Published:Updated:

`நோய்மையால் அடக்க முடியாத அறிவாயுதம்!' - எஸ்.வி.ஆர் பிறந்ததினப் பகிர்வு!

எஸ்.வி.ஆர்

உடல்நலம் நலிவுற்று, கண்பார்வை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில்தான் 'ஸரமாகோ ; நாவல்களின் பயணம்' என்ற அவரது நூல் சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியானது.

`நோய்மையால் அடக்க முடியாத அறிவாயுதம்!' - எஸ்.வி.ஆர் பிறந்ததினப் பகிர்வு!

உடல்நலம் நலிவுற்று, கண்பார்வை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில்தான் 'ஸரமாகோ ; நாவல்களின் பயணம்' என்ற அவரது நூல் சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியானது.

Published:Updated:
எஸ்.வி.ஆர்

"என் உடல்நிலை மிக அபாயகரமான கட்டத்தை எட்டிக் கடந்த ஒரு மாத காலமாக இன்றோ நாளையோ என்ற நிலையில் உள்ள எனது 82 ஆம் பிறந்த நாள் 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை . வருகிறது. அன்று என் இனிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்ப இருக்கும் எனக் கருதி நாளை பிற்பகல் உணவுக்கு வருமாறும் எவ்விதப் பரிசுப் பொருள்களையும் கொண்டு வர வேண்டாம் என்றும் அன்புடன் வேண்டுகிறேன்." - இப்படி ஒரு செய்தி தோழர்.எஸ்.வி,ராஜதுரையிடமிருந்து வந்ததும் பதறிப்போனேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`இந்து இந்தி இந்தியா' நூலின் மூலம் என் பதின்பருவத்தில் அறிமுகமானவர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக எஸ்.வி.ஆரின் எழுத்துகளைப் படித்து வருகிறேன். என் கருத்தியல் அடிப்படைகளில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது. என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வழிகாட்டி அவர். தமிழ் அறிவுச்சூழலில் பல திறப்புகளை நிகழ்த்தியவர். மார்க்சியம். பெரியாரியம், தலித்தியம், அமைப்பியல் சிந்தனைகள் குறித்து விரிவான உரையாடல்களைத் தொடங்கிவைத்தவர். அவர் இப்படி தளரலாமா?

எஸ்.வி.ஆரைத் தொடர்புகொண்டு பேசியபோது அவர் குரல் தளர்ந்திருந்தது. உடல் நலமின்மையின் பலவீனம் வலிமையுடன் அவர் குரலை ஆக்கிரமித்திருந்தது. பல ஆண்டுகாலமாகவே உடல் நலப்பிரச்னைகளைச் சந்தித்து வருபவர். 2016-ல் விகடன் தடம் இதழ் நேர்காணலுக்காக அவரைச் சந்தித்தபோது அவருடைய ஒரு கண் பாதித்திருந்தது. என்றாலும் வாசிப்பையும் எழுதுவதையும் இசை கேட்பதையும் அவர் நிறுத்தவில்லை, ஓயாத உரையாடலையும்.

இந்து இந்தி இந்தியா
இந்து இந்தி இந்தியா

நரம்பியல் ரீதியிலான நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். மூளையில் தொடங்கும் நரம்பில் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அவர் உடலை அரித்துத் தின்றுகொண்டிருக்கிறது. இப்போது ஒரு கண் முழுவதுமாகவே பார்வையை இழந்துவிட்டது. இன்னொரு கண்ணில் பார்வைத் திறன் மிகக்குறைவே. தாள முடியாத வலியில் தவிப்பதாகத் தெரிவித்தார். உணவருந்தவும் முடியவில்லை. வலியைத் தவிர்ப்பதற்காக மருத்துவர்கள் பரிந்துரைந்த வலி நிவாரணி மாத்திரைகளை உண்டுவந்திருக்கிறார். ஆனால் அது இதயத்தைப் பாதித்ததனால் மருத்துவர்கள் மாத்திரைகளை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். இதயம் ரத்தத்தை அழுத்திச் செலுத்தும் திறன் (பம்பிங் ரேட்) குறைந்துவிட்டது. இப்போது வலி நிவாரணி மாத்திரைகளும் இல்லாததால் வலி எஸ்.வி.ஆரை வாட்டி வதைக்கிறது. எஸ்.வி.ஆரைக் கவனிக்கும் நிலையில் அவர் மனைவியும் இல்லை. அவரும் முதுமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். நண்பர்கள் தொடர்ச்சியாக அவருக்கு உதவி வருகிறார்கள். 'The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu' நூலை எழுதிய விஜயபாஸ்கர் மகனைப்போல் கவனித்து வருவதைச் சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ் அறிவுச்சூழலில் எஸ்.வி.ஆரின் பங்களிப்பு அளப்பரியது. இந்து இந்தி இந்தியா, பதி பசு பாகிஸ்தான், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மொழிபெயர்ப்பு, கிராம்ஷி புரட்சியின் இலக்கணம், பிராங்க்பர்ட் மார்க்சியம், பெரியார் ஆகஸ்ட் 15, பெரியார் சுயமரியாதை சமதர்மம், கார்ல் மார்க்ஸ் 200, மார்க்ஸின் கோட்டும் அடகுக்கடைகளும், இந்திய அரசும் மரண தண்டனையும், ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் மொழிபெயர்ப்பு நூல் என்று அவர் எழுதிய, மொழிபெயர்த்த நூல்கள் தமிழ் இளைஞர்களிடம் கருத்தியல் தெளிவை விதைத்தவை.

எஸ்.வி.ராஜதுரை.
எஸ்.வி.ராஜதுரை.
k arun

மார்க்சிய லெனினிய இயக்கத்தில் செயற்பட்டு, பின் மார்க்சியத்துடன் அம்பேத்கரையும் பெரியாரையும் உள்வாங்கிச் செயற்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவர் தொடர்ச்சியாக அந்தத் திசை நோக்கியே எழுதிவருகிறார். எழுத்தைத் தாண்டி பி.யூ.சி.எல் அமைப்பில் இணைந்து மனித உரிமைப்பணிகளை மேற்கொண்டவர். மனித உரிமைகளுக்கான கருத்தரங்குகளிலும் அரசியல் கூட்டங்களிலும் தொடர்ந்து உரையாற்றியவர்.

வெறுமனே அரசியல் கோட்பாட்டு நூல்களுடன் மட்டும் அவர் நிற்கவில்லை. சார்த்தர் : விடுதலையின் பாதைகள், கல் தெப்பம், சாட்சி சொல்ல ஒரு மரம், ரஷ்யப்புரட்சி இலக்கிய சாட்சியம், பார்வையிழத்தலும் பார்த்தலும், அக்மதோவா அக்கரைப்பூக்கள், சொல்லில் நனையும் காலம், ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள் என்று உலகளவிலான இலக்கியங்கள் குறித்தும் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்; மொழிபெயர்த்துள்ளார்.

உடல்நலம் நலிவுற்று, கண்பார்வை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில்தான் 'ஸரமாகோ ; நாவல்களின் பயணம்' என்ற அவரது நூல் சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியானது. இப்போதும் ரஷ்ய - உக்ரைன் போர் குறித்து ஒரு மின்னிதழுக்கு எழுதிய கட்டுரை குறித்து தெரிவித்தார். "நாம் எப்போதும் போருக்கு எதிராகத்தானே இருக்கவேண்டும்" என்றவர், லெனின் நிலைப்பாடுகளையும் இப்போதைய புடின் ரஷ்ய அரசின் சீரழிவுகளையும் குறித்தும் விளக்கினார்.

எஸ்.வி.ஆர்
எஸ்.வி.ஆர்

அதுவும் உக்ரைன் போர் குறித்து எழுதிய கட்டுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எழுதியது. ஓர் அயல்நாட்டு இளம் மார்க்சிய அறிஞர் ஒருவர் தன் கட்டுரையை மொழிபெயர்க்க எஸ்.வி.ஆரிடம் அனுப்பியதையும் அந்தப் பணிகள் இன்னும் நிறைவுறாமல் இருக்கும் ஏக்கத்தையும் பகிர்ந்துகொண்டார்.

"தோழர், இந்தச் சூழலில் உங்களின் தேவை முன்பைவிட அதிகம். அறியாமையையும் அதிகாரத்தையும் உடைக்கும் வல்லமை உங்கள் எழுத்துகளுக்கு உண்டு. உங்கள் பங்களிப்புகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். கொஞ்சமும் மனம் தளராதீர்கள்" என்றேன். இப்போது நாம் எல்லோருமே இதைத்தானே சொல்லமுடியும்!திருவண்ணாமலை முதல் சென்னைவரை பல ஊர்களில் இருந்தும் நண்பர்கள் பிறந்தநாளன்று பார்க்க வருவதைச் சொன்னபோது அவர் குரலில் உற்சாகம் மேலெழுந்தது. அந்த உற்சாகம் இன்னும் ஒளியுடன் தொடரவேண்டும்.

இன்று 82 வயது முடிந்து 83வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் எஸ்வி.ஆர். பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism