Published:Updated:

திருக்குறள் மாநாடு: பெரியாருக்குப் பிடித்த குறளும்... வைகோ பின்பற்றாத குறளும்!

திருக்குறள் மாநாடு
திருக்குறள் மாநாடு

ஈகைத் திருநாளான ஆகஸ்ட் 12-ம் தேதி, 'திருக்குறள் மாநாடு' பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பால் நடத்தப்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அரசியல் தலைவர்கள், தங்களுக்கு மிகவும் பிடித்தமான குறட்பாக்கள் பற்றிப் பேசினர்.

திருக்குறள் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "திருக்குறளுக்கு எந்த மதமும் சொந்தம்கொண்டாட முடியாது. ஏனெனில், அது எவ்வித ஆதிக்கத்துக்கும் எதிரானது. பெரியாருக்குப் பொதுவாழ்க்கையில் மிகவும் பிடித்த குறட்பா,

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும் - என்பதுதான்.

கி.வீரமணி
கி.வீரமணி

அதாவது, மானம் பறிபோனது என நாம் கவலைப்படக்கூடாது. ஏனெனில், நம் இனமானத்தைக் காப்பாற்றுவதற்காக நம்முடைய மானத்தைக்கூட இழக்கத் தயாராக இருக்கவேண்டும். வாழ்க பெரியார்... வாழ்க வள்ளுவர்!" என்றார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, "அந்தக் காலத்தில் பொதுவாக ஒருவருடைய வீட்டில் காந்தி, நேரு, நேதாஜி ஆகிய மூவரில், ஒருவர் படமாவது இருக்கும். எங்கள் குடும்பம் காங்கிரஸ் குடும்பம் என்றபோதிலும் வீட்டில் எந்தத் தலைவர்களின் படமும் கிடையாது. திருவள்ளுவர் படம் ஒன்று மட்டும்தான் இருக்கும். என்னுடைய அப்பா வாரம் ஒருமுறை எனக்குக் கடிதம் எழுதுவார். ஒருமுறைக்கு மூன்று குறட்பாக்களாவது எழுதுவார். அடிக்கடி அவர் எழுதும் குறள்,

ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை

போகா றகலாக் கடை

வைகோ
வைகோ

'ஒருவனுக்கு வரும்படி குறைவாக இருந்தாலும் செலவு வரவுக்கும் அதிகமானதாக இல்லையெனில், கேடு வராது' என்பதுதான் அந்தக் குறளின் பொருள். 'நான் வரவறிந்து செய்வதில்லை. செலவு செய்வதையே குறிக்கோளாக வைத்துள்ளேன்' என்பதை என் மூத்த தமக்கை அடிக்கடி சொல்வார். கடைசிவரை என் அப்பா சொன்னபடி, அந்தக் குறள்படி மட்டும் என்னால் நடக்கமுடியவில்லை" என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், "அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்' என்று குறளின் மகத்துவத்தைப் போற்றியுள்ளனர். சமத்துவத்தைப் பரப்ப திருக்குறளுக்கு நிகர் எதுவும் இல்லை. ஆதிக்கத்துக்கு எதிராக முழங்க ஒரு திருக்குறள் வேண்டியதில்லை. திருக்குறள் ஒன்றில் உள்ள மூன்று வார்த்தைகளே போதும். அதுதான், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...'" என்றார்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

நடிகர் சத்யராஜ், "இந்த மேடையில இருக்குற எல்லாரும், ஏதோ நான் அந்த வருஷம் படிச்சுமுடிச்சேன். இந்த வருஷம் முடிச்சு கல்லூரியைவிட்டு வெளியே வந்தேனு சொல்ற மாதிரி, அந்தச் சிறையில இருந்தேன்; இந்தச் சிறையில இத்தனை வருசம் இருந்தேனு சொன்னாங்க. அதெல்லாம் கேட்கும்போது எனக்கு மேடையில நிக்கவே கூச்சமா இருக்கு. எல்லாரும் அவுங்கவங்களுக்குப் பிடிச்ச குறள் பத்தி சொன்னாங்க.

பெரியாரோட தொண்டனா, ஒரு கடவுள் மறுப்பாளனாக எனக்குப் பிடிச்ச குறள்,

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

வைகோ, சத்யராஜ்
வைகோ, சத்யராஜ்

தெய்வத்தால்கூட ஏதாவது செய்ய முடியாம போகலாம். ஆனா, நீ முயற்சி செஞ்சுட்டே இருந்தா நிச்சயம், அந்த முயற்சிக்கான கூலி கிடைக்கும். அதுனாலதான் நான் முடிவு பண்ணிட்டேன். கடவுள்கிட்ட அப்ளிகேஷன போட்டுப்போட்டு சோர்வடைஞ்சு, அவர் கூலிகொடுக்க முடியாதுனு கைவிட்டு, அப்புறம் முயற்சி செய்யுறதுக்குப் பதிலா, நேரடியாவே முயற்சியே பண்ணிடலாம். நம்ம சக்திய சேமிச்சு வெச்சுக்கலாம்ல" என்று வழக்கம்போலத் தன்னுடைய கோயம்புத்தூர் குசும்போடு பேசி, சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.

உங்களுக்குப் பிடித்த குறளை கமென்டில் பதிவு செய்யுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு