Published:Updated:

பூர்வகுடி கவிஞர் Natalie Diaz-க்கு புலிட்சர் விருது... இவர் கவிதைகள் கலங்கடிப்பது ஏன்?

"நீரைப்பற்றிய ஒரு கதை சொல்லவா? முன்னொரு காலத்தில் நாங்கள் இருந்தோம். அமெரிக்காவின் தாகம் எங்களை குடித்துத் தீர்க்க முயன்றது நாங்கள் இன்னமும் இருக்கிறோம்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அமெரிக்காவில் வாழ்ந்த (வாழும்) மஹாவி என்ற பூர்வகுடி இனத்தைச் சேர்ந்தவர் Natalie Diaz.

செவ்விந்தியர் என்று அறியாமையிலும், ஆதிக்க மனநிலையிலும் பெயரிடப்பட்ட தன் இன மக்களை, மொழியை , கலாசாரத்தை, வாழ்வாதாரங்களை , நிலத்தை, கடவுளர்களை, வழிபாட்டிடங்களை , வழிவழியாக வந்த அறிவை எப்படி கல்வி என்றும், கலாச்சாரம் என்றும், அவர்களை மத்திய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற பெயரிலும் அழித்து ஒழித்தார்கள் என்பதை தன்னுடைய நீள் கவிதைகள் மூலம் தொடர்ந்து எழுதி வருகிறவர் Natalie Diaz.

நடாலி இரண்டாம் தொகுப்பான ‘’Post Colonial Love Poem’’- ற்கு Pulitzer விருது 2021 வழங்கப்பட்டிருக்கிறது. இவர் Needles California வின் ஃபோர்ட் மஹாவியில் 1978-ல் பிறந்தவர். இவரது முதல் கவிதை தொகுப்பு 2012-ல் வெளி வந்த 'When My Brother Was An Aztec'. இவர் தேசிய அளவிலான கூடைபந்தாட்ட வீரரும் கூட. தற்போது அரிசோனா பல்கலைக்கழகத்தில் Creative Writing MFA program-ன் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

பூர்வகுடி கவிஞர் Natalie Diaz-க்கு புலிட்சர்  விருது... இவர் கவிதைகள் கலங்கடிப்பது ஏன்?

நடாலி தம்முடைய‌ மொழியான மஹாவி மொழி பேசும் கடைசி மனிதர்களோடு தங்கயிருந்த மொழிப் போராளி. அந்த மொழியை மீட்க பெரும் போராட்டத்தை நடத்தியவர். அந்த மொழி பேசும் கடைசி மனிதரோடு சேர்த்து அந்த மொழியும் இறப்பதை தன் கண்முன்னே பார்த்தவர்.

இவரது கவிதைகள் தீவிர அரசியல் செயல்பாடாக பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு முறை ஜார்ஜ் ஃப்ளாயட் போன்று கறுப்பின மக்கள் (சிறுவர்கள்) அதிகாரத்தினால் கொல்லப்படும்போதும் திரும்பத் திரும்ப பழைய காயங்கள் திறக்கப்படுகின்றன என்கிறார். இப்படி காலங்காலமாக திறக்கப்பட்டு ஆர விடாமல் பார்த்துக்கொள்ளப்படும் ரணங்களால் தம் கவிதைகள் நிரம்பியுள்ளதாக சொல்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமத்துவம் சகோதரத்துவம் என்று அமெரிக்கா உலகின் முன் வைக்கும் பொய் பிம்பங்களை தொடர்ந்து உடைத்து உண்மையை வெளிகாட்டும் கலைப்படைப்புகளின் வரிசையில் நடாலி மிக முக்கியமான பூர்வகுடியின் வழிவந்த பால் புதுமையினரின் குரலாக பார்க்கப்படுகிறார். விருது பெற்ற 'Post Colonial Love Poem’ என்ற இந்த தொகுப்பை அவர் பூர்வகுடி மக்களுக்கும், பால் புதுமையினருக்கும் சமர்ப்பித்துள்ளார்.அவருடைய அழகான‌ வார்த்தைகள்...

"காணாமல் போன , கொலைசெய்யப்பட்ட மஹாவி பூர்வ குடி மக்கள் ( மேலதிகமான பெண்கள்) , மற்ற பூர்வ குடி இனங்கள் , பால் புதுமையினர், உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட பூர்வ குடி இனங்கள்... உங்களுக்கு அன்பும் , காதலும் புரிதலும் கிடைக்க வேண்டி .... சதையினாலான எங்கள்‌ உடம்புகளுக்கும், மொழிக்கும், நிலத்திற்கும் நீருக்கும்.... பிறப்பின் பயனாக நாம் சுமப்பவற்றிற்காகவும் மறுக்கப்பட்டஅன்பிற்காகவும் இந்தத் தொகுப்பை சமர்ப்பிக்கிறேன்‌ ஒரு நாட்டை இழந்ததின் பயனாகமட்டுமே பிறக்கக்கூடிய பாடலை பாடிக் கொண்டிருக்கிறேன்'' - Joy Harjo. ( மஹாவி பூர்வகுடியின் மூதாய் )

நட்டாலி
நட்டாலி

இந்த தொகுப்பில் இடம் பெற்ற நீள் கவிதை ஒன்றின் ஒரு பகுதி -

"நம் உடம்பே மூலமுதல் நீராகும்.எங்கள் கோலராடோ நதிதான் அமெரிக்காவிலேயே மிகவும் மாசு படிந்த நதி. அது எங்கள் உடலின் ஒரு உறுப்பு . நான் அந்த நதியை எப்போதும் சுமந்தலைகிறேன் . நான் தான் கோலோராடோ.

'Aha Makov' என்று நான் சொல்லும் போது அது ஒரு குறியீடு அல்ல... ஒரு மஹாவி

'Inyeh aha makov ithuum' என்றால் அவன் தன் பெயரைச் சொல்கிறான் என்று பொருள். எங்கள் இருத்தலின் கதையை, இருப்பின் பாட்டை சொல்கிறோம். அது என் உடம்பிற்கு நடுவில் ஓடுகிற நதி...

இதுவரை ஒவ்வொரு வரியிலும் நதி நதி என்று சொல்லி நீரை இறைத்து வீணடித்திருக்கிறேன்‌. இனி வரும் வரிகளில் நீரைச் சிக்கனமாக செலவு செய்ய முயற்சி செய்கிறேன்.

மஹாவி கோலராடோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் சிவப்பு வண்டல் நிறைந்த நதி என்று பொருள். அதனால் red indians என்று எங்களை அழைத்தனர்.

ஆனால் இதுவரை நான் ஒரு சிவப்பு பூர்வ குடியைக்கூட இங்கு கண்டதில்லை. தேசிய அருங்காட்சியகத்தில் கூட நீங்கள் சொல்லும் சிவப்பு இந்தியன் ஒருவனைக்கூட நான் பார்த்ததில்லை.

நீல நதி ஓடும் ஒரு பாலைவனத்தில் வசிப்பவள் நான்.

எங்கள் வெயில் தாங்காமல் தோல் சிவந்து போன வெள்ளை சுற்றுலா பயணிகள் மட்டுமே நான் பார்த்த சிவந்த மனிதர்கள்.

'Aha Makav' என்பதே எங்களைப் படைத்தவன் எங்களுக்கு இட்ட பெயர். நதியின் அடியில் உள்ள கட்டித்தட்டிப் போன சிவந்த மண்ணை உதிர்த்து எங்கள் உடம்பை செய்தவன்.

உடம்பின் நடுவில் ஓடும் நதி என்பதும் கூட ஒரு மோசமான மொழிபெயர்ப்புதான். உங்களுக்கு புரியாதவற்றை... இல்லை நீங்கள் பயங்கொள்ளுவனவற்றை எல்லாம் கட்டுக் கதைகள் என்று புறம்தள்ளுவது உங்களின்‌ நீண்ட கால வழக்கம்.

அதனால் Aha Makav என்பதை மாபெரும் அழுகை என்றோ, துயரத்தின் நதி என்றோதான் சொல்ல வேண்டும்.

மஹாவிகளுக்கு நிலமும் உடலும் ஒன்றே. சூழல் புரியாமல் எங்கள் உரையாடல்களை கேட்டீர்கள் என்றால் நாங்கள் நிலத்தைப்பற்றி பேசுகிறோமா அல்லது உடலைப் பற்றி பேசுகிறோமா என்று உங்களால் இனங்காண முடியாது. என் நதி காணாமல் போகிறது என்றால் எம் மக்கள் காணாமல் போகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்."

------------------------------------------

இதே தொகுப்பில் உள்ள அதிகமாக பேசப்பட்ட மற்றோரு கவிதை இங்கே

''ஒரு தகவலின் கலை.

நீரைப்பற்றிய ஒரு கதை சொல்லவா? முன்னொரு காலத்தில் நாங்கள் இருந்தோம். அமெரிக்காவின் தாகம் எங்களைகுடித்துத் தீர்க்க முயன்றதுநாங்கள் இன்னமும் இருக்கிறோம்.

**

தங்கள் நிலத்தில் பைப்லைன் இடுவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு அரசு டிராக்டரின் முன், இழுத்து பிடிக்கப்பட்ட கயிற்றையும் தாண்டி மிருக வெறியுடன் குலைக்கும் இரு போலிஸ் நாய்களின் முன் அமைதியாக அமர்ந்த, தொண்டையிலும் தலையிலும் சுடப்பட்ட, மஹாவி இன முதிய தாய் ஒருத்தியின் பிரார்த்தனை.

கடைசி நதிக்கு எழுதப்பட்ட கடைசி காதல் கடிதம். அவள் (அந்த கடைசி நதி) இறந்து 100 வருடங்கள் ஆகும் வரை இக்கடிதத்தை பிரசுரிக்க கூடாது என்பது அவளது கடைசி ஆசை.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு