Published:Updated:

திருவல்லிக்கேணி நாள்கள்! - ஒரு குட்டி பிளாஷ்பேக் #MyVikatan

My Vikatan
My Vikatan

கற்பூர ஆரத்தி செய்யும்போது தவறாமல் யாராவது ஒருவருக்கு 'சாமி' வரும். அப்போது வேறு யாராவது குறி கேட்பார்கள். அதற்காகவே நான் அந்தக் கோயில் பக்கம் போகவே பயப்படுவேன்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கோயில் உற்சவம் என்றால் காப்பு கட்டி பத்து நாள்கள் அந்தத் தெருவில் யாரும் இரவில் வெளியில் தங்கக் கூடாது என்று சொல்வார்கள். அந்தச் செய்தியே திகிலாக இருக்கும்.

இது என்னுடைய பழைய நினைவுகளின் (flash back) பதிவு. சென்னை நகரத்திலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், அப்போது கணினிக் காலமல்லாததால், ஒரு சிறு நகரம் அல்லது கிராமத்து அனுபவத்துக்கு ஒத்திருந்தது என்னுடைய இளமைக் காலம்.

Representational Image
Representational Image

பார்த்தசாரதி கோயில் திருவிழாக்கள்:

பார்த்தசாரதி கோயிலில் பத்து நாள் உற்சவம் வருடத்திற்கு இரண்டு முறை நடக்கும். தேர் வரும். உஞ்சவிருத்தி பஜனை பாடி வீதி உலா வருவார்கள். புரட்டாசியில் பெரிய நாமம் இட்டு ரோட்டிலேயே உருண்டு பிரார்த்தனை செய்வார்கள் - அவர்களை ஆச்சர்யமாகப் பார்த்த நாள்கள்…

தெப்போத்சவ நாள்களில் சாயங்காலமே குடும்பத்தோடு போய் குளப் படிக்கெட்டுகளில் இடம் பிடித்து அமர்ந்தது... வைகுண்ட ஏகாதசியில் கூட்டத்தோடு அலைமோதி சொர்க்கவாசல் நுழைந்தது... மார்கழியில் விடிய காலையிலேயே எழுந்து அம்மாவோடு கோயிலுக்குப் போனது... எனக்குப் பிடித்த பார்த்தசாரதி கோயில் பிரசாதம் புளியோதரை, அதிரசம் ரெண்டும் சாப்பிட்டது… என இவ்வளவும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

Representational Image
Representational Image

கோயில் விசேஷங்களில் தெருக்களில் தோன்றும் தற்காலிக நடைமேடை (platform) கடைகள் என் ஃபேவரைட் ஸ்பாட். அங்கு எனக்குப் பிடித்ததை வாங்க அம்மா, பாட்டி எனப் பலர் தரும் ரூபாயை வைத்து எதையாவது வாங்குவதில் பயங்கர குஷி ஆகிவிடுவேன்.

அம்மன் கோயில்:

எங்கள் வீட்டு எதிரிலேயே சிறிய அம்மன் கோயில் இருந்தது. ஆடி மாதத்தில் காலையிலும் மாலையிலும் மைக் செட்டில் அலறும் பாட்டை, படிப்பை தொந்தரவு செய்யுதேன்னு புலம்பியது ஒரு புறம். ஆனால், அனைத்துப் பாடலும் பிடித்து மனப்பாடமானது மறுபுறம்.

Representational Image
Representational Image

கற்பூர ஆரத்தி செய்யும்போது தவறாமல் யாராவது ஒருவருக்கு 'சாமி' வரும். அப்போது வேறு யாராவது குறி கேட்பார்கள். அதற்காகவே நான் அந்தக் கோயில் பக்கம் போகவே பயப்படுவேன்.

கோயில் உற்சவம் என்றால் காப்புக் கட்டி பத்து நாள்கள் அந்தத் தெருவில் யாரும் இரவில் வெளியில் தங்கக் கூடாது என்று சொல்வார்கள். அந்தச் செய்தியே திகிலாக இருக்கும்.

அலகு குத்துவது, தீ மிதிப்பதுன்னு எல்லாமும் உண்டு. ஒரே ஒரு முறை கட்டைகளை அடுக்குவது முதல், தீ நன்கு கனன்று எரிந்து அடங்கி, கரிபோல மாறியது வரை பார்த்தது நினைவில் இருக்கு. அதுக்குப் பிறகு தீ மிதிப்பையும் பார்த்தேன்.

ஞாயிறு மதியத்தில் துர்கைக்கு விளக்கேற்ற அம்மாவுடன் செல்வேன். அங்கு கூட்டமாகப் பெண்கள் பாடும் அனைத்து ராகுகால பாட்டும் எனக்கு மிகப்பிடித்தவை.

Representational Image
Representational Image

கடற்கரை:

பல நாள்கள் விடியற்காலையில் அண்ணனுடன் jogging போனது... அறுகம்புல் ஜூஸ் குடித்து பிடிக்கலைன்னு சொன்னது... கடற்கரை ஊத்து தண்ணி குடத்தில் பிடித்து சைக்கிளில் கட்டி வீட்டுக்கு அண்ணனுடன் வந்தது... ஏதோ ஓரிரண்டு கிரகணத்தன்று கடற்கரையில் குளித்தது…

குடியரசு தின அணிவகுப்பு பார்க்க குடும்பத்தோடு விடிகாலையிலேயே சென்று, வெயில்படாத பகுதியில் இடத்தைப் பிடித்து பார்த்தது... நடனக் குழுக்கள் வரும்போது, 'நம்ம கிட்ட டான்ஸ் ஆடமாட்டாங்களா'ன்னு ஆசையா எதிர் பார்த்தது...

கல்லூரி நாள்களில் தோழிகளுடன் மாலையில் கையில் செருப்பைப் பற்றிக்கொண்டு வெதுவெதுப்பான மணலில் நடந்தது... எனக் கடற்கரையையொட்டிய நினைவுகள் அனைத்தும் இனிமையானவை.

Representational Image
Representational Image

கட்டை தொட்டித் தெரு, திருவல்லிக்கேணி:

நான் பிறந்தது முதல் பதினைந்து வருடங்கள் வாழ்ந்தது ஒண்டு குடித்தன வாடகை வீட்டில்தான். எவ்வளவோ வீடு மாறிய பிறகும், இப்போதும் என் கனவுகளில் அடிக்கடி வருவதும் இந்த வீடுதான். என் அப்பாவுடனான அனைத்து நினைவுகளும் இந்த வீட்டில்தான்.

திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ஒரு கடையில், இரவுகளில் சூடான மசாலா பால் கிடைக்கும். இன்னமும் உண்டு. சாயங்காலமே பெரிய கடாயில பால் காய்ச்ச ஆரம்பிச்சிடுவாங்க. எதையாவது வாசனைக்கு அரைத்து போடுறதோ, சேர்க்கவோ மாட்டார்கள். வெறும் மிதமான சக்கரை கலந்த பால் + நிறைய ஏடு - ஒரு cup & saucer இல் தருவார்கள். என் அப்பா saucerஇல் ஊற்றி ஆறவைத்து எனக்குக் கொடுப்பார். மிக மிக ருசியாக இருக்கும்.

Representational Image
Representational Image

ஒண்டு குடித்தன வீட்டில் அனைவருமே ஒரு குடும்பம் போலத்தான் பழகுவார்கள். நாங்கள் வசித்த தெருவில் மற்ற 4-5 வீடுகளும் எங்கள் உறவுகள் போலத்தான். எனவே வளரும் பருவத்தில் எனக்கு நிறைய அக்காக்கள், அண்ணாக்கள், தோழிகள் இருந்தார்கள். அவர்களுடன் பகிர்ந்துகொண்ட நாள்கள் அனைத்தும் மிகப் பசுமையானவை. UPS இருந்திராத அந்தக் காலத்தில், கரன்ட் போய்விட்டால், அனைவரும் வெளியில் வந்து வம்படிப்பார்கள். எனக்கு மிகவும் பிடித்ததில் இதுவும் ஒன்று.

இவை அனைத்தும் நினைவில் நின்றவற்றில் சிலவே. பொம்மைகளோ, வித வித ஆடை அணிகலன்களோ, உணவகச் சாப்பாடோ, சினிமாவோ கிடையாது. முதன் முதலில் tube light, மின்விசிறி, பீரோ, gas connection, மிதிவண்டி, டி.வி வாங்கிய நாள்கள் இன்னும் பசுமையாய் மனதில் நிற்கின்றன.

Representational Image
Representational Image

என் குழந்தைக்கு இந்த அனுபவமெல்லாம் இல்லை. அதனால் அவள் அதை miss செய்யவும் போவதில்லை. ஆனால் அவள் வளர்ந்து, அவளது அனுபவத்தை இப்படிப் பகிரும் நாளுக்காக ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.

-சுதா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு