Published:Updated:

"படைப்பைப் போல் நிறைவளிக்கும் ஒரு செயல்பாடு இவ்வுலகில் இல்லை!"- அருண்மொழி நங்கை பேட்டி

அருண்மொழி நங்கை
News
அருண்மொழி நங்கை ( ஆனந்த் குமார் )

"படைப்புத் திறன் என்பது நம் ஆழ்மனதோடு சம்பந்தப்பட்ட விஷயம். எழுதும்போது அது வெளிப்படுகிறது. ஒருவேளை நான் அந்தச் சின்ன வயதில் மிகுதியாக மனிதர்களைக் கவனித்ததும், காற்றைப்போல் சுதந்திரமாகத் திரிந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம்."

தமிழ் எழுத்துலகில் அருண்மொழி நங்கை ஆகச்சிறந்த ஓர் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார். வலைதளத்தில் அவரது கட்டுரைகளைப் படித்தவர்கள் அதன் பொருளிலிருக்கும் பிறரின் பாதிப்பில்லாத சாயலையும், அருமையாகக் கனிந்திருந்த மொழியையும் கண்டு வியப்புறாமல் இருக்க முடியாது. மனதுக்கு நெருக்கமான எழுத்தில் வேரூன்றி நிற்கும் அவரின் தொகுப்பு நூல் 'பனி உருகுவதில்லை.' நிகழ்காலத்தின் நாடித்துடிப்போடு அவருடன் நடந்தது இந்த உரையாடல்.
அருண்மொழி நங்கை
அருண்மொழி நங்கை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

’பனி உருகுவதில்லை’ நூல் உருவானவிதம் பற்றிச் சொல்லுங்கள்.

நான் எனது இருபதாவது வயதிலேயே தீவிர இலக்கியத்துக்குள் வந்துவிட்டேன். திருமணமான 21 வயதிலிருந்து முறையாக ரஷ்ய, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியமும், இந்திய, தமிழ் இலக்கியங்களையும் தீவிர ஆர்வத்தோடு படித்தேன். 1991 முதல் 1998 வரை ஏழு ஆண்டுகள். படிக்கும்போதே எழுதும் ஆவலும் எனக்கு எழுந்தது. கேளிக்கைக்காகப் படிப்பவர்களுக்கு அந்த ஆர்வம் எழுவதில்லை. ஆனால் என்றைக்குமே தீவிர இலக்கியம், நம்முள் உள்ள அந்த ஆர்வத்தைக் கிளர்த்தும். அப்போது எனக்கு எளிதாக வரும் மொழிபெயர்ப்புகள் செய்தேன். முதல் மொழிபெயர்ப்புக் கதை 1995-ல் சுபமங்களாவில் ’நீலஜாடி’ என்ற தலைப்பில் பிரசுரம் ஆனது . அது டேனிஷ் எழுத்தாளர் ஐசக் டெனிசன் எழுதிய சிறுகதை . தொடர்ந்து சில மொழிபெயர்ப்புகளும், விமரிசனக் கட்டுரைகளும் எழுதினேன். 1996-ல் ’அமெடியஸ்’ என்ற புகழ்பெற்ற நாடகத்தை எழுதிய ஆங்கில எழுத்தாளர் பீட்டர் ஷாஃபரின் ’ஈகஸ்’ என்ற நூறு பக்க நாடகத்தை மொழிபெயர்த்தேன். அது முடியும் தறுவாயில் நாங்கள் மாற்றலாகி குமரி மாவட்டத்துக்கு வந்த சமயம் அந்தக் கைப்பிரதி காணாமலானது. அத்தோடு என் அப்போதைய எழுத்து வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அருண்மொழி நங்கை
அருண்மொழி நங்கை
ஆனந்த் குமார்

பிறகு வெகுகாலம் கழித்து கடந்த ஆறுமாதமாக ஒரு வலைதளம் தொடங்கி என் இளமை நினைவுகளை எழுத ஆரம்பித்தேன். முதலில் என் இசை ரசனை, வாசிப்பு ரசனை, சினிமா ரசனை மேம்பட்ட விதம் குறித்து எழுதினேன். அந்நினைவு என் ஆழத்தில் புதைந்துள்ள என் ஊர் நினைவுகளையும், மக்களையும் அலைபோல அடித்து எனக்கு இழுத்துக் கொண்டு வந்தது. விரிந்த நிலத்தில் தங்கள் இளமையைக் கழிக்கும்படி வாழ்ந்தவர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தஞ்சை அப்படிப்பட்ட நிலம். அக்கட்டுரைகள் தொகுப்பாக்கும் அளவுக்கு எனக்கு நிறைவையும் நம்பிக்கையையும் தந்தன. அந்த நினைவுத் தொகுப்பே ’பனி உருகுவதில்லை’ என்ற தலைப்பில் ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியீடாக இப்போது வெளியாகியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கட்டுரைகளைப் படித்தமட்டில் ஆழ்ந்த உள்மன உணர்வுகள், இத்தனை வயதிற்குப் பிறகும் அச்சு அசலாக நினைவுகள் படிந்து இருந்தது எப்படி?

அருண்மொழி நங்கை
அருண்மொழி நங்கை
ஆனந்த் குமார்

கட்டுரைகளை எழுத ஆரம்பிக்கும் போது என் வாசிப்பு ரசனை, இசை ரசனை, சினிமா ரசனை எப்படிப் பரிணாமம் கொண்டது என எழுதலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் எழுத எழுத பல நினைவுகள், என் பதினான்கு வரையிலான கிராம வாழ்க்கை என்னுள் பொங்கி வந்தது. தானாகவே நினைவுகள் எழும்போது அவை முழுமையாகவும் துல்லியமாகவும் இருக்கின்றன. நினைவுகூர்ந்தால் அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை. படைப்புத் திறன் என்பது நம் ஆழ்மனதோடு சம்பந்தப்பட்ட விஷயம். எழுதும்போது அது வெளிப்படுகிறது. ஒருவேளை நான் அந்தச் சின்ன வயதில் மிகுதியாக மனிதர்களைக் கவனித்ததும், காற்றைப்போல் சுதந்திரமாகத் திரிந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம்.

ஒரு பெண்ணின் உள்மன உணர்வுகள், இவ்வளவு அழகாக, தெளிவுடன் இப்போதைக்கு வெளியானதாக நினைவில்லை.

சுயசரிதையைப் புனைவுத்தன்மையுடன் எழுதுவது ஒரு நவீன எழுத்துமுறை. பாரத தேவி என்ற பெண் எழுத்தாளர் ’நிலாக்கள் தூர தூரமாக’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கு இதில் முன்னுதாரணம் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் கமலாதாஸ். அவர் தன் ஐம்பது வயது வரை ஆங்கிலத்திலேயே எழுதினார். பிறகு அவர் மாதவிக்குட்டி என்ற பெயரில் தன் இளமை நினைவுகளை மலையாளத்தில் எழுதினார். அதில் பெரும்பாலும் தன் பாட்டி, கிராம நினைவுகள்தான். ’பால்ய கால ஸ்மரணகள்’ என்ற அப்புத்தகம் கேரளத்தில் மிக அதிகமாக விற்கப்பட்ட நூல்களில் ஒன்று. ’To kill a mockingbird’ எழுதிய ஹார்ப்பர் லீ என்ற அமெரிக்கப் பெண் எழுத்தாளரின் படைப்பும் சுயசரிதைத் தன்மை வாய்ந்ததே.

அருண்மொழி நங்கை
அருண்மொழி நங்கை
ஆனந்த் குமார்

திடீரென இக்கட்டுரைத் தொகுப்பு வெளியானதன் முன்முனைப்பு என்ன?

என் முதல் வாசகர் என் கணவர் ஜெயமோகன்தான். தொடக்கத்தில் தேய் வழக்குகள் போன்ற சிறுசிறு தவறுகளைச் சுட்டினார். மூன்றாவது கட்டுரையிலிருந்து மிகுந்த கவனத்துடன் எழுதி நானே செப்பனிட்டேன். அதன்பிறகு கச்சிதமாக எழுத வேண்டும் என்ற உத்வேகம் வந்து உள்ளடக்கம், வடிவம் இரண்டுமே அமைந்து கலைரீதியான ஒருமையும் கூடியது. ஒன்றிரண்டு கட்டுரைகளைத் தவிர இக்கட்டுரைகள் அனைத்தும் ஆலத்தூர் எனும் கிராமம் சார்ந்து என் வாழ்க்கையும் அங்கிருந்து என் பதினான்காவது வயதில் நாங்கள் இடம் பெயர்வது வரை உள்ள அனுபவங்களும் இருப்பதால் ஒரு தொகுப்பாக இதை ஆக்கலாம், வெளியிடலாம் என்று தோன்றியது.

எப்படி திடீரென இவ்வளவு ஒழுங்கோடு எழுத்தாளர் ஆக முடிந்தது?

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நாம் செய்தவற்றைத் திரும்பிப் பார்ப்போம், இல்லையா? என்ன செய்திருக்கிறோம்? நிறைய படித்திருக்கிறோம், மரபிசை கேட்கிறோம், நுண் கலைகளை ரசிக்கிறோம். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் அது போதாமலாகிறது. ஒரு சாதனை செய்து அதில் ஏற்படும் நிறைவு தேவைப்படுகிறது, ஒரு Sense of achievement. என்னைப் பொறுத்தவரை படைப்பைப் போல் நிறைவளிக்கும் ஒரு செயல்பாடு இவ்வுலகில் இல்லை. லௌகீக வாழ்வின் வெற்றிகள் என்னை ஒருபோதும் கிளர்ச்சி அடையச் செய்ததும் இல்லை. அதில் இப்படி ஒரு மகிழ்வோ, நிறைவோ கிட்டுவதில்லை.

அருண்மொழி நங்கை
அருண்மொழி நங்கை
ஆனந்த் குமார்

இக்கட்டுரைகள் கட்டுரைகள் மட்டும் இல்லை, அது ஒரு கதைத் தன்மையையும் கொண்டிருக்கிறது. என் வாழ்வின் அனுபவங்களின் சாராம்சத்தை நான் ஏதோ ஒருவகையில் எல்லோருடைய அனுபவங்களின் சாரத்தோடும் பொருத்திக் கொள்ளும் வகையில் அமைத்திருக்கிறேன். அனுபவம் வெறும் அனுபவம் மட்டும் இல்லை, அருண்மொழியின் அனுபவம் வெறும் அருண்மொழியுடைய அனுபவமாகச் சுருங்கிவிடக் கூடாது என்று எனக்கு நானே நிபந்தனை இட்டுக்கொண்டேன். என் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து அ. முத்துலிங்கம், யுவன், சாரு நிவேதிதா, நாஞ்சில் நாடன், சுரேஷ் குமார் இந்திரஜித் போன்ற எழுத்தாளர்கள் பாராட்டி ஊக்கப்படுத்தினர். ’எங்கு உண்மையும், புனைவும் கலக்கிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. எழுத்தாளரின் மிகப் பெரிய சவால் அது, அதில் நீங்கள் வென்று விட்டீர்கள்’ என்று மனம் திறந்து பாராட்டினார் முத்துலிங்கம் சார். இவ்வகைமையை மேற்கில் ’Truth, but more truth’ என்று குறிப்பிடுகிறார்கள் என்று சொன்னார். கலையம்சமும் தொழில் நுட்பமும் ஒன்றையொன்று நிரப்புபவை. அதிகமாக வாசித்த அனுபவம் எனக்குத் தொழில் நுட்பத்தை எளிதில் பழக உதவியிருக்கலாம்.

மிகவும் அந்தரங்கமான எழுத்துவகையில் கட்டுரையின் பேசுபொருள் அமைந்தது எப்படி?

அருண்மொழி நங்கை
அருண்மொழி நங்கை
ஆனந்த் குமார்

அந்தரங்கமாக என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? நான் அக உணர்வுகளையும், புற அனுபவங்களையும் சொல்லியிருப்பதாக எனக்குப் படுகிறது. புறவுலகம் அகவுலகம் வழியாகச் சொல்லப்படுகிறது. என்னை பாதித்த, என் வாழ்வின் விழுமியங்களைப் பல வகையிலும் எனக்கு போதித்த என் பாட்டி, அத்தை, மாமா, ராவுத்தர் மாமா, பட்டாணி, சிவன் கோவில் சாமியார் என்று எல்லோரையும் எழுதியிருக்கிறேன். என் புத்தக வாசிப்புக்கு எவ்வகையிலும் தடை போடாத, சோவியத் தலைவர்கள் குறித்த புத்தகங்கள் எல்லாம் தந்து என் சுதந்திரத்தை எவ்வகையிலும் குலைக்காத என் தந்தை, தாய் குறித்தும் எழுதியிருக்கிறேன். என் நண்பர்கள், ஆசிரியர்கள், பல்வேறு மனிதர்களை மட்டுமல்ல, அத்தையின் பெண்பார்த்தல் தொடங்கி கல்யாணம், திருவையாறு இசை கேட்கும் அனுபவம், வாசிப்பு, சினிமா, காதல், உலக இலக்கியம், ராமாயணம், இயேசு நாடகம், கம்யூனிசம், இந்திரா காந்தி, எமர்ஜென்சி, ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி, ஹெக்டே, லெனின், சேகுவேரா, ஸ்கைலேப் குறித்தும் எழுதியிருக்கிறேன். இதில் எழுபது, எண்பதுகளின் ஒரு குறுக்குவெட்டு வாழ்க்கைச் சித்திரம் உங்களுக்குக் கிடைக்கும். அதோடு என்னுடைய அகவுலகமும் வெளிப்படும்.

படங்கள்: ஆனந்த் குமார்