Published:Updated:

ஆடல் பாடல்! - குட்டி ஃபிளாஷ்பேக் #MyVikatan

Representational Image
Representational Image

இது ஐந்தாம் வகுப்பில் நடந்ததுதான். அந்த ஆண்டுதான் நேருவின் மரணமும் நடந்தது.

நான் ராதா. வயது 65 ஆகிறது. ஐந்தாம் வகுப்பிலிருந்தே நான் நிறைய கதை புத்தகங்களைப் படித்து வருபவள். விகடனின் வாசகி. மை விகடனில் என் பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த சின்ன நிகழ்வை பகிர விரும்கிறேன்.

Representational Image
Representational Image

55 வருடங்களுக்கு முன் (1964) நான் 5 வது படிக்கும்போது வந்த குழந்தைகள் தினத்தில் டீச்சர் சொல்லிக்கொடுத்த ஒரு பாட்டும் டான்ஸும் இன்றும் என் நினைவில் இருக்கின்றன. நான் படித்த திருப்பூர் தேவாங்கபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியைகளை அக்கா என்றும் ஆசிரியர்களை அண்ணா என்றும்தான் அழைப்போம். தலைமை ஆசிரியர் பெரியண்ணா. அப்படி ஒரு அக்கா டீச்சர் குழுவாக எங்களை தேர்வு செய்து பாடி ஆட வைத்த நிகழ்வு சிறப்பாக இருந்தது. அந்தப் பாடல் வரிகள் இன்றுவரை என் நினைவில் நிற்கிறது. இந்தப் பாடலை‌ பழையப் பாடலான 'பிள்ளைக் கனி அமுது ஒண்ணு பிறந்திட வேண்டும்' என்ற பாடலின் ராகத்தில் தெரிந்தவர்கள் பாடிக்கொள்ளலாம்.

"அன்பு மாமா நேருவை நாம் வணங்கிட வேண்டும்.

பண்புடனே அவர் புகழைப் பாடிட வேண்டும்.

(அன்பு)

ஆசியாவின் ஜோதியை நாம் வணங்கிடுவோமே

அருமையான தந்தையை நாம் வாழ்த்திடுவோமே

சமாதான தந்தையை கர்ம வீரர் நேருவை

நம்வாழ்வின் துணையென்று நம்பிடுவோமே...

(அன்பு)

இது ஐந்தாம் வகுப்பில் நடந்ததுதான். அந்த ஆண்டுதான் நேருவின் மரணமும் நடந்தது. அதைப்புரிந்து‌கொள்ளும் பக்குவம் இல்லையென்றாலும் நிறைய பேர், `நம் அப்பா இறந்ததுபோல் இருக்கிறது' என்று அழுதார்கள்.

Representational Image
Representational Image

ஐந்தாம் வகுப்பில் நான் கற்றுக்கொண்ட அந்தப் பாடலை, என் 7 வது வகுப்பில் (அப்போது சிங்காநல்லூர் ஹைஸ்கூல்) ஒரு குழுவைத் தேர்வு செய்து, அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து ‌பாடி ஆட வைத்தேன். எளிமையான காலங்கள் அவை. இப்போதுதான் பள்ளிகளில் நடன டீச்சர், பாட்டு டீச்சர் என்று தனித்தனியாகப் பணியமர்த்தப்படுகிறார்கள். எங்கள் காலத்தில் ஒவ்வொரு விழாவுக்கும் பெரிய கிளாஸ் பிள்ளைகள் சின்ன கிளாஸ் பிள்ளைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து ஆட வைப்போம். நாங்கள் ஆடுவதற்கு ஒரு செலவும் இல்லை பெற்றோர்களுக்கு.

அதேபோல் அந்தக் காலத்தில் திராவிடக் கட்சி மேடைகளில் பாடப்படும் `எங்கள் திராவிடப் பொன்னாடு' எனும் பாடல் அக்கா டீச்சர்களால், "எங்கள் தமிழகப் பொன்னாடு கலை வாழும் தென்னாடு" எனும் பாடலாக மாறி கும்மியடித்ததும், பின்னர் ஒருநாளில் ஏதோ விழாவுக்கு வருகைதந்தப் பெரியவர்கள் முன் இந்தக் கும்மியை ஆட முற்பட்டபோது மைக்கில் பாட ஆளில்லாமல் கூட ஆடும் பெண்கள் என்னைப் பாட தள்ளி விட்டதும் நான் பாடப் போனதால் என்னுடைய ஜோடிப் பெண்ணுக்குத் துணையில்லாமல் ஆடியதும் இப்போது நினைத்தாலும் சிரிப்பைத்தரும் இனிய மலரும் நினைவுகள்.

Representational Image
Representational Image

நான் கல்லூரி முடிக்கும் வரையிலும் நடனம் நாடகம் என்றால் அப்பா அம்மாக்களுக்கு ஒரு‌ செலவுமில்லை. ஏதாவது பட்டுப்புடவை வேண்டுமென்று மிஸ் சொன்னால், இருப்பவர்கள் எடுத்து வந்து தருவார்கள். நாங்கள் உடுத்திக்கொண்டு ஆடுவோம்... நடிப்போம். இன்றோ எல்.கே.ஜி பசங்க நடிக்க அம்மா அப்பா செலவு பண்ணணும். மெனக்கெடணும். எளிமை நிறைந்த எங்கள் வாழ்வெல்லாம் திரும்பவே போவதில்லை இனி.

- ராதா

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணைய வெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு