Published:Updated:

புலம்பெயர் தமிழர்களின் வாழ்வைப் பேசும் `பேய்ச்சி' நாவல்... மலேசியாவில் தடை செய்யப்பட்டது ஏன்?

தமிழக எழுத்தாளர்கள் பேய்ச்சி நாவலுக்கு எதிரான தடையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இந்தத் தடையைக் கண்டித்துள்ளது.

1911-ம் ஆண்டு பாரதியின் ‘ஆறில் ஒருபங்கு’ நூலுக்குத் தடைவிதிக்கப்பட்டது. அந்த நூல் மக்கள் சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்படுவதற்கு எதிரான சிந்தனையை முன்வைக்கும் நூல். ‘நம்மில் ஆறில் ஒரு பங்கு ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமானால், நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?’ என்று அந்த நூலில்கேட்பார் பாரதி.

இந்தப் புரட்சிக்குரல், சாதியக் கட்டுமானம் இல்லாத இங்கிலாந்து ஆட்சியாளர்களுக்கு எதிரானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த நூல் அவர்களால் தடைசெய்யப்பட்டது. காரணம், அந்த நூலை மொழிபெயர்த்து, அதுகுறித்து அரசுக்கு அறிக்கை அளித்தவர்கள் அந்த நூலின் கருத்துகளை ஏற்காதவர்களாக இருந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த நூல் தடை செய்யப்பட்டது. அதன்பின்னான காலகட்டங்களில் பாரதிதாசன், அண்ணா, புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் பல்வேறு காரணங்களால் தடைசெய்யப்பட்டன. அந்நூல்களுக்கான தடைகள் சிலகாலங்களுக்குப் பின் விலக்கிக் கொள்ளப்பட்டன. அதற்குத் தடைக்கு எதிரான சமகாலப் படைப்பாளர்களின் குரலும் ஒரு முக்கிய காரணம்.

மாதொரு பாகன்
மாதொரு பாகன்

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பெருமாள் முருகன் எழுதிய, ‘மாதொரு பாகன்’ நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது. பின் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. ஒரு கருத்தை படைப்பை விமர்சனத்தால் மறுபடைப்பால் விவாதத்தால் எதிர்கொள்வதை விடுத்து அதற்கு எதிரான தடையைக் கோருவது என்பது இன்றும் தொடர்கிறது. கடந்தவாரம் மலேசிய எழுத்தாளர் ம. நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மலேசியா அரசின், 1984 ஆம் ஆண்டு அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் செக்‌ஷன் 7(1) கீழ், ஆசிரியர் ம.நவீன் எழுதிய 'பேய்ச்சி' நாவலுக்கு உள்துறை அமைச்சு தடை விதித்திருக்கிறது. இந்த நூலோடு சேர்த்து, 'Gay is OK! A Christian Perspective' என்னும் நாவலும் தடைசெய்யப்பட்டது.

இதுகுறித்துக் கருத்துக்கூறிய அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் வான் அஹ்மட், “பொது விதிமுறை, ஒழுக்கம் மற்றும் பொது நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் இதன் உள்ளடக்கங்கள் அமைந்துள்ளதால் இவ்வெளியீடுகள் தடை செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

பேய்ச்சி நாவல்
பேய்ச்சி நாவல்

பேய்ச்சி நாவல் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த நாவல் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வைப் படைப்புக்குள்ளாக்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டியின் இறுதியில் தொடங்குகிறது நாவல். ‘பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை’ என்னும் பாரதியின் வரிகளைப்போல தன் குல தெய்வமான பேய்ச்சியைப் பிள்ளைகள் தின்னும் உக்கிரமான அம்சத்தோடு ஒரு மலைமீது காண்கிறார் கோப்பேரன். தன் வாழ்வுக்கும் அந்தக் காட்சிக்குமான தொடர்பு அவரை அதிர வைக்கிறது. அதுவரை பிறந்த ஐந்து பிள்ளைகளும் சில நாள்களிலேயெ இறந்துபோகிறார்கள். அதை நிகழ்த்துபவள் அந்த அன்னைதான் என்று அவருக்குத் தோன்றுகிறது. ஆறாவது மகன் பிறந்த சில தினங்களில் அவனைத் தூக்கிக்கொண்டு மனைவியையும் தன் சொந்த மண்ணையும் தெய்வத்தையும்விட்டுப் பிரிந்துபோகிறார். போகும்போது, ‘இனி அன்னையின் உத்தரவு வரும்வரை மருத்துவம் செய்ய மாட்டேன்’ என்று சத்தியம் செய்துபோகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் பஞ்சம் பிழைக்க மலேசியா செல்கிறார்கள். அங்கே தோட்டத்தொழிலாளர்களாக வேலைக்குவரும் அவர்கள் வாழ்வின் நிலை, அங்கு அவர்களுக்கு நேரும் துயரம், அந்த அவல வாழ்விலும் அவர்கள் ஏந்திப் பிடித்திருக்கும் நம்பிக்கைகள், வழிபாடுகள், சமகால தமிழகத்தின் நிகழ்வுகளின் பாதிப்பு என்று நூற்று ஐம்பது ஆண்டுகால வாழ்வியலின் ஆவணமாகப் பேய்ச்சி நாவல் திகழ்கிறது. ‘சிறுதெய்வ வழிபாட்டை முன்னிலைப்படுத்தும் தமிழின் மிக முக்கியமான நாவல் இது’ என்று ஜெயமோகன் கொண்டாடுகிறார். மலேசியப் புலம்பெயர்ந்தவர்கள் வாழ்க்கைப் பதிவு என்கிற அளவில் இது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று பலரும் சொல்லிவரும் நிலையில் இந்த நாவலுக்கான எதிர்ப்பும் தடையும் நிகழ்ந்துள்ளது.

நாவலில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் சொல்லப்படுகிறது. பாலியல் சொற்கள் நாவலில் காணப்படுகின்றன. பாலியல் காட்சிகள் சில நாவலில் உள்ளன. இவை வரும் தலைமுறையை சீர்குலைக்கும் என்கின்றனர்.
ம. நவீன்
ம. நவீன்

ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகள் எல்லாம் குழந்தைத் தனமானவை என்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். நாவலின் தேவைக்கேற்பவே மக்களின் மொழிவாயிலாக இவை சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்.

கடந்த 15 ஆண்டுகளாக வல்லினம் என்னும் இதழ் நடத்தி தீவிர இலக்கியச் சூழலில் பணியாற்றிவரும் ம.நவீன் தன் நாவலின் மீதான இந்தத் தடையை எப்படிப்பார்க்கிறார் என்று கேட்டோம்.

“மலேசியாவைப் பொறுத்த அளவில் இந்த நாவலுக்கான தடையை வழங்கிய அமைச்சக அதிகாரிகள் தமிழ் அறிந்தவர்கள் அல்ல. அவர்கள் நாளிதழ்களில் வெளியான தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட விமர்சனங்களின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு வருகிறார்கள். யார் இந்த எழுத்தாளர்கள்? அவர்கள் ஏன் இத்தகைய விமர்சனங்களை எழுதுகிறார்கள்... இவர்கள் அந்த நாவலை ஒருமுறையாவது வாசித்தார்களா... என்ற கேள்விகளை முன்வைத்து ஆராய வேண்டியது அவசியம்.

நாங்கள், கடந்த 15 ஆண்டுகளில் தீவிர இலக்கியப் பரப்பில் பணி செய்து மலேசிய தமிழ் இலக்கியத்துகான விமர்சன மரபையும் இலக்கிய வரலாற்றையும் கட்டமைக்க முயல்கிறோம். மலேசியத் தமிழ் இலக்கியம் சார்ந்து காத்திரமாக இயங்கிய பலர் அடையாளப்படுத்தபடவில்லை. மாறாக மேலோட்டமான எளிய படைப்புகளே, படைப்பாளர்களே கொண்டாடப்பட்டனர். அதை நாங்கள் விமர்சன இயக்கம் மூலமாக மாற்ற விரும்புகிறோம். இதனால் உண்டாகும் காழ்ப்புணர்ச்சியே எழுத்தாளர்கள் சிலர் இந்த நாவலுக்கு எதிராக கருத்துகளை முன்வைக்கக் காரணம். புதிய இலக்கிய சூழலை ஆரோக்கியமாக உருவாக்க முயல்வதற்காகக் கிடைத்த பரிசாகவே இந்தத் தடையைக் கருதுகிறேன்” என்றார்.

தமிழ்
தமிழ்

தமிழக எழுத்தாளர்கள் பேய்ச்சி நாவலுக்கு எதிரான தடையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இந்தத் தடையைக் கண்டித்துள்ளது.

ஒரு நாவலில் பாலியல் சொற்களும் சாதியப் பெயரும் இடம் பெற்றிருப்பதால் அதைத் தடை செய்ய வேண்டுமா என்று எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் கேட்டோம்.

“ம.நவீனின் பேய்ச்சி நாவலை இன்னும் வாசிக்கவில்லை. விரைவில் வாசித்துவிடுவேன். ஆனால், எந்த ஒரு நூலையும் தடை செய்யக்கூடாது என்பதுதான் என் கருத்து. படைப்பு முன்வைக்கும் கருத்தை நீங்கள் விமர்சிக்கலாம், மறுகருத்தை முன்வைக்கலாம். ஏன் புறக்கணிக்கவும் செய்யலாம். அப்படியான வழிமுறைகள் இருக்கும்போது அதைத் தடை செய்வதென்பது அவசியமே இல்லை. இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது.

பெருமாள் முருகன்
பெருமாள் முருகன்

நம் பேச்சு வழக்கில் இயல்பாகக் காணப்படும் பாலியல் சொற்களையும் சாதியப் பெயர்களையும்தான் தேவைக்கு ஏற்பப் படைப்பில் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. சமூகத்தில் இயல்பாகக் காணப்படும் ஒன்றை ஏன் எழுத்தில் காணும்போது மட்டும் இத்தனை பதற்றத்துக்குள்ளாகிறார்கள் என்று தெரியவில்லை. சமூகத்துக்கும் எழுத்துக்குமான இடைவெளியே இதற்குக் காரணம் என்றுகூட சொல்லலாம். எழுத்தைப் பற்றிய அச்சமும் ஒரு பிரமிப்பும் பலரிடையே காணப்படுகின்றன. எழுத்தில் சில சொற்கள் பதிவாகும்போது எது என்ன மாதிரியான விழைவுகளை ஏற்படுத்தும் என்னும் கவலையாகத் தான் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நிறையப் படித்தால் மனநிலை திரியும் என்று சொல்வதும் காலில் புத்தகம் பட்டால் தொட்டுக் கும்பிடும் மனநிலையும் இங்கே இருக்கிறது. எழுத்திலிருந்து விலகியிருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன். எனவே படைப்பின் மீதான தடை என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்றார்.

பேய்ச்சி நாவலை சென்னையைச் சேர்ந்த யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு