'தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், வைகை, காவிரி, பொருநை மற்றும் சிறுவாணி என நதி நாகரிக மரபு அடிப்படையில் நான்கு இலக்கியத் திருவிழாக்களும் சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்தப்படும்' என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் பொது நூலக இயக்ககம் சார்பில் கடந்தாண்டு நவம்பரில் பொருநை இலக்கிய விழா நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 06.01.2023 முதல் 08.01.2023 வரை மூன்று நாட்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், சென்னை இலக்கியத் திருவிழா நடைபெறவுள்ளது. கருத்தரங்குகள், ஆளுமைகளுடனான உரையாடல்கள், கதை, பாடல், நாடகம் என பல்வேறு அமர்வுகள் அதில் இடம்பெறுகின்றன. இந்த அரங்குகளில் பங்கேற்கும் படைப்பாளிகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சென்னையின் அடையாளமாக விளங்கும் சில படைப்பாளிகளின் பெயர்கள் விடுபட்டுப் போனதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, வடசென்னை பகுதியின் மக்கள் குறித்தும், அவர்களின் வாழ்வியல் சார்ந்தும் தொடர்ந்து தன் படைப்புகளில் எழுதிவரும் பாக்கியம் சங்கர் போன்றோர் சென்னை இலக்கியத் திருவிழா அமர்வுகளில் இடம்பெறாததை சிலர் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டினார்கள்.

இதுதொடர்பாக பாக்கியம் சங்கரோடு பேசினேன்.
"சென்னையே வடசென்னையில் இருந்துதான் தொடங்குகிறது. இங்கு ஒரு எழுத்தாளன் இருக்கிறான். வடசென்னையிலேயே வாழ்ந்து இந்த மக்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிற அவனை இலக்கியத்திருவிழா நடத்துபவர்கள் மறந்துவிட்டார்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. அதன்பின் ஏதேனும் அரசியல் இருக்கிறதா, அல்லது சென்னை குறித்த நூல்களை அவர்கள் வாசிக்கவில்லையா, தெரியவில்லை? இந்த விழாவால் நான் பெறப்போவதும் இழக்கப்போவதும் ஒன்றுமில்லை" என்றார்.
சென்னை இலக்கியத் திருவிழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான இரா.தெ.முத்துவிடம் இது குறித்துப் பேசினேன்.
"சென்னை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, விழுப்புரம், வேலூர், கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள் சார்பாகத்தான் இந்த விழா நடக்கிறது. பொருநை விழாவும்கூட நான்கு மாவட்டங்களை இணைத்துதான் நடத்தப்பட்டது. சென்னை இலக்கிய விழாவைப் பொறுத்தவரை குழுவின் கவனத்திலிருந்த படைப்பாளிகளின் பெயர் யோசிக்கப்பட்டது. சென்னையில் நடப்பதால் சென்னையின் பூர்விக இசை, இலக்கியம் குறித்து சில படைப்பாளிகளை யோசித்தோம். கரன் கார்க்கி, கபிலன், விஜயலெட்சுமி போன்ற படைப்பாளிகளை அப்படித்தான் இணைத்தோம். இலக்கிய விழா ஏற்பாடுகள் குறித்து நிறைய பேர் பாராட்டுகிறார்கள். வடசென்னை பற்றி பேச ரெங்கையா முருகன் இருக்கிறார். அவர் பேசும் அமர்வில் பாக்கியம் சங்கரையும் சேர்க்க ஏற்பாடு செய்திருக்கிறோம்..." என்றார் அவர்.