Published:Updated:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சோனியா காந்தி, ராகுலுக்குப் பரிசளித்த நூலில் என்ன ஸ்பெஷல்?

ஸ்டாலின் - சோனியா சந்திப்பு
ஸ்டாலின் - சோனியா சந்திப்பு

30 ஆண்டுகளுக்கும் மேலாக இடப்பெயர் ஆய்வு, பானைத்தட ஆய்வு என இந்தியா முழுவதும் பயணித்து கள ஆய்வு செய்து, பன்முகத் தரவுகளை முன்வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலினின் முதல் டெல்லி பயணம் இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. பிரதமர் மோடியைச் சந்தித்து 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி பேச்சுவார்த்தை நடத்திய ஸ்டாலின், இடதுசாரித் தலைவர்கள் ராஜா, சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார். சோனியா, ராகுலைச் சந்தித்த ஸ்டாலின், அவர்களுக்கு ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் எழுதிய "Journey of a Civilization: Indus to Vaigai" என்ற ஆங்கில நூலைப் பரிசளித்தார். தமிழகத்தின் தொன்மையான வரலாற்றைத் தொட்டு 'சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' என்று நிறுவும் வகையில் மிகுந்த ஆய்வுத்தன்மையோடு எழுதப்பட்ட நூல் இது.

ஆர்.பாலகிருஷ்ணன்
ஆர்.பாலகிருஷ்ணன்
Sudarsan Pattnaik/ Facebook

30 ஆண்டுகளுக்கும் மேலாக இடப்பெயர் ஆய்வு, பானைத்தட ஆய்வு என இந்தியா முழுவதும் பயணித்து கள ஆய்வு செய்து தொல்லியல், மானிடவியல், மரபணுவியல், சமூகவியல், மொழியியல், இடப்பெயரியல், கல்வெட்டியல், இலக்கிய ஆவணங்கள் என பன்முகத் தரவுகளை முன்வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் பாலகிருஷ்ணன்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் என்ற ஊரில் பிறந்த பாலகிருஷ்ணன், தமிழ் இலக்கியம் பயின்று, முதன்முதலில் தமிழிலேயே சிவில் சர்வீஸ் தேர்வெழுதி சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றவர். இந்திய தேர்தல் ஆணையத்தில் துணை ஆணையராகப் பணியாற்றியதோடு, ஒடிஸா மாநிலத்தில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். நிதித்துறை, பண்பாட்டுத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றிய பாலகிருஷ்ணனை ஓய்வுக்குப் பிறகும் முதல்வரின் முதன்மை ஆலோசகராக்கி தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறது ஒடிஸா.

ஆர்.பாலகிருஷ்ணன்
ஆர்.பாலகிருஷ்ணன்

ஆட்சிப்பணி தாண்டி இலக்கியம், வரலாறு, இதழியலில் தீவிர ஆர்வமுள்ளவர் பாலகிருஷ்ணன். ஆட்சிப்பணிக்குச் செல்லும்முன் ஒரு நாளிதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். 'அன்புள்ள அம்மா', 'சிறகுக்குள் வானம்', 'நாட்டுக்குறள்', 'பன்மாயக் கள்வன்', 'இரண்டாம் சுற்று', 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' போன்ற நூல்களையும் எழுதியிருக்கிறார்.

தொடக்கம் முதலே சிந்துவெளிப்பண்பாட்டின் தடத்தில் தீவிர ஆர்வம் கொண்டிருந்த பாலகிருஷ்ணன், வடஇந்திய மாநிலங்களில் பணியாற்றிய காலங்களில் தொடர்ந்து பயணித்து களப்பணிகள் செய்தார். 'சிந்துவெளி நாகரீகம்தான் பழந்தமிழர்களின் பண்பாட்டுத் தொட்டில்' என்று தன் ஆய்வுகள் மூலம் நிறுவினார். திராவிட மொழியியலையும் சிந்துவெளிப் புவியியலையும் பிணைத்து ஒரு புதிய கருதுகோளை உருவாக்கினார். கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சிந்துவெளி குறித்த தன் ஆய்வுக்கட்டுரையைச் சமர்பித்தார். பாலகிருஷ்ணனின் ஆய்வுகள் உலகளவில் பேசுபொருளாக இருக்கின்றன.

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

ஒரு இனத்தின் வரலாற்றுப் பெருமை என்பது வேற்று மொழிகளில் பதிப்பிக்கப்பட்டால் தான் உலகளாவிய அங்கீகாரம் பெறும். தன் வாழ்நாள் ஆய்வுகளை முழுமையாகத் திரட்டி பாலகிருஷ்ணன் ஆங்கிலத்தில் உருவாக்கிய நூல்தான் 'Journey of a Civilization: Indus to Vaigai'. சிந்துவெளிக்கும் வைகைக்குமான தொடர்புகளை மிகவும் அழுத்தமாக நிறுவுகிறது இந்தநூல்.

பேரழகான கட்டமைப்புடன் 524 பக்கங்கள் கொண்ட இந்தநூல், சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்ற கருத்தை மெய்ப்பிக்கும் ஆதாரங்களை நிறைத்து வைத்திருக்கிறது. அதற்கு சங்க இலக்கியங்களை ஆதாரமாக முன்வைக்கிறது. நம் இலக்கியங்கள் பேசும் கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்கள் சிந்துவெளியை ஒட்டி வடஇந்தியப் பகுதிகளில் இருக்கின்றன. அதிலிருந்து இழைபிடித்து செங்கல், பானை, சிவப்பு நிறம், அகழ்வில் தோண்டியெடுத்த விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள், காளையும் மனிதனும் மோதிக்கொள்ளும் சிலைகள் என சிந்துவெளியின் தொல்தமிழ் அடையாளங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்த நூல். கீழடி ஆய்வுகள், பாலகிருஷ்ணனின் கள ஆய்வு முடிவுகளுக்கு அழுத்தமான ஆதாரங்களாக மாறியிருக்கின்றன.

வட இந்திய வரலாற்றாய்வாளர்கள் மத்தியில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை உருவாக்கியிருக்கும் இந்த நூலை முதல்வர் காங்கிரஸ் தலைவர்களுக்கு வழங்கியது குறித்து பாலகிருஷ்ணனிடம் பேசினேன்.

"இந்திய துணைக்கண்ட வரலாற்றை சிந்துவெளி பண்பாட்டுக்கு வெளியே இருந்து எப்படி தொடங்க முடியாதோ அதுபோலவே சங்க இலக்கியங்களின் துணை இல்லாமல் புரிந்து கொள்ளமுடியாது. சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்பது முழக்கம் அல்ல... தரவுகள் சார்ந்த புரிதல். சிந்துவெளித் தொல்லியல் தடயங்கள் அந்த பண்பாட்டின் வன்பொருள் என்றால் அதன் மென்பொருள் சங்க இலக்கியம்தான். சிந்துவெளி இந்தியாவின் முதல் நகர்மய வாழ்வியலின் உச்சகட்டம் என்றால் இந்தியாவின் முதல் நகர்மய இலக்கியம் சங்க இலக்கியம்தான். இந்த நூல் இந்தியவியலின் இரண்டு புதிர்களுக்கு விடை தேடுகிறது. ஒன்று, சிந்துவெளி மக்கள் யார், அவர்களின் மொழி என்ன, அம்மக்கள் என்ன ஆனார்கள் என்பது. இரண்டு, தொல்தமிழ்த் தொன்மங்களின் தோற்றப்புள்ளி எது, அதன் பண்பாட்டு பட்டறிவுகளின் தடங்களை மீட்டுருவாக்கம் செய்வது எப்படி என்பதற்கான தேடல்.

A Journey of Civilization
A Journey of Civilization

இந்த இரண்டு கேள்விகளுக்கான விடைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. சொல்லப்போனால் அந்த இரண்டு விடைகளும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களே. இந்தியப் பண்பாட்டின் அடித்தளமே அதன் பன்முகத்தன்மைதான். இந்தியப் பண்பாடு ஒரு உருக்கும் பானை அல்ல ( Melting Pot) அது ஒரு சாலட் கிண்ணமும் அல்ல ( Salad Bowl). அது ஒரு மழைக்காடு ( Rain Forest) என்பதுதான் இந்த நூல் தேடிக் கண்டறியும் புரிதல். இது சிந்துவெளிக்கும் பொருந்தும். சங்கத் தமிழ் வாழ்வியல் விழுமியங்களுக்கும் பொருந்தும். அது இன்றைய இந்தியாவிற்கும் பொருந்தும் என்பது தான் இந்த நூல் முன்வைக்கும் கருத்தியல்!" என்றார் பாலகிருஷ்ணன்.

இந்தாண்டு இறுதிக்குள் இந்த நூல் தமிழிலும் வரவிருக்கிறது.

திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்த பிறகு, திராவிட இயக்கங்களின் எழுச்சி குறித்த விவாதம் தேசியளவில் எழுந்திருக்கும் சூழலில், ஸ்டாலின் இந்த நூலை காங்கிரஸ் தலைவர்களுக்கு பரிசளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது!
அடுத்த கட்டுரைக்கு