மை தீட்டிய விழிகளுடன் காசிக்குப் புறப்பட்டார். அவர் முகத்தில் காணப்பட்ட மைப் புள்ளிகளைக் கண்ட அமெரிக்க நண்பர்கள், ‘பிக் மோல்ஸ்’ என்றனர்.

‘‘ப்ரைட்க்ரூம் எங்கே போகிறார்?’’ என்று கேட்டார் அமெரிக்க நண்பர் ஒருவர்.

‘‘பனாரஸ்!’’ என்றான் பஞ்சு.

‘‘மாப்பிள்ளைக்கு என்ன கோபம்? அங்கிள் ஸாம் தூண்டி விட்டுக் காசிக்கு அனுப்புகிறாரோ?’’ என்று சந்தேகப்பட்டனர் சிலர்.

‘‘பனாரஸ் இண்டியாவில் அல்லவா இருக்கிறது. அவ்வளவு தூரம் எப்படிச் செல்லப் போகிறார்? விமானத்தில் போய் வரட்டுமே’’ என்றார் இன்னொரு நண்பர்.

‘‘மாப்பிள்ளை பனாரஸ் போனால் நீங்கள் கட்டிக் கொண்டிருப்பதுபோல எனக்கும் ஒரு புடவை வாங்கி வரச் சொல்ல முடியுமா?’’ என்று மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் அவருடைய சிநேகிதி ஒருத்தி கேட்டார்.

ப்ரைட்க்ரூம் பனாரஸ் டூர் போவதைப் பார்க்க பல்லாயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகக் காத்திருந்தனர்.

பத்திரிகைக்காரர்கள் மாப்பிள்ளை கோபித்துக் கொண்டு செல்லும் காட்சியைப் படமெடுத்துப் போட்டு

‘ப்ரைட்க்ரூம் லெப்ட் பார் பனாரஸ்!’

‘பாத யாத்ரா லைக் வினோபாஜி!’

‘அன்வில்லிங் டு மேரி ருக்கு!’

‘ஸிச்சுவேஷன் வெரி க்ளூமி!’

என்று எழுதியிருந்தனர்.

அந்தச் செய்திக் கண்ட அமெரிக்க மக்கள் பரபரப்படைந்து, ‘ஒருவேளை கல்யாணமே நடக்காமல் போய்விடுமோ?’ என்ற கவலையில் ஆழ்ந்தனர்.

நல்லவேளையாக பனாரஸ் யாத்திரை தெருக்கோடியிலேயே நின்றுவிட்டது! ஆனால் அதற்குக் காரணம் என்ன என்பது அமெரிக்கர்களுக்குப் புரியவில்லை.

வாஷிங்டனில் திருமணம் - 10
வாஷிங்டனில் திருமணம் - 10

மாப்பிள்ளையிடம் சென்று, ‘‘ஏன் திரும்பி விட்டீர்கள்? பனாரஸ் போகவில்லையா?’’ என்று கேட்டனர்.

‘‘இல்லை; பனாரஸில் வெயில் அதிகமாயிருக்கிறதாம். ஆகையால் அப்புறம்தான் போகப் போகிறார்’’ என்று பஞ்சுவே அவர்களுக்குப் பதில் கூறி அனுப்பிவிட்டான்.

பத்திரிகையாளர்கள் உடனே, ‘‘ப்ரைட்க்ரூம் கான்ஸல்ஸ் ஹிஸ் பனாரஸ் ரூர்!’’ ‘‘முகூரட் இஸ் டேக்கிங் ப்ளேஸ்!’’ என்று மறுபடியும் ஒரு செய்தியைப் பிரசுரித்தார்கள். அதைக் கண்ட பிறகுதான் அமெரிக்க மக்களின் கவலை நீங்கிற்று.

மாப்பிள்ளை சம்மர் ஹவுஸ் வாசலில் வந்து நின்றதும் பெண்கள் ஆரத்தி சுற்றிக் கொட்டினார்கள்.

‘‘நேரம் ஆகிறது; மாலை மாற்ற வேண்டாமா? மணப் பெண்ணைக் கூப்பிடுங்கோ’’ என்று இரைந்தார் அப்பு சாஸ்திரிகள்.

தஞ்சாவூரிலிருந்து ஸ்பெஷலாகக் கொண்டு வந்திருந்த மலர் மாலைகள் இரண்டையும் எடுத்துக் கொண்டு ஓடிவந்தான் பாப்ஜி.

இரண்டு மாமன்மார்களும் கச்சத்தை வரிந்து கட்டிக் கொண்டு, பெண்ணுக்கும், பிள்ளைக்கும் தோள் கொடுக்கத் தயாராக நின்றனர்.

மாலை மாற்றும் வேடிக்கையைக் காண, தெரு முழுவதும், ‘ஜே ஜே’ என்று கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

புத்தாடை உடுத்தி, பூச்சூடி, புது நகைகள் அணிந்து புன்முறுவல் பூத்த முகத்துடன் அழகு வடிவமாக நின்ற மணப்பெண் ருக்மிணியை, வசந்தாவும், லோரிட்டாவும் கைபிடித்து வாசலுக்கு அழைத்து வந்தனர்.

முதலில் பெண்ணின் மாமா மணப்பெண்ணை தோள் மீது தூக்கிக் கொடுத்தார். அடுத்தாற்போல் பிள்ளையின் மாமா, ‘‘வாடா ராஜா, வா!’’ என்று உற்சாகத்தோடு குதித்து வந்து மாப்பிள்ளையைத் தூக்கிக் கொண்டார். டெலிவிஷன் கேமராக்களும் செய்தி படக் கேமராக்களும் மூலைக்கு மூலை இயங்கிக் கொண்டிருந்தன.

நாகஸ்வரக்காரர்களும் பாண்டு வாத்தியக்காரர்களும் இங்கிலீஷ் நோட் வாசிக்கத் தொடங்கினார்கள்.

மாமன்மார்கள் இருவரும் நாதஸ்வர இசைக்கு ஏற்பட ஆடத் தொடங்கினார்கள். பிள்ளைக்கு மாமா குதித்துக் குதித்து ஆடினார். பெண்ணுக்கு மாமா கால்களை முன்னும் பின்னுமாக எடுத்து வைத்து ஆடினார். கடைசியில் பெண்ணும் பிள்ளையும் கொட்டு மேள கோஷத்துடன் மாலை மாற்றிக் கொண்டார்கள். அந்த டான்ஸைக் கண்ட அமெரிக்க மக்கள் ஆனந்தம் தாங்காமல் கை கொட்டி ஆரவாரம் செய்தார்கள்! சிலர் இரண்டு மாமன்மார்களையும் கை குலுக்கி, ‘ஒண்டர்புல் டான்ஸ்! வெரி டிஃபிகல்ட் ஆர்ட்!’ என்று பாராட்டி மகிழ்ந்தனர்.

‘‘நியூயார்க்கில் இம்மாதிரி ஒரு டான்ஸ் செய்வதற்கு ஒப்புக்கொள்ள முடியுமா?’’ என்று கேட்டார் நியூயார்க் பிரமுகர் ஒருவர்.

‘‘வெரி ஸாரி! மாஸ்கோவில் நடைபெறும் சர்வதேச நாட்டிய விழாவில் கலந்து கொள்வதற்காக ஏற்கெனவே ஒப்புக் கொண்டுவிட்டோம். ஆகவே, இந்த இயர் வருவதற்கில்லை’’ என்றார் பெண்ணுக்கு மாமா.

பிரஸ்காரர்கள் பெண்ணின் மாமாவிடம் ‘‘தங்கள் பெயர் என்ன?’’ என்று விசாரித்தனர்.

வாஷிங்டனில் திருமணம் - 10
வாஷிங்டனில் திருமணம் - 10

‘‘ராமய்யர்’’ என்றார் அவர். அடுத்தாற்போல் பிள்ளையின் மாமாவை அணுகி, ‘‘யுவர் நேம் ப்ளீஸ்!’’ என்று கேட்டனர். ‘‘சாமாவய்யர்!’’ என்றார் அவர். அவ்வளவுதான்; அவர்கள் பெயரை அங்கிள் ஸாம் அண்ட் ராம் என்று சுருக்கி ‘‘தி மேரேஜ் டான்ஸ் ஆப் ஸாம் அண்ட் ராம்’’ என்று பத்திரிகைகளில் போட்டோவுடன் செய்தியும் பிரசுரித்து விட்டார்கள்!

அடுத்தாற்போல் ஊஞ்சல் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. பெண்ணும், பிள்ளையும் ஊஞ்சலில் அமர்ந்ததும், உள்ளூர் நாகஸ்வரக்காரர் லாலியும் ஊஞ்சலும் பாட, ராக்ஃபெல்லர் மாமி உள்பட சுமங்கலிகள் ஏழெட்டுப்பேர் மஞ்சள் சிவப்பு நிற அன்னப் பிடிகளை எடுத்துக் கொண்டு ஊஞ்சலை வலமாக வந்து நாலு திசைகளிலும் உருட்டிவிட்டனர். இரண்டு சுமங்கலிகள் குத்து விளக்கைப் பெரிய பெரிய வெள்ளி அடுக்குகளில் வைத்துப் புடவைத் தலைப்பால் மூடியபடி சுற்றி வந்தனர். இன்னும் இரண்டு பேர் செம்பில் தண்ணீரை நிரம்பிக் கொண்டு ஊஞ்சலைச் சுற்றிலும் ஊற்றிக் கொண்டே மெதுவாகச் சுற்றி வந்தனர்.

மஞ்சளும் சிவப்பும் வெள்ளையுமாக அன்னப்பிடிகளைக் கண்ட அமெரிக்க மக்கள், ‘‘ஹவ் டு தே மேக் தீஸ் கலர்ட் ரைஸ் பால்ஸ்?’’ என்று வியந்தனர்!

மணப் பந்தலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அமெரிக்க மாதர்களில் பலர், புடவை அணிந்து, தென்னிந்திய சுமங்கலிகளைப் போலக்காட்சி அளித்தனர். ராக்ஃபெல்லர் மாமி மட்டும் அரை மணி நேரத்துக்கெல்லாம் புடவையை மாற்றிவிட்டு தன்னுடைய வழக்கமான டிரஸ்ஸை அணிந்து கொண்டுவிட்டாள்.

மணப்பந்தலுக்கு அருகே வைத்திருந்த வெள்ளிப் பாத்திரங்களும், மற்றச் சீர்வரிசைகளும் ஒரு பெரிய கண்காட்சி போல் விளங்கின.

ஓமப் புகை, நாகஸ்வர இசை, சாஸ்திரிகளின் மந்திர கோஷம், புதுப் புடவையின் சலசலப்பு, ஊதுவத்தி சந்தனம், பழம், புஷ்பம் ஆகியவற்றின் கலவையான மணம் இவ்வளவும் அமெரிக்கர்களுக்குப் பெரும் அதிசயத்தையும், உற்சாகத்தையும் அளித்தன. இலை போடுவதற்கான ஏற்பாடுகளில் முனைந்திருந்தான் பஞ்சு.

மிஸஸ் ராக்ஃபெல்லர் மணப்பந்தல் வாசலில் நின்று விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாள். ஈவினிங் ரிசப்ஷனுக்கு வரப்போவதாகச் சொல்லியிருந்த மிஸஸ் கென்னடி திடீரென்று முகூர்த்தத்துக்கே காரில் வந்து இறங்கியதைக் கண்ட மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை. மிஸஸ் கென்னடியை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று மணமகன், மணமகள், பஞ்ச், கோபாலய்யர், அய்யாசாமி, அங்கிள் ஸாம் அண்ட் ராம் அனைவரையும் அறிமுகப்படுத்தினாள்.

வைதிகச் சடங்குகள் யாவும் முடிந்ததும் சரியாகப் பத்து மணிக்கு மணப்பெண் அரக்கு வர்ண கூறைச் சேலையை உடுத்தி வந்து, தன் தந்தையின் மடி மீது அமர்ந்தாள். கெட்டி மேளம் முழங்க, சாஸ்திரிகள் ‘மாங்கல்யம் தந்துநானே’ என்ற மங்கள சுலோகத்தைச் சொல்ல, மணமகன் சிரஞ்சீவி ராஜகோபாலன் சௌபாக்கியவதி ருக்மணியின் கழுத்தியில் தாலியைக் கட்டி முடித்தான்.

அனைவரும் அட்சதைகளை மணமக்கள் மீது போட்டு ஆசீர்வாதம் செய்தார்கள். வெகுநேரமாக இடைவிடாமல் முழங்கிக் கொண்டிருந்த கெட்டி மேளம் ஒருவிதமாக அடங்கியபோது பந்தலில் கூடியிருந்த மக்களின் கூக்குரல் மேலோங்கி ஒலித்தது.

மிஸஸ் ராக்ஃபெல்லர் ஒரு பெருமூச்சு விட்டபடியே, ‘‘மை காட்! தாலி கட்டி முடிந்தது. இப்போதுதான் எனக்கு நிம்மதி ஆயிற்று. சௌத் இண்டியன் மேரேஜ் என்பது சாதாரண விஷயமில்லை. ‘கல்யாணம் செய்து பார்!’ என்று டமிலில் சொல்லுவாங்களே, நல்ல ‘ப்ராவர்ப்’ அது’’ என்றாள் தன் கணவரிடம்.

வாஷிங்டனில் திருமணம் - 10
வாஷிங்டனில் திருமணம் - 10

முகூர்த்தத்துக்கு வந்திருந்த பிரமுகர்களும், சீமாட்டிகளும் ஒவ்வொருவராக வந்து ராக்ஃபெல்லர் தம்பதியரிடம் விடை பெற்றுக் கொண்டனர். பாப்ஜியும், லல்லியும் வாசலில் நின்ற வண்ணம் வந்தர்களுக்கெல்லாம் தாம்பூலமும், தேங்காயும் அடங்கிய பிளாஸ்டிக் பைகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.

‘‘மேடம்! இலை போடலாமா?’’ என்று கேட்டுக் கொண்டே வந்தான் பஞ்சு.

‘‘ஓ எஸ்! அமெரிக்கன் பிரண்ட்ஸுக்கு ஆஸ்யூஷ்வல் ஸெபரேட் பந்திதான்’’ என்றாள் மிஸஸ் ராக்.

கல்யாண விருந்தை அமெரிக்க நண்பர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்கள். அன்றைய விருந்துக்கு சுமார் ஐயாயிரம் அமெரிக்கர்கள் வந்திருந்தார்கள். விருந்தில் பரிமாறப்பட்ட ஜாங்கிரியும், வடுமாங்காயையும் கையில் எடுத்து அதிசயத்துடன் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அவை பெரும் புதிராக இருந்தன. ஒருவர் ஜாங்கிரியைக் கையில் எடுத்து அதற்கு ஆரம்பம் எது, முடிவு என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார். இன்னும் சிலர், சிக்கலான ஜாங்கிரிப் பின்னலைப் பார்த்துவிட்டு, ‘‘வெரி காம்ப்ளிகேடட் ஸ்வீட்!’’ என்றனர்.

‘ஆரம்பம் தெரிந்துவிட்டால் முடிவைக் கண்டுபிடித்து விடுவேன்’ என்றார் ஒருவர். ‘முடிவு தெரிந்துவிட்டால் நான் ஆரம்பத்தைக் கண்டுபிடித்து விடுவேன்’ என்றார் இன்னொருவர். ஆரம்பம் தெரியாததால் பல பேர் ஜாங்கிரியை எந்த இடத்தில் சாப்பிட ஆரம்பிப்பது என்று சாப்பிடாமலேயே விட்டு விட்டார்கள். இன்னொருவர் ஜாங்கிரி இழைகளைப் பாதியில் கத்தரித்து அதைக் கயிறு போல் நீளமாகச் செய்து அதன் மொத்த நீளம் எவ்வளவு என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினார்.

பலர் வடு மாங்காயைக் கடிக்கத் தெரியாமல் விரலைக் கடித்துக்கொண்டு ‘‘ஆ! ஆ! ஆ!’’ என்று அலறினர். பற்களுக்கிடையில் விரல்கள் அகப்பட்டுக் கொண்டதால் காயம் ஏற்படவே, விரல்களைச் சுற்றி பிளாஸ்திரி போட்டுக்கொண்டார்கள்.

அதைக்கண்ட ஹாரிஹாப்ஸ், ‘‘ராத்திரி டின்னருக்கு வடு மாங்காய் பரிமாறும்போது ஒவ்வொருவர் பக்கத்திலும் ஒவ்வொரு ‘பஸ்ட் எய்ட் பாக்ஸ்’ வைத்துவிட வேண்டும்’’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

கை விரல்களில் கட்டுப் போட்டுக் கொண்டிருந்த அமெரிக்க நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டபோது, ‘‘ஓ! வடுமாங்காய் சாப்பிட்டீர்களா?’’ என்று கேலியாக விசாரித்துக்கொண்டனர்.

வடுமாங்காய் சாப்பிட்டுக் கை விரல்களில் கட்டுப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை பத்திரிகையில் வெளியாயின.

இன்னும் சரியாக எண்ணி முடியவில்லை என்றும், இரவு விருந்தின்போது மேலும் பல ‘காஷுவாலிடி’கள் ஏற்படலாமென்றும் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.

விரலில் துணி சுற்றிக்கொண்டு நின்ற தவில் வித்வான்களைக் கண்ட அமெரிக்கர் சிலர் ‘‘ஐயோ பாவம்! இவர்களுக்கும் வடுமாங்காய் சாப்பிடத் தெரியவில்லை போலிருக்கிறது’’ என்று சொல்லி அனுதாபப்பட்டனர்.

‘‘மிஸ்டர் பஞ்ச்! நாரிக்ரூவாஸெல்லாம் சாப்பிட்டாச்சா? முதல்லே அவங்களைச் சாப்பிடச் சொல்லு!’’ என்று சொல்லிக் கொண்டே வந்தாள் மிஸஸ் ராக்.

வாஷிங்டனில் திருமணம் - 10
வாஷிங்டனில் திருமணம் - 10

‘‘அவர்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒருத்தரைக் கூடக் காணவில்லை!’’ என்றான் பஞ்சு.

‘‘அவர்கள் வாஷிங்டன் வீதிகளில் ஊசி விற்றுக் கொண்டிருக்கிறார்களாம்’’ என்றார் அம்மாஞ்சி.

சம்மர் ஹவுஸிலும் டம்பர்ட்டன் ஓக்ஸிலும் சாப்பாட்டுப் பந்திகள் நடந்தது நடந்தபடியே இருந்தன.

பஞ்சு மிகவும் களைத்து போயிருந்தான்.

‘‘பஞ்சு அண்ணா! நீங்க சாப்பிடவே இல்லையே! இலை போடட்டுமா?’’ என்று விசாரித்தார் ஹெட் குக் வைத்தா.

‘‘எனக்கு ஒன்றுமே வேண்டாம். ஒரு டம்ளர் மோர் மட்டும் கொடு; அது போதும். எங்காவது ஒரு துண்டைக் கீழே போட்டு முடங்கிப் படுத்துக்கொண்டால் தேவலை போலிருக்கிறது’’ என்றான் பஞ்சு.

‘‘பஸ்ட் க்ளாஸ் பன்னீர் ரசம் அண்ணா இன்றைக்கு! ரசம் மட்டும் கொஞ்சம் சாப்பிடுங்கோ. அப்புறம் பாதம் கீர் தருகிறேன்’’ என்றான் வைத்தா.

‘‘சரி, ரசம் மட்டும் கொண்டு வா’’ என்றான் பஞ்சு.

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு