ஓவியங்கள்: ரவி

கத்து, செருமானிய, ம.கோ.இரா, சூலை, கோப்பி... இவையெல்லாம் என்னவென்று தெரியுமா? தமிழில் இப்படி ஓராயிரம் வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால், இவற்றின் பொருள் தமிழர்களில் பலருக்கும் புரியாத புதிர். ஆம், இவை அனைத்துமே அந்நிய மொழிச் சொற்கள். ஆனால், தமிழ்ப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு புரியாத புதிராக மாற்றி வைத்துள்ளோம். இப்படித்தான், தமிழின் சிறப்பு எழுத்தான ‘ழ’கரத்தைப் பிரித்துக்காட்டு கிறோம் என்று சொல்லிக்கொண்டு ஆங்கிலத்தில் எழுதும்போது ‘ZH’ பயன்படுத்துகிறோம். இதுவும் பல சமயங்களில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்து கிறது. உண்மையான உச்சரிப்பு காணாமல்போய், குழப்படியான உச்சரிப்பே மேலோங்கி நிற்கிறது அல்லது அந்தச் சொல்லின் உண்மைப் பொருள் மறைந்துவிடுகிறது.

தமிழ் ஆர்வலர்களில் சிலர் மற்றும் சில அமைப்பினர் ஆங்கில மாதங்கள், வெளிநாடுகளின் பெயர்கள், நபர்களின் பெயர்கள் போன்ற பலவற்றையும் தூய தமிழில் எழுதுகிறோம் என்று ஆரம்பித்ததுதான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம். இது, நூற்றாண்டுகளாகவே தொடர்கிறது. ஆனால், தமிழில் எழுதப்படும் அந்த வார்த்தைகளை குழந்தைப் பருவம் முதல் படித்துப் பழகியிருக்கும் ஒருவர் வெளிமாநிலத்திலோ, வெளி நாட்டிலோ, ஏன் சொந்த மாநிலத்தில் ஆங்கிலம் அறிந்தவர்கள் மட்டுமே இருக்கும் சபையிலோ... ஆகத்து, செருமானிய, சூன் என்றெல்லாம் பேசினால் கூடியிருப்பவர்கள் குழம்பித்தான் போவார்கள்.

உதாரணமாக, coffee என்பதை காபி என்றே பெரும்பாலும் எழுதிப் பழகி விட்டோம். ஆனால், காஃபி, கோப்பி, காப்பி என்று பலவிதமாக எழுதிக் கொண்டுள்ளனர்.

இதேபோல, ஆங்கில மாதங்களை சூன், சூலை, ஆகத்து, திசம்பர் என்று சிலர் பயன்படுத்துகிறார்கள். சூன் என்பதற்கு தமிழில் பொருள் தேடினால்... குற்றம், கபடம், சூம்பியிருத்தல், புறம்போக்கு நிலம் என்கின்றன தமிழ் அகராதிகள். சூலை என்றால் மாதவிடாயால் ஏற்படும் வயிற்றுவலிநோய் என்று பொருள்.

லண்டனா, லொண்டொனா?

நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்களின் தலைநகரம் London. இதைத் தமிழ் உச்சரிப்பின்படி ‘லொண்டொன்’ என்று எழுதுவோமா, அப்படி எழுதினால் சிரிக்க மாட்டார்களா? சிரிப்பை விடுங்கள், `இப்படியொரு நகரம் உலகிலேயே இல்லை’ என்றுதானே கூறுவார்கள். இதேபோல் China-வை சீனா என்றுதான் எழுதுகிறோம்.

அதேசமயம், சைனா பஜார், சைனா டவுன் என்று வேறுவிதமான உச்சரிப்புகளிலும் பயன்படுத்துகிறோம். உண்மையில், அந்நிய மொழிச் சொல் என்றால், அந்த மொழியில் எப்படி உச்சரிக்கப்படுகிறதோ... அதே உச்சரிப்புடன் பயன்படுத்த வேண்டும்.

நல்ல தமிழில் எழுதுவோம்!
நல்ல தமிழில் எழுதுவோம்!

உதாரணமாக Russia, Hosur என்று ஆங்கிலத்தில் இருப்பவற்றை ரஷ்யா, ஓசூர் எனச் சரியாகப் புரிந்து கொள்கிறோம். இதேபோலத்தான், மற்ற மொழிச் சொற்களை அவற்றின் உச்சரிப்பு மாறாமல் தமிழில் எழுதுவது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படும் France என்பதை பிரான்ஸ் என்றுதான் எழுத முடியும். அது ‘எஃப்’ உச்சரிப்பு வருகிறதே என்பதால், ஆயுத எழுத்தைச் சேர்த்து ஃபிரான்ஸ் என்று எழுதுகிறோம்.

மதுரையைச் சேர்ந்த காந்தி தியாகராஜன் என்கிற வாசகரிடமிருந்து விகடன் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அதில், ‘தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் TAMILNADU என்று எழுதுகிறோம். ஆனால், இது பிழையாகவும் களங்கமாகவும் உள்ளது. தமிழின் சிறப்புகளில் ஒன்று ழ. இதைப் பெருமைப்படுத்தும் வகையில் THAMIZHNADU என்று மாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இப்படியெல்லாம் பேசப்படுவது, எழுதப்படுவது, கருத்துகளை முன்வைப்பதுகுறித்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவருமான ‘ஔவை’ நடராசனிடம் கேட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘ழ’கரத்துக்குத் தேவையில்லை ‘ZH’

``தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் ஒலிப்பது பலவேளைகளில் வேறுபடும். எனவே, ஆங்கில மொழிக்கேற்ப தமிழ்ச் சொற்கள் அமையாது. ‘ழ’கரம் என்பதை ஆங்கிலத்தில் ‘ZH’ என்று எழுதுவதனால் அது ‘ழ’கரமாகிவிடாது. மற்ற மொழியில் `ழ’ எழுத்து இல்லாமல் இருப்பதால்தான் ழகரத்துக்கே சிறப்பு. இந்தநிலையில், Tamilnadu என்று எழுதுவதுதான் சரியாக இருக்கும். `ழ’-வுக்கு ‘ZH’ பயன் படுத்துவதன் நோக்கமே நம்மவர்கள் ‘ழ’கரத்தைப் பிரித்தறிய வேண்டும் என்பதற்காகத்தான் என்பது சரியான வாதமல்ல. நம்மவர்களுக்கு ‘ழ’கரம் என்பதை தமிழிலேயே புரிந்து கொள்ளவைப்பதுதான் சரியானது.

உதாரணத்துக்கு அன்பழகன், பழனியப்பன் என்ற பெயர்களை Anbalagan, Palaniyappan என எழுதினால் ஆங்கிலேயர்கள் எளிதாக, சரியாக உச்சரிப்பார்கள். Anbazhagan என்று ‘ZH’ பயன்படுத்தினால் அன்பஸ்கன், அன்பாஷகன், ஷ், ஹ் என்று உச்சரிக்க நேர்ந்து பெயரே மாறிவிடும். பழனியப்பன் என்பதை ஆங்கிலத்தில் ‘பஸனியப்பன்’ என்று உச்சரிப்பதைவிட, ‘பலனியப்பன்’ என்று உச்சரிப்பதில் தவறில்லை. ஸ என்பதைவிட ல என்பது கிட்டத்தட்ட `ழ’வுக்கு நெருக்கமாக இருக்கும்.

ஒளவை நடராசன் - கலி.பூங்குன்றன் - சுப.வீரபாண்டியன் - மா.கோவிந்தராசு
ஒளவை நடராசன் - கலி.பூங்குன்றன் - சுப.வீரபாண்டியன் - மா.கோவிந்தராசு

நடராசன் என்ற பெயரை ஆங்கிலத்தில் Natarajan என்று எழுதுகி றார்கள். ஈழத்தமிழர்கள் Nadarasan என்று எழுதுகிறார்கள். Mudali என்று நாம் போடுகிறோம். Moodley என்று தென்னாப்பிரிக்காவில் எழுதுகி றார்கள். எனவே, தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கில ஒலிப்புகள் இப்படிக் குறையுடையதாகத்தான் அமையும். Peter என்பதை பீட்டர், பீற்றர், பேதுரு என்று பலவிதமாக எழுதுகிறார்கள். இவையெல்லாம், சம்பந்தப்பட்ட பெயர்களின் உண்மையான பொருளை மறைத்து விடும். எனவே, சரியான உச்சரிப்புடன்தான் எழுதவேண்டும் . அப்போதுதான், அது அந்நிய மொழிச் சொல் என்பதும் தெளிவாக விளங்கும். அதேசமயம், ஒரு சொல்லைத் தமிழ்ப்படுத்துவதில் தவறில்லை. உதாரணத்துக்கு, கம்ப்யூட்டர் என்பதை கணிப்பொறி, கணினி என்றெல்லாம் மொழிபெயர்த்துள்ளோம். இதில் தவறில்லை. இது தமிழ் தெரிந்தவர்களுக்காகச் செய்யப்படும் மாற்றம். அதேசமயம், ஒரு நாட்டின் பெயரை ‘செருமன்’ என்று தமிழ்ப்படுத்தும்போது, அது தவறாகவே மனதில் பதியும்’’ என்றார் விளக்கமாக.

அதேசமயம் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியனின் கருத்து வேறுமாதிரியாக இருக்கிறது. ``அடிப்படையில் நான் ஒரு தனித்தமிழ் ஆர்வலர். திராவிட மொழிஞாயிறு பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றவர்களிடமிருந்து தனித்தமிழ் உணர்வை, கல்லூரி நாள்களிலேயே பெற்றவன் நான். இருப்பினும்கூட, சில இடங்களில் நாம் சொற்களை எப்படி எழுதலாம் என்பதற்கு எனக்குச் சில கருத்துகள் உண்டு. வினைச் சொற்களையும் பெயர்ச்சொற்களையும் ஒரே மாதிரி பாவிக்க முடியாது என்று நினைக்கிறவன் நான். வினைச் சொற்கள் அல்லது பெயர்ச்சொற் களிலும்கூட வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்வதுதான் சரியானது.

ஜப்பான்... சப்பான் அல்ல!

அதாவது, அந்தப் பெயர்ச் சொற்களிலும், இப்போது ‘டிவி’ என்று சொல்ல வேண்டியதில்லை, தொலைக்காட்சி என்பது சரி. இன்னமும் நான் இன்றைய உலகுக்கு வந்தால், `புலனம்’ என்று வாட்ஸ்அப்பைச் சொல்வதும் `கீச்சகன்’ என்று ட்விட்டரைச் சொல்வதும்தான் சரி என்று நான் கருதுகிறேன். இருந்தாலும், ஜப்பான் என்பதை `சப்பான்’ என்று எழுத வேண்டியதில்லை. ஆகஸ்ட் என்பதை ஆகஸ்ட் என்றே எழுதலாம் என்று நான் கருதுகிறேன். இங்கே என்ன சிக்கல் வருகிறது என்றால், ஜ, ஸ, ஷ, க்ஷ, ஹ என்று வருகிற இந்த ஐந்து வட எழுத்துகளை நாம் பயன்படுத்துவதா அல்லது நம்முடைய பழைய இலக்கணப்படி `வடவெழுத்து ஒரீ இ’ நம்முடைய தமிழ் எழுத்துகளை எழுதுவதா என்பதுதான். இன்றைக்கு இந்த ஐந்து எழுத்துகளும் பல இடங்களில் நம்முடைய பெயர்ச் சொற்களோடும் கலந்து நிற்கின்றன.

நான் இன்றுவரையில் எம்.ஜி.ஆரை எம்.சி.ஆர் என்று எழுதவில்லை, எம்.ஜி.ஆர் என்றுதான் எழுதுகிறேன். தென்மொழி போன்ற தனித்தமிழ் ஏடுகள், அவர் பெயரை இப்போதும் ம.கோ.இரா என்றுதான் எழுதுகிறார்கள். அன்று தொடங்கி இன்று வரையில் ம.கோ.இரா என்று எழுதுகிறபோது அது மக்களுக்குப் புரியாமல் போய்விடுமோ என்கிற கவலை எனக்கு உண்டு. அதேபோல ராஜாஜி என்றுதான் எழுதுகிறேன். ஜப்பான் என்றுதான் எழுதுகிறேன். லத்தீன் அமெரிக்கா என்றுதான் எழுதுகிறேன். இலத்தீன் என்று எழுதுவதில்லை.

இருந்தாலும், இப்படிப்பட்ட பெயர்களை, இன்னமும் சொன்னால் மருத்துவத்துறையில் மாத்திரைகளின் பெயர்களையெல்லாம் இப்போது, `Sompraz D’ என்பதைத் தமிழாக மாற்றி எழுதினால் அது பயன்படுமா? அதில் சிக்கல்கள் நேரும் என்பதை எண்ணிப்பார்க்கிறேன். எனவே, நல்ல தமிழில் நாம் எழுதுவதற்கு, நம்மிடம் தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது நாம் கடன் வாங்க வேண்டிய தேவை இல்லை. நாம் நம்முடைய தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தலாம். அவை எளிய சொற்களாக இருப்பது இன்னமும் நல்லது. அதே நேரத்தில் சில இடங்களில், வட எழுத்துகள் என்று சொல்லப்படுகிற அந்த 5 எழுத்துகளையும் இப்படிப் பயன்படுத்திக்கொள்வதும் நடைமுறையாக இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். `ரெங்கம்மா சத்திர’த்தை இரங்கம்மா சத்திரம் என்றால் சரியாகவா இருக்கும்? இதற்குச் சில எதிர்ப்பு விமர்சனங்கள் உண்டு என்பதை நான் அறிவேன். `இரிடி’ என்றொரு சொல்லைப் பார்த்தேன். அது `ரிஷி’யாம். அதற்கு ரிஷி என்றே எழுதிவிட்டுப்போகலாம்’’ என்றார்.

வேண்டாம் மொழிச்சிதைவு

தமிழ்வழிக் கல்வி இயக்கத் தலைவர் சின்னப்ப தமிழரிடம், தமிழ்ச் சொற்கள் மொழிச்சிதைவு குறித்து கேட்டோம். ``எப்போதுமே ஒருவருடைய தாய்மொழி இன்னொருவரின் தாய்மொழிக்கு மாறும்போது அந்த மொழிச்சிதைவு வரும். தமிழ் மொழி, பிறமொழியில் வரும்போது சிதைப்பது ஒருவகை. ஆங்கில மொழி தமிழுக்கு வரும்போது சிதைவது மற்றொரு வகை. எழும்பூரை ஆங்கிலத்தில் எப்படி எழுதுகிறார்கள்? Ezhumpur என்றுதானே எழுத வேண்டும். தமிழை ஆங்கிலத்தில் எழுதும்போது பிழையில்லாமல் எழுத முடியாது. ஏனெனில், ஆங்கிலத்துக்கு குறில், நெடில், வல்லினம், மெல்லினம் கிடையாது. ‘ஆலடி’யை ஆங்கிலத்தில் `Aladi’ என்று எழுதுகிறோம். அப்ப அது ‘அலடி’தானே?

sir என்பது ஒரு சொல் கிடையாது. news என்றால் நான்கு திசையிலிருந்து வருவது என்கிறார்கள். இன்றைக்கு அறிவியல் உலகம்... நான்கு திசைகளில் மட்டும்தான் இருக்கிறதா? நம் தமிழில் 10 திசை என்று சொல்கிறோம். தாய்மொழிக் கல்வி வராதவரைக்கும் இந்தச் சிக்கல் இருக்கத்தான் செய்யும். தமிழ்வழிக் கல்வி வந்தால்தான் சீர்திருத்தம் கொண்டு வர முடியும். அடிப்படையில் எந்த நாடு, எந்த மொழியாக இருந்தாலும், அது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அவரவர் தாய்மொழிக் கல்வி மூலம்தான் மற்ற மொழிகளைத் தெரிந்துகொள்ள முடியும்’’ என்றார்.

நல்ல தமிழில் நாம் எழுதுவதற்கு, நம்மிடம் தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது நாம் கடன் வாங்க வேண்டிய தேவை இல்லை. நாம் நம்முடைய தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தலாம்.
நல்ல தமிழில் எழுதுவோம்!
நல்ல தமிழில் எழுதுவோம்!

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களிடமும் பேசினோம். ``சில வார்த்தைகள் நம்மிடம் இல்லை என்றால் அந்த மொழியில் உள்ள வார்த்தையைப் பயன்படுத்துவது தப்பு இல்லை என்பார் பெரியார். `காபி’யை நாம் கண்டுபிடிக்கவில்லை. யாரோ கண்டுபிடித்த அந்த வார்த்தையை அதே வார்த்தையில் பயன்படுத்துவதில் தவறு இல்லை. ஆகஸ்ட்டை ஆகத்து, ஆகசுது என்பதும் தேவையில்லாதது. எந்த மொழியும் நூற்றுக்கு நூறு கலப்பில்லாமல் இருக்க முடியாது. wordsworth என்கிற கவிஞரின் பெயரை `வார்த்தை மதிப்பு’ என்று எழுத முடியுமா? அதனால் தமிழில் நமக்கு இல்லாதது, எந்த மொழியில் வந்ததோ அந்த மொழியில் உள்ள சொல்லைப் பயன்படுத்துவதில் தப்பில்லை.

ஊர்ப் பெயர்களைத் தமிழில் வைக்கலாம். திருமறைக்காடு என்ற பெயரை வேதாரண்யம் என்றும், புளியங்காடு என்பதை திண்டிவனம் என்றும் மாற்றினார்கள். பஸ் ஸ்டாண்ட் என்பது பேருந்து நிலையம் என்று மாற்றுவது சரி. `முனிசிபாலிட்டி’ என்பது நகராட்சி. நகர், நகரியம், ஊராட்சி, ஒன்றியம் போன்ற வார்த்தைகள் எல்லாம் கீ.இராமலிங்கனார் உருவாக்கிய தமிழ்ச் சொத்து. ஆனால், `காபி’ என்றால் காபிதான். எல்லோருக்கும் கருத்து உரிமை, சிந்திக்கும் உரிமை இருக்கிறது. நடைமுறைக்கு ஒத்துவருவதையும் பார்க்க வேண்டும். எது வலிமையோ அது பிழைக்கும்’’ என்றார்.

தஞ்சை சரபோஜி அரசுக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மா.கோவிந்தராசு இதுகுறித்துப் பேசும்போது, ‘‘நாடு என்கிற சொல்லைப் பெயராகக் கருதி குற்றியலுகரமாக ஒலித்தால், அது நாட்டைக் குறிக்கும். இதையே வினையாகக் கருதி முற்றியலுகரமாய் ஒலித்தால் `விரும்பு’ என்கிற பொருளைக் குறிக்கும். இப்படிப் பொருள் மாற்றத்துக்கு எழுத்து மாற்றம் காரணம் இல்லை; ஒலி மாற்றமே ஆகும்.

தமிழை வளர்க்கிறோம் என்கிற பெயரில், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித்துறை என்று நிறைய உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், தமிழ் சிதைக்கப்படுவதைத் தடுக்க இந்த அமைப்புகளெல்லாம் முயன்றதாகவே தெரியவில்லை.

கருணாநிதி, குங்குமம் போன்றவை வடமொழிச் சொற்கள். வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவான எழுத்துகளால் ஆன சொற்கள். எனவே அப்படியே எழுதுகிறோம். இதற்குத் தற்சமம் என்று பெயர். அதேசமயம், கோவிந்தராஜ் என்பதை கோவிந்தராசு என்றும், ராஜராஜன் என்பதை இராசராசன் என்றும் எழுதுகிறோம். இதுவும் தற்சமமே. ஆனால், இதுவும்கூட குழப்பத்தையே தரும். வடமொழிச் சொல் எனும்போது, அதே உச்சரிப்புடன் இருப்பதுதான் சரியானது. இல்லையென்றால், பெயரையே மாற்றிக்கொள்ளலாம். சூரியநாராயண சாஸ்திரியார், தன் பெயரை ‘பரிதிமாற் கலைஞர்’ என்று மாற்றிக் கொண்டதுபோல. மொழியின் நோக்கம் தகவல் பரிமாற்றமாகும். அந்தப் பரிமாற்றத்தில் பொருள் குழப்பம் வந்துவிடக் கூடாது. ஆங்கிலச் சொல்லை ஆங்கிலமாக உச்சரிக்க வேண்டும். தமிழ்ச் சொல்லைத் தமிழ் ஒலியில் உச்சரிக்க வேண்டும். சுருங்கச் சொன்னால், பெயர்ச் சொற்களின் உச்சரிப்பை மாற்றவே கூடாது. சான்று: தமிழில் `தமிழ்’. ஆங்கிலத்தில் Tamil `ழ்’ என்பதற்கு ‘ZH’ போட்டால், ஓர் ஒலிக்கு, ஓர் எழுத்து என்னும் விதியிலிருந்து மாறிவிடும்.

ஆங்கில மொழியில் அமைதி எழுத்து (Silent Letter) என்பவை, நிறையவே உண்டு. Knief இதை ‘நைஃப்’ என்றும், Island இதை ஐலேண்ட் என்றும்தான் உச்சரிக்க வேண்டும். நைஃப் என்பதில் ‘கே’, ஐலேண்ட் என்பதில் ‘எஸ்’ ஆகியவை அமைதி எழுத்து. தமிழ் மொழியில் அவ்வாறு வருவதில்லை’’ என்றவர், ‘‘தமிழ் ஒரு கட்டமைப்புள்ள மொழி. மொழிச் சிதைவு கூடாது. தமிழ் உணர்வு இருக்கலாம். ஆனால், தமிழ் உணர்ச்சிவயப்படக் கூடாது” என்றார் அழுத்தமாக!

தமிழை வளர்க்கிறோம் என்கிற பெயரில், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித்துறை என்று நிறைய உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், தமிழ் சிதைக்கப்படுவதைத் தடுக்க இந்த அமைப்புகளெல்லாம் முயன்றதாகவே தெரியவில்லை. ‘இதுதான் சரியான நடைமுறை, இப்படித்தான் எழுத வேண்டும், இப்படித்தான் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும், மொழியைச் சிதைக்க யாருக்கும் உரிமை இல்லை’ என்கிற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால், கணினி தமிழுக்கான எழுத்துருக்கள், மொழிமாற்றி எல்லாம் அவரவர் இஷ்டம்போல இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றையெல்லாம் ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவருவதற்குத் தமிழ் வளர்ச்சித்துறை இனியாவது களமிறங்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு