Published:Updated:

"எதிர் நவீனத்துவமே இன்றைக்கான நவீனத்துவமாக இருக்க முடியும்" - எழுத்தாளர் சி.மோகன்!

சி.மோகன்
News
சி.மோகன்

சி.மோகனின் கவிதைகள் 'கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள்' என்ற தலைப்பில் வெளியாகவிருக்கிறது.

தமிழின் குறிப்பிடத்தக்க விமர்சகரும் எழுத்தாளருமாக சி.மோகன் தனித்துவத்துடன் இயங்கிவருகிறார். அவரது இலக்கிய நினைவுகளும் தேர்ந்த அறிவார்ந்த ரசனையுடன் நீளும் போது மிகவும் ரசித்தேன். தான் கற்ற கலையின் ருசிகளை தமிழ்ச் சமூகத்துக்குத் தொடர்ந்து பரிமாறிக்கொண்டே இருக்கிறார். அவரது கவிதைகள் 'கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள்' என்ற தலைப்பில் எதிர்வரும் புத்தக சந்தைக்கு வெளிவரவிருக்கிறது.

விமர்சகராக அறியப்பட்ட நீங்கள் கவிதைக்குத் திரும்பியது ஏன்?

”இருபது வயதுகளின் தொடக்கத்தில் சிறுபத்திரிகைச் செயல்பாடுகள், விமர்சனங்கள் ஆகிய தளங்களில் இயங்கிய அதேசமயம், கவிதைகளும் எழுதினேன். கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’, ராஜமார்த்தாண்டனின் ‘கொல்லிப்பாவை’, கோவில்பட்டியிலிருந்து வெளிவந்த ‘நீலக்குயில்’, நண்பர்களுடன் சேர்ந்து நான் நடத்திய ‘விழிகள்’ ஆகிய சிற்றிதழ்களில் ஜனமன் என்ற புனைபெயரிலும் என் இயற்பெயரிலும் அன்று அவை வெளியாகின. எனினும் தொடக்கத்திலேயே அதன்மீது அதிருப்தியுற்று கவிதை எழுதுவதைக் கைவிட்டேன். பின்னர் அவற்றை நிராகரித்தும்விட்டேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எழுத்தாளர் சி.மோகனின் 'கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள்' கவிதை நூல்
எழுத்தாளர் சி.மோகனின் 'கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள்' கவிதை நூல்

ஆனால், ஐம்பது வயதுகளின் மத்தியில், கவிதை எழுதுவதற்கான உத்வேகம் கிளர்ந்தெழுந்தது. அதன் ஈர்ப்புக்கு நான் இணங்கியபோது முதலில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. அதன் வழியில் ஒரு வசீகரப் பாதை தட்டுப்பட்டபோது மிகுந்த பரவசத்துக்கு ஆளானேன். அப்பாதையில் பயணம் செய்தபோது, மொழியுடனான என் உறவு பலப்பட்டதோடு வெகு பாந்தமாகவும் அமைந்தது. அப்பாதையில் உற்சாகமாகப் பயணம் செய்தேன். மேலும், எதிர் நவீன நவீனத்துவமே இன்றைக்கான நவீனத்துவமாக இருக்க முடியும் என்ற கலை இலக்கியப் பார்வையும் என் மனதை ஆக்கிரமித்திருந்தது. அதன் வெளிப்பாடாகவும் என் கவிதை ஆக்கங்கள் அமைந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நிரந்தரத்தையும் புதியதையும் கவனமாகப் பிணைக்கும் நவீனத்துவத்தின் மீதான சலிப்புக்கும் அது உருவாக்கும் கடுமையான வெறுமைக்கும் மாறான ஒன்றாக எதிர்நவீனத்துவம் அமைகிறது. அது, புதியதையும் பயனற்றதையும் எவ்விதக் கவனமுமின்றிப் பிணைக்கிறது. இத்தன்மையோடு என் கவிதைகள் உருவாகி மனதுக்கும் என் கலை நம்பிக்கைக்கும் நிறைவளித்தன. 2007ஆம் ஆண்டில், என்னுடைய 55ஆவது வயதில் எழுதப்பட்ட இக்கவிதைகள் அந்த ஆண்டின் இறுதியிலேயே, ‘தண்ணீர் சிற்பம்’ என்ற தலைப்பில் அகரம் வெளியீடாக வந்தது. நல்ல கவனிப்பும் வரவேற்பும் கிடைத்தது. அந்த ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான ஆனந்த விகடன் விருதையும் அது பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்றுவரை, நாவல், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்றான என் இலக்கியப் பயணத்தில் கவிதையும் நீடிக்கிறது. இப்போது வெளிவந்திருக்கும் ’கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள்’ என்னுடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு.”

சி.மோகன்
சி.மோகன்

மறைக்கப்பட்ட (அ) மறக்கப்பட்ட ஆளுமைகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தமிழ் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தீர்கள். இந்தக் கவனமும் அவர்களை வெளியே கொண்டு வரவுமான தூண்டுதலும் எப்படி ஏற்பட்டது? எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டீர்கள்?

”பாவை சந்திரன் ஆசிரியத்துவத்தில் ‘புதிய பார்வை’ இதழ் வெளிவந்தபோது, அவர் அதில் ஒரு தொடர் எழுதும்படி கேட்டார். அப்போது, தமிழ்ச் சமூகத்தில் பிறந்தோ வாழ்ந்தோ தம் காலத்துக்கும் வாழ்வுக்கும் சமூகம், அரசியல், கலை இலக்கியம், கலாசாரம், சிந்தனை ஆகிய தளங்களில் வளமான பங்களிப்புகள் செய்தும் உரிய கவனிப்பைப் பெறாத லட்சிய ஆளுமைகளை அறிமுகம் செய்வதாக அத்தொடர் அமையலாம் என முடிவு செய்தோம். தங்கள் துறை சார்ந்த பணிகளுக்குத் தம் வாழ்வை முழு முற்றாக ஒப்புக்கொடுத்து அயராது பணியாற்றிய ஆளுமைகளை அத்தொடரில் அறிமுகம் செய்தேன். ‘நடைவழிக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் ‘புதிய பார்வை’யில் 1996ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 1997 ஏப்ரல் வரை இத்தொடர் பிரசுரமானது. இத்தொடர் மிகுந்த கவனிப்பைப் பெற்றது. இப்பணி மிகுந்த மன நிறைவையும் எனக்குத் தந்தது. அதன் காரணமாக, இன்றுவரை என்னுடைய முக்கியப் பணிகளில் ஒன்றாக இதை நான் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக, எந்தவொரு வகையான வரலாற்றுப் பதிவிலும் நாம் சீரிய முயற்சிகள் கொண்டிருக்கவில்லை. மிகச் சமீபத்தில் வாழ்ந்து மறைந்த முக்கியமான ஆளுமைகள் பற்றிக்கூட, ஓர் அறிமுகப்படுத்தலுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவது சிரமம். இச்சிரமத்தை எதிர்கொண்டுதான் அத்தொடர் எழுதப்பட்டது. இன்னொரு விசயத்தையும் சொல்ல வேண்டும். தமிழின் மிகக் காத்திரமான படைப்பாளுமைகளான ஜி.நாகராஜன், ப.சிங்காரம், சம்பத் ஆகியோரின் புகைப்படங்கள் முதல் முறையாக அத்தொடரின் மூலம்தான் வெளிவந்தன. மிகச் சாதாரண விசயம்தான் இது. ஆனால் இச்சாதாரணம் நிகழ எவ்வளவு காலமாகியிருக்கிறது பாருங்கள்.”

சி.மோகன்
சி.மோகன்

ஓவியம் பற்றி, இலக்கியம் பற்றி வாசகனின் கவனம் தேவைப்படும் இடங்களாகத் தேர்வுசெய்கிறீர்கள். இதை உணர்ந்து எழுதுவதன் சிக்கல்கள், அதற்குப் பின்னிருக்கும் உழைப்பு எப்படிப்பட்டது?

”நம் அனுபவப் பரப்பையும் நம் வாழ்விற்கான சாத்தியங்களையும் விஸ்தரிக்கக்கூடிய, மிகச் சிறந்த படைப்புகள் நம் நவீன கலை மற்றும் இலக்கியப் பிராந்தியங்களில் உருவாகியிருக்கின்றன. நம் வாசிப்புக்கும் பார்வைக்கும் அவசியமான இவை படிக்கப்படுவதோ பார்க்கப்படுவதோ அபூர்வமாக இருக்கிறது. இந்நிலை நம் காலத்துக்கும் சமூகத்துக்கும் கேடானது. சிறந்த படைப்புகள் வாசிக்கப்பட வேண்டியதன் தேவையை நாம் உணர்ந்தாக வேண்டும். உணர்த்தியாக வேண்டும் என்ற வேட்கையில்தான் இம்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். பொது ஓட்டத்துக்கு எதிரான இச்செயல்பாடு காலம் காலமாகத் தொடர்வதுதான். நம் பெருமிதங்களை நாம் அறிந்து கொண்டாட வேண்டும். நமக்கான மீட்சி நம் கலை வெளிப்பாடுகளில் இருக்கிறது என்ற நம்பிக்கை சார்ந்த செயல்பாடு இது. வாழ்வுக்கான வருமானத்தை ஈட்டித் தருவதில்லை என்பதைத் தவிர வேறு சிரமங்கள் ஏதும் இதில் இல்லை. இந்த வாழ்க்கை என்னுடைய தேர்வு என்பதாலும், இத்தேர்வு அளிக்கக்கூடிய சிரமங்களை அறிந்திருப்பதாலும் புகார்கள் ஏதுமில்லை.”

சாதித்துவிட்ட அலுப்பு தட்டுப்படுகிறதா?

”இல்லவே இல்லை. மாறாக, கடந்த பத்தாண்டுகளில்தான் நான் மிகுந்த முனைப்போடு பங்காற்றிவருகிறேன். அதற்கு முன்பெல்லாம்கூட, என் செயல்பாடுகளுக்கு ஊடாக, கேளிக்கைகளிலும், வெறுமனே பொழுதுகளைக் கடத்துவதிலும் மனம் நாட்டம் கொண்டு இருந்திருக்கிறது. இப்போது என் கலை நம்பிக்கை சார்ந்த செயல்பாடுகளில் மட்டும்தான் மனம் ஈடுபாடும் நிறைவும் கொண்டு இயங்குகிறது.”

சி.மோகன்
சி.மோகன்

இலக்கியமே, அதன் ஓட்டமே உயிர்மூச்சாக இருந்திருக்கிறீர்கள். அந்த வாழ்க்கை கற்றுத் தந்த பாடம் என்ன?

”கலை நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் என்றான வாழ்வியக்கம் என்பது, பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு.செல்லப்பா, தருமு சிவராம் (பிரமிள்) போன்ற நம் லட்சிய முன்னேடிகள் நமக்கு வகுத்துத் தந்திருக்கும் பாதைதான். அவர்கள் காலத்தைவிடவும் சூழல் சற்று மேம்பட்டிருக்கிறது. எந்தவொரு காத்திரமான நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் காலகதியில் நல்ல மாற்றங்களை விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய ஆகச் சிறந்த அம்சத்தில் நாம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.. வாழும் காலத்தில் அது உரிய பலன்களை அளிக்காவிட்டாலும், காலகதியில் அது சமூகத்தில் காத்திரமான விளைவுகளை ஏற்படுத்தும். எனினும் இன்றைய சூழல் ஓரளவு அனுசரணையாகவே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை என்னுடைய வாழ்க்கைப்பாடுகளை ஓரளவு சமாளிக்க ஏதுவாக இன்றைய சூழல் இருக்கிறது. இதுவே பெரிய விசயம்தான்.”

விமர்சகர்களுக்கு உண்டான மரியாதை, உரிய கவனிப்பு கிடைப்பதாக உணர்கிறீர்களா?

”என்னுடைய ஒரு நேர்காணலில், அங்கீகரிக்கப்படாத கனவின் வலி நிறைந்த இடமாகப் படைப்பாளி இருக்கிறான் என்று குறிப்பிட்டிருந்தேன். இது விமர்சகர்களுக்கும் பொருந்தும். கவனிப்பு, மரியாதை, அங்கீகாரம் என்பதெல்லாம் சூழலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. விமர்சனத்தின் அவசியத்தை உணர்ந்து செயல்படுவது மட்டுமே முக்கியமானது.”

சி.மோகன்
சி.மோகன்

கவிதை, புனைவு, விமர்சனம் கடந்து மொழிபெயர்ப்பிலும் முக்கிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறீர்கள். நவீன தமிழ்ச் சூழலில் மொழிபெயர்ப்புகளுக்கான வரவேற்பு எவ்வாறுள்ளது?

”மொழிபெயர்ப்புகளின் அவசியத்தை நாம் உணர்ந்திருக்கிறோம். உலக இலக்கிய வளங்களை நாம் அடைவதற்கான ஒரே ஏற்பாடு அது. மொழிபெயர்ப்புகள் சிறப்பாகவும், நம் இலக்கியப் பரப்புக்கும் வாழ்வுக்கும் வளம் சேர்ப்பதாகவும் அமையும்பட்சத்தில் அவை உரிய அங்கீகாரத்தை அடையவே செய்திருக்கின்றன. அதேசமயம், மொழிபெயர்ப்புப் பணி மிகவும் சவாலானது. மூலமொழிக்கும் பெறுமொழிக்கும் இடையிலான பரிவர்த்தனையில் மிகுந்த கவனமும் நுட்பங்களும் தேவை. என்னுடைய ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவல் மொழிபெயர்ப்பு, இப்பணியில் ஒரு முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. எதிர்பார்த்ததை விடவும் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதுவரை நம்மால் அறியப்படாதிருந்த, ஒரு சீன எழுத்தாளரான ஜியாங் ரோங் என்பவரின் முதல் நாவலின் மொழியாக்கம் இது. இதுவரை அவர் எழுதியிருக்கும் ஒரே நாவலும் அதுதான். ஆனால் அது தமிழ் வாசகர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருவது மிகவும் நம்பிக்கை தரும் விசயம். என்னுடைய பெருமிதங்களில் ஒன்றாக இம்மொழிபெயர்ப்பு அமைந்துவிட்டிருப்பதற்கு வாசகர்கள் இந்த நாவலை அரவணைத்துக்கொண்டதே காரணம்.”